அமைப்பு மொழியியல்
amaippu moḻiyiyal
அமைப்பு மொழியியல் என்ற சிந்தனையை மொழியியலில் பல்வேறு கோணங்களில் அணுகலாம்.
அமைப்பு மொழியியல் என்ற சிந்தனையை மொழியியலில் பல்வேறு கோணங்களில் அணுகலாம். மொழியியலில் பல உட்பிரிவுகள் உள்ளன. மொழியை அணுகும் முறைகளில் அது தனித்து இயங்குகிறது என்ற பாவனையில் அணுகுவது ஒரு முறை. மொழி சமுதாயத்தோடும் மனத்தோடும் தொடர்புடையதாக இருப்பினும், அவற்றினின்று அதனைப் பிரித்து அதன் அமைப்பை ஆராய முடியுமென்பது இவ்வணுகுமுறையாகும். ஆகையால் ‘மொழியமைப்பை விவரிக்க ஒரு தனி அணுகுமுறையையும் கோட்பாட்டையும் உருவாக்க முடியு’மென்பது இக்கொள்கை உடையவர்கள் நம்பிக்கை. இரண்டாவது அணுகுமுறை மொழியைத் தனித்த ஒரு ஒழுங்காக (Autonomous System) அணுகாமல் சமுதாயம், பண்பாடு, மனம் முதலியவற்றுடன் தொடர்புபடுத்திக் காண்பதாகும். இவ்விரு அணுகுமுறைகளும் முற்றிலும் வேறுபட்டவையாகத் தோன்றினாலும் இவற்றை ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமாகப் பார்ப்பது, மனிதனை மொழிவழிப் புரிந்து கொள்ளும் முயற்சியில் மிகத் தேவையாகிறது.
மொழி ஆய்வு என்பது, காலப் போக்கில் மொழி அடைகிற மாற்றங்களை மட்டும் குறிப்பது என்று கருதப்பட்டது. ஒலியியல், உருபியல், பொருண்மையியல் (Semantics) போன்ற நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களை ஆராய்வது மொழி ஆய்வு என்று கூறப்பட்டது. மொழியை முழுமையாக வரலாற்று அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், பல்வேறு காலக்கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு காலக்கட்டத்தையும் தனித்தனியாக விவரித்துக் காண வேண்டும். பின்னர், இவ்வாறு தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட காலக்கட்டத்தில் மொழியமைப்பை ஒப்பிட்டு, மொழியை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் மொழியியலில் சமதளப் (Synchronic) பார்வை வலியுறுத்தப்பட்டுச் சமதளப் பார்வையும் காலப் (Diachronic) பார்வையும் வேறுபடுத்திக் காட்டப்பட்டன. இதற்கு அடிக்கல் நாட்டியவர் சசூர் (Ferdinand De Saussure) என்னும் மொழியியல் அறிஞராவார்.
காலப் பார்வையில் மொழியைப் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்யும் முன்னர்ச் சமதளப் பார்வையில் மொழியை முதலில் அணுகவேண்டும். சமதளப் பார்வையில் மொழியை விவரிக்க வேண்டும். மொழியின் அமைப்பு என்பதை எவ்வாறு புரிந்து கொள்வது? மொழியைப் பொறுத்தவரை, அமைப்பு என்று கூறும் பொழுது அதன் பல்வேறு நிலைகளையும் (Levels) உணர்ந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நிலையும் அதனதன் அலகுகளைக் (Units) கொண்டு விவரிக்கப்படுகிறது.
ஒலியனியல் நிலையில் (Phonological Level) ஒலியன் (Phoneme) என்பது விவரிப்பின் அலகாக உள்ளது. மொழியின் ஒலியியல் அமைப்பை விவரிக்க வேண்டுமென்றால், அம்மொழியில் உள்ள ஒலியன்களைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆகையால், அமைப்பு மொழியியல் கோட்பாடு (Structural Linguistic Theory) மொழியில் உள்ள ஒலியன்களைக் கண்டுபிடிப்பதற்குப் பின்பற்றப்பட வேண்டிய கொள்கைகளையும் வழிமுறைகளையும் வருக்க வேண்டி வந்தது. இக்கொள்கைகளும் வழிமுறைகளும் ஒலியனியலுக்கும் ஒலியியலுக்கும் ஒரு குறிப்பிட்ட தொடர்பை நிறுவுகின்றன. ஒலியன் என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றொலிகளைக் (Allophones) கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக /k/ என்ற தமிழ் ஒலியனுக்கு மூன்று மாற்றொலிகள் ( (k) (g) (h} ) உள்ளன என்று மொழியியல் அறிஞர்கள் கூறுவார்கள். இதைப் பின்வருமாறு காட்டலாம்.
இது மொழியின் ஒலி நிலைக்கும் (Phonetic level) ஒலியனியல் நிலைக்கும் காணப்படுகிற தொடர்பின் இயல்பைச் சுட்டுகின்றது. ஓர் ஒலியனுக்கு ஒரு மாற்றொலி மட்டுமிருப்பின் அதைப் பின்வருமாறு காட்டலாம்.
ஒரு மாற்றொலி ஓர் ஒலியனின் உறுப்பாகக் கருதப்பட்டால் அஃது எல்லா இடங்களிலும் அவ்வொலியனின் உறுப்பே. ஆனால், அமைப்பு மொழியியலுக்குள் சிலர் இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பிட்ட சூழல்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஓர் ஒலியை இரண்டு ஒலியன்களின் உறுப்பாகவும் கருதலாம். இச்சூழலைப் பின்வருமாறு விளக்கலாம்.
அமைப்பு என்பதை மொழியின் மையமாகக் கொண்டு பார்க்கும் பொழுது, முதலில் ஒவ்வொரு நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்ட அலகுகளுக்கிடையிலான தொடர்பை விவரிக்க வேண்டும். அடுத்து, மொழியின் எல்லா நிலைகளையும் தொடர்புபடுத்த வேண்டும். முதலில் அலகுகளுக்கிடையிலான தொடர்பை இரு பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்டு, மொழியின் ஒலியனியல் அமைப்பும் உருபியல் அமைப்பும் விவரிக்கப்படுகின்றன.
அலகுகளுக்கிடையே உள்ள தொடர்பை விவரிக்க அமைந்த இரு பரிமாணங்களில் ஒன்றை வாய்பாட்டுத் தொடர்பு (Paradigmatic Relationship) என்றும், மற்றொன்றைச் சேர்க்கை நிலைத் தொடர்பு (Syntagmatic Relationship) என்றும் கூறுவார்கள். பதிலிடு முறை (Substitution Method) என்ற செயல் முறையைப் பயன்படுத்தி இவ்விருவகைத் தொடர்புகளையும் விவரிக்க வேண்டியுள்ளது.
அமைப்பு மொழியியலின் விவரிப்பு, இவ்விரு தொடர்புகளின் அடிப்படையில் வளர்க்கப்பட்டது. உருபியல் நிலையை எடுத்துக்காட்டாகக் கொண்டு இதைப் பின்வருமாறு விளக்கலாம். ‘திறமையாக வாதிடும் மொழியியலாளர்’ என்னும் தொடரில் மொழியியலாளர் என்ற சொல், பெயர் (Noun) வகையைச் சார்ந்தது என்று கூறுவார்கள். பெயர் என்னும் வகைக்குள் அடக்கப்படும் சொற்கள் தொடரிலும் வாக்கியத்திலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வருவதென்பது அவ்வகையின் இலக்கணக் கூறுகளுள் ஒன்று. மொழியியலாளர் என்னும் சொல் வருகிற இடத்தில் அரசியல்வாதி, பேராசிரியர், வழக்கறிஞர் போன்ற சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களைத் தோற்றுவிக்கலாம்.
பேராசிரியர் வழக்கறிஞர் அரசியல்வாதி
இவ்வாறு பதிவிடுமுறையைப் பயன்படுத்தி மொழியில் உள்ள சொற்களைச் சில இலக்கண வகைகளாகப் பிரிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட இலக்கண வகையுள் அடக்கப்படுகிற சொற்களின் இடையிலான தொடர்பு, வாய்பாட்டுத் தொடர்பு என்று கூறப்படுகிறது. ஒலியனியல் நிலையில் சொற்களின் முதலில் வருகின்ற ஒலியன்களை ஒரு வகையாகவும், இடையில் வருபவற்றை இன்னொரு வகையாகவும் இறுதியில் வருபவற்றை மற்றொரு வகையாகவும் பிரிப்பது, ஒலியன்களுக்கிடையிலான வாய்பாட்டுத் தொடர்பைக் காட்டுகிறது. மொழியின் எல்லா நிலைகளிலும் அலகுகளுக்கிடையிலான தொடர்பை, இம்முறையில் காட்ட முயல்வதனை வாய்பாட்டுத் தொடர்பு அடிப்படையில் அமைப்பை விளக்குவதாகக் கொள்வர்.
ஒலியன் நிலையில் சேர்க்கை நிலைத் தொடர்பைப் பின்வருமாறு விளக்கலாம். எல்லா ஒலியன்களும் எல்லா ஒலியன்களோடும் இணைந்து வருவதில்லை. சான்றாகத் தமிழில் மஞ்சள், அங்கம், பத்தம் போன்ற சொற்களைக் காணலாம். இவற்றில் ஞ்ச, ங்க, ந்த போன்ற ஒலியன்களின் சேர்க்கையைச் சொற்களில் தமிழ் அனுமதிக்கிறது. ஆனால் ஞ்க், ங்ச, ண்த, ம்த் போன்ற சொற்களின் சேர்க்கையை தமிழ் அனுமதிப்பதில்லை. வடமொழியில் க்ர, த்ர போன்ற சேர்க்கைகள் சொற்களில் உள்ளன. தமிழ் இத்தகைய சொற்களைப் பயன்படுத்தும்பொழுது அதன் ஒலியனின் சேர்க்கைக்குத் தக்கவாறு மாற்றிவிடுகிறது.
::க்ராமம் → கிராமம் ::புத்ரன் → புத்திரன் ::காவ்ய → காவிய
ஒவ்வொரு மொழியும் அதற்குரிய முறையில் ஒலியன்களின் சேர்க்கையை அனுமதிக்கிறது. இதனால் எல்லா ஒலியன்களும் எல்லா ஒலியன்களோடும் ஒரு மொழியில் இணைந்து வருவதில்லை என்பது தெரிகிறது. ஒலியன்கள் இணைந்து வருவதிலும் ஒரு சில கட்டுப்பாடுகள் (Constraints) உள்ளன.
இப்பொழுது சேர்க்கைநிலைத் தொடர்பைத் தொடரியல் நிலையில் விளக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொடருக்குள் உள்ள சொற்கள், ஒரு குறிப்பிட்ட வரிசை முறையில் வருகிற கட்டுப்பாடும் இத்தொடர்பைச் சேர்ந்ததுதான். எடுத்துக்காட்டாக, ‘அந்த அழகிய மலர்’ என்னும் தொடரை எடுத்துக் கொள்ளலாம். இதில் அழகிய என்ற சொல் மலர் என்ற பெயருக்கு முன்னால் வருகிறது. மலர் என்ற பெயரை அடுத்து அழகிய என்ற சொல் பெயர்த் தொடரில் (Noun Phrase) வரத் தமிழ் அனுமதிப்பதில்லை. தொடர் வழுவாகக் கருதப்படும். வாக்கிய நிலையிலும், பல்வேறு இடங்களில் வருகின்ற சொற்களுக்கிடையேயும் இத்தகைய சேர்க்கை நிலைத் தொடர்பைக் காணலாம். மேலே சுட்டிய தொடரில் அடுத்தடுத்து வருகிற சொற்களுக்கிடையிலான தொடர்பு சுட்டப்பட்டது. சேர்க்கை நிலைத் தொடர்பை வாக்கியத்தில் அடுத்தடுத்து வருகிற சொற்களுக்கிடையில் மட்டுமன்றி அடுத்தடுத்து வராமல் இடைவிட்டு வருகிற சொற்களுக்கிடையிலும் காணலாம். சொற்களுக்கிடையில் மட்டுமன்றிச் சொற்களுக்கும், விகுதிகளுக்குமிடையில்கூட இத்தொடர்பு காணப்படலாம்.
கண்ணன் நேற்று வந்தான்.
சோம்சுகி நாளை போராட்டத்தில் குதிப்பார்.
மேற்கண்டவற்றுள் முதல் வாக்கியத்தில் உள்ள ‘நேற்று’ என்ற சொல்லுக்கும் வினையில் உள்ள ‘ந்த’ என்ற விகுதிக்கும் சேர்க்கை நிலைத் தொடர்பிருக்கிறது. இதுபோன்றே இரண்டாம் வாக்கியத்தில் உள்ள ‘நாளை’ என்பதும் ‘ப்ப’ என்பதும் சேர்க்கை நிலைத் தொடர்பில் உள்ளன. ஆனால், ‘கண்ணன் நேற்று வருவான்’; ‘சோம்சுகி நாளை போராட்டத்தில் குதித்தார்’ என்னும் வாக்கியங்களில் நேற்று என்பது வ் என்பதுடனும் நாளை என்பது த் த என்பதுடனும் சேர்க்கைநிலைத் தொடர்பில் இயைந்து வருவதில்லை; ஆகையால் இவை வழு வாக்கியங்கள்.
இத்தகைய தொடர்பை வாக்கியத்தில் எழுவாயாகச் செயற்படுகிற பெயருக்கும் வினையில் வருகின்ற விகுதிக்கும் இடையிலும் காணலாம். ‘சித்திரா சிரிக்கிறாள்’ ‘ஆனந்த் படிக்கிறான்’ ‘சித்திரா சிரிப்பான்’ ‘ஆனந்த் படிக்கிறாள்’ மேற்கண்டவற்றுள் முதல் வாக்கியத்தில் வரும் சித்திரா என்பது பெண்ணைக் குறிக்கின்ற பெயர்ச் சொல்; இது எழுவாயாகச் செயற்படுவதால் – ஆள் என்ற விகுதி வினையோடு வருகிறது. இவ்விதி ‘சித்திரா சிரிப்பான்’, ‘ஆனந்த் படிக்கிறாள்’ ஆகிய வாக்கியங்களில் மீறப்படுவதால் அவை வழுவாக்கியங்கள், எழுவாய்க்கும் வினையோடு வருகிற விகுதிக்குமிடையே உள்ள தொடர்பு சேர்க்கை நிலைத் தொடர்பென்று கூறப்படும்.
தொடரியலை விரிவாக ஆராய முற்பட்ட அமைப்பு மொழியியல் மூன்றாவது பரிமாணமாக வேறொரு தொடர்பையும் வலியுறுத்த வேண்டி வந்தது. குறிப்பாக வாக்கிய அமைப்பை விவரிக்கும் பொழுது சொற்களுக்கிடையேவாய்பாட்டுத் தொடர்பும் சேர்க்கை நிலைத் தொடர்பும் மட்டுமன்றி அவற்றிற்கிடையேயுள்ள படிநிலைத் தொடர்பையும் (Hierarchical Relationship) காட்ட வேண்டியிருக்கிறது. சொற்கள் இணைந்து தொடர்களையும் தொடர்கள் இணைந்து வாக்கியத்தையும் தோற்றுவிக்கின்றன. வாக்கியம் மேலிருந்து ஒவ்வொரு கட்டத்திலும் இரண்டிரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இப்பிரிவு சொல் நிலையை அடையும்வரை தொடர்கிறது. இதேமுறை சொல்லில் தொடங்கி வாக்கியத்தில் முடிக்கப்படுவதும் உண்டு. இதைப் பின்வரும் வாக்கியம் மூலம் விளக்கல் கூடும்.
::‘உருசியா இந்தியாவை ஆதரிக்கிறது’,
இவ்வாக்கியத்தை,
எனவும்,
எனவும் காட்டலாம். இத்தகைய வாக்கியப் பகுப்பிற்குப் பதிலிடுமுறை (Substitution Method) அடிப்படையாக உள்ளது.
அமெரிக்க நாட்டில் அமைப்பு மொழியியலுக்கு வித்தூன்றிவயர்கள் புளும்பீல்டு (Bloomfield), சபீர் (Sapir) போன்ற அறிஞர்கள். அமெரிக்க நாட்டிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வளர்ந்த மொழியியலை அமைப்பு மொழியியல் என்று குறிப்பிட்டாலும் இந்- நாடுகளில் வளர்ந்த மொழியியலுக்குள் சில வேறுபாடுகள் உண்டு.
அமைப்பு மொழியியலை வளர்த்த புளும்பீல்டு, உளவியலில் செல்வாக்காக விளங்கிய புறநடத்தை (Behaviour) ஆய்வினால் மிகுதியாகப் பாதிக்கப்பட்டவர். மொழியையும் புறநடத்தைகளுள் ஒன்றாகவே அமைப்பியல் மொழியியலாளர்கள் கருதுகிறார்கள். ஆய்வுக்குரிய பொருள் புறத்தில் நோக்கக் கூடியதாக இருக்கவேண்டும். அதனால்தான் மனமும் அதனோடு தொடர்புடையவும் ஆய்வுக்குரிய பொருள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மேலும், அமெரிக்க நாட்டில் மொழியை ஆராய்ந்தவர்கள் தொடக்கக் காலத்தில் மானிடவியல் துறையிலிருந்து வந்தவர்கள். ஒரு குறிப்பிட்ட இன மக்களின் பண்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு மொழியமைப்பு (மொழியின் சொற்களும் அவற்றின் அமைப்பும்) உதவியாக உள்ளது. மானிடவியலாளர்கள் பல்வேறு இன மக்களின் பண்பாடுகளை ஆராயும்பொழுது அவற்றிற்கிடையே உயர்வு தாழ்வு கற்பிப்பதில்லை. ஒவ்வொரு பண்பாடும் அதனதன் தன்மைவில் உயர்ந்தது. இத்தகைய கருத்தோட்டம் அமைப்பு மொழியியல் சிந்தனையிலும் காணப்படும்.
ஒவ்வொரு மொழியும் அதற்குரிய அமைப்பை உடையது. ஆகையால், ஒரு மொழியை விவரிக்கும் பொழுது இன்னொரு மொழியின் அமைப்பு அதைப் பாதிக்கக்கூடாது. மொழிகள் எண்ணற்ற முறைகளில் வேறுபடலாம், கிரேக்கம், இலத்தீன் போன்ற மொழிகளின் இலக்கணங்கள் ஐரோப்பிய நாட்டு மொழிகளுக்கு இலக்கணம் எழுதியவர்களைப் பாதித்ததால் இத்தகைய கருத்து அமைப்பு மொழியியலில் வலுப்பெறத் தொடங்கியது. இத்தகைய போக்கைத்தமிழிலக்கணக்காரர்களிடையேயும் காணலாம். தமிழின் அமைப்பை விளக்க முற்பட்டவர்கள் வடமொழியின் இலக்கணங்களால் பாதிக்கப்பட்டார்கள். வடமொழியின் அமைப்புக் கூறுகள் தமிழ் மொழியின் மேல் ஏற்றப்பட்டன. இது போன்ற போக்குகள் ஐரோப்பிய நாடுகளில் காணப்பட்டதால் ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளின் அமைப்பிற்கும் அம்மொழிகளில் காணப்படுகிற இலக்கணப் பாகுபாடுகளுக்கும் உட்படுத்தப்படாமல் விவரிக்கப்பட வேண்டுமென்பது வலியுறுத்தப்பட்டது.
ஒரு மொழியின் விவரிப்பு இன்னொரு மொழியால் பாதிக்கப்படக் கூடாது என்பதோடு, தொடர்புடைய இன்னொரு கருத்தையும் இங்குக் குறிப்பிட வேண்டும். அமைப்பின் அடிப்படையில் எல்லா மொழிகளும் சமமானவையே, அமைப்பை அடிப்படையாகக் கொண்டு மொழிகளுக்கிடையில் உயர்வு தாழ்வு கற்பித்துப் பேசுவது பொருளற்றது. ஒவ்வொரு மொழியும் அம்மொழி பேசும் சமுதாய மக்களுக்குப் பயன்படும் விதத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகையால், சமுதாயத் தேவைகளுக்கேற்ற வகையில் மொழி செயற்படுகிறது. எல்லா மொழிகளும் எல்லாச் செய்திகளையும் வெளியிடக்கூடிய இயல்புடையவை. மொழிகளுக்கிடையே அமைப்பை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த மொழிகள் எனச் சிலவற்றையும், வளராத மொழிகள் எனச் சிலவற்றையும் கூறி இயலாது. அமைப்பு மொழியியல் வளர்ச்சியில் வெளிப்பட்ட கருத்துகளுள் இது முதன்மையானது.
அமைப்பு மொழியியல் மொழியைப் புற நடத்தைகளுள் ஒன்றாகக் கருதி அணுகுவதால் மொழியியலாளரின் உணர்வோ கருத்தோ மொழி விவரிப்பைப் பாதிப்பதில்லை. மொழியை ஆராய்வோரும் மொழித் தரவுகனைத் (Linguistic Data) தருவோரும் வெவ்வேறான ஆட்களாக இருப்பதனால் அகவய அணுகு முறை (Subjective Approach) இங்குத் தவிர்க்கப்படுகிறது. உள்நோக்கிய தரவுகளை (Introspective Data) அமைப்பு மொழியியல் ஏற்றுக்கொள்வதில்லை. இதன் அணுகுமுறை புறவயம் (Objective) ஆனது.
அமைப்பு மொழியியலைப் புரிந்துகொள்ள, அண்மையில் மிகவும் விரைவாக வளர்ந்த மாற்றிலக்கணச் சிந்தனையோடு ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது. அமைப்பு மொழியியல் கோட்பாடு ஒவ்வொரு நிலையிலும் உள்ள அலகுகளைக் கண்டுபிடிப்பதற்குரிய வழிமுறைகளை வகுப்பதில் கவனம் செலுத்தியது. இரண்டாம் உலகப் போரின் சூழலாலும் தங்கள் ஆட்சிக்கு உட்பட்ட பல்வேறு நாட்டு மக்களின் மொழியும் பண்பாடும் அறியப்பட வேண்டிய கட்டாயத்தாலும், ஐரோப்பிய நாட்டு அறிஞர்களும் பல்வேறு மொழிகளை ஆராய வேண்டிய நிலைக்கு உள்ளானார்கள். இம்மொழிகள் இவர்களுக்குத் தெரியாததால், மொழி தெரியாத ஒருவர், அமைப்பு மொழியியல் கோட்பாடு வருத்தளித்த வழிமுறைகளை இயந்திர கதியில் பின்பற்றி இலக்கணத்தை உருவாக்க வேண்டுமென்பது இவ்வாய்வுகளின் எதிர்பார்ப்பு. சிறப்பான இலக்கணம் உருவாக, வகுக்கப்படுகின்ற வழிமுறைகள் புறவயமானவையாக இருக்க வேண்டும். அலகுகளைக் கண்டுபிடிக்கிற வழிமுறைகளுக்கு முதன்மை கொடுப்பதை விட, ஒன்றுக்கு மேற்பட்ட ஆய்வுகள் நமக்குக் கிடைக்கும்பொழுது ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கிற வழிமுறைகளை (Evaluation Procedure) வகுப்பதில் மாற்றிலக்கணம் கவனம் செலுத்துகிறது.
அமைப்பு மொழியியல் சிந்தனையிலிருந்து மாற்றிலக்கணம் கிளைத்ததால், அமைப்பு மொழியியலின் கூறுகள் சில மாற்றிலக்கணப் பின்னணியிலும் காணப்படுகின்றன. பியாசே (Jean Piaget – 1971) போன்றவர்கள் சோம்சுகியின் மாற்றிலக்கணச் சிந்தனையைக் கூட அமைப்பியல் (Structuralism) என்ற கொள்கையின் அடித்தளத்தைக்கொண்டது என்று கூறுவார்கள். சமுதாய மொழியியலோடும் (Socio–linguistics) ஒப்பிட்டுப் பார்ப்பதன்மூலம் சில வேறுபாடுகளை உணரலாம். மொழி ஆய்வுக்குரிய தரவுகள் ஒருவரிடமிருந்தோ மூன்று நான்கு பேரிடமிருந்தோ திரட்டப்பட்டாலும், எழுதப்படுகிற இலக்கணம் அம்மொழி பேசும் மக்கள் எல்வோருக்கும் பொதுமையானது. மக்கள் ஒரே மாதிரியான இலக்கணத்தோடு வேறுபாடின்றிப் பேசுகிறார்கள் என்பது இவ்வணுகலின் அனுமானம் (Assumption). இத்தகைய அனுமானமே ஆய்வில் மேற்கொண்டுள்ள உத்தியாகும், மொழி பேசுபவர்கள் சாதி, கல்வி, பொருளாதார நிலைமை, வாழுமிடம் முதலியவற்றால் வேறுபட்டுப் பேசுகிறார்கள் என்பது ஒதுக்கி வைக்கப்படுகிறது. தனிமனிதன் சமுதாயப் பொதுமைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறான் என்பது காட்டப்படுகிறது. இதில் அவனுக்குச் சுதந்திரம் இல்லை, மொழி பேசுதல் என்பது ஒரு சமுதாய நிகழ்வாகக் கருதப்படுகிறது. பேச்சில் உள்ள வேறுபாடுகளை இவ்வணுகல் அறியாததன்று. ஆய்வின் மையப் பொருளாகக் கருதப்படாமல் இது ஒதுக்கிவைக்கப்படுகிறது. சமுதாய நிலையில் மொழிப் பொதுமைகளைக் காண்பது அமைப்பு மொழியியலின் குறிக்கோள். இன்னொரு முதன்மையான கூறிலும் அமைப்பு மொழியியல் சமுதாய மொழியியலினின்று வேறுபடுகிறது. மொழியின் செயற்பாடு (Language Function) சமுதாய மொழியியலின் முதன்மையான ஆய்வாக அமைகிறது. மொழியின் செயற்பாட்டைப் புரிந்துகொள்ளச் சமுதாயப் பின்புலத்தையும் மொழி பயன்படுத்துகிற பரப்பையும் (Domains) தெரிந்து கொள்ள வேண்டும். அமைப்பு மொழியியல், மொழியின் அமைப்பைப் (Structure of Language) புரிந்து கொள்ளக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.
அமைப்பு மொழியியல் என்ற சிந்தனை விளக்குவதற்குச் சிக்கலானது. அமைப்பு மொழியியல் என்பது வேறுபடாத ஒருமித்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கொண்டதன்று. அமெரிக்க மொழியியலுக்கும் இங்கிலாந்து நாட்டு மொழியியலுக்குமே வேறுபாடு உண்டு. இதேபோல் பிராக் சிந்தனை இவ்விரு நாட்டு அமைப்பு மொழியியல் சிந்தனையிலிருந்தும் மாறுபடும். இங்கு விவரிக்கப்பட்ட அமைப்பு மொழியியல் அமெரிக்க நாட்டு மொழியியலின் செல்வாக்கை அதிகமாகக் கொண்டிருக்கும். இச்சிந்தனையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள மாற்றிலக்கணம், சமுதாய மொழியியல் போன்ற மற்ற சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. அமைப்பியல் என்ற தத்துவத்தின் கூறாகவும் அமைப்பு மொழியியல் சிந்தனையைப் புரிந்துகொள்ள வேண்டும்.கி.அ.
துணை நூல்கள்
Bloomfield, L., “Language” Motilal Banarsidass, Delhi, 1963.
Gleason, H.A., “Introduction to Descriptive Linguistics”, Oxford & IBH Publishing Co., Calcutta, 1966.
Hockett, C.F.; “A Course in Modern Linguistics”, The Macmillan Company, New York, 1958.
Piaget, J., “Structuralism”, Routledge and Kegan Paul, Translated by Maschlar, C, London, 1971.
Rangan, K., “Some remarks on the goals and methods of taxonomic linguistics, transformational generative grammer and sociolinguistics in International Journal of Dravidian Linguistics”, 10.2. pp. 414–436, 1981.
முத்துச் சண்முகன், “இக்கால மொழியியல்”, மதுரை பப்ளிஷிங் ஹவுஸ், மதுரை, 1980.
தமிழவன், “ஸ்ட்ரக்சுரலிசம்”, பாரிவேள் பதிப்பகம், திருநெல்வேலி, 1982.
திருமலை, மா.சு. & கி. கருணாகரன் “மொழிஇயல்”, பாரி நிலையம், சென்னை, 1970.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 536)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u5r7zhw5/
தமிழ்“அமைப்பு மொழியியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u5r7zhw5/APA
Oliyon Research. (2026). அமைப்பு மொழியியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u5r7zhw5/MLA
"அமைப்பு மொழியியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u5r7zhw5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment