நெல்லூர் ஆடு
nellūr āṭu
இந்தியாவில் இப்போது 37 இனச் செம்மறி ஆடுகள் உள்ளன.
இந்தியாவில் இப்போது 37 இனச் செம்மறி ஆடுகள் உள்ளன. இவற்றில் ஓர் இனம், நெல்லூர் ஆடு ஆகும். ஓர் இனம் என்பது குறிப்பிட்ட பகுதியில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய வெளித் தோற்றத்தையும், இயல்பையும் பெற்றிருக்கும். செம்மறி ஆட்டைக் கம்பள இன ஆடு, இறைச்சி இன ஆடு எனப் பிரிக்கலாம். இவற்றுள் நெல்லூர் ஆடு இறைச்சி இனத்தைச் சார்ந்தது.
நெல்லூர் ஆடு ஆந்திர மாநிலத்திலுள்ள நெல்லூர் மாவட்டத்தில் காணப் படுகிறது. இந்தியாவில் காணப் படும் செம்மறி ஆடுகளில், நெல்லூர் ஆடு மிக உயரமும், உடல் எடையும் கொண்டது. இதன் கொம்புகள் பின்னோக்கி வளைந்து காணப் படும். பொதுவாக, இரண்டு வளைவுகள் காணப் படும். நெல்லூர் ஆட்டுக்கு நீண்ட முகமும், நீளமான காதுகளும் உண்டு. தாடி அல்லது மணி என்று கூறப் படும் சிறிய உறுப்புகள், வெள்ளாடுகளின் கழுத்தின் கீழ்ப் புறம் காணப்படும். இவை செம்மறியாடுகளில் காணப் படா. ஆனால் நெல்லூர் இன ஆடுகளில் இவை காணப் படும்.
பாலா நெல்லூர் இனம். இது வெண்மை நிறத்தில் இருக்கும். சில சமயம், வெண்மை நிறத்தில், பழுப்பு நிறத் திட்டுகளுடன் காணப் படும். பெரும்பாலும், இந்தத் திட்டு தலை, கழுத்து, முதுகு, கால் ஆகிய இடங்களில் காணப் படும்.
ஜோடிப் பூ அல்லது ஜோடிப் பூ நெல்லூர் இனம். இது வெண்மை நிறத்தில், கறுப்புப் புள்ளிகளோடு காணப் படும். இப்புள்ளி பெரும்பாலும் வாயைச் சுற்றிலும், கால், கீழ்த் தாடைகளிலும் காணப் படும். சில ஆடுகளில், இப்புள்ளிகள் வயிற்றுப் பகுதிகளில் காணப் படும்.
டேரா நெல்லூர் ஆடு. இது பழுப்பு நிறத்தில் காணப் படும். நெல்லூர் மாவட்டத்திலும், அதைச் சுற்றியுள்ள பிரகாசம், ஓங்கோல், கடப்பா, குண்டூர், நலங்கொண்டா மாவட்டங்களிலும் மிகுதியாகக் காணப் படுகிறது.
பருவமடைந்த நெல்லூர் ஆண், பெண் ஆடுகள் முறையே 30 கி.கி., 40 கி. கி. உடல் எடை இருக்கும். உடலின் நீளம் முறையே 68 செ.மீ., 67 செ. மீட்டரும், உயரம் முறையே 76 செ.மீ., 72 செ. மீட்டரும், மார்புச் சுற்றளவு முறையே 75 செ.மீ., 72 செ.மீட்டரும் இருக்கும்.
நெல்லூர் ஆட்டின் தோலில் முடி குறைவாகவே இருக்கும். மார்பும், கழுத்தின் கீழ்ப் புறமும் சந்திக்கும் இடத்திலும், கழுத்திற்கு மேற்புறமும், தொடையின் பின் புறமும், முடி மிகுந்து காணப்படும். கொம்புகள் ஆண் ஆடுகளில் மட்டும் காணப் படும். பெண் ஆடுகளுக்குக் கொம்புகள் கிடையா. இதன் காது 15.செ.மீ. நீண்டு தொங்கும். வால் மிகவும் மெலிந்து, 10 செ.மீ. அளவில் சிறிதாகக் காணப் படும். மணி அல்லது தாடி பெரும்பாலான நெல்லூர் ஆடுகளில் காணப் படும்.
நெல்லூர் ஆடு 20–23 மாத வயதில் பருவமடைந்து, முதல் குட்டியை 28 மாத வயதில் ஈனுகிறது. பொதுவாக, ஒரு முறை ஒரு குட்டி மட்டுமே ஈனும். குட்டி ஈன்ற பிறகு, அடுத்த குட்டி ஈனுவதற்கு ஏறத்தாழ 428 நாள்கள் ஆகும்.
இறப்பு. பொதுவாகப் பல காரணங்களினால், 14% குட்டிகள் 3 மாத வயதிற்குள் இறந்து விடுகின்றன. 4% குட்டிகள் 3–12 மாத வயதில் மடிந்து விடுகின்றன.
உடல் எடை. பிறந்த குட்டியின் எடை ஏறத் தாழ 2.5 கி.கி. இருக்கும். மூன்று மாத வயதில், 12 கி.கி. எடையும், 6 மாத வயதில், 16 கி.கி. எடையும், 12 மாத வயதில், 23 கி.கி. எடையும் இருக்கும். —மு. சேகர்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 212)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tsebnfrc/
தமிழ்“நெல்லூர் ஆடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tsebnfrc/APA
Oliyon Research. (2026). நெல்லூர் ஆடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tsebnfrc/MLA
"நெல்லூர் ஆடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tsebnfrc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment