கணவன், மனைவி இருவரும் உயிருடன் இருக்கும்போது, அவர்களது மண உறவு சட்டப்படி விலக்கு ஆகாத நிலையில், அவருள் ஒருவர் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதற்கு இரு துணை மணம் (Bigamy) என்பது பெயர். இருதுணை மணம் அந்த இனத்தவரின் சட்டப்படி செல்லத்தகாததாயின், இருதுணை மணம் புரிந்தவர் இந்தியத் தண்டனைச் சட்டம் 494–ஆம் பிரிவின்படி தண்டிக்கப்படத் தக்கவர் ஆவார். அதற்கு உடந்தையாக இருந்தவர்களும் தண்டிக்கப்படத்தக்கவராவர். குற்றமாகக் கருதப்படும் இருதுணை மணத்திற்கு முதல் கணவனோ முதல் மனைவியோ இசைவு அளித்திருந்தாலும் அந்த இசைவுக்குப் பயனில்லை. ‘ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன்’ என்ற கோட்பாடு இல்வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், இந்தியப் பெண்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்துடனும் மேற்படி இந்தியத் தண்டனைச் சட்டம் 494–ஆம் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள், முகமதியர், கிறித்தவர் என்ற மூன்று முக்கிய இனத்தவர் உள்ளனர். இந்துக்களின் நிலை பழைய சட்டப்படி இந்து சமயத்தைச் சேர்ந்த ஆண்மகன் ஒரே சமயத்தில் பல பெண்களை மணக்கும் உரிமை பெற்றிருந்தான். முற்காலத்தில் அச்சமய உட்பிரிவைச் சேர்ந்த பெண்கள் ஒரே சமயத்தில் பல ஆண்களை மணக்கும் பழக்கம் இருந்துவந்தது. இப்பழக்கம் காலப்போக்கில், சமூக மாற்றங்களின் காரணத்தால் மிகவும் குறைந்தது. அதாவது, ஒரு பெண்ணுக்கு ஒரு கணவன் கிடைப்- பதே அரிதானதும் இந்தப் பழக்கம் மறையத் தொடங்கியது. இருதுணை மணம் என்ற பழக்கத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் முதன் முதலில் பம்பாய் மாநிலமானது 1946–ஆம் ஆண்டில் இந்து இருதுணை மணச் சட்டத்தை (Bombay Prevention of Hindu Bigamous Marriage Act of 1946) இயற்றியது. அதைத் தொடர்ந்து, சென்னை இந்து இருதுணை மணத் தடுப்பு மற்றும் மணவிலக்குச் சட்டம் (The Madras Hindu Bigamy Prevention and Divorce Act, 1949) தமிழ் நாட்டில் 1949–ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. அதைப் பின்பற்றி, இந்து இருதுணை மணத்தைத் தடுக்கும் சௌராட்டிரச் சட்டம் (The Saurushtra Prevention of Hindu Bigamous Marriage Act Vol. 1950) 1950–ஆம் ஆண்டில் சௌராட்டிர மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இந்த மூன்று சட்டங்களின்படி, மேற்படி மூன்று மாநிலங்களைச் சேர்ந்த இந்துக்கள் (இரு பாலாரும்) இருதுணை மணம் செய்தால், இந்தியத் தண்டனைச் சட்டம் 494–ஆம் பிரிவின் படி குற்றவாளி ஆவர். பின்னர், 1955–ஆம் ஆண்டில் இந்துத் திருமணச் சட்டம் (Hindu Marriage Act, 1955) இந்தியக் குடியரசால் இயற்றப்பட்டது. சம்மு–காசுமீர் மாநிலத்தைத் தவிர, இந்தியாவில் உள்ள எல்லா இந்துக்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும், முந்தைய சட்டங்களுக்கும் இந்தச் சட்டத்துக்கும் முரண்பாடு யாதேனுமிருந்தால், இந்துத் திருமணச் சட்டமே பொருந்தும். இருதுணைமணம் புரிபவர் இந்தியத் தண்டனைச் சட்டம் 494–ஆம் பிரிவின்படிக் குற்றவாளியாவார் என்று 1955–ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்துத் திருமணச் சட்டத்தின் 17–ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு இதன் வரம்புக்குட்பட்ட எந்த இந்துவும் இருதுணை மணம் செய்யமுடியாது. இந்த 1955–ஆம் ஆண்டைய இந்துத் திருமணச் சட்டம் புத்த, சைன, சீக்கிய மதத்தினருக்கும் பொருந்தும் என்பது அந்தச் சட்டத்திலேயே கூறப்பட்டுள்ளது. முகமதியர் நிலை முகமதியர் இனச் சட்டப்படி ஒரு முகமதிய ஆண் ஒரே சமயத்தில் நான்கு மனைவியரைத் திருமணம் செய்து கொள்ளலாம். எனவே, முகமதிய ஆண் இருதுணை மணத்தைச் சட்டப்படிச் செய்யலாம். ஆனால், ஒரே சமயத்தில் நான்கு மனைவியர் என்ற வரையறையை மீறக் கூடாது. இருதுணை மணம் புரியும் உரிமை ஒரு முகமதியப் பெண்ணுக்குக் கிடையாது. எனவே, அவள் சட்டப்படி இருதுணை மணம் செய்ய முடியாது. மேலும், 1954–ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசு சிறப்புத் திருமணச் சட்டத்தை (Special Marriage Act of 1954) இவற்றியது. எந்த இனத்தவரும் இந்தச் சட்டத்தின்கீழ்ப் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம். இருதுணை மணம் இந்தச் சட்டத்தின்படி குற்றமாகும். தன் இனச் சட்டத்தின்படி ஒரு முகமதியர் ஒரே சமயத்தில் நான்கு மனைவிகள் வரை திருமணம் புரியலாம்; என்றாலும் அவர் தமது எந்தத் திருமணத்தையாவது மேற்படி சிறப்புச் சட்டத்தின்படி செய்வாராயின், அவரது உரிமை பெரிதும் பாதிக்கப்படுவதாகும். அவர் தம் முதல் மனைவியை மேற்படி சிறப்புச் சட்டத்தின்படி திருமணம் செய்திருந்தால், சட்டப்படி அவர் இருதுணை மணம் செய்ய முடியாது, முதல் மனைவியைத் தமது இனச் சட்டப்படி ஒரு முகமதியர் மணம் செய்திருந்தால் இருதுணை மணத்தைச் சிறப்புச் சட்டத்தின்படி பதிவு செய்ய முடியாது. கிறித்தவரின் நிலை கிறித்தவரின் மதக் கோட்பாட்டிலும் கி.பி. 1872–ஆம் ஆண்டு மத்திய அரசால் இயற்றப்பட்ட இந்தியக் கிறித்தவத் திருமணச் சட்டத்தின்படியும் (Indian Christian Marriage Act of 1872) இருதுணை மணம் தடை செய்யப்பட்டுள்ளது. (இந்தச் சட்டத்தின் 60–ஆம் பிரிவைப் படிக்கவும்) எனவே இந்தியக் கிறித்தவர்கள் சட்டப்படி இருதுணை மணம் புரிய முடியாது.