இலாப்ரெடார்
ilāpreṭār
வட அமெரிக்கக் கண்டத்தில் கனடா நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ளதொரு முந்நீரகம்.
வட அமெரிக்கக் கண்டத்தில் கனடா நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ளதொரு முந்நீரகம். அட்லாண்டிக்குப் பெருங்கடலுக்கும் அட்சன் விரிகுடாவிற்கும் இடையில் அமைந்துள்ள இலாப்ரெடாரின் (Labrador) பரப்பு 13,00,000 ச.கி.மீ. இலாப்ரெடாரின் மேற்குப் பகுதி குயூபெக்கிற்குச் சொந்தமானது. இலாப்ரெடாரின் கிழக்குக் கடற்கரை நியூபௌண்டுலாந்தின் பகுதியாகும். இலாப்ரெடாரின் நியூபௌண்டுலாந்து பகுதியின் பரப்பு 2,92,218 ச.கி.மீ. ஆகும்.
பிரெஞ்சு மக்கள் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மென்மயிர் (Fur) கொண்ட விலங்குகளையும், கடற்கரையையொட்டியுள்ள பகுதிகளில் கிடைத்த மிகுதியான மீன்களையும் தேடி முதன் முதலில் இங்குக் குடியேறினர். இரும்புத்தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னர் கி.பி. 1895 இல் சுரங்கத் தொழில் மென்மயிர் வாணிகத்தை விடச் சிறப்பானதாகக் கருதப்பட்டது.
இலாப்ரெடார்க் கடற்கரை
இலாப்ரெடார் நீண்டதும் கடுமையானதுமான குளிர்காலத்தைக் கொண்ட நிலப்பகுதி. ஒவ்வோர் ஆண்டிலும் செப்டம்பர் மாதத்திலிருந்து அடுத்த சூன் மாதம் வரை நிலம் பனியால் மூடப்பட்டிருக்கும். இத்தகைய தட்பவெப்ப நிலை வேளாண்மைக்குப் பயன்படுவதில்லை. சிலவிடங்களில் காய்கறிகள் பயிராகின்றன. எனவே, இப்பகுதியில் வாழும் மக்கள் தமக்கு வேண்டிய உணவுப் பொருள்களைக் கனடாவின் பிற பகுதிகளிலிருந்து பெறுகிறார்கள்.
நிலம்
இலாப்ரெடார் பண்டைய பாறைகளாலான மேட்டுநிலத்தில் அமைந்துள்ளதெனலாம். அட்லாண்டிக்குக் கடலில் கலக்கும் ஆறுகள் இம்மேட்டு நிலத்தை அறுத்துப் பள்ளத்தாக்குகளை உருவாக்கியுள்ளன. இலாப்ரெடாரின் மிக நீண்ட சர்ச்சில் நீர்வீழ்ச்சியிலிருந்து நீர்மின் ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. தென்மேற்கு இலாப்ரெடாரின் பல பகுதிகளில் ஏரிகளைக் காணலாம். இதன் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் இலாப்ரெடாரில் மிக உயர்ந்த மலைத்தொடர்கள் உள்ளன. மாண்ட்டுடி இப்பர்விலி என்றும் மலையுச்சியே இதன் மிக உயர்ந்த பகுதியாகும். இது 1646 மீ. உயரமுள்ளது.
இலாப்ரெடாரைத் திட்டவட்டமாக இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பகுதியும் அதற்கென்ற சிறப்பான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. 1. கடற்கரை இலாப்ரெடார், 2. மேற்கு இலாப்ரெடார் என்பன அவ்விரு பகுதிகள்.
கடற்கரை இலாப்ரெடாரின் பொருளாதாரம் வளமான மீன் பிடித்தலையும் மென்மயிர் உடைய விலங்குகளை வேட்டையாடுதலையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேற்கு இலாப்ரெடார் மிகுதியான இரும்புத்தாதுக்களைக் கொண்டு விளங்கும் செல்வப் பகுதியாகும். கடுங்குளிரையும் தரையமைப்பையும் கொண்டுள்ள காரணத்தால் இரும்புத்தாதுக்களைக் கண்டுபிடிக்கும் பணி பல்லாண்டுகள் தடைப்பட்டிருந்தது. மேலும் குடியேற வந்தவர்களும் இங்குத் தங்க விழைந்தார்களில்லை.
இலாப்ரெடாரில் 88,100 ச.கி.மீ. பரப்பில் விலை மதிப்புமிக்க மரக்காடுகள் உள்ளன. இசுபூருசு, பால் சம்பர், பிர்ச்சு போன்றவை சிறப்பான காட்டு மரங்களாகும். எண்ணற்ற காட்டு விலங்குகளும் இப்பகுதியில் நடமாடுகின்றன. அட்லாண்டிக்குப் பெருங்கடலில் சால்மன், காடு, எச்சிங்கு, சீல், திரௌட்டு போன்ற மீன் வகைகளைக் கடற்கரையையொட்டியுள்ள கடல்களில் பிடிக்கிறார்கள். பருவந்- தோறும் குடிபெயர்கின்ற பல பறவையினங்கள் ஆண்டுதோறும் இலாப்ரெடாருக்கு வருகின்றன.
தட்பவெப்பம்
தட்பவெப்பநிலை பற்றிய விவரங்கள் கடற்கரைப் பகுதியிலிருந்தே கிடைக்கின்றன. ஏனெனில், உள்நாட்டில் வாழும் மக்கள் மிகமிகக் குறைவாகவே உள்ளனர். ஆண்டுமுழுதும் இலாப்ரெடாரில் பனி உறையும் குளிர்ச்சியைக் காணலாம். உள்நாட்டுப் பகுதிகளும், வட கடற்கரைப் பகுதிகளும் கடும் குளிருக்குப் பெயர் பெற்றவை. கோடைக்காலத்தில் ஆர்க்டிக்குப் பெருங்கடல் பகுதியிலிருந்து வீசும் பனிக்காற்றினால் கடற்கரைப் பகுதியிலும் கடுங்குளிர் வீசுகிறது. அப்போது உள்நாட்டுப்பகுதி வெதுவெதுப்பாகவிருக்கும்.
இலாப்ரெடாரில் உருகும் பனியையும் உள்ளிட்டு ஆண்டொன்றுக்கு 76 செ.மீ. மழை பொழிகிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 380 செ.மீ. பனிமழை பொழிகிறது. கடற்கரையில் புயல்கள் வீசுவதுமுண்டு.
மக்கள்
இலாப்ரெடாரின் மக்கள்தொகை 33,052 (1976). இவ்வூர்களில் செவ்விந்தியர்களும் எசுகிமோக்களும் பத்து விழுக்காட்டினர். எஞ்சிய பெரும்பாலோர் குடியேறிய வெள்ளையர். அவர்கள் மேற்கில் சுரங்கத் தொழிலாளர்களாகவும், மீன்பிடிக்கும் செம்படவர்களாகவும் வாழ்கிறார்கள்.
இலாப்ரெடாரில் அட்லாண்டிக்குச் சால்மன், எர்ரிங்கு, திரௌட்டுப் போன்ற மீன்களும், சீல் என்னும் கடல் நாயும் மிகுதியாகக் கிடைக்கின்றன. காடு என்னும் மீன் பெருமளவில் கிடைப்பதால் அதன்மூலம் மிகுதியான வருமானம் கிடைக்கிறது. மீன்பிடிக்கும் பருவம் சூன் மாதத்தில் தொடங்கிச் செப்டம்பரில் முடிவுறும். மென்மயிர் எடுத்தல் பன்னெடுங்காலம் சிறப்பான தொழிலாக இருந்தது. ஆனால், 20–ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இத்தொழில் பெரிதும் நலிவடைந்துவிட்டது. கூசு விரிகுடாவைச் சுற்றியுள்ள பகுதியிலும், பெல்லித் தீவு நீர்ப்பிரிவையொட்டியுள்ள இடங்களிலும் உருளைக்கிழங்கு, முட்டைக்கோசு, பீட்கிழங்கு, தர்னிப்புப் போன்றவை உற்பத்தியாகின்றன.
இலாப்ரெடாரின் மேற்குமூலையில் நீண்ட குறுகலான பள்ளம் ஒன்றுள்ளது. இது இரும்புத் தாதுக்களுக்குப் பெயர் பெற்றது.
இலாப்ரெடார் மாநகர், ‘ஏப்பிவேலி’ (Happy valley), வாபுசு (Wabush), சர்ச்சில் நீர்வீழ்ச்சி வடமேற்கு ஆற்றுப்பகுதி போன்ற இடங்களில் மக்கள் நெருக்கம் மிகுதி.
வரலாறு
வைகிங்குக்கடல் ஆய்வாளர்கள் கி.பி. 950க்கும் 1050க்கும் இடையில் இலாப்ரெடாருக்கு முதன்முதலாக வந்தார்கள். இங்கிலாந்து நாட்டிற்குத் தொண்டு செய்ய வந்த இத்தாலியரான சான் காபட்டு (John Cobat) என்பார் 1500 ஆண்டுக்கு முன்னர் இலாப்ரெடாருக்கு வந்தார்.
எககிமோக்களும் செவ்விந்தியர்களுமே கி.பி. 1700–ஆம் ஆண்டு வரை இங்கு வாழ்ந்து வந்தனர். இலாப்ரெடாரில் முதன்முதலாகக் குடியேறிய வெள்ளையர்கள் பிரான்சிலிருந்து வந்தவர்களே. அவர்கள் மென் மயிரின் பொருட்டும், சீல் என்னும் கடல்நாய்களை வேட்டையாடவும் வந்தார்கள். பிரிட்டன் கி.பி. 1759–இல் இலாப்ரெடாரைப் பிரெஞ்சியரிடமிருந்து கைப்பற்றிக் கொண்டது. ஆங்கிலேயர் கி.பி. 18–ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் குடியேறி நிலையான வீடுகளைக் கட்டிக் கொண்டனர். அட்சன் விரிகுடா வணிகக்குழு கி.பி. 1840–ஆம் ஆண்டளவில் இணைப்ரெடாரின் உட்பகுதிகளைக் கண்டறிய முயன்றது.
வில்பிரடு டி. கிரென்பெல் என்னும் கிறித்தவப் பாதிரியார் கி.பி. 1892–ஆம் ஆண்டில் ஆங்கில மருத்துவராக வந்தபோது, இலாப்ரெடாரின் வாழ்ந்தவர்கன் பெரும் தொல்லைக்காளாகியிருந்தனர். மருத்துவப் பாதிரியார் இம்மக்களின் தொல்லைகளை வெளியுலகுக்கு எடுத்துக் கூறி, மருத்துவமனைகள், பள்ளிகள், திருச்சபைக் குழுக்கள் போன்றவற்றை அமைக்கப் பெரும் பொருள் திரட்டினார்.
நியூபௌண்டுலாந்தும் குயூபெக்கும் இலாப்ரெடாரைச் சொந்தம் கொண்டாடிப் போரிட்டுக் கொண்டன. ஆங்கிலப் பிரிவுக் கவுன்சில் 1927–இல் இன்றைய எல்லைகளை நியூபௌண்டுலாந்துக்குச் சாதகமாகப் பரிந்துரைத்தது.
இரண்டாம் உலகப் பெரும்போரின்போது அமெரிக்க ஐக்கிய நாடுகள் இங்கிலாந்துடன் உடன்படிக்கை செய்து கொண்டு, இலாப்ரெடாரைப் போர்த் தளமாக்கியது, நியூபௌண்டுலாந்து 1949–இல் கனடாவின் மாநிலங்களில் ஒன்றாக்கப்பட்டது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 368)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tsq5tn5f/
தமிழ்“இலாப்ரெடார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tsq5tn5f/APA
Oliyon Research. (2026). இலாப்ரெடார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tsq5tn5f/MLA
"இலாப்ரெடார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tsq5tn5f/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment