இயற்கைக் காரணிகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளமையால், அவை அனைத்தும் தனித் தனியாகத் தாவரங்களைப் பாதிப்பதில்லை. சூழ்நிலையின் தூண்டுதலுக்கேற்ப, தாவரங்கள் எதிர் வினை புரிகின்றன. தாவரத்திலுள்ள உப்புச் சத்துகள், வெப்ப நிலை, உறிஞ்சும் தன்மை, ஈரம், ஒளி, மண்ணின் நயம் போன்ற பல காரணிகளைப்பொறுத்துத் தாவரத்தின் வினையியல் அமைகிறது. சூழ்நிலைக் காரணிகளின் தன்மை ஒரே அளவில் சமமாக அனைத்து இடங்களிலும் பாதிப்பதில்லை. சூழ்நிலையில் ஏற்படும் சிற்சல மாற்றங்களால், தாவர நாற்றுகளும், சிறு செடிகளும் பெருமளவில் பாதிப்படைகின்றன. தாவரங்களின் வாழ்க்கைக்குத் தேவையானவற்றின் அளவு, அவற்றின் வாழ்நாளில் ஒவ்வொரு நிலையிலும் மாறிக் கொண்டே செல்கிறது. விதை முளைத்தலுக்குத் தேவையான வெப்ப நிலையை விடக் குறைந்த வெப்ப நிலை, விதையுறக்கத்தைக் (dormancy) கலைக்கப் போதும். ஒரு காரணி மற்றொரு காரணியின் குறைபாட்டை ஈடு கட்டுகிறது. மண்ணின் வறட்சியால் (soil drought) ஏற்படும் விளைவு இவ்வாறு ஈடு செய்யப்படுகிறது. மேலும், காரணிகள், தனித் தனியாகத் தோற்றுவிக்கும் விளைவும், அவை ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் விளைவும் வேறுபடுகின்றன. உயிரின் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விதமான நிலை இருப்பதாலும், முக்கிய மூன்று நிலைகள் (cardinal points) என்னும் கோட்பாட்டாலும், சிக்கல்கள் ஏற்படுகின்றன. கட்டுப்படுத்தும் காரணியைக் (limiting factor) களைவதால், தாவர வளர்ச்சியைச் சீர் படுத்தலாம். லீபிக் விதிப்படி, சில நேரங்களில் ஏற்ற சூழ்நிலையில் அனைத்துக் காரணிகளின் முனைப்பும் பயனுடைய அளவிலேயே இருக்கும். உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத சூரிய ஒளி 750-400 மி. மைக்ரான்கள் அலை நீளமுள்ள ஒளிரும் ஆற்றலாக வருகிறது. ஒளிச் சேர்க்கைக்குத் தேவையான ஏறத்தாழ 50% ஆற்றல் இந்த அலை வரிசையில் உள்ளது. நிற மாலையின் அனைத்து ஒளி நிறங்களிலும், ஊதா, நீலம், ஆரஞ்சு, சிவப்பு நிறங்கள் ஒளிச் சேர்க்கைக்கும், ஊதா, நீல நிற ஓளி அலைகள் ஒளிச் சார்பு இயக்கத்தைத் (photropism) தூண்டுவதற்கும் பயன்படுகின்றன. அகச் சிவப்புக் கதிர் (infrared ray) தண்டின் வளர்ச்சியையும், விதை முளைத்தலையும் ஊக்குவிக்கிறது. சூரிய ஒளி, ஒளிச் சேர்க்கைக்கு இன்றியமையாதது. ஏறத்தாழ 1% ஒளி ஆற்றலே, ஓளிச் சேர்க்கைக்குப் பயன் படுத்தப்பட்டு எஞ்சியது வீணாகிறது. சில தாவரங்கள், சூரிய ஒளியை முழு அளவில் உட்கவர்ந்து, அதிக ஒளி அளவிலும் தொடர்ந்து ஒளிச் சேர்க்கையை நடத்துகின்றன. ஆனால், சில தாவரங்களில், அதிக அளவு சூரிய ஒளி, ஒளிச் சேர்க்கையை அதிகரிப்பதில்லை. அவை மேலும், குறைந்த உலர் எடையைக் கொண்டுள்ளன. இலைப் பரப்பும், இலை வளர்ச்சியும் சூரிய ஒளியின் அளவிற்குத் தக்கவாறு மாறுபடுகின்றன. சூரிய ஒளி நாட்டத் தாவரங்கள் (sun plants) குறைந்த இலைப் பரப்பு, அதிக உலர் எடை, தடித்த இலைகள், நீளமற்ற இலைக் காம்புகள் கொண்டிருக்கும். சூரிய ஓளி விதை முளைத்தலை விரைவுபடுத்தலாம் அல்லது தாமதப்படுத்தலாம். பூசணி வகைகள் இருளில்தான் முளைக்கும். ஒளியால் விதைகள் விரைவாக முளைப்பதை அல்லது முளைத்தல் தடைபடுவதை வெப்ப நிலை அல்லது ஆக்சிஜன், நைட்ரேட்டுகள், அமிலங்கள் ஆகியவற்றைக் கொடுப்பதால் மாற்ற முடியும். ஒளியின் கால அளவைப் பொறுத்துத் தாவர இனங்களில் பூத்தலையும், காய்த்தலையும் கட்டுப் படுத்தும் தன்மைக்கு: ஒளிக் காலத்துவம் (photo-periodism) எனப் பெயர். பகலில் ஒளியின் கால அளவு குறைவாக இருப்பின், குறை நாள் தாவரங்களில் (short day plants) சில வகை பூக்கின்றன. கோடையில் ஒளியின் கால அளவு மிகுதியாக உள்ளமையால், இந்தக் குறை நாள் தாவரங்கள் பூக்காமல், தண்டும் இலைப் பகுதிகளும் பெருத்துக் காணப்படுகின்றன. பகல் பொழுதின் அளவை விட (day length) இடை விடாத இருளே, குறை நாள் தாவரங்களுக்கு ஏற்றது. நீண்ட நாள் தாவரங்களுக்கு (long day plants) இரவில் சில மணி நேரம் செயற்கை ஒளி அளிப்பதால், பூக்கும் தன்மையை உண்டாக்கலாம். சிவப்பு நிற ஒளி சிறந்த ஒளிக் காலத்துவ விளைவுகளைத் தோற்றுவிக்கும். ஒளிக் கால அளவில் பூவா உறுப்புகளின் அளவு, உள்ளமைப்பு, கிளைத்தல், நிறக் கணிகங்கள், முளைத்தல், ஊட்டத் தேவை, வேதிச் சேர்க்கை முதலியவற்றைக் கட்டுப்படுத்தலாம். சில விதைகள் குறை நாள் அளவில் முளைக்கின்றன. இவ்வாறு, குறைந்த நாள் ஒளியைத் தாய்ச் செடிகளுக்குக் கொடுத்து, அவற்றிலிருந்து பெறப்படும் விதைகள் அவ்வாறே குறை நாள் ஒளியில் அதிக முளைப்புத் திறனைப் பெற்றிருக்கும். இருட்டுச் சூழ்நிலையில் (etiolation) வளரும் தாவரங்களின் கணுவிடைப் பகுதி (inter node) அதிகமாகவும், இலைப்பரப்புக் குன்றியும், பச்சையம் குறைந்து வெளிறியும் இருக்கும். இருட்டுச் சூழ்நிலையை அகற்றிச் சூரிய ஒளி படும்படிச் செய்யும் போது, செடிகள் நன்கு வளர்கின்றன. ஃபைட்டோகுரோம் என்னும் நிறமிகளே, இவ்வித மாற்றங்களுக்குக் காரணமாகும். இந்நிறமிகள் சிவப்பு நிற ஒளியில் பயன் தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நீண்ட நாள் ஒளி தண்டுப் பகுதி வளர்ச்சியையும், இலைப் பரப்பையும், அனைத்துத் தாவர வகைகளிலும் மிகுதிப் படுத்தும். தண்டின் ஓளிச் சார்பு இயக்கம் ஒளியின் நீல நிறக் கதிர்களாலும், புற ஊதாக் (ultraviolet) கதிர்களாலும், ஃபிளேவின் நிறமிகளாலும் ஏற்படுகின்றது. இதனால், தண்டில் பக்க (lateral) வளர்ச்சி ஏற்பட வாய்ப்பாகிறது. பருத்தி, சோயா மொச்சை, பீன்ஸ் போன்ற தாவரங்களின் இலைகள் சூரிய ஒளிக்கு நேர் செங்குத்தாக இருக்குமாறு தம்மை மாற்றிக் கொள்கின்றன. தாவரச் சுற்றுச் சூழல் வினையியலில் நில நீர் வறட்சி, உப்புத் தன்மையால் ஏற்படும் வறட்சி, குறைந்த வெப்ப நிலை வறட்சி போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. நில நீர்ப் பற்றாக் குறையால், வறட்சி ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் வளரும் தாவரங்களை வறட்சியினின்று தப்பித்துக் கொள்பவை, வறட்சியைத் தவிர்ப்பவை, வறட்சியைத் தாங்கிக் கொள்பவை, வறட்சியை எதிர்த்து நிற்பவை எனப் பிரிக்கலாம். குறை வாழ்வுடைய தாவரங்கள் (ephemerals) வளி மண்டலத்தின் வறட்சியைத் தாங்கும் ஆற்றல் பெற்றவை; ஆனால், மண்ணின் வறட்சியைத் தாங்க இயலாதவை. சதைப் பற்றுள்ள பகுதிகள் நீரைச் சேமிக்கவும், அவற்றிலுள்ள பால் (latex) நீரை எளிதில் ஆவியாக்கா வண்ணம் காக்கவும், செல்களின் சல்வூடு அழுத்தம் அதிகரிக்கவும் உதவும். மேலும், இலைப் பரப்புச் சிறுத்தும், மயிர்கள் மிகுந்தும் காணப்படும். புதைந்த இலைத் துளை அமைப்புப் போன்ற பல தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. நில நீர் வறட்சியால், சில கரிமப் பொருள்கள் அமினோ அமிலங்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன. வறட்சியால் புரத உற்பத்தி பாதிக்கப் பட்டுப் பல நொதிகள் தம் தன்மையை இழந்து விடுகின்றன. அப்சிசிக் அமிலம் என்னும் வளர்ச்சிப் பொருள் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு, இலைத் துளைகள் மூடப்பட்டு விடுகின்றன. வறட்சி காரணமாக, எத்திலீன் வளிமம் உண்டாக்கப்படுகிறது. இலை உதிர்தல், விளைச்சல் பாதிப்பு முதலியவை நீர் வறட்சியால் உண்டாகின்றன. நீரில் கரைந்துள்ள உப்புப் பொருள்கள் தாவரங்களின் வாழ்வைப் பாதிக்கின்றன. வேர்களின் நீர் உறிஞ்சும் தன்மை பாதிக்கப்பட்டுத் தாவரங்களின் வினையியல் மாற்றத்திற்குக் காரணமாகின்றன. உப்புத் தன்மை வளர்ச்சியைப் பாதித்து, தாவரங்களுக்குக் காணத்தையும், அழிவையும் ஏற்படுத்தும். வெப்ப நிலை மிகக் குறைந்தால், செல்களில் உள்ள புரதம் வீழ் படிவாகிறது. செல் இடைவெளியில் உள்ள நீர் உறைந்து, செல் அழிவை ஏற்படுத்தும். துருவப் பகுதிகளில் உள்ள தாவரங்களின் செல்சாறு (cell sap) அடர்வு மிகுந்து காணப்படுவதால், மிகத் தாழ்ந்த வெப்ப நிலையைத் தாங்கும் திறன் கொண்டுள்ளது. —கு. பத்மநாபன் நூலோதி. H.G.Jones, Plants and Microclimate, Cambridge University Press, Sydney, 1983; A.C.Leopold and P.E. Kriedemann, Plant Growth and Development, TMH Edition, New Delhi, 1980; B. Salisbury and W. Ross, Plant Pyhsiology, CBS Pubiishers, New Delhi, 1980.