உமண் சாத்து
umaṇ cāttu
தமிழகத்தில் உப்பு வணிகம் செய்தோர் ஒரு தனிக்குடியாக வாழ்ந்தனர்.
தமிழகத்தில் உப்பு வணிகம் செய்தோர் ஒரு தனிக்குடியாக வாழ்ந்தனர். அக்குடி ‘உமண்குடி’ எனப்பட்டது. அக்குடி ஆடவர் ‘உமணர்’ எனவும்; பெண்டிர் ‘உமட்டியர்’ எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் பரற்கற்களாலான மேட்டு நிலப்பகுதியில் சிறு சிறு குடில்களை அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர். இவர்களை ‘வெள்ளுப்புப் பகர்நர்’ என்றும் இலக்கியங்கள் குறிக்கும்.
‘சாத்து’ என்னும் சொல் வணிகத்தைக் குறிக்கும். சாத்தன் வணிகன். வணிகருள் தலைவன் மாசாத்தான், மாசாத்துவான் எனப்பட்டான். ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தைக் கல்வெட்டு ‘ஏறு சாத்து’, ‘இறங்கு சாத்து’ எனக் குறிக்கிறது. வணிகப் பணத்திற்குக் கைச்சான்றிட்டு வழங்கப்படும் பற்றுச்சீட்டிற்குக் ‘கைச்சாத்து’ என்னும் சொல் உருவாயிற்று.
‘உமண் சாத்து’ என்பது உப்பு வணிகத்தைக் குறிக்கும் தொடராகும். உப்பு வணிகம் சில்லரையாகவும் மொத்தமாகவும் நடந்தது. சில்லரை வணிகத்தை உமட்டியர் நடத்தினர். ‘உப்பு வயல்’ எனப்படும் உப்பளத்திலிருந்து உப்பைப் பெற்றுவந்து ஆங்காங்கு அண்மையிலுள்ள சேரிகளுக்குத் தலைச்சுமையாகக் கொண்டுசென்று விற்றனர். ‘நெல்லின் நேரே வெண்கல் உப்பு’ என்றபடி சம அளவு நெல்லைப் பெற்று உட்பை விற்றனர்.
மொத்த உப்பு வணிகம் உமணரால் நடத்தப்பட்டது. உப்பங்கழி நிலத்தில் குன்றுபோல் குவிக்கப்பட்டிருந்த உப்பை நெல் கொடுத்துப் பெற்றனர். இந்நெல் ‘உப்பு நொடை நெல்’ எனப்பட்டது. அண்டையிலுள்ள நகர்கள் முதல் காடும் நிலமுங்கடந்து மலைநிலம் வரை இவ்வணிகம் நடத்தப்பட்டது; சிறு தொலைவிற்குக் கழுதைகளின்மேல் உப்புப் பொதிகளை ஏற்றிச் சென்றனர். நெடுந்தொலைவிற்கு வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். வழித்துணை கருதியும் காட்டு வழியில் வழிப்பறிக் கொள்ளையரது தாக்குதல் கருதியும் பல வணிகர் கூடிக் குழுக்களாகச் சென்றனர்.
இவ்வாறு வணிகர் குழுக்களின் வண்டிகள் பல எண்ணிக்கையில் ஒழுங்கு வரிசையாகத் தொடர்ந்து செல்லும். இவ்வண்டித் தொடரை ‘ஒழுகை’ எனச் சங்கப் பாடல்கள் குறிக்கின்றன.
மணற் பகுதியில் முனைந்து இழுக்கும் வலிமையுள்ள பகடுகள் பூட்டப்பட்ட வண்டி நிறைய உப்புப் பொதிகள் ஏற்றப்பட்டிருக்கும். பெரும் பாரத்தால் வண்டியின் அச்சு முறியலாம் என எதிர்பார்த்துப் பாதுகாப்பாகச் ‘சேம அச்சு’ பொருத்தியிருந்தனர். பகடுகள் களைத்தால் மாற்றுதற்கு மாற்றுப் பகடுகளையும் உடன் ஓட்டிச் சென்றனர். எருதுகளும் பயன்படுத்தப்பட்டன. பூட்டப்பட்ட பகடுகள் திருகித் தடம் மாறிவிடாமல் மற்றொரு தலைக்கயிறிட்டுப் பிடித்தவாறு உமணர் சாலை ஓரங்களில் நடந்து செல்ல, உமட்டியர் வண்டியில் அமர்ந்து ஓட்டிச் சென்றனர்.
உமணர் பல நாள்கள் பயணஞ் செல்ல நேர்ந்ததால் உணவுப் பண்டங்களுடன் குடும்பத்தையும் கொண்டு செல்ல நேர்ந்தது. பெண்டிர் சமையலுடன் வண்டி ஓட்டியும் துணையாயினர். நீர் வேட்கைக்குப் புளிங்காடி நிறைத்த மட்சால்களை வண்டியின் முன்னுள்ள குத்துக்கால்களில் இறுகப் பிணித்திருந்தனர். இக்காலத்தில் வளர்ப்பு நாய் வண்டியின் கீழே செல்வது போன்று வளர்ப்பு மந்தி வண்டியின் கீழே தொடர்ந்து சென்றதை ஒரு சங்கப் பாடல் (சிறு பாண்: 55) குறிக்கிறது.
இவ்வாறு வரும் வணிகக் கூட்டத்தை வழிப்பறிக் கொள்ளையர் எதிர்பார்த்திருந்து பொருள்களைப் பறித்துச் செல்லத் தாக்குவது வாடிக்கையாக இருந்தது. தாக்குதலுக்கு ஈடுகொடுத்தும் இழப்பை ஏற்றும் இவ்வணிகம் தொடர்ந்து நடந்தது. இவ்வணிகத்திற்கென உமணர் மன்னர்க்கு ‘உலகு’ எனப்படும் சுங்க வரிசெலுத்தினர். மன்னரும் வணிகர்க்குப் பாதுகாப்பாக ‘நாடு காவல்’, ‘பாடி காவல்’ படைகளை வைத்துக் பாதுகாப்பளித்ததனைப் பெரும்பாணாற்றுப்படை (81, 82) குறிக்கிறது.
பகடுகளைத் தூண்டி ஓட்டும்போது ‘ஓய்’ என்னும் ஒலியெழுப்பி அதட்டி ஓட்டினர். இவ்வாறு ஒலியெழுப்பிச் செலுத்தப்படும் உப்பு வண்டி ‘உப்பு ஒய் சகடம்’ எனக் குறிக்கப்பட்டுள்ளது. (ஒய் இக்காலத்தில் ‘ஐ’ என்றும் ஒலிக்கப்படுகிறது)
எனவே, அக்காலத்து உமண் சாத்து ஒரு தனிக் குடியினரால் குடும்பத் தொழிலாக, நெல் மாற்று விற்பனையாகப் பெருமுயற்சியும் முனைப்பும் கொண்டதாக, பல இடையூறுகளைக் கடந்து செய்வதாக நடந்தது. கோ.இ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 934)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uczbwb5h/
தமிழ்“உமண் சாத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uczbwb5h/APA
Oliyon Research. (2026). உமண் சாத்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uczbwb5h/MLA
"உமண் சாத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/uczbwb5h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment