இதன் தாவரவியல் பெயர் டிரிபுலஸ் டெரஸ்டிரிஸ் (Tribulus terrestris) ஆகும். இது இரு வித்திலைத் தாவரங்களுள், அல்லி இணையாத தொகுதியினுள், வட்டுடைப் பூத்தாவரங்கள் வரிசையில், ஜிரேனி யேல்ஸ் துறையில், சைகோஃபில்லேசிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இச்செடி ஐரோப்பா முதல் மத்திய ஆசியா வரையிலும், தென் ஆப்பிரிக்காவின் வெப்பமான பகுதிகளிலும், இலங்கையிலும் வளர்கிறது. இந்தியாவில் உத்தரப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாட்டில் வளர்கிறது. பொதுவாக, இது ஒரு வெப்ப, மித வெப்ப மண்டல இடை நிலைத் தாவரம் (Mesophyte) ஆகும். இது நலிந்த தண்டுடைய நிலம் படர் செடியாகும். இதன் வேர்த் தொகுப்பு 10–20 செ.மீ. நீளமுடையது. மஞ்சள் அல்லது வெள்ளை நிற ஆணி வேரும், பிற கிளை வேர்களும் உண்டு. வேர்த் தொகுதியின் தரை மேல் பகுதி, சிறியதொரு மைய அச்சுப் பகுதியாக உள்ளது. இந்தக் குறுகிய மைய அச்சிலிருந்து 6–25 கிளைகள் தரை மட்டத்திலேயே உண்டாகி 40–125 செ.மீ. நீளத்திற்குத் தரையில் படர்ந்து வளரும். அமைப்பு. கிளைகளிலிருந்து சிறகு வடிவக் கூட்டிலை மாற்று இலையடுக்கமாகத் தண்டில் இணைந்திருக்கும். ஒவ்வொரு கணுவிலும், இரு சிறிய இலையடிச் செதில்கள் உள்ளன. ஒவ்வொரு கூட்டிலையிலும் 4–6 இரட்டைச் சிற்றிலைகள், எதிர் அடுக்கத்தில் இணைந்திருக்கும். தொடக்கச் சிற்றிலைகள் சிறியவை; ஒவ்வொரு சிற்றிலையும் நீள் சதுரம் அல்லது முட்டை வடிவானது; ஒழுங்கான இலை விளிம்பு காணப் படுகிறது. மைய நரம்பு சிற்றிலை நுனியில் சிறு நீட்சி. பெற்று இருக்கும். இலைக் கோண மொட்டிலிருந்து கோணக் கிளையோ, மலரோ உண்டாகும். மலர்க் காம்பு 15–22 மி.மீ. இரு பால், ஒழுங்கான, ஆரச் சமச் சீருடைய, நீளமான, ஆழ்ந்த மஞ்சள் நிற, ஐந்தங்கச் சூலகக் கீழ்ப் பூக்கள் மிக அழகாகத் தோன்றுகின்றன. 5 புல்லி இதழ்கள் இணையாமலும், ஈட்டி வடிவாகவும், தழுவு இதழ் ஒழுங்குடனும், பசுமையாகவும் விளங்குகின்றன. 5 அல்லி இதழ்கள், இணையாமல் தழுவு இதழ் ஒழுங்குடன், நரம்புகள் கொண்டுள்ளன, இவற்றின் அடிப் பகுதி சிறுத்தும், நுனிப் பகுதி அகன்றும், புல்லி இதழ்களுக்கு இடையில் அமைந்துள்ளன. தனித்த 10 மகரந்தத் தாள்கள் உள்ளன. ஒவ்வொரு மகரந்தக் கம்பியின் அடிப் பகுதியிலும் சுரப்பிச் செதில் ஒன்று உள்ளது. நீண்ட மகரந்தப் பைகள் இரண்டு அறைகள் கொண்டவை; நீள் போக்கில் வெடிக்கும் இவை, அடியில் இணைந்தவை. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படங்கள், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப் படுகின்றன.----> மேல் மட்டச் சூல் பையில் 5 சூலக இலைகள் இணைந்த சூலகம் உண்டு. 5 சூல் அறைகளில், ஒவ்வொரு சூல் அறையிலும் 1–5 சூல்கள் அச்சுச் சூல் அமைவில் தொங்கு சூல்களாகக் காணப் படும். சூல் பையின் வெளிப் புறத்தில் பல கூர்வளரிகள் உள்ளன; முனையில் நேரான சூலகத் தண்டும், 5 தடிப்புகள் பெற்ற சூலக முடியும் உண்டு. கனி, 5 கோணமுடையது; கனியுறை கூரிய முள்ளாக மாறியுள்ளது. இந்த வெடி கனி, 5 பகுதிகளாக வெடிக்கும்; ஒவ்வொரு பகுதியும் தொடக்கத்தில் குறுகியும், பிறகு அகன்றும் இருக்கும். இதன் பக்க வாட்டில் மேற்புறம் இரு கூரிய விரிந்த நீளமான முள்களும், கீழே இரு கூரிய குட்டையான முள்களும் காணப் படும். இதில் பிற வளரிகளும் உள்ளன. விதை முளை சூழ் தசை (endosperm) இல்லை. கனியின் கூரிய முள்கள் விலங்குகளின் உடலுறுப்புகளில் ஒட்டிக் கொள்வதால், கனி பரவுகிறது. மகரந்தச் சேர்க்கை வண்டினங்களால் நடை பெறுகிறது. பயன். மேக நோய், மேக வெட்டை, புற மேகம், வெட்டைநீர், கடும் சிறுநீர்ப்பை அழற்சி, உள்ளுறுப்புத் தடிப்பு நோய், சிறுநீர்த் தடை, கீல் வாதம், மலடு, கருப்பைக் கோளாறு, பிள்ளைப் பேற்றிற்குப் பிறகு இனப் பெருக்க வளம் உண்டாதல், இதய நோய் முதலியவற்றைப் போக்க, வறண்ட செடியும், கனியும் பயன் படுகின்றன. செடியை ஊற வைத்து, உண்டாக்கிய வழவழப்பான நீர் மலடு நீக்கவும், பெண் நோய் நீக்கவும் பயன் படும். நெருஞ்சியை சிறுநீர்ப் பாதை வீக்கத்திற்குக் கொடுக்கலாம். கனிச் சாறுடன் பொட்டாசியம் கார்பனேட் கலந்து, வலியுடன் கூடிய அடிக்கடிச் சிறுநீர்க் கழிக்கும் கோளாறுக்குக் கொடுக்கலாம். நெருஞ்சிக் குடும்பம். நெருஞ்சிக் குடும்பத்தில் 27 பேரினங்களும், 200 இனங்களும் உள்ளன. இவை வெப்ப, குளிர் மண்டலங்களில் காணப் படுகின்றன. மத்திய தரைக் கடல் பகுதியில் மிகுந்துள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தென் ஃபுளோரிடா மாநிலத்தில், குயாய்கம் என்னும் பேரினம் உள்ளது. தென் பகுதியில் கல்ஸ்ட்ரோமியா என்னும் பேரினமும், தென் மேற்குப் பகுதியில் லார்ரியா, போர்லீரியா, பிகானம் என்னும் பேரினங்களும் காணப் படுகின்றன. 100 இனங்களைக் கொண்ட பெரிய பேரினமான சைகோஃபில்லம் ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் உள்ளது. 40 இனங்களைக் கொண்ட ஃபாகோனியாப் பேரினம் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளது. இந்தியாவில் நெருஞ்சியும், ஃபாகோனியா அராபிகா (Fagonia arabica) என்னும் இனங்களும் மிகுந்து காணப் படுகின்றன. வளரியல்பு. பெரும்பாலானவை சிறு செடிகள் அல்லது புதர்ச் செடிகள். குயாய்கம் போன்ற பேரினம் அரிதாக மரமாகக் காணப் படும். இதன் கிளைகள் கணுக்களில் இணைந்திருக்கும். இலைகள். எதிர் இலையடுக்கம்; அரிதாக மாற்று இலையடுக்கம்; பெரும்பாலும், சிறகு வடிவக் கூட்டிலை (pinnately compound) வகையாகும். அரிதாக, இரண்டு இரட்டை இலைகளும், தனியிலைகளும் உள்ளன. இலைகள் சதைப் பற்றுள்ளவை அல்லது தோல் போன்று தடித்தவை; இரண்டு இலையடிச் செதில்கள் உள்ளன. அவை தோல் போன்றோ, சதைப் பற்றுள்ளவையாகவோ, தூவிகள் அல்லது முள்கள் பெற்றிருக்கும். இதில் வலைப் பின்னல் நரம்பமைப்பு காணப் படும். மஞ்சரி. நுனியில் உள்ளது; தனிப் பூ அல்லது நுனி வளரா மஞ்சரி (cymose inflorescence) காணப் படும். பூக்கள் . இரு பால் பூக்கள்; அரிதாக ஒரு பால் பூக்கள்; ஆரச் சமச் சீர் உடையவை; அரிதாக இரு பக்கச் சமச் சீர் உண்டு. ஐந்து அல்லது நான்கு அங்கப் பூக்கள்; சூலகக் கீழ்ப் பூ காணப் படும். பூத்தளம் பெரிதாக வட்டு (disc) ஆக இருக்கும். இது குவிந்தும், குழிந்தும் சுரப்பிகளின்றி இருக்கும். புல்லி வட்டம். புல்லி இதழ்கள் 5 அரிதாக 4, தனியாகவும், அடுக்கிதழ் அமைவிலும், கனியிலும் தோன்றும். அல்லி வட்டம். அல்லி இதழ்கள் 5, அரிதாக 4, தனியாகவும், அழகாகவும் அடுக்கிதழ் அமைவிலும், திருகு இதழ் அமைவிலும், அரிதாகத் தொடு இதழ் அமைவிலும் விளங்கும். மகரந்தத் தூள் வட்டம். இது 1,2,3 அடுக்கங்களில் காணப் படும். ஒவ்வோர் அடுக்கத்திலும், 5 மகரந்தத் தாள்கள் உள்ளன. அல்லி இதழ் எண்ணிக்கையில் 5 ஆகவோ, அதன் இரட்டிப்பு எண்ணிக்கையில் 10 ஆகவோ, வட்டில் இணைந்திருக்கும். மகரந்தத் தாள்கள் சமமற்ற உயரமுடையவை; வெளி வட்ட மகரந்தத் தாள்கள் அல்லி எதிரானவை; மகரந்தக் கம்பிகளின் அடிப் பகுதியில் செதில்கள் (scales) உள்ளன. சுழல் மகரந்தப் பை இரண்டு அறைகள் கொண்டது; இது உள் நோக்கி, நீள் வாக்கில் வெடித்து, மகரந்தத்தைச் சிந்தும். சூலக வட்டம். மேல் மட்டச் சூல்பை காணப் படும். சூல்கள் பள்ளங்கள், கோணங்கள், இறகுகள் கொண்டவை; சூலகம் காம்பில்லாதது; 4 அல்லது 5 சூலக இலைகள் இணைந்தது. 4 அல்லது 5 சூல் அறைகள் உண்டு. ஒவ்வொரு சூல் அறையிலும் 1, 2 அல்லது பல தொங்கு சூல்கள் (pendulous) அச்சுச் சூழ் அமைவில் அமைந்துள்ளன. சூலக முடி சூலகத் தண்டு நுனியில் உள்ளது; பெரும்பாலானவற்றில் கிளைகளற்றது. விதை. விதை நேரான அல்லது வளைந்த கருவினை உடையது; கெட்டியான, மிகுதியான, முளை சூழ் தசை (endosperm) இருக்கும்; சிலவற்றில் இராது. மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் நடை பெறும். கனி. நீள் வெடி கனி அல்லது குறுக்குச் சுவர் வெடி கனியாக இருக்கும். அரிதாகச் சதைக் கனி காணப் படும். —கே.ஆர். பாலச்சந்திர கணேசன் துணை நூல். G.H.M. Lawrence, Taxonomy of Vascular Plants, Oxford and IBH Publishing Co., New Delhi, 1974.