இந்திய வேளாண்மையின் பல கூறுகளுள் குறிப்பிடத்தக்கது வளஞ்சான்ற விளைவாகும். ஓர் உழவன் பயிரிடும் நிலம் ஒரே இடத்தில் அமையாமல் உரிமை மாற்றங் காரணமாகப் (Transfer of Ownership) பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுதலும் (Sub-Division), அவை பல இடங்களில் துண்டு நிலங்களாகச் சிதறிக் கிடத்தலும் (Fragmentation) உட்பிரிவும் நிலச் சிதறல்களும் எனக் கூறப்படுகின்றன. நிலங்களின் உட்பிரிவினாலும் சிதறலினாலும் தொழில்நுட்ப மாற்றங்களை வேளாண்மையில் புகுத்துவது கடினமாயுள்ளது. இத்தகைய நிலங்களில் உழவர்கள் தங்கள் கடின உடல் உழைப்பைச் செலுத்த வேண்டியிருப்பினும், அவர்கள் பெறும் வருவாய் மிகக் குறைவானதாயிருப்பதால் அது உற்பத்தியைப் பெருக்குவதற்கான ஊக்கத்தை அளிப்பதில்லை. எனவே, இவை உழவர்களின் ஆக்கத்திறனையும் நிலத்தின் ஆக்கத்திறனையும் (Productivity) குறைத்து வேளாண்மைத் துறையின் வளர்ச்சியையும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கின்றன. உயர்ந்த அளவு விளைவை அளிக்கும் பயிரிடும் நில அளவு (Unit of Land) திட்டவட்டமாக வரையறுக்க இயலாதது. இவ்வளவு நிலத்தின் மூல வளம், செழிப்பு, காலநிலை, வேளாண்மையினரின் கல்வியறிவு, திறமை, ஊக்கம் போன்ற பல்வகை உள்ளீட்டுக் (Input) காரணிகளைச் சார்ந்து நாட்டுக்கு நாடு வேறுபடுவதுடன், ஒரு நாட்டிற்குள்ளும் பகுதிக்குப் பகுதி வேறுபட்டிருக்கும். அரசியல் சமூகப் பொருளாதாரக் காரணிகளும் பயிரிடும் நில அளவை வரையறுப்பதில் சிறந்த சிறந்த பங்கேற்கின்றன. இவ்வளவினை உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடுகின்றனர். இது குடும்ப அளவு (Family Holding), உத்தம அளவு (Optimum Holding), பொருளாதார அளவு (Economic Holding) என மூவகைப்படும். இந்திய நிலச் சீர்திருத்த ஆய்வுக் குழுவின் (Panel on Land Reforms) அறிக்கையின்படி ஐந்து பேர் கொண்ட ஒரு வேளாண்மைக் குடும்பத்திற்கு உரூ. 1600 ஆண்டு வருவாய் கொடுக்கக்கூடிய பயிரிடும் அட்டவணை–1 (விழுக்காடு) !!colspan=4|1970—71 1976—77 (விழுக்காடு) நில அளவு குடும்ப அளவாகும். இது இந்தியாவில் 4 முதல் 6 ஏக்கர்களைக் கொண்டதாயிருக்க வேண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனைப் பிழைப்பு மட்ட அளவு (Subsistence Holding) எனவும் கூறுவர். ஒரு குடும்பம் இன்றியமையா வசதிகளுடன் வாழத் தேவையான வருவாய் கொடுக்கக்கூடிய பயிரிடும் நில அளவு பொருளாதார அளவாகும். இவ்வளவு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபட்டு 6 முதல் 10 ஏக்கர் வரையிலும் இருக்கும். பொருளாதார அளவை விட மூன்று மடங்கு மிகையானதும், தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி முதல், உழைப்பு, நிலம் ஆகியவற்றின் உயர்ந்த உற்பத்தித் திறனைப் பெறத் தகுதியுடையதுமாகிய பயிரிடும் நில அளவு உத்தம அளவாகும். இதுவே நில உச்சவரம்பு (Land Ceiling) அளவுமாகும். நில உச்சவரம்பை வரையறுத்த மைய ஆய்வுக் குழு 1970–ஆம் ஆண்டு விலைகளின் அடிப்படையில் உத்தம அளவை 10 முதல் 18 ஏக்கர்களாகக் குறிப்பிட்டது. உச்சவரம்பு நிலங்கள் ஆண்டுக்கு உரூ. 15,000 வருவாய் கொடுக்கக் கூடியதாயிருக்கும். அட்டவணை 1–இல் கொடுத்துள்ளபடி அனைத்திந்தியப் பயிரிடும் நில அளவுகளில் 51 விழுக்காட்டுக்கு மேலான எண்ணிக்கை பிழைப்புமட்ட அளவுக்கும் கீழ் உள்ளன என்பது இந்திய வேளாண்மையின் பொது நிலையை விளக்குகிறது. இத்தகைய நிலச் சிற்றளவுகள் (Small Size Holdings) மக்கள்தொகைப் பெருக்கத்தினாலும் சம வாரிசு உரிமைச் சட்ட (Law of Inheritance) மரபியலினாலும் மேலும் மேலும் பிரிக்கப்பட்டு, உட்பிரிவுகளும் (Divided & Sub–Divided) ஏற்பட்டுத் துண்டாடப்படுகின்றன. சிறப்பாக வாரிசு உரிமைச் சட்டத்தினால் ஒவ்வொரு தலைமுறையிலும் (Generation) சொற்றளவு நிலங்கள், பேரளவு தோட்டங்கள் முதலியன வாரிசுகளிடையே ஒத்த தன்மைக்காகத் துண்டாடப்படுகின்றன. ‘இந்திய மரங்கள் அவற்றின் கிளைகள் உரிமையில் பங்கிடப்படும்’ என்று கூறப்படுவது நிலம் துண்டாடப்படுவதின் முழுமை நிலையை அறிய உதவுகின்றது. பன்னெடுங்காலமாக இந்திய ஊரகச் சமுதாயத்தில் வேரூன்றியிருந்த கூட்டுக் குடும்ப முறை (Joint Family System) சிதைவுற்று இக்காலத்தில் தனிக் குடும்ப வாழ்க்கை முறை வளர்ச்சி பெற்று வருவதால் கூட்டுக் குடும்பங்களிலிருந்து நிலங்கள் சிறிய குடும்பங்களுக்குப் பங்கிடப்பட்டு நில உட்பிரிவுகளும் சிதறல்களும் பெருகுகின்றன. கல்வி வளர்ச்சி, தொழில் புரட்சி, தனியுரிமைக் கோட்பாடு (Individualism), அயல்நாட்டுப் பண்பாடு, நகரியமாதல் ஆகியவற்றின் வளர்ச்சி, ஒரு சிலரால் கட்டுப்படுத்தப்படும் கூட்டுக் குடும்ப முறை அழிவுற்று நிலங்கள் துண்டுபடக் காரணமாயுள்ளது. ஊரகங்களில் வளர்ச்சி பெற்றுச் செழித்தோங்கிய கைலினைத் தொழிற்றுறை நலிவுற்றதனரல் அத்- தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் உழவுத் தொழிலைப் பிழைப்புக்காக நாடுகின்றனர். தொழிற் புரட்சியினால் கைவினைப் பொருள்களின் விற்பனை பேரளவிற்கு வீழ்ந்துவிட்டது. உயர் கல்வியும் தொழில்நுட்ப அறிவும் பெற்றிராத கைவினைஞர்கள் (Artists) வேளாண்மையில் ஈடுபட வேண்டிய இன்றியமையாச் சூழ்நிலை ஏற்படுவதால் நிலத் தேவை மிகுந்து, நிலங்கள் மேலும் மேலும் பிரிக்கப்பட்டுச் சிதறுகின்றன. ஊரகக் கடன் பளுவும் (Rural Indebtedness) வேளாண்மையினரின் ஏழ்மையைப் பயன்படுத்தி வாழும் வட்டித்தொழிலரின் (Money Lenders) தொல்லையும் உயர்ந்த வட்டி வீதங்களும் சிறு வேளாண்மையினரைத் தங்கள் கடன் தொல்லைவிலிருந்து விடுபட நிலங்களைத் துண்டாட வைக்கின்றன. வட்டித் தொழிலர் தீய நடவடிக்கையால் வேளாண்மையினரைத் தங்கள்பால் சிக்க வைத்து, இறுதியில் வட்டியோடு முதலுக்காக நில உரிமையைக் கைப்பற்றுகின்றனர். நிலம் பிரிக்கப்பட்டு வட்டித்தொழிலருக்குக் கடனுக்கு ஈடாக அளிக்கப்படுவதால் நில உட்பிரிவும் சிதறலும் பெருகுகின்றன. சமீன்தாரி முறை (Zamindari System) ஒழிக்கப்பட்டுத் தனி மனிதனின் நில உரிமைக்கு இந்திய நிலச் சீர்திருத்தங்களில் கொடுக்கப்பட்ட முன்னுரிமையும் முக்கியத்துவமும் பேரளவு சாகுபடி முறை அழிவுற்று நிலங்கள் சிதறக் காரணமாயின. நில உச்சவரம்புச் சட்டத்தினால் பெருநிலக்கிழார்கள் தங்கள் நிலங்களைப் பிரித்துத் துண்டுபடுத்தினர். இந்தியாவில் பயிரிடப்படும் நில அளவுகள் சிறியவை மட்டுமல்லாமல் அவை பல உட்பிரிவுகளுடன் சிதறப்பட்டும் காணப்படுகின்றன. ஓர் உழவன் பயிரிடும் நிலம் அவன் ஊரகத்தில் பல இடங்களில் சிதறியிருப்பதால், அவற்றில் தன் முழுக் கவனத்தையும் உழைப்பையும் முதலையும் ஒரே காலத்தில் திறமையாகச் செலுத்தி, உயர்ந்த பலனைப் பெற இயலாது. சிதறிய நிலங்களை அணுக அலைய வேண்டியிருப்பதால் பேரளவில் மனிதத் திறனும் உழைப்பும் முதலும் வீணாகின்றன. பல இடங்களிலுள்ள பயிர் நடவடிக்கைகளைத் தன் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலாது. சிறிய துண்டு நிலத்தில் உழுவதற்கான உந்துகள் (Tractor), விதைக்கும் அறுவடை செய்யும் இயந்திரங்கள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதும் இயலாதது. இவற்றைப் பயன்படுத்தினாலும் செலவு வருவாயைவிட மிகுந்து இழப்பை அளிக்கும். இத்தகைய நிலங்களில் நீர்ப்பாசன வசதிகளை உண்டாக்குவது, கிணறு வெட்டுவது. வேலி அடைப்பது, வடிகால் அமைப்பது, நடைபாதை அமைப்பது போன்றவை பல இடையுறுகளை விளைக்கும். வேலி அடைப்பு, வாய்க்கால் வெட்டுதல் போன்றவற்றினால் நிலம் மேலும் சிறியதாவதுடன் சண்டையும் உரிமையியல் வழக்கும் (Litigation) முடிவின்றித் தொடர்ந்து கொண்டே செல்லும். உட்பிரிவும் நிலச் சிதறல்களும் வேளாண்மையின் உற்பத்திச் செலவை (Cost of Agricultural Production) உயர்த்தி வருவாயைப் பேரளவில் குறைக்கின்றன. இதனால், ஏழ்மையும் வறுமையும் பெருகுகின்றன. பொருளாதார நில அளவைப் பெருக்குதல், நிலங்களை ஒருங்கிணைத்தல் (Consolidation of Lands) கூட்டுறவுப் பண்ணை முறையை ஊக்குவித்தல் ஆகியவற்றால் நில உட்பிரிவு, சிதறல்களால் ஏற்படும் தீமைகளை நீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொருளாதார நில அளவான 6 முதல் 10 ஏக்கர் வரையான பண்ணைகள் இந்திய வேளாண்மைக்கு மிகச் சிறந்தனவாகும். இத்தகைய பண்ணைகள் தேவையான வருவாயை அளிப்பதுடன் சிற்றளவில் எந்திரங்களைப் பயன்படுத்தித் தொழில்நுட்ப முறையைப் பரவலாக்கவும் உதவும். இவை மிகையான முதலாளித்துவ ஆதாயத்திற்கு வழிகாட்டாமல் வேளாண்மையினரின் திறமையை ஊக்குவிக்கத் தகுந்த இயல்பான ஆதாயத்தை அளிக்கும். பொருளாதார நில அளவைப் பரவலாக்கும் நோக்கத்தை ஓர் அடிப்படையாகக் கொண்டதே உச்சநில வரம்புத் திட்டம். இத்திட்டத்தின் மூலம் ஒரு நிலக்கிழாரிடம் குவிந்து கிடக்கும் நிலத்தை அரசு பெற்று அவற்றைச் சிறிய வறுமையுற்ற விவசாயிகளுக்குப் பங்கிட முனைகிறது. நில ஒருங்கிணைப்புத் (Consolidation of Holdings) திட்டத்தின் கீழ்ச் சிதறிய நிலங்களை ஒருங்கிணைக்கவும் ஊரக நிலங்களை ஒருங்கிணைக்கவும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஊரக நிலங்களை வேளாண்மையினரின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைத்துப் பகுதி பகுதியாகப் (Block) பயிரிடுவது நிலத்தின் உற்பத்தித் திறனைப் பெருக்குகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட நிலங்களில் புதிய தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றவும் எந்திரங்களையும் இரசாயன உரங்களையும் பயன்படுத்தவும் முடிவதால், வேளாண்மை உற்பத்தி பெருகுவதுடன் வேளாண்மையினரின் ஆக்கத் திறனும் உயருகிறது. இவற்றின் உற்பத்திச் செலவும் குறைந்து வருவாயும் ஆதாயமும் பெருகுகின்றன. ஒருங்கிணைப்புத் திட்டம் பஞ்சாபு மாநிலத்தில் குறிப்பிடத்தக்க வகையில் செயற்படுத்தப்பட்டுள்- ளது. ஆறாம் ஐந்தாண்டுத் திட்ட இறுதியில் 45 மிலியன் எக்டேர் நிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பஞ்சாபு, அரியானா, உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதி ஆகிய இடங்களில் ஒருங்கிணைப்பு முழுமை பெற்றுள்ளது. தென் மாநிலங்களிலும் இராசசுத்தானத்திலும் இத்திட்டத்திற்கான எத்தகைய முயற்சியும் எடுக்கப்படவில்லை. பீகாரிலும் ஒரிசாவிலும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் தன்னியல்பில் (Voluntary) ஒருங்கிணைப்புச் செய்யச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கேரளாவிலும் இத்திட்டம் தொடங்கப்படவில்லை. இவற்றிலிருந்து நில ஒருங்கிணைப்புத் திட்டம் இந்தியாவில் வெற்றிபெற இக்காலச் சூழ்நிலையில் வாய்ப்பில்லை என அறியப்படுகிறது. இதற்கு இந்திய மக்களிடையே காணப்படும் நில உரிமைப்பற்றுச் சிறப்புக் காரணம். சிறிய துண்டு நிலமாயினும் சிதறப்பட்ட நிலமாயினும் தங்களுக்கென்று உரிமையுடன் சிறுநிலம் வேண்டுமென்ற மரபியல் விருப்பமுடையவர்களாய் இருக்கின்றனர். மேலும், தலைமுறையாய் வரும் குடும்ப நிலப் பங்கில் தனிக் கவனமும் பற்றும் கொண்டுள்ளனர். நில ஒருங்கிணைப்பைச் செயற்படுத்துவதற்கான நுட்ப மேலாண்மைத் திறமை இந்திய அரசுப் பணியாளர்களிடம் போதிய அளவு இல்லை. வளம் நிறைந்த நிலங்கள் தரம் குறைந்த நிலங்களுடன் இணைக்கப்படும்போது ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கவல்ல நிருவாகம் அமைக்கபடாததால் ஒருங்கிணைப்புக்கு வேளாண்மையினரிடம் விருப்பமும் ஒத்துழைப்பும் இல்லை. ஒருங்கிணைக்கப்பட்ட நிலங்களில் அறுவடையின் பங்கைப் பங்கீடு செய்வதிலும் நில உரிமையைப் பாதுகாப்பதிலும், பல குறைகளும் வேறுபட்ட கருத்துக்களும் நிலவுவதால், நில ஒருங்கிணைப்பு வெற்றி பெறாமல் ஆற்றலிழந்து செயற்படுகிறது என ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்திய மைய அரசும் திட்ட வல்லுநர்களும் கூட்டுறவுப் பண்ணை முறை இந்திய வேளாண்மைக்கு நிலையான பல நன்மைகளை வழங்கி, நில உட்பிரிவுச் சிதறல்களினால் ஏற்படும் தீமைகளையும் அகற்றும் எனவும் இந்திய துறையின் மறு வேளாண்மைத் மலர்ச்சிக்குக் கூட்டுறவுப் பண்ணையே சிறந்தது எனவும் அரசின் வேளாண்மைக் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். பொருளாதார இழப்பில் ஆதாயமின்றிப் பயிரிடப்படும் நில அளவுகளைக் கொண்ட வேளாண்மையினரை அவற்றிலிருந்து விடுவித்துப் பிற தொழிலுக்கு மாற்றுதல் தேவையான நடவடிக்கையாகும். ஊரக மக்கள் நிலத்தை மட்டுமே பிழைப்புக்கான தொழிலாகக் கொண்டு வாழாமல் பிற தொழில்களில் ஈடுபடும் வகையில் ஊரகங்களில் தொழிற் புரட்சி ஏற்பட வேண்டும். கைவினைத் தொழில்களைப் புதுமைப்படுத்துதல், விரிவாக்குதல், சிறிய தொழிற்சாலைகளை அமைத்தல், கோழிப்பண்ணை, தேனீ வளர்ப்புப் போன்றவற்றை அமைத்தல் முதலியன நிலத்தின் மேல் மட்டும் அழுத்தும் மக்கள் பெருக்கத்தைப் (Pressure of Population on Land) பரவலாக்கி, நில உட்பிரிவையும் சிதறலையும் தவிர்க்க உதவும். இந்திய வாரிசுச் சட்ட முறைப்படி நிலம் துண்டாடப்படுவதை மாற்றி ஒரு குறிப்பிட்ட வரையறைக்குக் கீழ் நிலம் மேலும் பிரிக்கப்படலாகாது எனச் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம். ஆதாயமின்றி இழப்பைத் தரும் சிறிய பண்ணைகளில் பயிர் செய்வது சட்டத்துக்குப் புறம்பானது (Illegal) எனச் சட்டம் இயற்றிச் செயற்படுவதும் நன்மை பயக்கும். இத்தகைய சட்டமுறைப்படியான நடவடிக்கைகள் முன்னமே அசாம், பீகார், குசராத்து, மத்திய பிரதேசம், மகாராட்டிரம், ஒரிசா, பஞ்சாபு, இராசசுத்தான், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா ஆகிய வட இந்திய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் நடைமுறையில் உள்ளன. உலக நாடுகளின் பண்ணை நில அளவுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தாலும் இந்தியாவில் பயிரிடும் நில அளவுகள் மிகச் சிறியவை என்பதை அறியலாம். சப்பான் (Japan) நாட்டில் இந்தியப் பண்ணை அளவுகளையும் விடச் சிறிய அளவு நிலத் துண்டுகளில் பயிரிடுகின்றனர். எனினும், சப்பானியர் (Japanese) திறமைமிக்க தொழில்நுட்ப அறிவாலும் உழைப்பாலும் செறிந்த பண்ணை முறையின் (Intensive Farming) மூலமும் புதிய இரசாயன எந்திரச் சாகுபடி முறைகளைப் பின்பற்றியும் உற்பத்தியைப் பெருக்குகின்றனர். இவற்றிலிருந்து வேளாண்மையினரின் வருவாயைப் பெருக்கவும். மொத்த உற்பத்தியைப் பெருக்கவும் உழவனின் ஆக்கத்திறனும் நிலத்தின் உற்பத்தித் திறனும் உயர வேண்டும் என்பது அறியப்படுகிறது. குறை உற்பத்திக்குப் பயிரிடும் நில அளவுகள் மட்டுமே காரணம் எனக் கூற இயலாது. வேளாண்மையினரின் தொழில்நுட்ப அறிவு பொதுக் கல்வி, திறமை, இரசாயனம், எத்திரக் கருவிகள், மின்சார ஆற்றல் போன்றவற்றைப் பயன்படுத்தத்தக்க வசதிகள், முதலீடு ஆகியன வேளாண்மை வளர்ச்சிக்கு இன்றியமையாக் அட்டவணை – 2 (Hectares) காரணிகளாகும். இவை பெருகினால் சிறிய துண்டு நிலங்களைக் கொண்டும் இந்தியா பசுமைப் புரட்சியில் வெற்றி காண இயலும்.