பாதிப் பெண் உருவம் கொண்ட சிவபெருமான், இவர் தான் ஒரு பாதியாகவும் பார்வதி மற்றொரு பாதியாகவும் இலங்குபவர். ஆணும் பெண்ணும் இணைதல் என்னும் சமய உண்மையைக் கூற அர்த்தநாரீசுவரராகக் காட்சியளிக்கிறார். அர்த்தநாரீசுவரர் என்னும் வடசொல்லுக்கு ஆண் பாதி, பெண் பாதியுமான இறைவன் என்பது பொருள். புராணங்கள் அர்த்தநாரீசுவரர் தோற்றம் பற்றிக் கூறுகிள்றன. உலகில் மானிட இனங்களைத் தோற்றுவிக்கப் படைப்புக் கடவுளான பிரமன், பிரசாபதிகள் என்னும் ஆண் இனத்தைத் தோற்றுவித்து, மானிட இனங்களை உலகில் ஏற்படுத்தும்படி கட்டளையிட்டான். அவர்களால் அக்கட்டளையை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் பெரிதும் குழப்பமடைந்த பிரமன், சிவனை வழிபட்டு இனப்பெருக்கம் ஏற்பட வழிவகுக்கும்படி அவரிடம் வேண்டினான். சிவன் அர்த்தநாரீசுவரர் உருவம் கொண்டு பிரமனுக்குக் காட்சியளித்தார். அர்த்தநாரீசுவரர் உருவத்தைக் கண்ட பிரமன் தன் தவற்றினை உணர்ந்து, இனப்பெருக்கம் உலகில் தோன்ற, பெண்களும் இன்றியமையாதவர்கள் என்பதையும், ஆணும் பெண்ணும் இணைந்தே அதனைச் செய்தல் முடியும் என்னும் உண்மையினையும் அறிந்தான். அர்த்தநாரீசுவரர் அர்த்தநாரீசுவரர் பற்றி மற்தொரு கதையும் நிலவுகிறது. பிருங்கி முனிவர் என்பவர் சிவனிடம் மிகுந்த பத்தி பூண்டவர். சிவன் கைலாய மலையில் தம் துணைவியான பார்வதியுடன் அமர்ந்திருக்கையில் பிருங்கி முனிவர் சிவனை மட்டும் நாடோறும் வலம் வந்து வணங்கி வந்தார். இவ்வாறு சிவனை மட்டும் வலம் வந்து வழிப்பட்டுச் சென்ற பிருங்கி முனிவரின் மீது பார்வதி சினங் கொண்டு, பிருங்கியின் உடலில் தசைகளும் குருதியும் அற்றுப் போகும்படி சாபமிட்டாள். இதனால் பிருங்கி முனிவர் ஓர் எலும்புக்கூடு போலானார். நிற்கவும் முடியாமல் இருந்த பிருங்கியின் நிலையினைக் கண்ட சிவன் மனமிரங்கி, அவருக்கு மூன்றாவது காலை வழங்கினார். இதனால் பெருமகிழ்ச்சியுற்ற பிருங்கி முனிவர் சிவன் தம்பால் காட்டிய பரிவை நினைத்து, மூன்று கால்களால் நடனம் ஆடினார். மேலும் பிருங்கி முனிவர் தமது வழிபாட்டு நிலையில் சிறிதும் மாறாது பார்வதியை வணங்காமல் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். இதனால் மேலும் சினங் கொண்ட பார்வதி சிவனைக் குறித்து நோன்பு நோற்று, அவரிடமிருந்து ஒரு வரத்தினைப் பெற்றாள். அவ்வரத்தின்படி சிவனுடைய இடப்பாகம் முழுவதிலும் பார்வதி இடம் பெற்றதால், சிவனும் பார்வதியும் இணைந்த நிலை ஏற்பட்டது. இதனைக் கண்ட பிருங்கி முனிவர் மனம் தளராது சிவனை மட்டும் வழிபட ஒரு வண்டுருவம் எடுத்து, சிவன் பார்வதி இணைந்த உடலினைத் துளைத்து வலம் வந்து, சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். இம்முனிவரின் சிவபக்தியைக் கண்ட பார்வதி அவரைப் பாராட்டி அவருக்கு அருள் செய்தாள். இவ்விணைந்த உருவமே அர்த்தநாரீசுவரர் எனப்பட்டது. சிற்பங்களில் அர்த்தநாரீசுவரரின் வலப்பாகம் சிவனுடைய சிறப்புக் கூறுகளைப் பெற்றும், இடப்பாகம் பார்வதியின் சிறப்புக் கூறுகளைப் பெற்றும் இலங்கும். பாதி ஆணும் பாதி பெண்ணும் இணைந்தது போன்று இச்சிற்பங்கள் காணப்படும். வலப்பக்க ஆண்தலையில் சடை முடியும் பிறைமதியும், வலக் காதில் மகரகுண்டலம் அல்லது பாம்புக் குண்டலமும் காட்சியளிக்கும். நெற்றிக் கண்ணில் பாதி, அர்த்தநாரீசுவரரின் வலப்பக்க நெற்றியில் காணப்படும். வலப்பக்கம் ஆணின் மார்பினைக் கொண்டு விளங்கும். வலப்பக்கம் முழுவதும் திருநீறு பூசப்பட்டு, இடை புலித்தோலாடையுடன் விளங்கும். பாம்பாலான பூணூல் வலப்பக்க மார்பில் காணப்படும். வலப்பக்கம் முழுமையும் ஆண்மைக்கே உரித்தான அமைப்புகளைப் பெற்று அச்சத்தைத் தருவதைப் போன்று காணப்படும். அர்த்தநாரீசுவரர் வலக்காலைச் சிறிது வளைத்து நின்றுகொண்டிருப்பார். இடப்பாகம் பெண்மைக்கு உரித்தான அழகினையும் பொலிவினையும் பெற்று, பார்வதியின் சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும். இப்பக்கத்துத் தலையில் கரண்ட மகுடமும், நன்றாகச் சீவப்பட்டு ஒரு கயிற்றினால் கட்டப்பட்ட தலைமுடியும் காட்சியளிக்கும். இடப்பக்கக் காதுகளில் ‘வாலிகா’ என்னும் குண்டலம் இருக்கும். இடக்கண்ணில் மை பூசப்பட்டிருக்கும். இடப்பக்க நெற்றியில் பொட்டிடப்பட்டிருக்கும். இடப்பக்கக் கைகளில் பெண்களணியும் வளையல்களும் விளங்கும். இடப்பக்கம் பெண்ணின் உருண்டு திரண்ட பருத்த மார்பினைக் கொண்டு விளங்கும். இடப்பக்கக் கழுத்தில் பெண்கள் அணியும் கழுத்தணிகள் இருக்கும். பெண்கள் அணியும் வெண்மையான ஆடை இடப்பக்க இடையில் திகழும். இடப்பக்கக்கணுக்கால் சிலம்புடனும் பாதம் மருதாணியிட்ட சிவப்புடனும் காட்சியளிக்கும். பெண்மை உறுப்புகளைப் பெற்ற இடப்பக்கம் முழுமையும், கருநிறம் அல்லது கிளிப்பச்சை நிறங்கொண்டு விளங்கும். அர்த்தநாரீசுவரருக்கு அருகில் நந்தி காணப்படும். அர்த்தநாரீசுவரரின் சிற்பங்கள் நான்கு, மூன்று அல்லது இரண்டு கைகளைப் பெற்றுக் காணப்படுகின்றன. நான்கு கைகள் உள்ள அர்த்தநாரீசுவரரின் வலக் கைகளுள் ஒன்று மழு அல்லது குலத்தையும், மற்றொன்று வரத முத்திரை அல்லது அபய முத்திரையையும் கொண்டிருக்கும். இடப்பக்கக் கைகளுள் ஒன்று சிறிது வளைந்து சென்று நந்தியின் தலையினைத் தொட்டுக் கொண்டிருக்கும். மற்றொரு கை காடக முத்திரையுடன் நீலோற்பலம் எனும் மலரினைப் பெற்றிருக்கும். நான்கு கைகளுடைய அர்த்தநாரீசுவரரின் சிற்பம் பாதாமியில் உள்ள குடைவறைக் கோயிலிலும் மாமல்லபுரத்தில் உள்ள தருமராசா இரதக்கோயிலிலும் உள்ளன. சென்னை அருங்காட்சியகத்தில் காணப்படும் அர்த்தநாரீசுவரரின் வெண்கலச்சிலை, நான்கு கைகளைக் கொண்டது. மூன்று கைகள் உள்ள அர்த்தநாரீசுவரரின் இரண்டு கைகள் வலப்பக்கமும், ஒரு கை இடப்பக்கமும் காணப்படும். வலப்பக்கக் கைகளில் சூலமும், அட்சமாலையும், இடப்பக்கக் கையில் மலர் அல்லது கண்ணாடி அல்லது கிளியும் இருக்கும். கும்பகோணத்திலுள்ள நாகேசுவர சுவாமி கோயிலின் அர்த்தநாரீசுவரரின் சிற்பமும், காஞ்சிக் கைலாசநாதர் கோயிலிலுள்ள அர்த்தநாரீசுவரரின் சிற்பமும் மூன்று கைகளையுடைய சிற்பங்களாகும். இரு கைகளுடனும் அர்த்தநாரீசுவரர் காணப்படுவார். அவ்வுருவச் சிலையின் வலப்பக்கக் கை வரதமுத்திரை அல்லது கபாலம் என்னும் மண்டை ஓட்டைக் கொண்டு விளங்கும். இடப்பக்கக் கை, கீழ் நோக்கி வளைந்து நந்தியின் தலையினைத் தொடுவது போல் அமைந்திருக்கும். மூன்று தலைகளையும், எட்டுக் கைகளையும் கொண்ட அர்த்தநாரீசுவரரின் உருவம் பாதாமியில் உள்ள கற்பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. துணை நூல்கள் Gopinatha Rao, T.A., “Elements of Hindu Iconography”, Vol. II – Part I, Indological Book House, Varanasi, 1974. Gupte, R.S., “Iconography of the Hindu & Buddhists and Jains”, Taraporevala Sons & Co., PVT, Ltd, Bombay, 1980.