இதற்குப் பாசிப் பயறு என்னும் பெயரும் உண்டு. இதன் தாவரப் பெயர் விக்னா ரேடியேட்டா (Vigna radiata) என்பதாகும். இதன் பழைய பெயர் ஃபேசியோலஸ் ரேடியேட்டஸ் என்பதாகும். ஃபேபேசி என்னும் இரு வித்திலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இது தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இந்தோ–சீனா, ஜாவா ஆகிய நாடுகளில் பரவி, அண்மையில் மத்திய ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்கா ஆகிய இடங்களில் காணப் படுகிறது. இந்தியாவில் இது தொன்று தொட்டுப் பயிரிடப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா, மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சாகுபடியாகிறது. இந்தியாவின் பாசிப் பயறு உற்பத்தியில் மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா முதலிய மாநிலங்கள் முதன்மை பெறுகின்றன. தாய்லாந்திலும், மியான்மரும் இப்பயிரை ஏற்றுமதி செய்கின்றன. ஜப்பான் இறக்குமதி செய்யும் நாடுகளில் குறிப்பிடத் தக்கது. அமைப்பு. இது நேராக வளரும். ஆணி வேர்த் தொகுதி கொண்ட இழுவிதையிலைத் தாவரமாகும். நன்றாகக் கிளைத்து வளரும் இச்செடியின் மீது, மென்மயிர் அடர்ந்து காணப் படும். சில வகைகளில் செடியின் நுனி, அருகிலுள்ள செடிகளில், கொடி போலச் சுற்றிக் கொள்ளும். பச்சைப் பயிரில் வெவ்வேறு பண்புகளையுடைய 2000 வகைகள் உள்ளன. வறட்சியைத் தாங்கி வளரும் செடிகளுள் இதுவும் ஒன்று. இதன் தண்டு பெரும்பாலும் பச்சையாகவும், சில சமயங்களில் கருஞ்சிவப்பு நிறப் பகுதிகளைக் கொண்டும் இருக்கும். மூன்று சிற்றிலைகளைக் கொண்ட இலைகள், தண்டில் மாற்றடுக்கத்தில் உண்டாகியிருக்கும். சிற்றிலைகள் மெலிந்து, முட்டை வடிவில் ஓரம் வளைவின்றி, முழுமையாக இருக்கும். சில வகைகளில் சிற்றிலைகளில், கறுப்புகள் இருக்கும். சிற்றிலைகள் 5–10 செ.மீ. நீளமுடையவை. மேல், கீழ்ப் புறங்களில் மென் மயிருடன் சிற்றிலை இளம் பச்சை அல்லது கரும் பச்சை நிறத்திலிருக்கும். பூக்கள், மஞ்சள் அல்லது பசும் மஞ்சள் நிறத்திலிருக்கும். பூக்கள் 20–30 எனக் கொத்தாக, இலைக் கோணத்திலோ,செடியின் நுனியிலோ உண்டாகியிருக்கும். 1 செ.மீ. நீளமுடைய சிறிய மலர்கள், குறுகிய பூவடிச் செதில்கள் ஆகியன காணப் படுகின்றன. புல்லி வட்டம் சிறு குழாய் போன்று அமைந்துள்ளது. அல்லி இதழ்கள் மஞ்சள் நிறத்துடனும், பிளவு பட்டும் காணப் படுகிறது. கொடி அல்லி (Standrd petal), சிறகு அல்லி (wing petal), படகு அல்லி (keel petal) என மூன்று வித அமைப்புக் கொண்ட அல்லி வட்டம், இக் குடும்பத் தாவரங்களின் தனித் தன்மையாகும். இந்த அல்லி வட்ட அமைப்பு வண்ணத்துப் பூச்சியை ஒத்துள்ளமையால், பாப்பிலேயோனேசியஸ் அல்லி வட்டம் எனப் படுகிறது. ஐந்து அல்லி இதழ்களில் ஒரு கொடி அல்லி இதழும், இரண்டு சிறகு அல்லி இதழ்களும், இரு படகு அல்லி இதழ்களும், இணையாது தனித்து, இறங்கு வரிசை அடுக்கிதழ் அமைவில் உள்ளது. பத்து மகரந்தக் கேசரங்களில் ஒன்பது இணைந்தும், ஒன்று தனித்தும் காணப் படுகின்றன. ஒரு சூலிலையால் ஆன மேல் மட்டச் சூல் பையில், எண்ணற்ற சூல்கள் விளிம்பு ஒட்டு முறையில் அமைந்துள்ளன. தனி, உலர் வெடி கனி (legume) வகையைச் சேர்ந்தது. நீளமாக, நுனி சற்று வளைந்தோ, நேராகவோ காணப் படும். தோலின் மேல் மயிரிழைகள் காணப்படா; விதைகள் அவரை விதை போன்ற அமைப்புடையன. சாகுபடி. வடிகால் வசதியுள்ள களிச் சேற்று மண் இதற்கு ஏற்றது. செம்மண் வண்டல் நிலம், கரிசல் நிலங்களிலும், இதைப் பயிரிடலாம். சமவெளியில் பெரும் பரப்பளவில் பயிராகிய போதிலும், மலைப் பகுதியில் 2 கி.மீ. வரையிலும் விளையும். இதைப் பெருமளவில் புன்செய் பயிராகச் சாகுபடி செய்கின்றனர். சில சமயங்களில், இறைவைப் பயிராகவும் பயிரிடுகின்றனர். இதன் வளர்ச்சிக்கு 25–30°C வெப்ப நிலை ஏற்றது. வளர்ச்சிப் பருவத்தில், நன்கு பரவிப் பெய்யும் மழை, இதன் விளைச்சலுக்கு உதவுகிறது. பூக்கும் போது, மழை பெய்தால், மகரந்தச் சேர்க்கை பாதிக்கப் பட்டுத் தானியம் உண்டாவது தடைப் படும். நீர் தேங்கும் சேர்க்கைப்பகுதிகளில், இது நன்கு வளர்வதில்லை. பச்சைப் பயறு ஜுன் , ஜுலை மாதங்களில் சோளம், கம்பு, கேழ்வரகு, நிலக் கடலையுடன் கலப்புப் பயிராக விதைக்கப் படுகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில், நெல்லுக்குப் பின் பெருமளவில் ஜனவரி–பிப்ரவரி மாதங்களில் விதைக்கப் படுகிறது. இமாலயப் பகுதிகளில், இதைக் கோடையில் சாகுபடி செய்கின்றனர். வட இந்தியச் சமவெளியில் உருளைக் கிழங்கு, கடுகு, கோதுமை ஆகிய பயிர்களில் அறுவடைக்குப் பின்பு, பச்சைப் பயறு சாகுபடி செய்யப் படுகிறது. நேராக வளரும் குறுகிய கால வகைகளை ஊடு பயிராகச் சாகுபடி செய்வதுண்டு. இறைவைப் பயிராக இருப்பின், பாத்திகளில் சாகுபடி செய்யப் படுகிறது. நெல் வயல்களில், வரப்புகளில் ஊன்றி வளர்ப்பதுண்டு. மானாவாரிப் பயிரானால், விதைகள் தெளிக்கப் பட்டும், இறைவைப் பயிரானால், 30 செ.மீ. வரிசையில் ஊன்றப் பட்டும் வளர்க்கப் படும். பொதுவாகப் பயறு வகைப் பயிர்களுக்குச் சாம்பல் சத்து உரம் இடுவதில்லை. மேலுரமாக மண்ணில் எந்தச் சத்து உரமும் சேர்க்கப் படுவதில்லை. செடியில் பாதிப் பூக்கள் உண்டாகிருக்கும் போதும், அதற்குப் பின்பு, 15ஆம் நாளும் என இரு முறை 2% டைஅம்மோனியம் பாஸ்ஃபேட் கைத்தெளிப்பானின் உதவியால், செடியின் மீது மாலை வேளையில் தெளிக்கப் படுகிறது. இதனால், பூக்கள் உதிர்வது குறைந்து, காய்களின் உற்பத்தி மிகுந்து, விளைச்சல் கூடுகிறது. இறைவையில் விதைக்கும் போதும், விதைத்த மூன்றாம் நாள் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 10–15 நாள் இடைவெளியில் நீர் பாய்ச்சுதல் வேண்டும். தனிப் பயிராகச் சாகுபடி செய்யும் போது, ஓரிரு முறை களை எடுக்கப் படுகிறது. விதை முளைக்கு முன், தகுந்த ஈரம் இருக்கும் போது, லாசோ என்னும் களைக் கொல்லியை, ஹெக்டேருக்கு 1.5 கி.கி. வீதம் மண்ணின் மீது தெளித்துக் களைகளைக் கட்டுப் படுத்தலாம். பச்சைப் பயறு வகைகளில், குறுகிய கால வகைகள் 60–75 நாளிலும், நீண்ட கால வகைகள் 120–150 நாளிலும் அறுவடைக்குத் தயாராகின்றன. பூத்த 3–4 வாரங்களில், நெற்றுகள் அறுவடை செய்யப் படுகின்றன. சில வகைகளில், இரண்டு அல்லது மூன்று முறை நெற்றுகள் அறுவடை செய்யப் படுகின்றன. இந்தியாவில், தற்போது சாகுபடி செய்யப் பட்டு வரும் வகைகளில், பெரும்பாலானவை ஒரே சீராகப் பூத்துக் காய்த்து, ஒரே தடவையில் நெற்றுகளை அறுவடை செய்யும் தன்மையைக் கொண்டுள்ளன. செடிகளைத் தரைக்கருகில் அறுத்து, வெயிலில் இரண்டு அல்லது மூன்று நாள் உலர்த்திக் குச்சியினால் அடித்தோ, மாடுகளைப் பிணைத்துச் சுற்றிச் சுற்றி நடக்க விட்டோ, நெற்றுகளிலிருந்து விதைகளைத் தனித்தெடுப்பர். பொட்டு (pod cover) மற்றும் எஞ்சிய தாவரப் பகுதிகளைக் கூட்டிச் சேகரித்து வைத்துக் கொண்டு, கால்நடைகளுக்குத் தீவனமாகத் தரலாம். காற்றில் தானியங்களைத் தூற்றித் தூசு போக்கி வைத்துக் கொள்வர். நெற்றுகளைக் குச்சியால் அடித்து, விதைகளைச் சேகரிப்பர். இம்முறையில், விதைகள் உடையாமலும், அவற்றின் முளைப்புத் திறன் குறையாமலும், பாதுகாக்கலாம். முற்றிய தானியங்களை மட்டுமே விதைக்காகப் பயன் படுத்த வேண்டும். காய்கள் கறுப்பு நிறமான நெற்றாக மாறியதும், அறுவடை செய்ய வேண்டும். இல்லையெனில், சில வகைகளின் நெற்றுகள் வெடித்துத் தானியங்கள் சிதறி விடும். அறுவடையைச் சூரியன் எழுவதற்கு முன்பு செய்வதன் மூலம், நெற்று வெடிப்பதால் ஏற்படும் சேதத்தைக் குறைக்கலாம். பின்னர், விதைகளை உலர்த்திச் சேமிக்க வேண்டும். வகைகள். பச்சைப் பயிறில் டி.1, டி.44, பூசா பைசாசி,பிளஸ் 16, எல்.8. கோப்பர்கான், எம்.எல்.5, கோ.3, கோ.4 போன்ற வகைகள் 75–80 நாள்களுக்குள் அறுவடை செய்யப் படுகின்றன. கோ.1 போன்ற வகைகள் 100–135 நாள்கள் வயதுடையவை. நெல் தரிசுக்கேற்ற வகைகளில் ஆடுதுறை 1, ஆடுதுறை 2, ஆடுதுறை 3 (ADT 1,2,3) ஆகியவை குறிப்பிடத் தக்கவை. பச்சைப் பயறின் நிறத்தை வைத்துக் கரும் பச்சை நிற வகை, தங்க மஞ்சள் நிற வகை எனப் பிரிக்கலாம். இந்தியாவில் பெரும்பாலும், கரும் பச்சை நிற வகையே தானியங்களுக்காகப் பெரும் பரப்பில் சாகுபடியாகிறது. இதில் காய்கள் ஒரே சமயத்தில் நெற்றுகளாகும். மஞ்சள் நிறப் பச்சைப் பயறு வகையில் நெற்றுகள் எளிதில் வெடித்து விடுகின்றன. இவற்றைப் பெரும்பாலும் தீவனத்திற்காகவும், மண் அரிப்பதைத் தடுப்பதற்காகவும் பயிரிடுவதுண்டு. நோய்களும் பூச்சிகளும். பச்சைப் பயிறு செடியில் வேரழுகல் நோய், மஞ்சள் தேமல் நோய், செர்க்கோஸ்போரா இலைப் புள்ளி, சாம்பல் நோய் ஆகியவை குறிக்கத் தகுந்தவை. வேரழுகல் நோய்க்கு மேக்ரோஃபோமினா ஃபேசியோலினா (Macrophomina phaseolina) என்னும் பூசணம் காரணமாகும். இதற்கு ரைசோக்டோனியா பட்டாட்டிக்கோலா (Rhizoctonia bataticola) என்னும் பெயரும் உண்டு. இந்நோய் தாக்கிய பயிரின் வேர்கள் அழுகி விடும். வேர்ப் பட்டை சிதைந்து விடும். செடிகள் காய்ந்து விடும். நச்சுயிரி நோய்களுள் மஞ்சள் தேமல் நோய் அறியத் தக்கது. நோயுற்ற செடியின் இலைகளில், ஒழுங்கற்ற மஞ்சளும், பச்சையும் கலந்த பகுதிகள் தென்படும். இலை சிறுத்து, வடிவம் மாறி, காய் உற்பத்தி குறையும். இது வெள்ளை ஈ மூலம் பரவுகிறது. ஹெக்டேருக்கு 50 மி.லி. மோனோ குரோட்டோஃபாஸ் என்னும் பூச்சிக் கொல்லி மருந்தைத் தெளித்து, நோயைப் பரப்பும் வெள்ளை ஈக்களை அழிக்கலாம். செர்க்கோஸ் போரா பூசணத்தால், இலைகளில் முதலில் சிறு,சிறு செம்பழுப்பு நிறப் புள்ளிகள் உண்டாகும். இவை நாளடைவில் மிகுதியாகி, உருவில் பெருத்து, இலையின் பெரும் பரப்பை அழித்து விடும். இதனால், இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். இப்பூசணம் காற்றின் மூலம் பரவுகிறது. பச்சைப் பயறில் உண்டாகும் சாம்பல் நோய்க்கு ஏரிசைஃபே பாலிகோனி என்னும் பூசணமே காரணம். இது அக்டோபர் –ஜனவரியில் மிகுதியாகத் தோன்றும். இலைகளின் மேல் பரப்பில், சாம்பல் நிறப் பூசணப் படிவு முதலில் தோன்றும். பின்பு இப்படிவு இலைப் பரப்பு முழுவதும் பரவிக் காணப் படும். இலைக் காம்பிலும் பூவிலும், சாம்பல் நிறப் படிவைக் காணலாம். நோயுற்ற இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். செர்க்ககோஸ்போரா இலைப் புள்ளி நோயையும், சாம்பல் நோயையும் கட்டுப் படுத்துவதற்கு, விதைத்து 30–45 நாளில் 100 கி. கார்பென்டசிம் பூசணக் கொல்லியை இலையின் மீது தெளிக்க வேண்டும். பச்சைப் பயறுச் செடியில், இளம் பருவத்தில் தண்டு ஈயும், அசுவினியும் பாதிப்பைத் தோற்றுவிக்கும். பயன். பச்சைப் பயிரைச் சமையலில் பயன் படுத்தலாம். புரதம் செறிந்த பயரை உடைத்துப் பருப்பாக்கிப் பல விதமான உணவுப் பண்டங்கள் தயாரிக்கலாம். பருப்பிலிருந்து கிடைக்கும் மாவில், திண்பண்டங்கள் செய்யலாம். பயறுகளின் மேல் தோல், இலை, கொடி, காய்த் தோல் முதலியவை கால்நடைகளுக்குத் தீவனமாகின்றன. பச்சைப் பயறுக் காய்களைப் பறித்து, உள்ளிருக்கும் பயறு தானியங்களை உண்டால், சுவையாக இருக்கும். பச்சைப் பயறை நீரில் ஊற வைத்து, முறையாக முளைக்க வைத்து உண்ண, உடலுக்கு வலிமையுண்டாகும். பச்சைப் பயறு செரிப்பாற்றலைக் கூட்டும். குழந்தைகள், நோயுள்ளவர் களுக்கு இது சிறந்த உணவு. பச்சைப் பயற்ற மாவை ஸ்டார்ச் தயாரிக்கப் பயன்படுத்தலாம். பயற்ற மாவை, தென் கிழக்கு ஆசியாவில், உடலிலுள்ள அழுக்கைப் போக்கச் சோப்பிற்குப் பதிலாகப் பயன் படுத்துகின்றனர். இதனால், உடலுக்குத் தீங்கு ஏற்படுவதில்லை, தோல் மெருகூட்டப் படுகிறது. முளைக்க வைத்த பச்சைப் பயறுகளை, L-அஸ்பராஜின் என்னும் அமினோ அமிலம் தயாரிக்கப் பயன் படுத்துகின்றனர். பயறு விதைகளை உண்ண, குளிர்ச்சி உண்டாகும். பயரை நோயுற்றுத்தேறி வருபர்களுக்குக் கஞ்சியாகவும், சூப்பாகவும் தயாரித்துத் தருவதுண்டு. பாசிப் பயறு பித்தத்தை நீக்கும் பண்புடையது. பாசிப் பயறைக் களி போல் கிளறிப் பெண்களுக்கு மார்பில் வைத்துக் கட்டினால், பால் சுரப்பு உண்டாகும். மேலும், பாசிப் பயறு பசியை உண்டாக்கும். சிறுநீரைப் பெருக்கும். ஈரல் நோய், காச நோய், களைப்பு, சொறி, வெள்ளை நோய், வலி, மேக வெள்ளை, இருமல் ஆகியவற்றிற்கு இது சிறந்தது. நீர்க் கோவை, மண்டையிடி ஆகியவற்றுக்கும் சீனர்கள் இதைப் பயன்படுத்துவர். —கோ. அர்ச்சுனன் துணை நூல். J .W.Purseglove, Tropical crops–dicoty ledons, Longman Group Ltd, London, 1974.