இது குக்குலிபார்மிஸ் வரிசையில், குக்குலிடே குடும்பத்தைச் சேர்ந்த குயில், கோகிலம், குசில் ஆகியவற்றோடு நெருங்கிய உறவுடையது. அண்டங் காக்கை அளவுள்ள செண்பகத்தின் உடல், கருப்பாகவும், இறக்கைகள் செம்பழுப்பாகவும் இருக்கும். காக்கையின் வாலை விடக் கறுத்து, நீண்ட வாலைக் கொண்டது. முழு வளர்ச்சி பெறாத பறவைகளின் உடல், ஆழ்ந்த செம்பழுப்புக் குறுக்குக் கோடுகளைக் கொண்டும், இறக்கைகள் பளபளக்கும் செம்பழுப்புக் கோடுகளைக் கொண்டுமிருக்கும். பெண், ஆணை விடக் குறிப்பிடத் தக்க வகையில், உருவில் பெரியது. தனித்தும், இணையாகவும் தரையில் புதர்களிடையே தாவித் திரிந்து, இரை தேடும். அப்போது, வாலை உடலோடு நேராக இருக்கும் படி வைத்துக் கொண்டு, அடிக்கடி விரித்து மடக்கும். சில சமயம், இறக்கைகளை விரித்துத் தலை வரை முக்காடிட்டது போல நீட்டுவது, தப்பிச் செல்லப் பார்க்கும் இரையைத் தப்ப விடாமல் மடக்க மேற்கொள்ளும் செயலாகக் கருதப் படுகிறது. நன்கு நடக்கவும் ஓடவும் வல்ல இது பறக்கும் ஆற்றல் திறனுடையதன்று; கிளைக்குக் கிளை தாவி அமர்ந்து, இரை தேடும். இது ஆள் அரவம் கேட்டவுடன், புதர்களிடையே தாவி அமர்ந்து, மறையும். பல்லி, பாம்பு, பூச்சி, புழுக்கள், வெட்டுக் கிளி, தவளை, மட்கி அழுகிய மீன், சுண்டெலி முதலிய பலவற்றையும் உணவாக்கும். உரக்க, பெருங்குரலில் 'கூப்… கூப்… கூப்…’ எனத் தொடர்ந்து ஆறேழு முறை கத்தும். இது போலச் சில போது, இருபது, முப்பது முறை கூடத் தொடர்ந்து குரல் கொடுப்பதுண்டு. இவ்வாறு ஒரு பறவை குரல் கொடுக்கும் போது, அதன் துணை அதற்கு எதிர்க் குரல் கொடுக்கக் கேட்கலாம். குயிலினத்ததாயினும், கூடு கட்டி முட்டையிடும் பழக்கம் உடையது. தென்னிந்தியாவில், நவம்பர்–மேயில் பந்து வடிவிலான கூட்டை, புல், இலை, தழை ஆகியன கொண்டு, கொடிகள் படர்ந்துள்ள மூங்கில் மற்றும் முட்செடி, முள் மரங்களிடையே தரையிலிருந்து சற்றே உயரக் கட்டி, 3 அல்லது 4 நீண்ட கூம்பு வடிவ மங்கிய வெண்ணிற முட்டைகளிட்டு ஆணும் பெண்ணுமாக அடை காக்கின்றன. இதன் இறைச்சி, மூச்சிரைப்பு, எலும்புருக்கி நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மையுடையது எனக் கூறப் படுகிறது. மேலும், இது கூடு கட்டும் போது, மிக அரிதான ஒரு வகைப் புல் அல்லது வேரைக் கொண்டு வந்து சேர்க்கிறது எனவும், அது மந்திர ஆற்றல் வாய்க்கப் பெற்றது எனவும், நோய் தீர்க்கும் தன்மையுடையது எனவும், நம்பும் மக்கள் உண்டு. அதன் புல்லையோ, வேரையோ பிரித்து எடுத்து, கூட்டினை ஓடும் நீரில் பிரித்து விட்டால், அந்த மூலிகை நீரினை எதிர்த்துச் செல்லும் எனவும் நாட்டுப்புற மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.