அல்பேனிய மொழி
alpēṉiya moḻi
அல்பேனியாவின் அரசாங்க மொழியாகும்.
அல்பேனியாவின் அரசாங்க மொழியாகும். இம்மொழியை ஏறத்தாழ 25 இலட்சம் மக்கள் பேசுகின்றார்கள். இவர்களுள் பெரும்பான்மையோர் அல்பேனியாவில் வாழ்கின்றனர். அல்பேனியாவில் மட்டுமன்றி அருகிலுள்ள யூகோசுலோவியா, கிரீசு, இத்தாலி, துருக்கி, பல்கேரியா, அமெரிக்கா, சிசிலி போன்ற பிறநாடுகளிலும் இம்மொழியினைப் பேசுவோர் வாழ்கின்றனர். அல்பேனியர் பற்றிய செய்திகளைத் தாலமி குறிப்பிட்டுள்ளார்.
அல்பேனியா நாடு பண்டைக் காலத்திலிருந்தே பல்வேறு படையெடுப்புகளுக்கு இலக்காகி வந்துள்ளது. அதன் தென்பகுதி முன்னர் எபிரசு (Epirus) என்றும், வடபகுதி இல்லிரியா (Illyria) என்றும் இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தமையும், தென்பகுதி கிரேக்க மன்னர்களின் கீழும், வடபகுதி பின்னர் உரோமப் பேரரசர்களின் கீழும் இருந்து வந்துள்ளன. உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இல்லிரியா கோதியரின் கீழ் இருந்துள்ளது. இதன் பின்னர் அல்பேனியா முழுவதும் சிலாவிக் அரசின் கீழ் இருந்துள்ளமை அல்பேனிய இடப் பெயர்களால் விளங்குகிறது. அல்பேனியர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் உருமேனியர்கள். இவர்கள் உரோமப் பேரரசுக்கும் இலத்தீன் மொழிக்கும் அடிபணிந்து நின்றார்கள். பல்வேறு அந்நிய அரசுகளின் ஆட்சிக்கீழ் இருந்தாலும் அல்பேனியர்கள் தங்கள் மொழியினைப் பாதுகாத்து நின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இம்மொழியில் பல பிறமொழிச் சொற்களைக் காணலாம். இலத்தீன், கிரீக்கு, உரோமான்சு, துருக்கி, சிலாவிக் போன்ற மொழிச் சொற்கள் கலந்துள்ளன.
கி.பி. 19–ஆம் நூற்றாண்டுவரை இது ஒரு இந்தோ–ஐரோப்பிய மொழி என்பதில் தெளிவு ஏற்படவில்லை. இதன்கண் பிறமொழிச் சொற்கள் மிகுதியாகக் காணப்படுவதும், பிற இந்தோ–ஐரோப்பிய மொழிக் குடும்பங்களிலிருந்து மிக்க மாற்றங்களைக் கொண்டிருப்பதும், பழைய ஏடுகள் எவையும் இல்லாமல் இருப்பதும், இதற்குக் காரணங்களாகும். இம்மொழி இந்தோ–ஐரோப்பிய மொழிக் குடும்பத்தினைச் சார்ந்தது என்பதனைப் பிரான்சு பாப், குசுத்தவ்மேயர், ஓல்சர் பெடர்சன் போன்றோர் அல்பேனிய மொழிச் சொற்களுக்கும், இந்தோ–ஐரோப்பிய மொழிச் சொற்களுக்கும் உள்ள உறவை எடுத்துக் காட்டுவதன் வாயிலாக விளக்கியுள்ளனர். இந்தோ–ஐரோப்பிய மொழியில் இது ‘சதம்’ பிரிவினைச் சார்ந்தது என்றும் பால்டோ சிலாவிக் மொழிகளையும் ஆர்மேனியன் மொழியையும் இணைக்கும் இடைநிலையாக உள்ளது என்றும் மொழியியல் அறிஞர் கூறுகின்றனர். மேலும் இம்மொழி பழைய உரோமர்களின் காலத்தில் வழங்கிவந்த இல்லிரியன் மொழியிலிருந்து உருவானது என்றும், அதனுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் கூறுகின்றனர். இம்மொழியில் கி.பி. 15–ஆம் நூற்றாண்டு முதல் இலக்கியங்கள் உருவாகியுள்ளன. வடஅல்பேனியாவில் வாழ்ந்து வந்த கத்தோலிக்கப் பாதிரிமார்களின் உதவியாலும் முயற்சியாலுந்தான் இலக்கியங்கள் தோன்றின. தென் அல்பேனியாவில் இந்நிலை கி.பி. 19–ஆம் நூற்றாண்டில்தான் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கி.பி. 15 ஆம் நூற்றாண்டிலிருந்தே இலக்கியங்கள் உண்டான போதிலும் இதற்கெனத் தனி எழுத்து முறை எதுவும் இல்லாதிருந்த நிலையில் பல்வேறு குழப்பங்கள் காணப்பட்டன. பல புதிய ஒலிகளைக் கொண்ட அல்பேனியன் மொழிக்கு உரோம எழுத்து முறையில் காணப்பட்ட எழுத்துகள் போதாத நிலையில், சமிபெய் பிராசிரி (Samibey Frasheri) புதிய எழுத்துமுறை ஒன்றை உருவாக்கினார். உரோம எழுத்துகளையும் பயன்படுத்தி உருவாக்கிய இம்முறையில் முப்பத்தெட்டு எழுத்துகள் உள்ளன. இவ்வெழுத்து முறை அல்பேனிய ஒலி எழுத்து முறைக்கேற்ப மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. 1909–ல் அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்ட குழுவொன்று இம்மொழிக்கெனத் தனியொரு எழுத்து முறையை உருவாக்கியது. இது தேசீய எழுத்துமுறை என்று கூறப்படுகிறது. இம்மொழியில் காணப்படும் முதல் எழுத்துச் சான்று கி.பி. 1462–ல் எழுதப்பட்ட ஒரு சடங்கு நூலாகும் (Baptismal Ritual). இதன் பின்னர்க் கி.பி 1555-இல் வேதாகம மொழிபெயர்ப்பு ஒன்று உருவாக்கப்பட்டது. எனினும் கி.பி. 17–ஆம் நூற்றாண்டு முதல்தான் இலக்கியங்கள் பல தோன்றத் தொடங்கின. கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் குசுல்வரி பாபா என்னும் கவிஞர் பல கவிதைகளை இயற்றினார். அதன் பின்னரே இம்மொழியில் இலக்கிய வளர்ச்சி ஏற்பட்டது.
இம்மொழியில் இலக்கணக் கூறுகள் இந்தோ–ஐரோப்பிய மொழிகளின் இலக்கணக் கூறுகளோடு ஒத்திருக்கின்றன. இம்மொழியின் பெயர்ச் சொற்களில் வேற்றுமை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் உருபுகள் வெளிப்படையாக அமைந்துள்ளன. கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் இறுதியில் காணப்பட்ட அல்பேனிய மொழிக்கும் இக்கால அல்பேனியன் மொழிக்குமிடையே வேறுபாடுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 848)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u64wsgmg/
தமிழ்“அல்பேனிய மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u64wsgmg/APA
Oliyon Research. (2026). அல்பேனிய மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u64wsgmg/MLA
"அல்பேனிய மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u64wsgmg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment