உண்மை விளக்கம்
uṇmai viḷakkam
சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கனுள் ஒன்று.
சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கனுள் ஒன்று. மெய்ந்நூல்களில் விளக்கப்படுவன இறை, உயிர், தளை என்னும் முப்பொருள்களது உண்மையும் அவற்றது இயல்பும் சாதனமும் பயனும் என்னும் நான்குமேயாகும். ‘உண்மை விளக்கம்’ என்ற இந்தத் பெயரில் ‘உண்மை’ என்றது அந்நான்கினையும் குறிக்கும். அந்நான்கினையும் விளக்கிக் கூறுதலின், இந்நால் உண்மை விளக்கம் எனப் பெயர் பெற்றது.
இதன் ஆசிரியர் மனவாசகங்கடந்தார். இவர் சிவஞான போதத்தை அருளிய மெய்கண்ட தேவரின் மாணாக்கருள் ஒருவர்; திருவதிகையில் வாழ்ந்தவர். இவை தவிர இவரைப் பற்றிய பிற வரலாறு ஒன்னும் புலப்படவில்லை.
மெய்கண்டாரின் காலம் கி.பி. 13–ஆம் நூற்றாண்டு என்று கொள்ளப்படுதலின், அவர் மாணாக்கராகிய மனவாசகங் கடந்தார் வாழ்ந்த காலமும் அதுவே என்பது தெளிவு.
இந்நூல் வெண்பாவினால் ஆனது. காப்புச் செய்யுள் உட்பட 54 வெண்பாக்கள் இதில் உள்ளன. சிறப்புப் பாயிரம் ஒன்றும் உள்ளது. வினா விடை வடிவில் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. மேலான உண்மைகள் பற்றி மனவாசகங் கடந்தார் தம் குருமூர்த்தியாகிய மெய்கண்ட தேவரிடம் வினவ, அவர் விடை கூறும் முறையில் அமைந்துள்ளது. இந்நூலில் மாணாக்கர் கேட்கும் வினாக்கள் எட்டு. அவையாவன: 1) முப்பத்தாறு தத்துவங்கள் யாவை? 2) ஆணவ மலம் என்பது யாது? 3) கன்ம மலம் என்பது யாது? 4) இவற்றினின்றும் நீங்காத உயிரின் இயல்பு யாது? 5) இக்கட்டுகளினின்றும் நீங்கி உயிரை ஆட்கொள்ளும் இறைவனது இயல்பு யாது? 6) இறைவனது நடனத்தின் இயல்பு யாது? 7) திருவைந்தெழுத்தின் தன்மை யாது? 8) முத்தி நிலை யாது? 1, 2, 23, 27, 30, 39, 49, ஆகிய வெண்பாக்களில் மாணவர் தம் குருவாகிய முதல்வரிடம் கேட்கும் வினாக்கள் உள்ளன. ஏனையவற்றில் அருட்குருவின் விளக்கங்கள் உள்ளன. இறுதி வெண்பாவில் எல்லாவுண்மைகளையும் கேட்டுணர்ந்த மாணவர் ‘வாழ்ந்தேன் அருட் கடலே’ என்று தம் ஆசிரியர்க்கு நன்றி கூறும் முறையில் நூல் முடிவுறுகின்றது.
இச்சிறுநூல் சைவசித்தாந்தத்தை முறையாக அறியப் புகுவோர் முதலிற் பயிலுதற்குரிய அடிப்படைக் கருவி நூலாக அமைந்துள்ளது.
இந்நூல் ஆகமப் பொருள்களை எளிய முறையில் உணர்த்துகிறது. ‘வன்மை தரும் ஆகம நூல் வைத்த பொருள் வழுவா உண்மை விளக்கம்’ என்று சிறப்புப் பாயிரம் கூறுதல் காணலாம்.
நாதன் நடம் எனக் கூறப் பெறும் கூத்தப் பெருமானின் ஆடல் இயல்பை விளக்கியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். நடராச தத்துவத்தை இது போல் மிகச் சுருக்கி மிக விளக்கிய நூல் வேறில்லை எனலாம். ஆ.ஆ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 846)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tvayzwru/
தமிழ்“உண்மை விளக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tvayzwru/APA
Oliyon Research. (2026). உண்மை விளக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tvayzwru/MLA
"உண்மை விளக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tvayzwru/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment