ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்த புரட்சிவாதி, கி.பி. 1897–ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மேற்குக் கோதாவரி மாவட்டத்திலுள்ள மொகல்லு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை வேங்கடராமராசு என்பார் இராசமகேந்திரவரத்தில் நிழற்படக்கூடம் வைத்திருந்த கலைஞர், இராசமகேந்திரவரத்திலும் நரசாபுரத்திலும் கல்வி கற்றவர் அல்லூரி சீதாராம ராசு. வேதங்கள், இரேகை சாத்திரம், மந்திர சாத்திரங்கள் முதலியவற்றை அறிந்திருந்ததோடு, இவர் வில்வித்தை, குதிரையேற்றம் ஆகிய கலைகளையும் கற்றுத் தலை- அல்லூரி சீதாராமராசு யாய வீரராகத் திகழ்ந்தார். விசாகப்பட்டண மாவட்டத்தில் கிருட்டிணா தேவிப்பேட்டையில் இராமருக்குக் கோயில் கட்டி ஓராண்டுக் கடுந்தவம் புரிந்தார். அங்கு வாழ்ந்த கோயர்கள் என்னும் பழங்குடி மக்கள் இவரை வில்லேந்தியவர் (தனுர் தாரி) என்னும் பொருளில் கலியுக இராமனாகக் கொண்டு பக்தியுடன் வணங்கினர். அவ்வேழை மக்களின் மனக்குறை தீர அரும்பாடுபட்டு அவர்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்துப் படைக்கலமேந்திய தேசபக்தர்களாக்கிய பெருமை இவரைச்சாரும். ஒத்துழையாமை இயக்கம் 1921–22–ஆம் ஆண்டுகளில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம், இவரும் அவ்வியக்கத்தில் பங்குகொண்டு தம் துணைவர்களையும் வெள்ளையராட்சிக்கெதிராகத் தூண்டிவிட்டார். அரசு நடத்தும் நீதிமன்றங்களைப் புறக்கணித்துவிட்டு, இவர்கள் தமக்கே சொந்தமான ஊராட்சி நீதிமன்றங்களை அமைத்துக் கொள்ள வேண்டுமென இவர் கருத்துரைத்தார். வெகுண்டெழுந்த அரசு இவரைச் சிறைசெய்தது. ஆயினும் போதுமான சான்றுகள் இன்மையால் இவரை அரசு விடுவித்தது. இவர் சிறையிலிருந்து விடுவிக்கப் பெற்றாலும், இவருடைய துணைவர்கள் வெள்ளை அரசாங்கத்தாலும், அதற்கு உறுதுணையான கங்காணிகளாலும் அச்சுறுத்தப்பட்டுச் சொல்லொணாத் துயர்களுக்கு ஆளாயினர். காந்தம்துரை, மல்லுதுரை என்னும் இரு சகோதர இளைஞர்கள், பாசுடியன் என்னும் வெள்ளைக்கார அதிகாரியால் பதவிநீக்கம் பெற்று நிலங்களையும் பறிகொடுத்தனர். உழைப்பிற்கேற்ற ஊதியம் கேட்ட ஏழைத் தொழிலாளர்கள் சந்தானம் பிள்ளை என்னும் கண்காணிப்பாளரால் கண் காது தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டனர். இக்கொடுமைகளுக்கு இரையான பழங்குடி மக்கள் அல்லூரி சீதாராமராசு தலைமை தாங்கி அக்கொடுமையை எதிர்க்க வேண்டுமெனக் கோரினர். அல்லூரி சீதாராமராசு அம்மக்களின் வேண்டுகோளை ஏற்றுப் படைக்கலம் தாங்கிய கலகத்திற்கு ஆயத்தமாகி, அயலாரை எதிர்ப்பதென்னும் முடிவுக்கு வந்தார். காவல் நிலையங்களைத் தாக்கித் துப்பாக்கிகளையும் ஏனைய போர்க்கருவிகளையும் பறித்துக் கொண்டனர். 1922 ஆகசுட்டு 22–ஆம் நாள் சிந்தலப் பள்ளி காவல்நிலையம் இவருடைய தாக்குதலுக்கு உள்ளாயிற்று. இவர் அதே ஆண்டு அக்டோபர் 15–ஆம் நாள் கோதாவரி மாவட்ட ஆட்சித் தலைவருக்குக் கடிதம் எழுதி ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் சுட்டடிகலா காவல் நிலையத்தைத் தாக்கப் போவதாக அறிவித்தார். குறிப்பிட்ட நாளில் குறித்த நேரத்தில் இவர் அக்காவல் நிலையத்தை அடைந்தபோது காவல் நிலையம் திறந்து கிடந்தது. இவரை வரவேற்க ஆள் ஒருவரும் தென்படவில்லை. இவர் காவல் நிலையத்திலிருந்து படைக்கலங்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு, எடுத்துச் சென்ற பொருள்களுக்குரிய பற்றுச்சீட்டையும் காவல் நிலைய நாளேட்டில் குறித்து வைத்து விட்டு வெளியேறிவிட்டார். ஆங்கிலேயர் அச்சமுற்றனர். பயிற்சி பெற்ற ஆங்கிலப் படைக்கலப் படை வீரர்களால் இவரைப் பிடிக்க இயலவில்லை. இவரைப் பிடிக்க உதவும் செய்தியைச் சொல்வோருக்கு உரூபாய் பத்தாயிரம் என்று அரசு அறிவிப்புச் செய்தது. ஆயினும் பயன் ஒன்றுமில்லை. இவருக்கு இன்னல்கள் வரத் தொடங்கின. இவருடைய அணுக்கத் தோழர்களில் ஒருவரான காந்தம் துரை போர் ஒன்றில் கொல்லப்பட்டார். அக்கிதுரை எனப்படும் இவர் நண்பர் பிடிப்பட்டார். அல்லூரியின் தம்பியும் காட்டிக் கொடுக்கப்பட்டார். இவர் தனித்தவரானார். இவரைப் பின்பற்றியவர்கள் சொல்லொணா அல்லலுக்கு உள்ளாயினர். அவர்கள் மீது தண்டனை வரி விதிக்கப்பட்டது. அல்லூரிக்கு ஆதரவு காட்டிய, ஒரு பாவமும் அறியாத பழங்குடி மக்கள் தொல்லைக்காளாயினர். எனவே ஆங்கிலேயரிடம் சரணடைவது ஒன்றே அவர்களின் தொல்லையைப் போக்கும் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தார் இவர். காவி உடை தரித்துத் துறவி போல வந்து சரணடைந்த இவரை ஆங்கில இராணுவத்தினர் கைப்பற்றி நெஞ்சில் சுட்டு வீழ்த்தினர். சுதந்திரத்திற்குப் பாடுபட்ட அல்லூரி சீதாராம இராசு நாட்டுக்காகக் களபலியானார்.