இராசராச சோழனுலா
irācarāca cōḻaṉulā
இரண்டாம் இராசராசன் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட ஓர் உலா நூலாகும்.
இரண்டாம் இராசராசன் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட ஓர் உலா நூலாகும். இவ்வுலா 391 கண்ணிகளையும் இறுதியில் ‘அன்று தொழுத வரிவை’ எனத் தொடங்கும் வெண்பாவினையும் கொண்டது.
இவ்வுலா ‘புயல்’ என்னும் மங்கலச் சொல்லை முதற்சீராகக் கொண்டு தொடங்குகிறது. உலகத் தோற்ற முதல் அதனைக்காத்த பல்வேறு வேந்தர் சிறப்பும், சோழ மன்னர்களின் வழிமுறையும், அவர்கள் செய்த போரும், அடைந்த வெற்றியும், அளித்த கொடை முதலியவற்றால் பெற்ற பெரும் புகழும் வரலாற்றுச் சான்றுகளுடன் இவ்வுலாவில் விளக்கப்பட்டுள்ளன. மன்னன் தன் தேவியுடன் வைகறையில் துயிலெழுந்து, முரசங்கள் முழங்கக் காவிரியில் நீராடி, மேலைக் குரவர்க்கும் விண்ணவர்க்கும் வேதியர்க்கும் செயக்கடவ காலைக் கடன்களைச் செய்து முடித்து, வழிபாடுகள் செய்து, தில்லைக் கூத்தனைச் சிந்தித்து உலா வருதற்பொருட்டு வேழ மேற்கொண்டமை நன்கு கூறப்பட்டுள்ளது. மன்னன் உலாவருஞ் சிறப்பினைக் கண்டு எல்லையிலா மகிழ்ச்சி கொண்ட மெல்லியலாரும் கண்டோரும் உவகை மிகுதியாற் கூறும் பாராட்டுரைகளும், பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக உள்ள மாதர் மால் கொள்ள மன்னன் உலாப் போந்த சிறப்பும் நிரல்படக் கூறப்பட்டுள்ளன.
ஒட்டக்கூத்தர் பாடிய பிற உலாக்களினும் இராசராச சோழனுலா தனிச்சிறப்பினதாகும். இவர் இராசராசன் மீது இவ்வுலா நூலை இயற்றி அரங்கேற்றிய போது, மன்னன் நூலின் ஒவ்வொரு கண்ணிக்கும் ஓராயிரம் பொன் பரிசில் வழங்கி இதனை ஏற்றுக் கொண்டான் என்று ‘சங்கர ராசேந்திர சோழனுலா’வும், ‘தமிழ்விடு தூது’வும் பாராட்டிக் கூறுதல் இதற்குத் தக்க சான்றாகும்.
இவ்வுலா நூல் இராசராசனின் வரலாற்றுக் குறிப்புகளையும் அரும்பண்புகளையும் விரித்துரைக்கிறது. இம்மன்னன் கருநிறத்தினன். இவன் மனைவியருள் புவன முழுதுடையாள் என்பாளே இவனுடைய பட்டத்துத் தேவியாக இருந்தனள் என்பதனைத் ‘தவன குலதிலகன் தன்பெருந்தேவி புவன முழுதுடைய பூவை’ (39) என்னும் உலாத்தொடர் தெரிவிக்கிறது. வரராசன், கண்டன், சனநாதன் என்பன இம்மன்னனுக்கு வழங்கிய சிறப்புப் பெயர்கள்.
இராசராசன் சைவ சமயப் பற்றும் தில்லைக் கூத்தப் பெருமானிடம் எல்லையற்ற அன்பும் உடையவன். சிவபெருமான் சிவாகமத்திற் கூறியபடி திருநீறு புனைந்து, ‘தொல்லைத் திருமரபிற் கெல்லாம் தொழுகுலமாம் தில்லைத் திருநடனஞ் சிந்தித்து’ உலாப் புறப்பட்டான் என்னும் உலா மொழிகளால் மேற்கண்ட கூற்று விளக்கம் பெறுகிறது. இராசராசன் வந்த உலாக் காட்சியில் ‘ஓவாது செய்ய தமிழ் முழங்கத் தெய்வப் பொதியிலாய்க்’ காணப்பட்டான் என்னும் உலாக்கூற்று அவன் தமிழ் மொழி மீது கொண்டிருந்த ஆராக் காதலைப் புலப்படுத்தும்.
இராசராசன் பாசறையையே பள்ளியறையாகக் கொண்டான். ‘அயிற்படை வீரன்’ எனச் சிறப்பிக்கப்படுவதால், முருகனைப் போன்ற இவனுடைய சினமிகு போர்மறம் அறியப்படுகிறது. பார்மடந்தை அவன் கைத்தலத்தும், போர்மடந்தை அவன் திருத்தோள்களிலும், திருமகள் அவன் விழிகளிலும், கலை மகள் அவன் செவிகளிலும் வாழ்ந்தனர் என்பதால் இராசராசன் வீரம், செல்வம், கல்வி ஆகிய முத்திறத்தானும் சிறந்திருந்தான் என்பதை அறியலாம். ‘வேந்தர், பணியும் தடமகுடம் பன்னூறு கோடி, அணியுந்திருத்தாள் அபயன்’ (352) என்று இம்மன்னன் பாராட்டப்படுவதால் பகையரசர் பலரை வென்றடக்கிய இவென்றன் ஆட்சிச் சிறப்பும், விரிந்து பரந்த ஆட்சிப் பரப்பும் புலனாகின்றன. இவன் பட்டத்து யானை ‘தமிழ் வேந்தர் பாடும் பரணிபுனைந்த பகடு’ என்று சிறப்பிக்கப்படுகிறது. இவ்வுவாவில் இவன் பட்டத்து யானை பெறும் சிறப்புகள் யாவும் இராசராசன் தன் அரச வாழ்வில் பெற்ற சிறப்புகளாகும். இம்மன்னன் ஞாலத்திறைவன்; எண்ணற்கரிய பெரியோன்; ஈரேழ் உலகுடையான் என்று பெருமை துலங்கச் சிறப்பிக்கப்படுகிறான்.
ஒட்டக்கூத்தர் இவ்வுலாத் தலைவனைத் திருமாலாகக் கருதிப் பாடுவதால் திருமால், கண்ணன் பற்றிய புராண வரலாற்றுக் குறிப்புகளும், இராமாயணக் கருத்துகள் சிலவும் இந்நூலுள் இடம் பெறுகின்றன. இரண்டாங் குலோத்துங்கன் தில்லையிற் செய்த திருப்பணிகள் (30–33) இந்நூலுள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. திருவெம்பாவையும் (120) கச்சிக் கற்றளியும் (262) இடம் பெறுவது சிறப்புடையதாகும். கொப்பத்துப் பரணி, கூடல் சங்கமத்துப் பரணி, கலிங்கப்பரணி ஆகிய மறைந்து போன மூன்று பரணி நூல்களைக் குறிப்பிடுவது. இவ்வுலா தமிழ் இலக்கிய வரலாற்றுக்குச் செய்யும் பேருதவியாகும்.இரா.செ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 38)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u4hjgdyh/
தமிழ்“இராசராச சோழனுலா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u4hjgdyh/APA
Oliyon Research. (2026). இராசராச சோழனுலா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u4hjgdyh/MLA
"இராசராச சோழனுலா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/u4hjgdyh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment