விலங்கினங்களுக்கு ஏற்படும் நோய்களைப் புலனாய்வு செய்வது ஒரு தனிப் பிரிவாகும். நோய் என்பது, உணவு மற்றும் சுற்றுப்புறத் தேவைகள் இயல்பு நிலையில் இருந்த போதும், உடல் நிலை சரி வர இயங்கா நிலையே ஆகும். இவ்வித நோய்கள் பல்வேறு காரணங்களினால் ஏற்படுகின்றன. இவற்றைப் பின் வரும் பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன, பாக்டீரியாக்களால் ஏற்படும் நோய்கள், வைரஸ்களால் ஏற்படும் நோய்கள், ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்கள், தீவனப் பொருள் பற்றாக் குறைவால் ஏற்படும் நோய்கள் , நச்சுப் பொருள் களால் ஏற்படும் நோய்கள், மரபு வழியாக ஏற்படும் நோய்கள். நோயுண்டாக்கும் பலவிதக் காரணிகளைப் பகுத்தறிந்து, நோயினைக் கண்டறிதலில், நோய்ப் புலனாய்வு பெரும் பங்கு பெறுகிறது. விலங்கினங்கள் மனிதர்களைப் போல் வாய் பேசா. எனவே, கால்நடை மருத்துவர் மேலும் மிகுந்த கவனம் செலுத்தி, விலங்கினத்தின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கி, நோயினைக் கண்டறிய வேண்டும். இதற்கு, விலங்குகளை வளர்ப்பவரின் உதவி பெரிதும் தேவைப் படுகிறது. எனவே, அவரை வினாக்களால் புலனாய்வு செய்தல், நோயினைக் கண்டறியப் பெரிதும் உதவும். எவ்வகைத் தீவனம் அளிக்கப் பட்டுள்ளது, எவ்வகைத் தடுப்பு மருந்துகள் அளிக்கப் பட்டுள்ளன, பண்ணையில் புதிதாகக் கால்நடைகள் சேர்க்கப்பட்டுள்ளனவா போன்ற வினாக்கள் நோயினைக் கண்டறியப் பெரிதும் உதவும். விலங்குகளின் செயல்பாடுகளில் ஏதேனும் மாறுபாடு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கேட்டு அறிய வேண்டும். குறிப்பாக, நாய், குதிரை,பசு போன்ற விலங்கினங்களில் இது பெரிதும் உதவும். ஆடுகளிலும், பன்றிகளிலும் இம்முறையில் நோயினைக் கண்டறிவது ஓரளவு கடினம். விலங்கினங்களின் சுற்றுப் புறச் சூழலை ஆய்வு செய்தலும், நோயினைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாகக் காற்றின் ஈரப் பதம், மண்ணின் அமிலத் தன்மை,நீர்த் தேக்கம் இவையும் நோய் பரவிடக் காரணமாகின்றன. ஈரப் பதம் கூடுதலாக இருந்தால், சளிக் காய்ச்சல் நோய் பரவ வாய்ப்பாகும். விலங்கினத்தின் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி விலங்கு வளர்ப்பவரிடம் கேட்டறிதல், நோய்ப் புலனாய்வில் மிகவும் இன்றியமையாதது. காட்டாக, வலிப்பு ஏற்படும் கால்நடை,பார்வைக்கு நலமாகவே காணப் படும். அதற்கு அடிக்கடி வலிப்பு உண்டாகுமா என அதை வளர்ப்பவரிடம் கேட்டறிவதே நோயினைக் கண்டறியப் பெரிதும் உதவும். கடந்த கால நிகழ்வுகளைப் பற்றிக் கண்டறியும் போது, விலங்கினத்தின் குறிப்பு,நோயின் வரலாறு, பராமரிப்பு முறை போன்றவற்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். விலங்கினத்தின் குறிப்பு. இதில் விலங்கினத்தின் உரிமையாளரின் பெயர்,அவருடைய தகப்பனார் பெயர், முகவரி,விலங்கின வகை, இனம், உடல் எடை, நிறம் போன்ற குறிப்புகளைச் சேகரிக்க வேண்டும். நோய் ஏற்பட்ட வரலாற்றினைச் சேகரிக்கும் போது, பாதிக்கப்பட்டுள்ள விலங்கு ஒன்றா, பலவா என்பதை அறிய வேண்டும்.இது ஒரு விலங்கினம் பாதிக்கப் பட்டிருந்தாலும், சுற்றியுள்ள பிற விலங்கினங்களையும் ஆய்வு செய்யும் போது, அவை நோயின் தொடக்கக் கட்டத்தில் இருந்தால். உடனே கண்டறிய உதவும். பண்ணையாளர்களிடம், நோய் ஏற்பட்ட வரலாற்றினை ஒன்றன் பின் ஒன்றாகக் கேட்டு அறிதல் வேண்டும். தீவனம், நீர் உட்கொள்ளுதல், பால் உற்பத்தி, வளர்ச்சி, சுவாசித்தல், உடல் வெப்ப நிலை, சிறுநீர் மற்றும் மலம் வெளியேற்றும் நிலை, வேர்வை, நிற்கும் நிலை, குரல், தலை, விலங்கினத்தின் மீது ஏற்படும் கெடு நாற்றம் ஆகியவற்றையும் கண்டறிதல் வேண்டும். விலங்கினப் புலனாய்வில், இறந்த கால்நடைகளைப் பிண ஆய்வு செய்வதின் மூலம், எவ்வகை நோய் ஏற்பட்டுள்ளது என அறியலாம். நோய்க்கான அறிகுறி தோன்றிய முதல் நாளிலிருந்து, இறப்பு அல்லது குணமான நிலை வரை ஏற்படும் அறிகுறிகளை நன்கு கேட்டு, பார்த்து அறிந்து கொள்ளுதல், நோயினைப் பற்றி அறிய உதவும். நோய்க்கு முன்பு, வாலினை அகற்றுதல், விதை நீக்கம் மற்றும் தடுப்பு மருந்து அளித்தல் போன்றவை பற்றியும் கண்டறிய வேண்டும். இறப்பு.மற்றும் பாதிப்பு விகிதம். பாதிப்பு விகிதம் என்பது மொத்த விலங்கின் எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் அந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதாகும். இறப்புச் சதவீதம் மொத்த எண்ணிக்கையில் எத்தனை சதவீதம் நோயினால் இறந்துள்ளது என்பதாகும். பாதிப்பில் இறப்பு சதவீதம் எத்தனை எனவும் கண்டறிய உதவுகிறது. இவ்வகை விகிதங்கள் நோய்க்கு ஏற்றவாறு மாறுபடும். எடுத்துக் காட்டாகக் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோயில் பாதிப்பு சதவீதம் மிகுந்திருப்பினும், இறப்பு சதவீதம் குறைவாக இருக்கும். ஆனால், வெக்கை நோயில் பாதிப்பும், இறப்பு சதவீதமும் பெருமளவில் இருக்கும். நோய்ப் புலனாய்வில் பராமரிப்பு பற்றிய விவரங்கள். பராமரிப்பு பற்றிய விவரங்களில் குறிப்பிடத் தக்கவை தீவனம், இனப் பெருக்க முறை, வீடு அமைப்பு, விலங்கினங்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டு செல்லும் முறை, கையாளும் விதம் ஆகியன ஆகும். நோய் உண்டாவதற்கு முன்பு, இவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டதா எனக் கண்டறிய வேண்டும். தீவனம், நோய் உண்டாக ஒரு காரணமாக இருக்கலாம். கொடுக்கப்படும் தீவனத்தின் அளவு அல்லது அதில் உள்ள சத்துகளில் ஏதேனும் வேறுபாடு நோய் உண்டாவதற்கு முன்பு செய்யப்பட்டதா எனக் கண்டறிய வேண்டும். அதே போல் மேய்ச்சலுக்கு விடப்படும் விலங்கினங்கள் ஒட்டுண்ணிகள் தாக்குதலுக்கு எளிதில் உள்ளாகும். தீவனங்களின் நன்கு கொதிக்க வைக்கப்படும் உணவில் வைட்டமின் சத்து குறைவாக இருக்கும். இதே போல் அழுத்த முறையில் எடுக்கப்பட்ட ஆமணக்குப் பிண்ணாக்கில் ஹைட்ரோசயனிக் அமில நச்சு மிகுந்து காணப்படும். பன்றிகளும், கன்றுகளும் மிகக் குறைந்த அளவில் தீவன இடம் கொடுக்கும் போது, போட்டியின் காரணமாக, வலிவுள்ளவை மிகு தீவனம் உட்கொண்டும், வலிவற்றவை குறைந்த தீவனம் உட்கொண்டும், சத்துப் பற்றாக்குறைவினால் பாதிக்கப் படும். பால் தரும் கால்நடைகளிலும், கருவுற்ற கால்நடைகளிலும் சுண்ணாம்புச் சத்து, சர்க்கரைச் சத்து, மக்னீசீயம் சத்து ஆகியவை குறைந்து காணப் படும். பன்றிகளில் குடிநீர் அளவு குறையும் போது உப்பினால் ஏற்படும் நச்சுத் தன்மை நோய் ஏற்படும். இவ்வாறு தீவனமும், நீரும் பல வகைகளில் நோயுண்டாகக் காரணங்களாக விளங்குகின்றன. இனப் பெருக்கப் பராமரிப்பு. இனப் பெருக்கம், கன்று ஈனுதல் போன்றவை நோய் உண்டாகப் பல வகைகளில் காரணமாக விளங்குகின்றன. செம்மறியாடுகளில், சினைக் காலத்தின் போது, நச்சுத் தன்மை ஏற்படுவதும், பசுக்களில், கன்று ஈன்ற 2–6 வாரங்களில் அசிடோனீமியா எனப்படும் நச்சுத் தன்மை ஏற்படுவதும் உண்டு. அனைத்து வகை விலங்கினகளிலும், கன்று ஈன்ற சில நாள்களில் கருப்பை வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. வானிலை. வானிலையைப் பொறுத்துப் பல நோய்கள் ஏற்படக் கூடும். கால்நடைகளில் ஏற்படும் கால் அழுகும் நோய், வெயில் காலங்களில் மிகுதியாகவும், மழைக் காலங்களில் குறைவாகவும் காணப் படும். மேய்ச்சலுக்கு விடப் படும் மாடுகளில், குளிர் காலங்களில் மக்னீசியச் சத்துக் குறைவு ஏற்படும். காற்று அடிக்கும் திசைக்கு ஏற்றவாறு, வைரஸ் நோய்கள் பரவ வாய்ப்புண்டு. பொதுப் பராமரிப்பு. கால்நடைகளின் பொதுப் பராமரிப்பில் பலவிதத் குறைபாடுகளால் நோய்கள் உண்டாகின்றன. பொதுச் சுகாதாரம், காற்றோட்டம்,கழிவு நீர் வெளியேற்றம், தீவனத் தொட்டி அமைப்பு முறை, விலங்கினக் கொட்டகை அமைப்பு முறை ஆகியனவும் நோய் உண்டாகக் காரணங்களாகின்றன. சுற்றுப்புறச் சூழ்நிலை. சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், நோயுண்டாவதற்கும் நேரடித் தொடர்பு உண்டு. மேய்ச்சல் நிலத்தில் வளர்க்கப் படும் விலங்கினங்கள், அந்த மேய்ச்சல் நிலத்தில் உள்ள தாவரங்கள், மண் வகை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். மரங்கள் இல்லாத மேய்ச்சல் நிலத்தில் உண்டாகும் காற்று, மாடுகளைப் பால் வலிப்பு எனும் நோயின் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடும். ஜோனீஸ் நோய், ஈரல், தட்டைப் புழு போன்ற நோய்கள் மேய்ச்சலில் வளர்க்கப் படும் கால்நடைகளில் மிகுதியும் ஏற்படும். மண்ணின் வகையினைப் பொறுத்துத் துத்தநாகம், கோபால்ட் போன்ற தாதுப் பொருள்களின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. நீர் தேங்கி நிற்கும் மண்ணில், மடி வீக்க நோய், கால் அழுகும் நோய் போன்றன ஏற்படக் கூடும். காற்றில் தூசிகள் மிகுதியாகக் கலந்திருந்தால், சுவாச உறுப்பு நோய்களும், நுரையீரல் நோய்களும் தோன்றலாம். வளர்க்கப் படும் விலங்கினங்களின் எண்ணிக்கை. தொட்டில்களில் பெரும் எண்ணிக்கையில் விலங்கினங்களை வளர்க்கும் போது, மலம், சிறுநீர் போன்றவை மிகுதியாகச் சேர்ந்து, நோய் உண்டாக வாய்ப்புண்டு. இதனால், ஒன்றுக்கொன்று சண்டையிட்டு முட்டிக் கொள்வதால், காயம் ஏற்படவும் கூடும். தீவனமும், குடிநீரும் விலங்கினங்களுக்குக் கிடைக்கும் முறை. சில மேய்ச்சல் நிலங்களில் உள்ள களைத் தாவரங்கள், நோயுண்டாகக் காரணமாக உள்ளன. நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் தாவரங்கள், பூசணங்கள் ஆகியன நோயை உருவாக்குகின்றன. சுற்றுப்புறத்தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகளின் மூலமாகவும், மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப் பட்டு, நோய் உண்டாக வாய்ப்புள்ளது. விலங்கினங்களுக்குக் கிடைக்கும் நீர் எந்த இடத்திலிருந்து கிடைக்கிறது என்பதனைப் பொறுத்தும் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. தொழிற்சாலைக் கழிவு, பூசண நச்சுப் பொருள் ஆகியன நீரில் கலப்பதால் நோய்கள் ஏற்படும். விலங்கினங்கள் வளர்க்கப் படும் கொட்டகைகளும் நோய் உண்டாக்கும் காரணிகளாகின்றன. முறையான வீட்டமைப்பு, காற்றோட்டமின்மை, இட நெருக்கடி போன்ற காரணங்கள் நோய் ஏற்படவும், பரவவும் வழி செய்யும். சுற்றுப்புறச் சூழ்நிலை மிகவும் மாசடைந்திருந்தால், நோய் ஏற்படக் கூடும். அம்மோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு போன்ற வளிமங்களை அளத்தல், கொட்டகையின் காற்றோட்ட நிலையை அறியப் பெரிதும் உதவும். கொட்டகைத் தரையின் நிலை மிகவும் சீர்கேடாக இருந்தால், தோல் தசை அழற்சியும் ஏற்படும். கொட்டில்களில் ஒளி குறைவாக இருப்பதும், தூய்மைக் கேட்டுக்கு வழி வகுக்கும். தனிப்பட்ட விலங்கினத்தினைப் புலனாய்வு செய்யும் போது, அதன் வெளிப்புறத் தோற்றம், ஆய்வுக் கூட முடிவு ஆகியனவற்றினைக் கருத்தில் கொள்ள வேண்டும்.விலங்கினங்களை இடையூறு செய்யாமல், அவை இயல்பு நிலையில் உள்ள போதே, அவற்றினை ஆய்விடல் சிறந்தது. அதாவது, ஒரு விலங்கு மந்தையிலிருந்து தனியே பிரிந்து இருந்தால், அடிக்கடி கீழ் அமர்ந்தும், நின்று கொண்டும் இருத்தல், தன் உடலைக் கடுமையாக நக்கிக் கொள்ளுதல், மரம், கல் போன்ற பொருள்களைக் கடித்தல், தலையைச் சுவரில் அழுத்திக் கொள்ளுதல் போன்றவை காணப் படும். வெறி நோய் போன்ற நிலைகளில் விலங்கினத்தின் குரல் மாறுபட்டுக் காணப் படும். விலங்கினங்கள் அடிக்கடி கொட்டாவி விடுதல், ஈரல் பாதிப்பினைக் குறிக்கும். விலங்கு அசை போடுதல் என்பது நலமான நிலைக்கு ஒரு குறிப்பிடத் தக்க அறிகுறியாகும். அசை போடுவதிலும், விழுங்குவதிலும் கடினம், மூக்கு வழியாக உண்ட உணவினை வெளியேற்றுதல் போன்ற நோய்குறிகள், உணவுக்குழாயில் அடைப்பு, தொண்டைப் பகுதி உணர்விழத்தல் ஆகியன ஏனைய அறிகுறிகளாகும். பன்றிக்கு அதன் வாலின் சுழற்சி நலமான நிலைக்கு அறிகுறியாகும். குதிரைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோயில் வால் உயர்ந்தும், காதும், கால்களும் விறைத்தும் காணப் படும். கால்களை அசைக்கும் வேகம், எண்ணிக்கை, வலிமை ஆகியனவும் நோய்க்கு ஏற்றவாறு மாறுபடுகின்றன. லிஸ்டிரியோசிஸ் எனப்படும் நோயினால் பாதிக்கப் பட்ட ஆடுகள், தன்னைத் தானே சுற்றிச் சுற்றி வரும். குதிரைகள் மூளை வீக்க நிலையிலும், ஈரல் சீராக இயங்கா நிலையிலும், தடைகளைப் பொருட்படுத்தாமல் நேராக மோதிக் கொள்ளும். தோலில் ஏற்படும் மாறுதலும், நோய்ப் புலனாய்வுக்குப் பெரிதும் உதவுகிறது. தோலில் ஏற்படும் பூசண நோய், தோலுக்கடியில் ஏற்படும் வீக்கம், குருதிப் புண், காற்று அடைப்பு ஆகியவை பல வித நோய்களைக் குறிக்கின்றன. மேலும், விலங்கினத்தின் நாக்கு நோயினைப் பற்றி அறியவும் உதவும். நாக்கின் நிறம், புண் போன்றவை எந்த நோயின் வெளிப்பாடு என்பதை உணர்த்தும். பெருத்த எண்ணிகையில் விலங்கினங்கள் பாதிக்கப்படும் போது, நோயினைக் கண்டறிவது சிறிது கடினம். நுண்ணுயிரிகளால் ஏற்படும் அடைப்பான், தொண்டை அடைப்பான், வெக்கை, கோமாரி ஆகிய நோய்கள் இவ்வகையில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். இதே போல், மரபியல் நோய்களாலும், விலங்கினங்கள் மிகுதியாகப் பாதிக்கப் படும். விலங்கின நோய்ப் பலனாய்வில் ஆய்வகம் பெரிதும் உதவுகிறது. ஐயப்படும் நோய்க்கேற்றவாறு மாதிரிப் பொருள்களை எடுத்து ஆய்வுக் கூடத்திற்கு அனுப்ப வேண்டும். ஒட்டுண்ணி நோய்களானால், 5 கிராம் சாணத்தினைப் பாலிதீன் உறையில் சேகரித்து அனுப்பலாம். பேபிசியா, தையேரியா, டிரபன் சோமியா போன்ற ஓரணு ஒட்டுண்ணி நோய்களில் குருதி மாதிரியும், வீங்கிய நிண நீர்க் காய்களும் ஆய்வுக்குத் தேவைப் படும். —வே. புருஷோத்தமன்