உளவழி மருத்துவத்தில் அறிவுரை பகர்தலின் சிறப்பை முதன்முதலாக எடுத்துரைத்த உளவியல் அறிஞர் இராசர்சு ஆவார். இவர் 1902–ஆம் ஆண்டு இல்லினாய் மாநிலத்தில் ஒக்பார்க்கு (Oak Park) என்னும் இடத்தில் பிறந்தார். இவர் சமயக்கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற பின் உளவியலில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார். குழந்தைகள் வழிகாட்டு நிலையத்தில் இவர் பத்து ஆண்டுகள் பணி புரிந்தார். காரல் இராசர்சு (Carl Rogers), தியோடர் இரீசு, ஆட்டோ இராங்கு போன்ற பிராய்டுக் கோட்பாட்டினருடன் தொடர்பு கொண்டார். இவர் 1940–ஆம் ஆண்டு ஒகையோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பதவி ஏற்றுப் பணிபுரிந்தார். பின்னர் 1945–ஆம் ஆண்டு சிகாகோப் பல்கலைக்கழகத்தில் அறிவுரை பகர் நிலையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். அறிவுரை பகர்தலில் பல புதிய உத்திகளைப் புகுத்தினார். ஆட்படுநருடன் உரையாடல்களைப் பதிவு செய்யும் முறையை இவர் பயன்படுத்தி, அதில் வெற்றி கண்டார். இவர், 1951–ஆம் ஆண்டு வெளியிட்ட ஆட்படுநர் மைய உள மருத்துவம் (Client Centered Therapy) என்னும் நூலில் தம் உளவியல் கருத்துக்களை விளக்கியுள்ளார். கலிபோர்னியாவில் தாம் நிறுவியுள்ள கல்வி நிலையத்தில் 1964–ஆம் ஆண்டுக்குப்பின்னர்ப் பொறுப்பாளராக இருந்து வந்தார். உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் வளர்ச்சியடைந்து முதிர்ச்சி நிலையை அடைய வேண்டும் என்னும் உந்து இருப்பதாகவும், அதை ‘நிறைவேற்றும் இயல்பு’ என்றும் இராசர்சு கூறியுள்ளார். மனிதர்களின் சிக்கல்களை ஆய்வு செய்வதற்காகவும் அதற்கு மருத்துவம் செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டிருந்த முறைகளின் மேல் இவருக்குப் பல ஐயங்கள் எழுந்தன. இவர் நோயாளிக்கும் (ஆட்படுநர்) மருத்துவருக்கும் இடையில் நல்ல உறவும் ஒருவரை ஒருவர்புரிந்து கொள்ளுதலும் ஏற்படவேண்டும் என்று கருதினார். நோயாளி மருத்துவச் சூழலில் இருக்கும் பொழுது அவர் எந்தவிதமான கட்டளைகளுக்கும் உட்படுபவராக இருக்கக் கூடாது என்று இராசர்சு கூறினார். துன்புறுத்தல்களுக்கும் உளத்தாக்குதல்களுக்கும் ஆளாகிய குழந்தைகளை ஆய்வு செய்வதன் விளைவாகத் ‘தொல்லைகளுக்குள்ளான குழந்தைகளுக்குரிய உளநோய் மருத்துவம்’ (The Clinical Treatment of the Problem Child) என்னும் நூலை இவர் எழுதினார். ஒகையோ, சிகாகோ, விசுகான்சின் ஆகிய பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகவும் இவர் பணியாற்றினார். சிகாகோப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது அறிவுரை பகர் மையம் ஒன்றை இவர் நிறுவினார். அங்கே தமது உளமருத்துவ முறையைப் பற்றி ஆய்வு செய்தார். அதன் முடிவுகளைத் தமது ‘உளமருத்துவமும் ஆளுமை மாற்றமும்’ (Psychotherapy and Personality Change) என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘ஆட்படுநர் மைய மருத்துவம்’ (Client Centered Therapy) என்ற நூலில் இம்மருத்துவ முறையைப் பற்றி விளக்கியுள்ளார். ‘மனிதனாதல் பற்றி’ (On Becoming a Person} என்ற நூல் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது. ‘அறிவுரை பகர்தலும் உளமருத்துவ முறைகளும்’, ‘எதிர் குழுக்களைப் பற்றி’ (On Encounter Groups) என்பன போன்ற பல நூல்களை இவர் இயற்றி உளவியல் துறையில் சிறப்பிடத்தைப் பெற்றுள்ளார். இராசர்சின் கருத்துகளைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம். மனிதர்களின் நடத்தைகள் அவர்களின் தற்கருத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. மனிதர்களின் இயல்பான அடிப்படைப்பண்பு நலம் சார்ந்ததாகவே உள்ளது. சமூகக் காரணிகளால் தனிமனிதன் வன்முறை, தன்னலம், அழிவு ஆகிய இயல்புகளைப் பெறுகிறான். மனிதனின் தற்கருத்திற்கும் அவன் வாழ்க்கையில் அடையும் அனுபவங்களுக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது. குழந்தையின் தற்கருத்தினைச் சிதைவுபடுத்தும் வழியிலேயே இன்றுள்ள கட்டுப்பாடுகளும் அறிவுரைகளும் அமைந்துள்ளன. ஆதலின், ‘தான்’ என்னும் உணர்வுக்கும் தற்கருத்திற்கும் இடையே வேறுபாடுகள் எழுகின்றன. தற்கருத்து நல்லமுறையில் அமையப்பெறாவிடில் குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தில் அதன் ஆளுமை பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனவெழுச்சிச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. நாளடைவில் இது உளக் கோளாறுகளுக்கும் காரணமாக அமையலாம். துணை நூல் William Samuel, Personality, Mcgraw Hill, Tokyo, 1981.