இளங்குழவிப் பருவத்தனிமை நோய்
iḷaṅkuḻavip paruvattaṉimai nōy
இளங்குழவிப் பருவத்தனிமை நோய் என்பது பிறந்ததிலிருந்து 2½ வயது வரையிலான குழந்தைகளிடம் காணப்படும் உளநோய்களுள் ஒன்றாகும்.
இளங்குழவிப் பருவத்தனிமை நோய் என்பது பிறந்ததிலிருந்து 2½ வயது வரையிலான குழந்தைகளிடம் காணப்படும் உளநோய்களுள் ஒன்றாகும். இப்பருவக் குழந்தைகளிடம் பேச்சுத்திறன், இயக்கத்தின் புலன் காட்சித்திறன், புலனியக்க ஒருங்கமைவு, மனவெழுச்சி ஆகியவை குன்றிய நிலையில் காணப்படின் குழந்தைக்குப் பெரும்பாலும் இளங்குழவிப் பருவத் தனிமை நோய் (Infantile Autism) இருப்பதாக அறியலாம். இந்நோயுடைய குழந்தைகளிடம் மனவளர்ச்சி குன்றியமை (Mental Retardation) காணப்படுவதில்லை. குழந்தையிடம் இந்நோயின் அறிகுறிகள் யாவும் ஒருங்கே காணப்பட்டாலன்றி இந்நோய் இருப்பதாகக் கருதமுடியாது. உளநலமுடைய குழந்தைகளிடமும் சில நேரங்களில் இத்தகைய அறிகுறிகள் ஏதேனும் ஒரு சில காணப்படுவதுண்டு. அவை சில காலத்திற்குப் பின் மறையக்கூடும். ஆதலின் இந்நோயின் அறிகுறிகள் குழந்தையின் நடத்தையைப் பெருமளவு பாதிப்பனவாகக் காணப்பட்டால் மட்டுமே இந்நோய் இருப்பதாகக் கருத முடியும். எடுத்துக்காட்டாக, மூளையில் நீர் மிகுதியாகச் சுரப்பதனால் (Hydrocephaly) ஏற்படும் புலனியக்கக் குறைவை இளங்குழவிப் பருவத் தனிமை நோயின் அறிகுறியாகக் கருத முடியாது. மேலும் உளவளர்ச்சி குன்றிய குழந்தைகளிடமும் புலனியக்கக் குறைகள் காணப்படுகின்றன. கானர் (Kanner) என்பவர் இந்நோயின் அறிகுறிகளைப் பற்றி ஆராய்ந்து அவற்றை வரையறுத்துள்ளார். இரட்டர் (Rutter) என்பவர் இளங்குழவிப் பருவத் தனிமை நோயினைக் கண்டு பிடிப்பதற்குக் குழந்தையின் மன வயதைக் கண்டு பிடிப்பது இன்றியமையாததாகும் என்று கருதுகிறார். எடுத்துக்காட்டாக, 4 வயதுக் குழந்தை 6 மாதக் குழந்தையின் உள வயதைக் கொண்டிருந்தால் அக்குழந்தையிடம் நான்கு வயதுக்கேற்ற மொழித் திறமும் மனவெழுச்சி முதிர்ச்சியும் காணப்படமாட்டா. குழந்தை தனிமையை மிகுதியாக நாடுவதும், கண்களின் வழியே மனவெழுச்சிகளை வெளிப்படுத்தாமையும் தனிமை நோயின் முதன்மையான அறிகுறிகளெனக் கொள்ளலாம். இளங்குழவிப் பருவத்தில் ஏற்படும் இயக்கமிகுதி (Hyperkinesis), செவிட்டுத்தன்மை, பார்வையின்மை, வளர்ச்சியின்மை, காரணமிலாச் சோர்வு, குழந்தைப் பருவத் தூண்டல்களின் தாயன்பு இல்லாமை, கொடுமையாக நடத்தப்படுதல், மொழித் தடங்கல், உளவளர்ச்சி குன்றியமை வளர்ச்சி நிலைத்தாமதம், மூளை நோய்கள், உயிர்ப் பொருளாக்கக் கோளாறுகள் (Metabolic Disorders), குழந்தைப் பருவத்து உளச் சிதைவு நோய் (Childhood Schizophrenia), பிறப்புக் காலத்தில் ஏற்படும் தட்டம்மை (Reusella), புலனியக்கக் கோளாறுகள் ஆகிய கோளாறுகளினாலும் தனிமை நோய் நடத்தைக் கூறுகள் காணப்படும்.
இரட்டன்பர்கு (Ruttenberg) என்பவர் 1978–ஆம் ஆண்டு தனிமைநோய், இயல்பு பிறழ்வு ஆகியவற்றின் அறிகுறிகள் காணப்படும் குழந்தைகளின் நடத்தைகளை மதிப்பீடு செய்யும் அளவையைக் (Behaviour Rating Instrument for Autistic and A typical Children) கண்டு பிடித்தார். இந்த மதிப்பீட்டு முறையில் குழந்தைகளின் நடத்தைகள் எட்டுப் பிரிவுகளுள் அடங்கும். 10 வகைகளான செயல்முறைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. தனிமை நோய்க் குழந்தைகள் இந்த மதிப்பீட்டு முறையில் அதிகமான புள்ளிகள் எடுக்கின்றனர். தனிமைநோய் உளநோய்களின் வரிசையில், இறுதி நிலையில் உளச் சிதைவுநோயும் தொடக்க நிலையில் தனிமை நோயும் அமைந்துள்ளன என்பதை இந்த மதிப்பீட்டு முறை காட்டுகிறது. இம்மதிப்பீட்டு முறையில் தொடர்பு (Relationship), கருத்துப் பரிமாற்றம் (Communication), செவ்விய திறனடைதலில் ஆர்வம், பேச்சுத் திறன், ஒலியுணர்தல், சமூகத்துலங்கல், உடலசைவு, உளம் சார் உயிரியல் செயற்பாடுகள் ஆகிய எட்டுப் பிரிவுகள் அடங்கியுள்ளன.
தனிமைநோய்க் குழந்தைகளிடம் இயக்க மிகுதி காணப்படுகிறது. இத்தகைய குழந்தைகளிடம் கவனக் குறைவும், மனம் போன வழியில் செயற்படுதலும், இயக்கக் குறைவும், அமைதியிலா இயக்கமும், மனவெழுச்சிக் குறைவும் காணப்படுகின்றன. இந்த அறிகுறிகள் குழந்தைக்கு மூன்று வயதானவுடன் தெளிவாகத் தெரிகின்றன. சில நேரங்களில் இப்பருவத்துக் குழந்தைகளிடம் இயல்பாகக் காணப்படும் விரைவுச் செயற்பாடுகளும், நிலையிலாமையும், மிகுதியான ஓட்டம், குதித்தல் போன்ற இயக்கங்களும் இயக்க மிகுதியைப் போலத் தோற்றமளிக்கின்றன. இத்தகைய இயக்கங்கள் கொண்ட குழந்தையிடம் இயல்பான மனவெழுச்சிகளும், சொல் திறன், சமூகத் தொடர்பு ஆகியவையும் காணப்படின் இவர்களைத் தனிமை நோயுடையவர் என்று கருத முடியாது. இளங்குழவிப் பருவத்தில் குழந்தை பெரியவர்களால் கொடூரமாக நடத்தப்பட்டால் குழந்தையிடம் இனம்புரியாத தவிப்பு நிலையும் இயக்கமிகுதியும் காணப்படலாம். இதனைத் தெளிவாகக் கண்டு பிடிப்பதற்காக மருத்துவர்கள், தெக்சுடிரோ ஆம்பிடமைன் (Dextro amphetamine) மெதில்பினைடேட்டு (Methylphenidate) போன்ற மருந்துகளைச் சிறிய அளவில் இக்குழந்தைகளுக்குக் கொடுத்து அதன் விளைவாக இக்குழந்தையிடம் இயக்க மிகுதி மேலும் அதிகமாகக் காணப்பட்டால், அது தனிமை நோயின் அறிகுறியாகும் என முடிவு செய்கின்றனர்.
தனிமைநோயின் அறிகுறியாகக் குழந்தைகளிடம் செவிட்டுத் தன்மை காணப்படலாம். இவர்கள் உண்மையான செவிக்கோளாறுடைய குழந்தைகள் அல்லர் என்பதைக் கேள்வியளவைச் சோதனைகளின் மூலம் (Audio metric Tests) தெரிந்து கொள்ளலாம். பிறப்பிலேயே செவிட்டுத் தன்மையுடன் இருக்கும் குழந்தையின் செவிக்கோளாறும் பேச்சுத் திறனின்மையும் தனிமைநோயுடைய குழந்தையின் செவிட்டுத் தன்மையினின்று வேறுபட்டு இருக்கின்றன. இதனைப் போன்றே தனிமை நோயுடைய குழந்தையிடம் காணப்படும் புலன்காட்சிக் குறையும் பிறப்பிலேயே காணப்படும் பார்வையின்மையினின்றும் வேறுபட்டு இருக்கிறது.
தனிமைநோயுடைய மழலையர் தாம் உண்ட உணவைச் சிறிது சிறிதாக வாயில் கொண்டுவந்து அசைபோடுகின்றனர். இந்தக் கோளாறு ஒரு வயது நிரம்பிய குழந்தையிடம் காணப்படலாம். இப்பழக்கத்தைக் குழந்தைப் பருவத்து இயல்பான தூண்டல்களை அளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம். இதனை உடனே கவனிக்காவிட்டால் குழந்தை உடற்கரைவு (Marasmus) என்னும் ஊட்டச் சத்துக் குறைவு நோயின் காரணமாக இறக்கலாம். குழந்தைக்குத் தேவையான அன்பு, அரவணைப்பு, கவனிப்பு ஆகியவை மறுக்கப்பட்டாலோ இவை முறைதவறி அல்லது எதிர்மறையாகக் கொடுக்கப்பட்டாலோ குழந்தையிடம் இப்பழக்கம் உளக் கோளாறாகத் தோன்றலாம். இதனால், குழந்தையின் எடை குறைகிறது. சில குழந்தைகள் உணவேற்க முடியாத நிலையை அடைகின்றன அல்லது உணவை மறுக்கின்றன. இவை யாவும் குழந்தைக்கு இளங்குழவிப் பருவத்தூண்டல்களான தாயின் அரவணைப்பு, அன்பு ஆகியவை தக்க முறையில் கிடைக்காத காரணத்தினால் தோன்றுகின்றன. தாயன்பு தாயைத் தவிர, தாயின் இடத்தை அல்லது பொறுப்பை ஏற்கும் தந்தை அல்லது வேறு எவரிடமிருந்தும் குழந்தைக்குக் கிடைக்கலாம். ஆறு மாதம் நிறையும் வரையில் குழந்தை தன் தாயிடமிருந்து மற்றவர்களை வேறுபடுத்தி உணர்வதில்லை. குழந்தைக்குத் தேவையான அன்பு, கவனிப்பு, அரவணைப்பு ஆகியவற்றைக் கொடுப்பவர் எவராக இருப்பினும் அவரைக் குழந்தை ஏற்றுக் கொண்டு அவரிடமிருந்து பெறும் தூண்டல்களுக்குத் துவங்குகிறது.
தனிமை நோயின் காரணமாகப் பெரும்பாலும் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதில்லை. தனிமைநோயுடைய குழந்தைகள் பெரியவர்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் விலகித் தனித்து இருக்கின்றனர். ஆனால், இவர்கள் விளையாட்டுப் பொருள்கள் போன்ற தூண்டல்களுக்குத் துலங்குகின்றனர். இவர்கள் மனிதர்களுடைய தூண்டல்களுக்குத் துலங்காமையும் மனிதர்களுடன் இயல்பான தொடர்பு கொள்ளாமையுமே இத்தகைய குழந்தைகளின் சிக்கல்கள் எனக் கூறலாம். ஆனால், பெரியவர்கள் ‘வா’ என அழைக்கும் பொழுது அல்லது இரு கைகளையும் நீட்டும் பொழுது இக்குழந்தைகள் தம் இரு கைகளையும் நீட்டி அந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதில்லை. இத்தகைய நடத்தையை மனவெழுச்சிக்குறை எனக் கொள்ளலாம். இது தனிமை நோயின் அறிகுறியாகும். தனிமை நோயுடைய குழந்தைகள் பிறந்தது முதல் தமக்கு உணவு, அன்பு, கவனிப்பது ஆகியவற்றைக் கொடுத்து வந்தவர் எக்காரணம் பற்றியேனும் குழந்தையை விட்டு விட்டுச் சில காலமோ, முற்றிலுமாகவோ சென்றுவிட்டால், உணவு ஏற்பதை நிறுத்தி விடுகின்றனர். தம் தாய் அல்லது அந்த இடத்தைக் கொண்டிருந்தவர் திரும்பி வந்தால் இத்தகைய குழந்தைகள் திரும்பவும் உணவேற்கத் தொடங்குகின்றனர். இல்லையேல் இவர்கள் உணவின்றி இறந்து விடுகின்றனர். அல்லது உடற்கரைவு நோயை அடைகின்றனர். இக்குழந்தைகள் ஆறு அல்லது ஏழு மாதம் நிரம்பியபின் இவர்கள் தம் தாய் அல்லது தாயின் இடத்தைக் கொண்டிருப்பவர்களிடமும் இவர்களின் துலங்கல்கள் மெல்ல மெல்ல நின்று விடுகின்றன. உணவு உட்கொண்டபோதிலும் மனவெழுச்சிக் குறைவு காணப்படுகிறது.
கவனிப்பு மறுக்கப்பட்ட, கொடூரமாக நடத்தப்பட்ட, கைவிடப்பட்ட குழந்தைகளிடம் தனிமை நோயின் அறிகுறிகள் காணப்படுவதில்லை என மருத்துவ இயல் ஆய்வுகள் கூறுகின்றன. குழந்தைக்குத் தேவையான தட்ப வெப்பநிலையில் அதனை வைத்திருக்காமல் அது குளிரில் நடுங்கும்பொழுது அதற்குத் தேவையான போர்வை கொண்டு அதனுடைய குளிரை நீக்காமல் இருத்தல். குழந்தை வயிற்று வலியினாலோ காய்ச்சலினாலோ வேறு உடல் ஊறுகளினாலோ அல்லற்படும்பொழுது அதனைக் கையிலெடுத்து அரவணைப்புக் கொடுக்காமல் விட்டுவிடுதல்; குழந்தையை முரட்டுத்தனமாகத் தூக்குதல், அதற்கு உடலில் ஊறு ஏற்படும் வண்ணம் அதனை எறிதல், அதற்குப் பசிநேரத்தில் உணவு கொடுக்காமல் அது பசியில் அழுது உறங்கிய பின் எப்பொழுதேனும் குழந்தையை வன்மையாக உலுக்கி எழுப்பி உணவை விரைவாக உட்கொள்ளச் செய்தல். கழிவுகளினின்று குழந்தையை உடனே துப்புரவு செய்யாமல் அதனை அந்த நிலையிலேயே நீண்ட நேரம் விட்டு விடுதல், குழந்தைக்குப் பசியில்லாத நேரத்திலும் அதனைக் கட்டாயப்படுத்தி உணவு உட்கொள்ளச் செய்தல், குழந்தையை அடித்துத் துன்புறுத்தல், வன்மையான குரலில் அதன் மீது எரிந்து விழுதல் போன்ற நடத்தைகள் இளங்குழவிக் கொடுமை (Infant Abuse) எனப்படும். இத்தகைய நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் நல்ல தூண்டல்களுக்காக ஏங்கும் கண்களுடன் எப்பொழுதும் காணப்படுகின்றனர். நல்ல தூண்டல்கள் கிடைக்கப் பெற்றவுடன் இக்குழந்தைகள் இயல்பான மனவெழுச்சியுடையவராக மாறிவிடுகின்றனர். இளங்குழவிக் கொடுமை பற்றி ஆய்வுகள் நிகழ்த்திய ஆர்னிட்சு, இரித்துவோ (Ornitz & Ritvo) ஆகியோர் இக்கருத்தை வலியுறுத்துகின்றனர். இளங்குழலிப் பருவத்தில் குழந்தையை அடிப்பதனால் ஏற்படும் ஊறுகளினால் குழந்தையின் மூளை பாதிக்கப்பட்டிருந்தால் குழந்தையிடம் தனிமை நோய் போன்ற உளநோய்கள், உளவளர்ச்சி குன்றுதல் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு. குழவிப் பருவத்தில் வேளைக்கு உணவு கிடைக்காத குழந்தைகளும் ஊட்டச் சத்தற்ற உணவுமட்டும் உண்டு வளரும் குழந்தைகளும் உளவளர்ச்சி குன்றியவர்களாகவும் தனிமை நோயின் அறிகுறிகள் உடையவர்களாகவும் ஆகிவிடுகின்றனர்.
தனிமை நோயுடைய குழந்தைகள் பேச்சுத்திறன் குறையுடையவர்களாக இருக்கின்றனர். இவர்களின் பேச்சுத்திறன் குறைவினைப் பெருமூளை பாதிக்கப்பட்டிருப்பதாலும், உளக்கூறுகளினாலும் வேறு பல காரணங்களினாலும், பேச்சுக் கோளாறுடைய குழந்தைகளின் பேச்சுத் திறன் குறைவினின்றும் வேறுபடுத்தி அறிதல் வேண்டும். பெருமூளைப் பாதிப்பு, உளக்கூறு போன்ற அடிப்படைகளில் பேச்சுத்திறன் குறை ஏற்பட்ட குழந்தைகள் தம் செய்கைகளினால் பேச முயற்சி செய்வர். இவர்களிடம் மனவெழுச்சி மழுங்கிய நிலை (Blunted Affect) காணப்படுவதில்லை. இக்குழந்தைகள் ஒரு சொல்லைப் பயன்- படுத்துவதற்கு மாறாக வேறு சொற்களைப் பயன்படுத்த முயற்சி செய்கின்றனர். ஆனால், உளவளர்ச்சி குன்றியமை காரணமாகவோ தனிமைநோய் காரணமாகவோ பேச்சுத் திறன் குறையுள்ள குழந்தைகள், செய்கை அல்லது கண்கள் மூலம் தம் மனவெழுச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. இக்குழந்தைகளில் செய்கை மொழித்திறனும் மிகக் குறைவே. தனிமை நோயுடைய குழந்தைகள், உடல் வளர்ச்சி நிலையின் படிநிலைகளை (Mile stones) உரிய காலத்தில் அடைகின்றனர். இவர்களிடம் நினைவுத்திறனும் கூட்டமைப்புத்திறனும் (Skill of Assembling) குறைவதில்லை. ஆயினும், இளங்குழவிகளுக்கான நுண்ணறிவுச் சோதனைகளில் (Infant Intelligence Test) இக்குழந்தைகள் இயல்பான குழந்தைகளின் நுண்ணறிவுஈவை (IQ) எட்டுவதில்லை. உளவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு ஆளுமைச் சோதனைகள் கொடுக்கப்பட்டு அவற்றிலிருந்து கிடைத்த மதிப்பீட்டுப் புள்ளிகளையும் (Scores), ஆளுமைக் கூறுகளையும் (Personality Traits), தனிமை நோயுடைய குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்ட ஆளுமைச் சோதனைகளிலிருந்து கிடைத்த மதிப்பீட்டுப் புள்ளிகளையும், ஆளுமைக் கூறுகளையும் (Personality Traits), ஒப்பு நோக்கும்பொழுது, உளவளர்ச்சி குன்றிய குழந்தைகளிடம் எண்ணியவற்றைச் சொல் வழி வெளிப்படுத்தல். சமூகத் தொடர்பு, ஆர்வம் போன்ற பண்புக்கூறுகள், தனிமைநோயுள்ள குழந்தைகளிடம் இருப்பதைக் காட்டிலும் மிகுதியாக இருக்கின்றன என்பதைக் காணலாம். இத்தகைய சோதனைகளை உல்பு (Wolf), இரட்டர் (Rutter) போன்றவர்கள் செய்துள்ளனர். உயிரணுக்கோல் கோளாறுகள் (Chromosomal Disorders), உயிர்ப் பொருள் ஆக்கக் கோளாறுகள் (Metabolic Disorders) ஆகிய காரணங்களைத் தவிர வேறு பல காரணங்களினாலும் தனிமைநோய் ஏற்படலாம். அத்தகைய காரணங்களாகப் பினைல்கெடோனுரியா (Phenyl–ketonuria), இசுடிடைனுரியா (Histidinuria), அர்லர் கண்ட நோய்க்குறி ஒத்திசைவு (Harier's syndrome), இளங்குழவிச் சுண்ணாம்புச் சத்து மிகுதி (Infantile Hypercalcemia) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
பிறப்புக்கால ஆபத்துகளின் (Birth Trauma) காரணமாகவும் பிறப்பு ஊறுகளின் காரணமாகவும் தனிமை நோய் ஏற்படலாம். இக்குழந்தைகளிடம் சமூகத் தொடர்புக்கோளாறுகள். மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்ளும் திறன்குறைவு. இயக்கக் குறைவு, நுண்ணறிவுத்திறன் குறைவு, கற்றல்திறன் குறைவு, ஆளுமைக் கோளாறுகள், உளப்பிணிகளின் தொடக்கநிலை போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இக்குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று வயதடையும் காலத்தில் தம்முடைய தேவைகளை நிறைவேற்றி வருபவரை (தாய், தந்தை, அல்லது அந்தப் பொறுப்பை ஏற்றவர்) விட்டுப்பிரிய மறுக்கின்றனர். இந்த மறுப்பு மனவெழுச்சி ஈடுபாட்டின் காரணமாக ஏற்படுவதில்லை. இந்த மறுப்பினை இணை வாழ்வு. உளப்பிணி (Symbiotic Psychosis) என்று குறிப்பிடுகின்றனர்.
இளங்குழவித்தனிமை நோய் உளச்சிதைவு நோயின் (Schizophrenia) தொடக்கநிலை என்று பொதுவாகக் கருதப்படுகிறது. உளச்சிதைவு நோயின் அறிகுறிகள் 5 வயதான பின்னரே நன்கு புலப்படத் தொடங்கும். மேலும், உளச்சிதைவு நோயுடைய குழந்தைகளின் உடலமைப்பும் உளக்கூறுகளும் நடத்தைகளும் தனிமைநோயுடைய குழந்தைகளின் உடல் உளக்கூறுகளினின்று வேறுபட்டுக் காணப்படும். உளச்சிளதவு நோயுடைய குழந்தைகளின் துலங்கல்கள் இயல்பு பிறழ்ந்தனவாக இருக்கின்றன. ஆதலின், தனிமைநோயுடைய குழந்தைகளை உளச்சிதைவு நோயுடையவர் என்றோ உளச்சிதைவு நோயின் அறிகுறிகள் உள்ளவர் என்றோ முடிவெடுப்பது தவறாகும். இளங்குழவிப் பருவத்துத் தனிமை நோய், குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் உளச்சிதைவு நோயாக மாறுவது என்பது மிகச் சிலரிடம் மட்டுமே காணக்கூடியதாகும்.
துணை நூல்கள்
Rulter, M., Diagnosis & Definition of Autism, Journal of Autism & Childhood Schizophrenia, 1978.
Coleman, M., Neonatal Neurology, University Park press, Baltimore, 1980.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 471)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ubn6fgsb/
தமிழ்“இளங்குழவிப் பருவத்தனிமை நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ubn6fgsb/APA
Oliyon Research. (2026). இளங்குழவிப் பருவத்தனிமை நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ubn6fgsb/MLA
"இளங்குழவிப் பருவத்தனிமை நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ubn6fgsb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment