தாவர அச்சின் மையப் பகுதியில் அமைந்துள்ளது நெட்டிப் பகுதி (pith) ஆகும். இதைத் சுற்றிலும் சாற்றுக் குழாய்க் கற்றைகள் காணப் படும். பெரும்பாலான தண்டுகளிலும், வேர்களிலும் காணப் படும். பூக்கும் விதைத் தாவரங்களுள் இது இராத தாவரமே இல்லை எனலாம். சைலாப்கிடு, லைகாப்சிடு, ஸ்ஃபினோஃபல்லம், சில பெரணிகள் ஆகியவற்றில் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக நெட்டிப் பகுதி காணப் படுகிறது. பெரணி வேர், பல ஒரு வித்திலைத் தாவர வேர், இரு வித்திலை தாவர வேர் ஆகியவற்றிலும் இப்பகுதி உள்ளது. சில வகையான வேர்களின் மையப் பகுதியில் ஆக்கு படைத்திசு (xylem tissue) காணப் படும். ஒரே அச்சில் அதன் அளவு, வளர்ச்சி வேகம் ஆகியவற்றைப் பொறுத்து, நெட்டிப் பகுதி அமையும்; அவற்றுள், பெரிய அச்சுகளில் இது இருக்கும். நெட்டித் திசுவில், பெரும்பான்மையான பாரன்கைமாச் செல்கள் நீள் வரிசைகளில் அமைந்திருக்கும். நுனி ஆக்கு திசுவில் இருந்து, நெட்டித் தாய்ச் செல்கள் குறுக்குப் பகுப்பு அடைவதால், மேற்கூறிய நீள் வரிசைச் செல்கள் அமைகின்றன. நெட்டிப் பகுதியின் விளிம்புப் பகுதியில் உள்ள சிறிய செல்கள், தடித்த செல் சுவர்களுடன் கூடியவை. இவை மையத்தில் உள்ள செல்களை விட நீண்ட காலம் உயிரோடு இருக்கின்றன. இத்தகைய செல்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வரம்பு இருந்தால், அப்பகுதி மைய உறை (medullary sheath) அல்லது மையச் சுற்றுப் பகுதி (peri medullay zone) எனப் படும். பொதுவாக, நெட்டிச் செல் சுவர்கள் மென்மையானவை; சில அச்சுகளில் உள்ள நெட்டிச் செல்களின் தடித்த செல் சுவர்கள் மென்மையானவை; நாளடைவில் அவை தடித்துக் கெட்டியானவையாகவோ, மென்மையான செல் சுவர்களுடனோ இருக்கும். சில அச்சுகளில் உள்ள பித் செல்கள் தடித்த செல் சுவர்கள் உடைய ஸ்கிளீரன்கைமாச் செல்களாகக் காணப் படும். பெரணிகளின் தண்டுகளில் நெட்டியின் உட்பகுதி ஸ்கிளீரன்கைமாச் செல்களாலும், வெளிப் பகுதி பாரன்கைமாச் செல்களாலும் ஆக்கப் பட்டிருக்கும். சில இரு வித்திலைத் தாவரத் தண்டுகளில் உள்ள நெட்டிப் பகுதியில், ஸ்கிளீரன்கைமாச் செல்கள், பாரன்கைமாச் செல்களுடன் கலந்து அடுத்தடுத்துக் காணப் படும். இது தடுப்புச் சுவரோடு கூடிய நெட்டிப் பகுதி எனப் படும். வளர்ச்சியினால், பாரன்கைமாச் செல்கள் கிழிந்து விட்டால், ஸ்கிளீரன்கைமாப் பகுதியும், செல்கள் அற்ற பகுதியும் மாறி, மாறி அமைந்திருக்கும். இது அறைகள் உடைய நெட்டிப் பகுதி எனப் படும். ஒரு சில தாவரங்களில், நெட்டி முழுவதும் செல்கள் எவையுமில்லாமல் இருந்து, கணுப் பகுதியில், ஸ்கிளீரன்கைமா அல்லது பாரன்கைமாச் செல்களுடைய நெட்டிப் பகுதி காணப் படும். ஒரு வித்திலைத் தாவரங்களின் கணுப் பகுதியில் சாற்றுக் குழாய்க் கற்றைகள் உள்ளன. உருவம். படி மலர்ச்சிக் கீழான சாற்றுக் குழாய்க் கற்றைத் தாவரத் தண்டுகளின் நெட்டியும், பல தாவரங்களின் வேர்களில் உள்ள நெட்டியும் உருளை வடிவானவை. உயர் வகைச் சாற்றுக் குழாய்க் கற்றைத் தாவரங்களின் நெட்டி குறுக்கு வெட்டில் கோணங்கள் பெற்றிருக்கும் அல்லது விண் மீன் வடிவாக இருக்கும். நெட்டிப் பகுதியின் வடிவம் அவ்வத்தாவரத்தின் இலையடுக்கத்தைப் பொறுத்தது. ஓக் மரத்தின் நெட்டி, ஐந்து கோணங்களும், அல்டர் மரத்தின் நெட்டி மூன்று கோணங்களும் கொண்டது: சாற்றுக் குழாய்க் கற்றைகளைப் பெற்ற தண்டுகளில், அவற்றிற்கிடையே ஆரப் போக்கில், நெட்டிக் கதிர்கள் (rays) அல்லது மையக் கதிர்கள் (medullary rays) உள்ளன. இவை பெரும்பாலும் பாரன்கைமாத் திசுவால் ஆகியவை இப்பகுதியில் உயிருள்ள சிறிய செல்கள் நெருங்கி அமைந்தவை. இதனால் நெட்டியப் பகுதியும் தண்டின் வெளி வட்டப் பகுதியும் இணைக்கப் படுகின்றன. உட்பொருள்கள். நெட்டிப் பொருளகள் சேமிக்கப் பட்டிருக்கும் சுரப்புச் செல்கள், சுரப்பு வழிகள், பால் செல்கள் ஆகியன நெட்டிப் பகுதியில் உள்ளன. இரண்டாம் குறுக்கு வளர்ச்சி மிகுந்துள்ள தண்டுகளில், சாற்றுக் குழாய்த் திசுக்கள் உண்டாவதால், நெட்டிப் பகுதி அமைவதில்லை. ஆனால், வெளி விளிம்பு நெட்டிப் பகுதி உயிருடன் இருக்கும். சில தாவர நெட்டிச் செல்கள் உயிரற்றவையாக உள்ளன. பணிகள். நெட்டிப் பகுதியின் சிறப்பான பணி உணவு சேமிப்பது. அதில் ஸ்கிளீரன்கைமா செல்கள் அமைந்திருந்தால், தாவரத்திற்கு வலிமை தரப் பயன் படும். மையக் கதிர்ப் பகுதியில், பாரன்கைமாச் செல்கள் இருந்தால், நெட்டிப் பகுதியிலிருந்து புறணிப் பகுதிக்கு, உணவுப் பொருள் எடுத்துச் செல்லப் படுகிறது. இரு வித்திலைத் தாவரத் தண்டுகளில் உள்ள மையக் கதிர்ப் பகுதியில் உள்ள கதிர்ச் செல்கள் மீண்டும் ஆக்குத் திசுவாக மாறிச் சாற்றுக் குழாய்க் கற்றைகளுக்கு இடையே, கட்டைச் செல்களாக (Cambium) மாறி, இரண்டாம் நிலை சுறுக்கு வளர்ச்சிக்குப் பயன்படும். —கே.ஆர். பாலச்சந்திரகணேசன்