இராதா கிருட்டிணன்
irātā kiruṭṭiṇaṉ
ஓர் அரசு சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ ஆறு உறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுகிறார்.
ஓர் அரசு சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ ஆறு உறுப்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்று தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுகிறார். அவர்
::‘படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் ::உடையான் அரசருள் ஏறு’
என்று சுட்டிக் காட்டுகிறார். ஆறு உறுப்பினுள் முதன்மையானதாகப் படையைக் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. அரசு எப்பொழுது அமைந்ததோ அப்பொழுதே அரசுக்குப் படை தேவைப்பட்டது. வெளிநாட்டுப் படையெடுப்பிலிருந்து நாட்டு மக்களைச் சுட்டிக் காப்பது அரசின் தலையாய கடமையாயிற்று.
மிகப் பழங்காலத்தில் அரசர்கள் தனியாகப் பெரும்படை வைத்திருக்கவில்லை; நாட்டுக்கு ஆபத்து வரும்பொழுது படை திரட்டினர்; வீட்டிற்கு ஒருவர் வரவேண்டுமென்று ஆணையிட்டனர். போர் முடிந்த பிறகு படையைக் கலைத்துவிட்டனர். அக்காலத்தில் படைக்காக அரசு நிறையர் செலவிட வேண்டிய தேவை இருக்கவில்லை. காலப்போக்கில் அரசு பெரும்படையினை நிலையாக வைத்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. உள்நாட்டில் சண்டைகள், கலகங்கள் ஏற்படாமல் அமைதியைக் காப்பதும், வெளித் தாக்குதல்களிலிருந்து நாட்டைக் காப்பதும் படையின் பொறுப்பாயிற்று. இதற்காக அரசு தொடர்ந்து செலவிட வேண்டிய தேவையும் தோன்றியது.
அரசின் பொதுச் செலவுகளில் இராணுவச் செலவு தலையாய இடம் பெறுகிறது. இராணுவச் செலவை அமைதியான காலத்தில் பாதுகாப்புச் செலவு (Defence Expenditure) என்றும், போர் நடைபெறும் காலத்தில் ‘போர் நிதி’ (War Finance) என்றும் கூறுவது உண்டு. ‘இராணுவச் செலவு’ என்பது விரிந்த பொருளைக் கொண்ட ஒரு சொல். இக்காலத்தில் இச்சொல் பலவற்றைக் குறிக்கிறது. ஒரு படையை நிலையாக வைத்து அதற்கு உணவு, உடை, ஊதியம் கொடுப்பது மட்டில் இராணுவச் செலவு அன்று, நிறையப் படைக்கலன்களையும் போர்க் கருவிகளையும் உற்பத்தி செய்ய வேண்டிய இன்றியமையாமையும் அது தொடர்ந்து நடைபெற வேண்டிய பணியும் இராணுவச் செலவில் அடங்கும்.
அறிவியல் வளர்ச்சியின் விளைவாகப் போர்க் கருவிகளின் எண்ணிக்கையும் இயல்பும் அளவும் பெருகியுள்ளன. மிகுந்த அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆற்றல்மிக்க குண்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர். தரையிலும் நீரிலும் வான்வெளியிலும் விரைந்து செல்லக்கூடிய போக்குவரத்து வசதிகள் உள்ளன. அவற்றை உற்பத்தி செய்து பாதுகாக்க நிறையப் பணம் வேண்டும். போர்க் கருவிகள், போரிடும் முறைகள் ஆகியவை பற்றி ஆராய்ச்சி செய்து ஆற்றல்மிக்க புதியனவற்றைக் கண்டுபிடிக்க அரசு முயல்கிறது; ஆதலின் இதற்கு நிறையப் பணத்தைச் செலவிடுகிறது. இவையாவும் இராணுவச் செலவு என்ற பிரிவுக்குள்தான் அடங்குகின்றன.
ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், குறிப்பாக அரசின் பொதுச் செலவில் இராணுவச் செலவு தலையாய இடம்பெறுகிறது. இது எப்படி என்பதைச் சுட்டிக் காட்டலாம். இக்காலத்தில் அரசு மிகுதியான அளவில் இராணுவத்திற்காகவும் இராணுவத் தொடர்பானவற்றிற்காகவும் செலவிடுகிறது. உலக நாடுகளுக்கு இடையில் போட்டியும் பொறாமையும் கடுமையாகின்றன. இதனால் ஒவ்வொரு நாடும் தனது படையின் அளவை மிகுதிப்படுத்துகிறது; மற்றைய நாடுகளில் இருப்பதைவிடத் தன்னிடம் ஆற்றல்மிக்க படைக் கருவிகள் மிகுதியாக இருக்கவேண்டுமென்று கருதுகிறது. இதனால் இராணுவச் செலவு ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து கொண்டே செல்கிறது.
முதல் உலகப்போருக்குப் பிறகு உலக நாடுகள் எல்லாம் திட்டமிட்டு இராணுவச் செலவைப் பெருக்கி வருகின்றன. இரண்டாம் உலகப்போர் மேலும் இராணுவத்தின், இராணுவத் தள்வாடங்களின் இன்றியமையாமையை வலியுறுத்தியது. இன்று உலகில் அமைதியை நிலைநாட்ட ஒவ்வொரு நாடும் இராணுவச் செலவை மிகுதிப்படுத்த வேண்டுமென்ற நிலை தோன்றியுள்ளது.
ஐக்கிய நாட்டுச் சபையின் மதிப்பீட்டின்படி, உலகநாடுகள் பாதுகாப்பின் பெயரால் ஓராண்டுக்கு ஏறத்தாழ ஐந்து இலட்சம் கோடி ரூபாய் செலவிடுகின்றன. அமெரிக்கா பாதுகாப்புச் செலவுக்கென்று 1965–ஆம் ஆண்டில் 50,790 மிலியன் தாலர் செலவிட்டது. இது அமெரிக்க நாட்டின் மொத்த வருவாயில் 9.02 சதவிகிதமாகும். இந்தோனேசியா தனது வருவாயில் 25.93 சதவிகிதத்தைப் பாதுகாப்பிற்காகச் செலவிட்டது. இதிலிருந்து ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பாதுகாப்புச் செலவு எவ்வளவு முதலிடம் பெறுகிறதென்பதை அறிந்து கொள்ளலாம்.
இயல்பு
அரசு மேற்கொள்ளுகிற பொதுச் செலவை உற்பத்திச் செலவு (Productive Expenditure) என்றும், உற்பத்தியற்ற செலவு (Unproductive Expenditure} என்றும் வகைப்படுத்தலாம். நாட்டின் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் அமைகின்ற செலவே ஆக்கத் திறனுள்ள செலவாகும். சாலைகள் அமைத்தல், அணைகள் கட்டுதல், தொழிற்கூடம் ஏற்படுத்துதல் போன்றவற்றிற்காக அரசு செலவிடுவதை உற்பத்திச் செலவுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். நாட்டு மக்களின் உற்பத்தியாற்றலைப் பெருக்காத செலவுகளை உற்பத்தியற்ற செலவு என்பர். பொதுவாக, இராணுவச் செலவை உற்பத்தியற்ற செலவு என்று வகைப்படுத்துவதுண்டு.
இராணுவச் செலவுகள் மேற்போக்காகப் பார்க்க ஆக்கத்திறனற்ற செலவுகளாகத் தோன்றினாலும், மறைமுகமாக அவை ஆக்கத்திறனுள்ள செலவுகளாக இருக்கின்றன எனக் கருதப்படும். இராணுவத் தளவாடங்களின் உற்பத்தியில் பலர் வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர். இராணுவம் உள்நாட்டில் அமைதியான பாதுகாப்புச் சூழ்நிலையை ஏற்படுத்துகின்ற பொழுதுதான் மக்களால் உற்பத்திப் பணிகளை மேற்கொள்ள முடியும்; அதனாலும் இராணு- வச்செலவுகள் ஆக்கத்திறனுடையவை என்று கருதப்படுகின்றன.
இராணுவச் செலவு அரசு மேற்கொள்ள வேண்டிய தேவைச் செலவுகளில் (Necessary Expenditure) ஒன்றாக இருக்கிறது. ஆதலால், இதனை அரசின் முதன்மைச் செலவுகளில் (Primary Expenditure) ஒன்றாகக் கருதுகின்றனர். பொதுச்செலவு கூடுவதற்கான காரணங்களில் இராணுவச் செலவும் ஒன்றாக இருக்கிறது.
விளைவுகள்
பெருகி வருகின்ற இராணுவச் செலவுகளினால் பொருளாதாரத்தில் பல்வேறு வகையான நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன. அவையாவன: 1) நாட்டில் உற்பத்தி நடவடிக்கைகள் விரிவடைந்து விரைவு பெறுகின்றன. ஐந்நூறுக்கு மேற்பட்ட படைக் கருவிகளை உற்பத்தி செய்கின்றனர். புதிய புதிய உற்பத்தி முறைகளைப் பின்பற்றுகின்றனர். காலப் போக்கில் இவற்றின் தாக்கம் பிற தொழில்களிலும் ஏற்படும். இதனால் நாட்டின் மொத்த உற்பத்தி பெருக வாய்ப்புத் தோன்றும். 2) இராணுவச் செலவுகளின் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் பெருகுகின்றன. படைக்கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் எண்ணற்ற மக்கள் பணிசெய்கின்றனர். இவை தவிர, மறைமுகமாகப் பலர் வேலை பெறுகின்றனர். 3) ஒரு நாட்டில் இருக்கின்ற எல்லாத் தொழிற்சாலைகளும் முழுமையாகச் செயற்பட இராணுவச் செலவுகள் துணை செய்கின்றன. 4) இராணுவப் பயிற்சியும் இராணுவக் கல்வியும் நாட்டில் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வளர்க்கத் துணை செய்கின்றன. இராணுவக் கருவிகளை உற்பத்தி செய்வதில் நடைபெறுகிற ஆராய்ச்சியின் பயனாகத் தொழில்நுட்பம் வளர்கிறது.
மிகுந்து வரும் இராணுவச் செலவினால் சில தீங்கான பொருளாதார விளைவுகளும் ஏற்படுகின்றன. அவையாவன: 1) ஒரு நாட்டில் இருக்கின்ற பற்றாக் குறையான மூல வளங்களில் ஒரு பகுதியை இராணுவத் தளவாடங்களின் உற்பத்திக்கு ஒதுக்க வேண்டியுள்ளது. இரும்பு, பெட்ரோல் போன்ற பொருள்களைப் பெருமளவில் இராணுவத்தினர் பயன்படுத்துகின்றனா். இதனால், இவை மக்களுக்குத் தேவையான அளவில் கிடைக்காமல் போகின்றன. தேவைப் பொருள்களின் விலைகள் உயர இது காரணமாகிறது. 2) ஒரு நாட்டில் வறுமையில் வாடுகின்ற மக்களின் எண்ணிக்கை பெருகுகின்ற பொழுது, நாட்டின் செல்வத்தைக் கொண்டு தேவைப் பொருள்களை உற்பத்தி செய்யாமல் படைக் கருவிகளை உற்பத்தி செய்வது மனிதத் தன்மையற்ற செயலாகும். வறுமையை மறைமுகமாக இராணுவச் செலவு வளர்க்கிறதென்று கூறலாம். 3) இராணுவச் செலவுகளின் பெருக்கத்தால் வேளாண்மை, தொழில், சமுதாய நலப் பணிகள் ஆகியவற்றிற்கு ஒதுக்குகின்ற பணத்தின் அளவு குறைகிறது. மற்றைய துறைகளின் வளர்ச்சியை இது கெடுக்கிறது. 4) பாதுகாப்புத் தொடர்பான துறைகளுக்கு நிறையப் பணம் செலவிடுவதால் நாட்டின் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி ஒரே சீராக அமைவதில்லை. 5) கட்டுக்கடங்காத இராணுவச் செலவு நாட்டில் பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது. 6) வெளிநாடுகளிலிருந்து ஆற்றல்மிக்க அணு ஆயுதக் கருவிகளை இழக்குமதி செய்கின்றன. இதனால் வெளிநாட்டுச் செலுத்துநிலை கேடாக அமைகின்றது. இராணுவச் செலவுகளினால் பொருளாதார முன்னேற்றம் கெடுவதை மனத்தில் கொண்டு, ‘படைக் குறைப்பு’, ‘படைக்கலைப்பு’ ஆகிய கருத்துகளைப்பற்றி உலக நாடுகள் சிந்தித்தும் பேசியும் வருகின்றன.
இந்திய இராணுவச் செலவு
இந்தியா பாதுகாப்பிற்காக 1872–80–இல் 16 கோடி உருபாய் செலவிட்டது. இது அப்போதைய மக்கள் தொகை அடிப்படையில் ஓராளுக்குச் சாராசரிச் செலவு 82 பைசாவாகும். இது 1941–1950–இல் சராசரிச் செலவு உரூ. 8.27 ஆகவும், 1961–68–இல் சராசரிச் செலவு உரூ. 14.26 ஆகவும் கூடியது. அதாவது இக்காலத்தில் மொத்த இராணுவச் செலவு உரூ. 681 கோடியாக உயர்ந்தது. இது 1973–74–இல் உரூ. 1405 கோடியாகவும், 1979–80–இல் உரூ. 3,050 கோடியாகவும், 1981–82–இல் உரூ. 4,600 கோடியாகவும், 1982–83–இல் உரூ. 5,100 கோடியாகவும், 1984–85–இல் உரூ. 7075 கோடியாகவும் உயர்ந்தது. 1985–86 வரவு–செலவுத் திட்டத்தில் பாதுகாப்பிற்காக உரூ. 7,686 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு 21 கோடி உரூபாய் செலவிடப்படுகிறது.
இந்தியா விடுதலை பெற்ற பொழுது காந்தியடிகளின் கருத்துப்படி நாட்டின் பாதுகாப்புச் செலவைக் குறைத்து, வளர்ச்சிக்கான செலவுகளை மிகுதிப்படுத்த அரசு முயன்றது. எடுத்துக்காட்டாக, இரண்டாம் திட்டக்காலத்தில் அரசின் மொத்தச் செலவில் 33 விழுக்காடாக இருத்து பாதுகாப்புச் செலவை, 1960–61–இல் 27 விழுக்காடாகக் குறைத்ததைக் கூறலாம். ஆனால், சூழ்நிலை பாதுகாப்புச் செலவைக் குறைக்கும் வகையில் அமையவில்லை.
இந்தியாவின் பாதுகாப்புச் செலவு பெருகி வருவதற்கான காரணங்களைக் குறிப்பிட்டுக் கூறலாம். பறந்து விரிந்த பாரதத்தின் உள்நாட்டில் அமைதியை நிலைநாட்டவும் இராணுவம் தேவைப்படுகிறது. தொடர்ந்து அவ்வப்போது வெளிநாட்டுத் தாக்குதல்கள் ஏற்படுவதால் இராணுவச் செலவைக் கூட்ட வேண்டியுள்ளது. இமயமலையின் எல்லையில் 1952-இல் சீனாவை எதிர்த்துப் போரிட வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. அண்டை நாடான பாகிசுத்தானோடு 1965–இல் போரிட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. பாகிசுத்தான் பிடியிலிருந்து வங்காளத்தை விடுவிக்க 1971–இல் போரில் ஈடுபட வேண்டிய தேவை ஏற்பட்டது. பாகிசுத்தானோடும் சீனாவோடும் நல்லுறவு நிலையைச் சரியாக உருவாக்க முடியாததால், இந்தியாவின் பாதுகாப்பைக் கருதி இராணுவச் செலவுகளைக் கூட்ட வேண்டிய நிலை தொடர்கிறது.
இராணுவச் செலவோடு நெருங்கிய தொடர்புடையது போர்க்காலப் பொருளாதாரம்.
காண்க: ஆதிக்கப் பொருளாதாரம்.
இராணுவச்செலவு ஒரு நாட்டின் வரவு–செலவுத் திட்டத்தில் நிலையான இடத்தைப் பெற்றிருக்கின்றது. இராணுவச் செலவு தொடர்ந்து கூடிக் கொண்டே செல்வது மனிதக்குலத்தின் நலனுக்கு எற்றதன்று என்னும் கருத்து வளர்ந்து வருகின்றது. இக்கருத்துச் செல்வாக்குப் பெற்றால் இராணுவச் செலவுகள் குறையலாம். இன்றுள்ள நிலையில் இராணுவச் செலவுகள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெருஞ்சுமையாக வளர்ந்துள்ளன. ஆதலின் ஓரளவு அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது தேவையாகும். மா.பா.கு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 83)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u7pr2v6b/
தமிழ்“இராதா கிருட்டிணன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u7pr2v6b/APA
Oliyon Research. (2026). இராதா கிருட்டிணன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u7pr2v6b/MLA
"இராதா கிருட்டிணன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u7pr2v6b/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment