அரப்பா
arappā
அரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட உடைந்த ஆண் சிலை
அரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட உடைந்த ஆண் சிலை
அரப்பா
ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரும் நாகரிகத்தினைக் கண்ட நகரம். இது, பாகிசுத்தானின் மேற்குப் பஞ்சாபு மாநிலத்தில் மாண்ட்கொமரி மாவட்டத்தில், சட்லெசு ஆற்றங்கரையில் இன்று சிற்றூராகக் காட்சியளிக்கிறது. இவ்வூர் தில்லியிலிருந்து வடமேற்காக 480 கி.மீ. தூரத்தில் இலாகூர் மூல்டான் இருப்புப் பாதையில் அரப்பா சாலை என்னும் இருப்புப்பாதை நிலையத்திற்கருகில் உள்ளது.
அரப்பா நகரின் சுற்றளவு 4 கிலோமீட்டர்களாகும். இங்கு 6 மண்மேடுகள் இருக்கின்றன. அவற்றுள் பெரியது 323 மீட்டர் நீளமும், 260 மீட்டர் அகலமும் உடையது. இங்குள்ள மேடுகளின் உயரம் 8 மீட்டர் முதல் 20 மீட்டர் வரை உள்ளது. இம்மண்மேடுகளில் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் முதல் இயக்குநராக இருந்த அலெக்சாந்தர் கன்னிங்காம் என்பார் கி.பி. 1853, 1856, 1872 ஆகிய ஆண்டுகளில் மும்முறை ஆய்வுகளை மேற்கொண்டார். அக்கள ஆய்வில் அவர் சில முத்திரைகளையும் மட்பாண்ட ஓடுகளையும் பழம் பொருள்களையும் கண்டறிந்தார்.
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் கராச்சி–இலாகூர் இருப்புப் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. அக்காலத்தில், அதற்குத் தேவையான செங்கற்களை இந்நகரின் மேடுகளில் புதைந்திருந்த கட்டிடப் பகுதிகளிலிருந்து எடுத்துப் பயன்படுத்தினர். இதனால் அரப்பாவின் தொன்மையான கட்டிடங்கள் சிதைவுற்றன.
தயாராம் சகானி என்பார் 1922–ஆம் ஆண்டு அரப்பாவில் அகழாய்வை மேற்கொண்டார். அதன் பின்னர்த் தொடர்ந்து பல அகழாய்வுகள் இங்கு மேற்கொள்ளப்பட்டன. 1946–ஆம் ஆண்டு மார்ட்டிமர் வீலர் என்னும் தொல்லியல் அறிஞர், மீண்டும் ஓர் அகழாய்வினை இங்கு மேற்கொண்டார். இவ்வகழாய்வுகளின் மூலம் அரப்பாவின் தொன்மை புலப்பட்டது. இந்நகரம் மொகஞ்சோதாரோவைவிடப் பரப்பளவில் பெரியது. இருப்புப் பாதை அமைக்க இந்நகரின் பழைய கட்டிடங்களைச் சீர்குலைத்ததால் இந்நகரின் முழுமையான கட்டிட அமைப்பை அறிய முடியாமல் போயிற்று. எனினும் இந்நகரத்தின் அமைப்பு மொகஞ்சோதாரோவின் அமைப்பினை ஒத்துள்ளது என்பதும், அங்கு வாழ்ந்த மக்களும் மொகஞ்சோதாரோவின் மக்களும் ஒரே நாகரிகத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெளிவாயின.
அரப்பா அகழாய்விலிருந்து அம்மக்கள் சுட்ட செங்கற்களால் காற்றோட்ட வசதிமிக்க சிறந்த வீடுகளைக் கட்டி வாழ்ந்தமை தெரிகிறது. வீடுகள் பல அறைகளைக் கொண்டும் மேல்மாடிகளைக் கொண்டும், குளியலறைகள், குப்பைத் தொட்டிகள், சாய்க்கடைகள் முதலியன கொண்டு அமைக்கப்பட்டும் விளங்கின. கழிவுநீர் கிழக்கு நோக்கிப் போகுமாறும், சாலைகளின் ஓரங்களில் செல்லுமாறும் சாய்க்கடைகள் அமைக்கப்பட்டன. வீடுகளில் பெரும்பாலானவை இரண்டு அடுக்குகள் கொண்ட மாடி வீடுகள். வீட்டின் கூரைகள் சமதளமாக (தட்டையாக) அமைக்கப்பட்டுள்ளன. நகரின் மேற்கே கோட்டை ஒன்று இருந்தமைக்கான சிதைந்த சின்னங்கள், அகழாய்வின் மூலம் தெரிந்தன. கோட்டைப் பகுதியில் மக்கள் மிகுதியாக வாழ்ந்தமைக்கான அறிகுறிகள் உள்ளன. இச்சிதைவுகளின் மூலம் இந்நகரம் திட்டமிடப்பட்டுக் கட்டப் பெற்ற நகரமாயிருந்திருக்கக்கூடும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
அரப்பாவில் கிடைத்த நடன மாதின் சிலை
இங்குக் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் உணவுக் களஞ்சியம் குறிப்பிடத்தக்கது. அதன் நீளம் 36 மீட்டர்; அகலம் 45 மீட்டர். களஞ்சியத்தின் சுவர்கள் 17 மீட்டர் உயரம் கொண்டவை. சுவர்களை ஒட்டினாற்போல் 8 மீட்டர் இடைவெளிவிட்டு மற்றொரு நீண்ட சுவர் காணப்படுகிறது. இந்த இரு வரிசைகளுக்கும் இடைப்பட்ட பகுதி, கூறையால் மூடப்பட்டிருக்க வேண்டும். இச்சுவர்களுக்கிடையில் அமைக்கப்பட்டுள்ள ஆறு மண்டபங்கள் ஒவ்வொன்றும், மூன்று பெருஞ்சுவர்கள் கொண்டு நான்கு அறைகளாகத் தடுக்கப்பட்டுள்ளது. இப்பெரும் அறைகள் யாவும் பல்வேறு கூலக் கிடங்குகளாக இருந்திருக்கக் கூடுமென அறிஞர்கள் கருதுகின்றனர். இங்குக் கண்டுபிடிக்கப்பட்ட முத்திரைகள் பெரும்பாலும் மாவுக் கல்லால் செய்யப்பட்டவையாகும். இவைகளில் விலங்கினங்களின் உருவங்களும் சித்திர எழுத்துகளும் உள்ளன. எல்லா முத்திரைகளிலும் காணப்படும் இவ்வெழுத்துக்கள் ஒரே தன்மையனவாக உள்ளன. மேலும், வளையல்கள், மணி வகைகள், பதுமைகள், காளை மாட்டு உருவங்கள், மட்பாண்ட வகைகள் ஆகியவையும் கிடைக்கப்பெற்றுள்ளன.
அரப்பா நாகரிகம் ஏறக்குறைய கி.மு. 3500–கி.மு. 2750 ஆண்டுகளில் உச்ச நிலையை எட்டியிருக்க வேண்டும். இக்கட்டிடச் சிதைவுகளைக் காண மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். அரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களும் அங்கு உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகத்தின் பழைய நகரங்களில் “அரப்பாவே” முதலில் கண்டுபிடிக்கப்பட்ட நகரமாதலால் தொல்வியலார் பின்பற்றும் கோட்பாட்டின் அடியொற்றி இந்நாகரிகத்தை அரப்பா நாகரிகம் என்று குறிப்பிட்டனர். காண்க: சிந்துவெளி நாகரிகம்; மொகஞ்சோதாரோ நாகரிகம்.
துணை நூல்கள்
Vats, M.S., “Excavations at Harappa”, 2 vols., Delhi, 1940.
Wheeler, R.E.M., “The Indus Civilization (3rd Edition)”, Cambridge, 1968.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 749)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ugvkvbd8/
தமிழ்“அரப்பா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ugvkvbd8/APA
Oliyon Research. (2026). அரப்பா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ugvkvbd8/MLA
"அரப்பா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ugvkvbd8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment