அடையாறு நூலகம்
aṭaiyāṟu nūlakam
அடையாறு நூலகமும் ஆராய்ச்சி நிலையமும் அனைத்துலக பிரமஞான சங்கத்தினைத் தோற்றுவித்தவரும் தலைவருமான கர்னல் எச்.எசு.
அடையாறு நூலகமும் ஆராய்ச்சி நிலையமும் அனைத்துலக பிரமஞான சங்கத்தினைத் தோற்றுவித்தவரும் தலைவருமான கர்னல் எச்.எசு. ஆல்காட்டு அவர்களால் 1886-ஆம் ஆண்டு நிறுவப்பெற்றன. கீழை நாட்டு இலக்கியங்களைப் பாதுகாத்துப் புத்துயிர் தரவும், பல்வேறு சமயங்கள், தத்துவம், அறிவியல் ஆகிய கலைகளை ஆராய்ந்து கற்கவும் ஆசியாவிலேயே இந்நிறுவனம் முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டது.
கர்னல் ஆல்காட்டு இந்நூலகத்தை முதலில் தம்மிடமும் பிரமஞான சங்கத்தின் துணை நிறுவனரான திரு. எச்.டி. பிளாவட்சுகியிடமும் இருந்த ஏறக்குறைய 200 நூல்களைக் கொண்டு தொடங்கினார். ஆல்காட்டு வெளியிட்ட நூல்களும், பல்வேறு சயமங்கள், தத்துவக் கோட்பாடுகள் பற்றிய நூல்கள் முதலியனவும் பின்பு சேர்க்கப்பட்டன. மேலும், அவர் பல நூல்களை இந்நூலகத்திற்காகச் சேகரித்து வந்தார். கீழை நாட்டு மேலைநாட்டு நூல்கள், மீண்டும் அச்சில் வாராத பல முதற் பதிப்பு நூல்கள், வடமொழி, பாலி மொழி, இந்தி, தமிழ், சீனம், சப்பானியம், திபேத்திய மொழிகள், கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, செருமன், இத்தாலி, இசுபானிசு, (Spanish), தச்சு (Dutch), ஆங்கிலம் முதலிய பலவேறுபட்ட மொழிகளில், பல்வேறு பொருள்கள் பற்றியனவாக உள்ள பல்வேறு துறைசார்ந்த நூல்களை இந்நூலகத்தில் சேர்த்தார். இவ்வாறு சேகரிக்கப்பட்டவற்றுள் மரப்பட்டையில் செய்யப்பெற்ற காகிதத்தின்மீது வரையப்பட்ட திபேத்து நாட்டுக் கையெழுத்துப் படிகள் இந்நூலகத்திற்குத் தனிச்சிறப்புக் கொடுக்கின்றன. விலை மதிக்க முடியாத உயர்ந்த சேகரிப்பு நூல்களுள் சீனம், சப்பான், பர்மா, சிங்களம், சையாம் ஆகிய நாட்டு மொழிகளில் எழுதப்பட்ட புத்தமத அறிவுரைகளான திரிபிடக நூல்களும் அடங்கும், தொன்மை வாய்ந்த இசுலாமியச் சுவடிகள், பௌத்த சமயச் சுவடிகள், நேபாளச் சுவடிகள், பாரசீக மொழிச் சுவடிகள், சீன மொழியில் உள்ள கலைக்களஞ்சியம், சீன நூல் விவரப்பட்டியல், இலத்தீன் நூல்கள், விவிலிய நூலின் பல்வேறு பதிப்புகள், பிளேட்டோவின் நூல்கள், கீதை மொழிபெயர்ப்பு, ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையான, புத்தர் பெருமானின் சித்திரங்கள் வரையப்பட்ட காகிதச் சுருள்கள், டாக்டர் அன்னிபெசண்டு அம்மையாரின் அரசியல் வாழ்க்கை பற்றிய நூல்கள், அவர் நடத்தி வந்த ‘நியூ இந்தியா’, ஓம்-ரூல் (Home rule) பற்றிய சிறு வெளியீடுகள் ஆகியவை இந்நூலகத்தில் உள்ளன. இந்தியச்சுதந்திர இயக்கம் பற்றி ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கு இது மிகுதியாகத் துணை செய்யும்.
உலகெங்குமுள்ள, சிறப்பாக நடைபெற்றுவரும் ஏறத்தாழ 130 பருவ ஏடுகள் இங்கு மாற்று முறையில் வருகின்றன. உலகிலுள்ள அறுபது நாட்டுப் பிரமஞான சங்கங்களின் பருவ ஏடுகளையும் இங்குக் காணலாம். பருவ ஏடுகள் நீங்கலாக ஏறக்குறைய இலட்சத்திற்கும் மேற்பட்ட அச்சு நூல்கள், பனையோலைகளிலும் காகிதத்திலும் எழுதப்பட்ட 17,300 ஏட்டுச் சுவடிகள் இங்கு உள்ளன. பல்வேறு மொழிகளைச் சார்ந்த ஏறத்தாழ 40000 சுவடிகள் இங்குள்ளன. அத்வைதத்தைச் சார்ந்த வேதாந்த விளக்கத்துடன் கூடிய 108 உபநிடதங்களையும் இங்குக் காணலாம்.
கர்னல் ஆல்காட்டு இந்நூலகத்தைக் கீழைநாட்டுச் சமயம், தத்துவம், பண்பாடு பற்றிய, சாதிமொழி இன வேறுபாடற்ற ஆராய்ச்சி நிறுவனமாகத் தொடங்கினார். ஆசிய நாட்டு இனைஞர்களின் உள் ளத்தில் ஆன்மீக மேம்பாட்டை விளைவிக்கவும், சமுதாயத்தில் அறிஞர்களின் மதிப்பு உயர்வதற்கேற்ற வகையில் சீரமைக்கவும் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள அறிஞர்களிடையே நன்முறையில் பரிமாற்ற மதிப்பினைத் தோற்றுவித்து உறுதிப்படுத்தவும் இந்நிலையம் பணியாற்ற வேண்டுமென்பது அவர் கருத்தாகும்.
அடையாறு நூலக வெளியீட்டுத் தொடர்வரிசையில் இதுவரையிலும் நூற்றுக்கு மேற்பட்ட நூல்களும், ஏறத்தாழ நாற்பது சிறு வெளியீடுகளும் வெளியிடப்பட்டுள்ளன.
நூலகம் சேகரித்துள்ள சுவடிகளின் விவரமான பெயர்ப்பட்டியலும் உள்ளது. 1937–ஆம் ஆண்டு முதல் இந்நூலகம் ‘பிரம்ம வித்யா’ அல்லது ‘அடையாறு நூலக இதழ்’ என்னும் ஓர் ஆராய்ச்சிப் பருவ இதழினை வெளியிட்டு வருகிறது. இந்நூலகம் தனது அரிய சேகரிப்பு நூல்களின் மூலமும் வெளியீடுகளின் மூலமும், உலகெங்குமுள்ள அறிஞர்களுடனும் பல ஆராய்ச்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்நூலகத்தில் சிறந்த நுண்ணிழற்படக் கருவி (Microfilm) உள்ளது.
இது தேவையான, பரந்த படிப்பறைகளும், இரண்டரை இலட்சம் நூல்களைச் சிறந்த வகையில் பாதுகாப்பதற்குரிய அறைகளும் கொண்டதாக விளங்குகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 279)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u6a76yuv/
தமிழ்“அடையாறு நூலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u6a76yuv/APA
Oliyon Research. (2026). அடையாறு நூலகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u6a76yuv/MLA
"அடையாறு நூலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u6a76yuv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment