முந்தைய சாளுக்கியர்களை அடுத்து ஆட்சிக்கு வந்த இராட்டிரகூடர்களின் கோயிற் கட்டடக்கலைக்குச் சிறந்த சான்றாக விளங்குவது, பட்டடக்கல்லில் உள்ள கோயிலாகும். இதனைக் கோயில் நகரம் என்றும் கூறுவர். இக்கோயில், முந்தைய சாளுக்கியரின் பாணியை ஒத்துள்ளது. மூன்று அடுக்குகளை உடைய இக்கோயிலின் கீழ் அடுக்கு, கருவறையையும் கருவறையைச் சுற்றி வலம் வரும் வழியையும் இவ்வழியைச் சுற்றித் தடுப்புச் சுவரையும் கொண்டுள்ளது. கருவறையை அடுத்து நவரங்க மண்டபம் உள்ளது. இவ்விரண்டையும் இடைகழியொன்று இணைக்கிறது. கோயில் அடி முதல் முடி வரை சதுர அமைப்பை உடையது. இக்கோயிலின் அதிட்டானம் முடியும் உச்சிப் பிதுக்கத்தில் (Cornice) மூக்கு வடிவ (Nasika) அமைப்பு இல்லாமல், தட்டை வடிவ முக்கோண அமைப்பை இக்கோயில் பெற்றுள்ளது. கோயிலின் பிரசுத்தரப் (Prastara) பகுதியில் கூடுகளும் சாலைகளும் (Salas) பஞ்சரங்களும் (Panjaras) காணப்படுகின்றன. இரண்டாம் அடுக்கில் கர்ணகூடுகளும் பத்திர சாலைகளும் (Bhadra Salas) உள்ளன. மூன்றாம் அடுக்கு, கீழ் அடுக்கைவிடக் குறுகலாகக் காணப்படுகிறது. நவரங்க மண்டபத்தை (Navaranga Mandapa) அடுத்துப் பல தூண்கள் கொண்ட முக மண்டபம் உள்ளது.