ஐரோப்பாவில் நன்கு புகழ்பெற்றிருந்த சப்பானின் முதல் கலைஞர். இவர் கி.பி. 1753–இல் பிறந்தார்; எதோ (Eto) என்று முன்பு குறிக்கப்பட்ட தோக்கியோ (Tokyo) நகரத்தில் வாழ்ந்தார். இவர் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கண்கவர் பொம்மைகள், வண்ண ஓவியங்கள், நூல்களில் காணப்படும் எழில் மிக்க ஓவியங்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் திறமை பெற்றவர். இக்கலைப் படைப்புகள் இவரது பெயரால் சப்பானியப் பாணியில் (Style) ‘கிதாகவா உட்டாமரோ’ (Kitagawa Utamaro) என்று வழங்கப்பெறுகின்றன. உட்டாமரோ (Utamaro) யோசிவாரா மாவட்டத்து அரண்மனை வாழ் நங்கையர்களின் எழில் உருவங்களைச் சீரிய முறையில் ஓவியங்களாகத் தீட்டினார். பொதுவாக, அம்மாவட்டம் கேளிக்கைகள், விளையாட்டுகள், பொழுதுபோக்குக் கூறுகள் நிறைந்து காணப்பட்டது. இவர் கி.பி. 1790–ல் உக்கியோயி பள்ளியில் பணிபுரிந்தபோது மரங்களில் ஓவியங்களை அழகாகச் செதுக்கி வைத்தார். அவை இவருக்குப் பெரும்புகழைத் தேடித்தந்தன. இவர் காலத்துச் சப்பானிய அறிஞர்களும், மேலை நாட்டுத் திறனாய்வாளர்களும் சப்பானில் இதுவரையில் தோன்றியுள்ள மர ஓவியக் கலைஞர்களுள் உட்டாமரோவே சிறந்த வல்லுநர் எனப் பாராட்டியுள்ளனர். உட்டாமரோவின் புகழுக்கு இவரது தனித் திறமை வாய்ந்த கலைப்பாணியே காரணம். இவர் செதுக்கும் ஒவியங்கள் அழகும் அமைப்பு ஏற்றமும் உடையன. ஒவ்வொரு மரச் செதுக்கு ஓவியத்திலும் காணப்படும் அமைப்பு முறையும் தக்க அளவில் பயன்படுத்திய வண்ணங்களும் இவரை வானளாவப் புகழ்த் தூண்டுகின்றன. உட்டாமரோவின் புகழ்பெற்ற படைப்புகளுள் பெண்களின் கல்வியறிவுள்ள பத்துப் ஓவியங்கள், பெண்களின் பிற சிறப்புக் கூறுகள் கொண்ட ஓவியங்கள், பச்சை நிற வீட்டின் அமைப்பு முறை, காதலர்களின் கண்கவர் ஓவியங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. நீண்ட காலமாக வெளிநாடுகளுக்குத் தெரியாமாலிருந்த இவர் ஓவியங்கள், கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் சப்பானுக்கு வந்த பிரான்சு நாட்டுச் சமயப் பரப்பாளர்களால் உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தப்பட்டன. இவ்வோவியங்கள் பல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் உள்ள அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. உலகப் புகழ்பெற்ற இவ்வோவியக் கலைஞர் கி.பி. 1806–இல் காலமானார். நா.ஜெ.