பறவைகளில் குறிப்பாக, கிளிகளில், கிளாமைடியா சிட்டசி என்ற ஒட்டுண்ணியால் உண்டாகும் நோயை சிட்டகோசிஸ் என்பர். இதையே, ஆர்னிதோசிஸ் (ornithosis) என்றும் குறிப்பிடுவர். இந்நோய் மனிதனைப் பாதிக்கும் போது, நுரையீரல் அழற்சி போன்ற விளைவுகள் ஏற்பட்டு, மரணமும் நிகழலாம். கிளாமைடியா சிட்டசி, நகர முடியாத, செல்லுள்ளிருக்கும் ஒட்டுண்ணியாகும். இது ஓம்புயிர்ச் செல்களின் சைட்டோபிளாசத்தில் இனப் பெருக்கமடைகின்றது. கிளாமைடியா கிராம் சாயம் ஏற்காத நுண்ணுயிராகும். இதில் DNA, RNA, ரைபோசோம் ஆகியவை காணப்படுகின்றன. இவை இனப் பெருக்கமடையும் போது, வளர்சிதை மாற்றம் சார்ந்த நொதிகள் உருவாகின்றன. இவற்றின் வளர்ச்சி டெட்ராசைக்ளினாலும், எரித்ரோமைசீனாலும் தடைப்படுகிறது. கிளி, புறா, கோழிக் குஞ்சு, வான்கோழி ஆகியவை இந்நோயைப் பரப்பும் என அறியப்படுகிறது. மேற்கூறிய பறவைகளுடன் பழகுபவர்களுக்கு, இந்நோய் பறவைகளின் மலம், சிறகு, கடி மூலம் பரவுகிறது. இந்நோயின் தொடக்கத்தில் காய்ச்சல், தலை வலி, உடல் வலி, இருமல் ஆகியவை உண்டாகின்றன. நோய் முற்றிய நிலையில், கை கால் நடுக்கம், புலம்பல், நீல நிறத் தோல், தோல் பொரிப்பு, காமாலை ஆகியவை உண்டாகின்றன. கல்லீரல், மண்ணீரல், இதயம் ஆகியவை விரிவடைகின்றன. ஆய்வில் வெள்ளணுக் குறைவு, சிவப்பணு படியும் விகித அதிகரிப்பு, சிறுநீரில் புரதம், எக்ஸ் கதிர் மார்புப் படத்தில் நிழல்கள் ஆகியவை அறியப் படுகின்றன. நோய்க் காரணியைத் தனிமைப் படுத்துவது ஆபத்தானது. அதிகமாகிக் கொண்டேயிருக்கும் டைட்டர் நோய் நிர்ணயத்தில் உதவுகிறது. ஃபிரையின் எதிர்ச் செனி (Frei's antigen) விளைவு நோயை உறுதி செய்கிறது. மருத்துவம். டெட்ராசைக்ளின் நாளும் 2—3 கிராம் கொடுத்தால், 2—3 நாளில் நோய் தணிகிறது. இம்மருந்தை 10 நாளுக்குக் கொடுக்க வேண்டும். நோயின் வெளிப்பாடுகளுக்கு ஏற்பவும், மருந்து அளிக்க வேண்டும். —மு.கி. பழனியப்பன் நூலோதி. P.G. Kamath, Text Book of Medicine, Vol.I, Third Edition, API Publishers, Bombay, 1979.