அக்கோலா என்னும் ஊர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ளது. பேரார் (Berar) என்னும் பகுதியில், மூர்னா ஆற்றங்கரையில் தபதி ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்நகரம் அமைந்துள்ளது. அக்கோலா (Akola) நகர் அக்கோலா மாவட்டத்தின் ஆட்சித் தலைநகராகும். மேற்கில் பட்டூர் என்னும் ஊரிலிருந்து கிழக்கில் நந்தா என்னும் ஊர் வரை சற்றேறக்குறைய 80 கி.மீ. தொலைவிலும், பூர்ணா ஆற்றின் இருமருங்கிலும் 16 கி.மீ. அகலத்திற்கு உப்புக் கிணறுகள் உள்ளன. தகிகண்டா என்னும் ஊருக்கருகிலுள்ள உப்புக் கிணறுகள் தலைசிறந்தவை. அக்கோலா மாவட்டத்தின் மீது கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவரான மாலிக் காபூர் என்பார் படையெடுத்து அதைக் கைப்பற்றினார். அங்கு முகமதியரின் ஆட்சி நிலைநாட்டப்பட்டது. இம்மாவட்டத்தை இறுதியாக ஆண்ட இந்து அரசர் தேவகிரியைத் தலைநகராகக் கொண்டார். அவர் கி.பி. 1319–ஆம் ஆண்டில் உயிருடன் தோலுரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். அக்கோலா கரிசல் மண் நிலப்பகுதியாய் இருப்பதால் இங்குப் பருத்தி நன்கு வினைகிறது. பருத்தி நூல் நூற்றல், பஞ்சு வாணிகம், சிகரெட்டு உற்பத்தி போன்றவற்றின் மையமாகவும் இவ்வூர் திகழ்கிறது. பஞ்சாலைகளும் தாவர எண்ணெய்த் தொழில்களும் இங்குச் சிறப்பாக நடைபெறுகின்றன. இங்குப் பல கல்விக் கூடங்களும் ஐந்து கல்லூரிகளும் இயங்குகின்றன. பம்பாய் மாநகரையும் நாகபுரியையும் இணைக்கும் இருப்புப்பாதைத் தொடர் அக்கோலாவின் வழியாகச் செல்கிறது. அக்கோலா மாவட்டம் 10,598 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டத்தின் வடபகுதியின் குறுக்காகத் தபதி ஆறு பாய்கிறது. வடக்கில் சாத்பூரா மலைத்தொடரும், தெற்கில் அசந்தாக் குன்றுகளும் இம்மாவட்டத்தின் எல்லைகளாம். கோதாவரி ஆற்றின் துணையாறுகளில் ஒன்றான பெணுகங்கை இம்மாவட்டத்தின் தெற்கில் பாய்வதால், இப்பகுதி நீர்ப்பாசன வசதியைப் பெற்றுள்ளது. இங்குள்ள மண்வகை செழிப்பானது. இங்குச் சுண்ணாம்புக்கல் படிவங்கள் சிறப்பாகப் படிந்துள்ளன. நெல், பருத்தி, கோதுமை, தினைவகைகள், வேர்க்கடலை போன்றவை சிறப்பான விளைபொருள்கள். இங்கு வளர்ந்துவரும் தொழிற்சாலைகள் வேளாண்மைத் தொழிலுக்கு உதவுகின்றன. பராசு என்னுமிடத்தில் அனல்மின் நிலையம் உள்ளது. சிர்பூரிலுள்ள சமணக் கோயிலும், நர்லாலாவிலுள்ள இசுலாமியர் கோட்டையும் சுற்றுலா மையங்களாகும். அக்கோலா என்னும் ஊரின் மக்கள் தொகை 1981-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 2,25,402 ஆகும்.