புவி போன்ற கோளைச் சுற்றி வரும் இயற்கையான துணைக் கோள் அக்கிரகத்தின் சந்திரன் ஆகும். மனிதனால் உருவாக்கப் பட்டுப் புவி சுற்ற ஏவப்படும் துணைக்கோள், செயற்கைத் துணைக் கோள் எனப் படும். இதைச் சுருக்கமாகச் செயற்கைக் கோள் (artificial satellite) எனலாம். 1957 இல் ரஷியா செலுத்திய ஸ்புட்னிக்–1 எனும் உலகின் முதலாம் செயற்கைக் கோள் தொடங்கி, இன்று வரை 5000க்கும் மிகுதியான விண் கலங்கள் (space crafts) ஏவப் பட்டுள்ளன. சுற்றியக்கம். செயற்கைக் கோள் சுற்றி வரும் தளத்தைச் சுற்று தளம் (orbital plane) எனலாம். நில நடுக் கோட்டின் நேர் மேலாகவே இயங்கி வரும் போது, சுற்று தளச் சாய்மானம் (inclination) சுழியாக இருக்கும். ஆயின், 90° கோண அளவுக்குட் பட்ட சாய்மானத்துடன் துருவப் பகுதிகளின் வழி வட்டமடிக்கும் செயற்கைக் கோள்கள் கிழக்கு முகமாகவே விரைகின்றன. ஆதலால் 0–90° வரை தள சாய்மானம் உடைய சுற்றுப் பாதைகள் முன்னோக்குச் சுற்றுப் பாதைகள் (prograde orbits) எனப்படும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சாய்மானம் 90° க்கும் கூடுதலாகும் போது, அச்செயற்கைக் கோள் மேற்கு நோக்கி, எதிர்ப் பயணம் புரியத் தொடங்கும். இவ்வகைச் சுற்றுப் பாதைகளைப் பின்னோக்குச் சுற்றுப்பாதைகள் (retrograde orbits) எனலாம் (படம் 1). ஆயினும், ஒவ்வொரு செயற்கைக் கோளும், ஒரு குறிப்பிட்ட சாய்மானமுடைய சுற்றுத் தளத்திலேயே இயங்கும். இதன் அடிப்படையில், குறிப்பாக, மூவகைச் சுற்றுப் பாதைகளை வரையறுக்கலாம். தாழ் புவிச் சுற்றுப் பாதை. புவிக்கு மேல் ஏறக்குறைய 600 கி.மீ உயரம் வரை இயங்கும் செயற்கைக் கோள்களின் பாதை தாழ் புவிச் சுற்றுப்பாதை அல்லது தாழ் புவி வட்டப் பாதை ஆகும். சோவியத் ஒன்றியக் குடியரசிலிருந்து ஏவப்பட்ட ஆர்யபட்டா, பாஸ்கரா முதலான இந்திய செயற்கைக் கோள்கள் இத்தகைய தாழ் புவி வட்டப் பாதைகளில் இயங்கின. இவை புவியை ஒரு முறை வலம் வர ஏறக்குறைய 1½ மணி நேரம் ஆகும். புவியைச் சூழ்ந்துள்ள வளி மண்டலம், அயன மண்டலம் (atmosphere), காந்த மண்டலம் (ionosphere) போன்ற வான் மண்டலங்கள் மற்றும் வான் ஆலன் வளையங்கள் (van allen belts) எனும் கதிர் வீச்சுப் பகுதிகளை ஆராயவும், உள் நாட்டு–வெளி நாட்டுப் படைத் தளங்களைக் கண்காணிக்கவும், இவ்வகைச் செயற்கைக் கோள்கள் பயன்படும். இவற்றை, முறையே வானிலை ஆய்வுச் செயற்கைக் கோள்கள் (meteorological satellites) என்றும். வேவுச் செயற்கைக் கோள்கள் (reconnaissance satellites) என்றும் குறிக்கலாம். புவி நிலை வட்டப் பாதை. புவி மேலாகச் செயற்கைக் கோளின் குத்துயரம் (altitude) கூடுதலானால், அதன் சுழற்சித் திசை வேகம் (orbital velocity) குறைந்து, புவி சுற்றுக் காலம் (orbital period) நீடிக்கும். சுற்று வரைவு (V), நிறை ஈர்ப்பு மாறிலி (gravitational constants) (G), புவி நிறை (M), புவி ஆரம் (R), குத்துயரம் (h) இவற்றைத் தொடர்புறுத்தும் சமன்பாடு: x-smaller| V = \sqrt{\frac{GM}{(R + h) இதில் நிறை ஈர்ப்பு மாறிலி = 6.668×1011 நியூட்டன். மீ.² /கி.கி.² புவி நிறை = 5.98×1024 கி.கி. புவி மையத்திலிருந்து 42000 கி.மீ. உயரத்தில் மிதக்கும் செயற்கைக் கோளின் வேகம் நொடிக்கு ஏறத் தாழ 3 கி.மீ. ஆகும். நில நடுக் கோட்டின் மேல் ஏறக் குறைய 36000 கி.மீ. உயரத்தில் இயங்கும் அச்செயற்கைக் கோளின் புவிச் சுற்றுக் காலம் ஏறத் தாழ 24 மணி நேரம். அதாவது, புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள எடுக்கும் அதே கால அளவு புவியின் சுழற்சி வேகத்தோடு ஒத்து விரைவதால், இதைப் புவி ஒத்தியக்கச் செயற்கைக் கோள் (geo-synchronous satellite) எனலாம். நில நடுக் கோட்டின் மேல் அவ்வுயரத்தில் இயங்கும் புவி ஒத்தியக்கச் செயற்கைக் கோளின் சுற்றுத் தளம் 0° சாய்மானம் கொண்டிருப்பதால், அதன் இயக்கத்தின் போது, எக்கணமும் நில நடுக் கோட்டின் மேல் ஒரு நிலைத்த புள்ளிக்கு நேர் உச்சியில் நிறுத்தப் பட்டிருப்பது போல் தோன்றும். இத்தகைய சுற்றுப் பாதையே புவி நிலை வட்டப் பாதை ஆகும். இந்திய இன்சாட் (INSAT) முதலான தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்கள் இவ்வகையைச் சார்ந்தவை. (படம் 2). ஆயினும், புவி ஒத்தியக்கச் செயற்கைக் கோள்கள் அனைத்துமே புவி நிலை வட்டப் பாதைகளில் அமைய வேண்டியதில்லை. அவை புவி சுற்ற 24 மணி நேரம் எடுத்துக் கொள்ள, நில நடுக் கோட்டின் மேலாக ஏறத் தாழ 3600 கி.மீ. உயரத்தில் மட்டுமே விரைய வேண்டும் என்பதில்லை. சோவியத் ஒன்றியக் குடியரசின் மோல்நியா (molniya) வகைச் செயற்கைக் கோள்கள், மாதிரிப் புவிக்கு அருகிலும் (perigee), அப்பாலும் (apogee) ஆன நீள் வட்டப் பாதையில் (elliptical orbit) செயல் படக் கூடும். சுற்றுத் தளமும் நில நடுக் கோட்டுடன் சாய்மானம் உடையதாக அமையும். ஆயினும், ஒவ்வொரு முறையும் புவி சுற்றுக் காலம் 24 மணி நேரமே. இவை புவியோடு ஒத்த வேகத்தில் இயங்கினாலும், புவி நிலை வட்டத்தில், ஓரிடத்தில் மேல் நிலையாக நிறுத்தி வைக்கப் படாத மற்றொரு வேறு பட்ட சுற்றுப் பாதையில் இயங்குவன. சூரிய ஒத்தியக்கப் பாதை. நில நடுக் கோட்டோடு ஏறக் குறைய 90° சாய்மானம் உடைய செயற்கைக் கோள் துருவங்களின் வழி ஏறத் தாழ 1000 கி.மீ. உயரத்தில் ஒரு நாளைக்கு 15 அல்லது 16 முறை புவியைச் சுற்றும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு குறிப்பிட்ட சுற்றின் போதும், நில நடுக் கோட்டை ஒரு குறித்த தல நேரத்தில் (local time), கடக்கும். அதாவது, நாள் தோறும் அது நில நடுக் கோட்டைக் கடந்து பறக்கும் இடம், சூரிய ஒளியால் ஒரே அளவு ஒளி பெற்றுத் திகழ்கிறது. அதனால், நில நடுக் கோட்டின் அடுத்தடுத்த இடங்களை ஒரே பொழுதின் சீரான பகல் ஒளியில் படம் பிடிக்க இவ்வகைத் துருவச் செயற்கைக் கோள்களால் (polar satellites) இயலும். புவிக்குள் உறைந்து கிடக்கும் எண்ணெய், தாது, கனி வளங்களைத் தொலைவிலிருந்து ஆய்வு செய்ய இவை உதவும். 1988 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் நாள் வாஸ்டாக் ஏவு கலன் மூலம் துருவப் பாதையில் கொண்டு விடப்பட்ட முதலாம் இந்தியத் தொலை உணர்வுச் செயற்கைக் கோள் ஐ. ஆர். (Indian Remote Sensing Satellite IRS-1A) இந்தியத் தல நேரப் படி காலை 10.25 மணிக்கு நில நடுக் கோட்டைக் கடந்து செல்கிறது (படம் 3). இங்ஙனம் சூரிய ஒளிக் கதிர்கள் ஒரே சாய்வாக விழும் பகுதி களைக் குறிப்பிட்ட தல நேரத்தில், நாடோறும் பதிவாக்கும் இச்செயற்கைக் கோள்களின் பாதையைச் சூரிய ஒத்தியக்கப் பாதை என்று குறிப்பிடுவர். பயன்பாடுகள். அறிவியல் ஆய்வு, தொலைத் தகவல் தொடர்பு, வானிலை ஆய்வு, வானவியல், கடலியல், புவி அளவை, பாதுகாப்புப் படை போன்ற பல துறைகளில் செயற்கைக் கோள்கள் மிகுதியாகப் பயன் படுகின்றன. கட்டமைப்பு. பொதுவாக, செயற்கைக் கோள்கள், உருளை வடிவம், கன செவ்வக (cubic rectangular), கோளக (spherical), நான்முக (tetrahedron), எண்முக (octahedron) அமைப்புகளில் பலவாறு உருவாக்கப் படலாம். உருண்டை, உருளை, பெட்டகம் போன்ற வெவ்வேறு வடிவங்களில் அமைக்கப்படும் செயற்கைக் கோள்கள் சிலவற்றின் எடை ஏறத் தாழ 30 டன் கூட இருக்கும். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> இவை பெரும்பாலும் எடை குறைந்ததும், உறுதி மிக்கதுமான சிறப்பு உலோகக் கலவையால் ஆனவை. அலுமினியம், பெரிலியம், மக்னீசியம் தவிரக் கிராஃபைட் எனும் கரி இழை வலிவூட்டிய நெகிழிப் பொருள்கள் (graphite reinforced fibre plastics) கொண்டு கட்டமைக்கப் படுகின்றன. வெளியில், மெல்லிய நெகிழித் தகடுகள் (plastic sheets) ஒட்டி, அவற்றின் மேல் மெல்லிய அலுமினியம் அல்லது தங்கப் படலம் மூடியிருக்கும். இப்புறத் தோலே, செயற்கைக் கோளின் வெப்பத் தடுப்புப் பூச்சாக (thermal insulation) உதவுகிறது. ஏனெனில், விண் வெளியின் கடுங் குளிரிலிருந்து 7K மீ வெப்ப நிலை வரை தட்ப வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் திறன் இச்செயற்கைக் கோள்களின் இன்றியமையாத செயற்பாட்டிற்குரிய முதல் தேவை. இதற்கென்றே விண்வெளிக்கு அனுப்பும் முன்பு, இச்செயற்கைக் கோள்களை நீர்ம ஹைட்ரஜன் பீப்பாய்க்குள் மூழ்கச் செய்தும், உயர் வெப்ப நிலைக்குச் சூடேற்றியும், அவற்றின் வெப்பந் தாங்கும் தன்மையை ஆய்வு செய்வர். திறன் உற்பத்தி. செயற்கைக் கோள்களின் தளக் கணிப் பொறிகள் (onboard processors), கருவிகள் ஆகியன பணியாற்ற, திறன் வேண்டும். இதற்கென, செயற்கைக் கோளின் இரு புறமும் வண்டின் சிறகுகள் போன்று இரண்டு ஒளிர் பலகைகள் இருக்கும். அவற்றில், சிறு சிறு துகள்களாகப் பதிக்கப்பட்ட சூரிய மின் கலங்கள் (solar cells) செயற்கைக் கோளின் இயக்கத்தில், எப்போதும் சூரியனையே நோக்கி இருப்பதால், அவை கதிரொளியின் ஒளியாற்றலை உட் கவர்ந்து, அதை மின்னோட்டமாக்கி, செயற்கைக் கோளுக்குள் பொருத்தப்பட்டிருக்கும் மின்னடுக்குகளுக்கு (batteries) கொடுக்கும். ஒவ்வொரு சுற்றின் போதும், செயற்கைக் கோள் சூரியனுக்கு அப்பால் புவியின் இருண்ட பகுதியில் சுற்றி வரும் போது, தன் மின்னடுக்குகளில் சேமித்து வைத்துள்ள மின்னாற்றலைச் செலவழிக்கும். ஒரு சில செயற்கைக் கோள்கள், சிறு அணு உலைகளையும் (nuclear reactors), கதிரியக்கப் பொருள்களையும், ஆற்றல் உற்பத்தி மூலங்களாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> கட்டுப்பாட்டு அமைப்பு. விண்ணின் சுற்றுப் பாதையில் கொண்டு விடப்பட்ட பிறகும், செயற்கைக் கோளின் குத்துயரம் சற்றுக் குறையவோ, இயக்கம் தடுமாறவோ கூடும். அதன் சுற்றுப் பாதை, குத்துயரம், செயல்பாடு இவற்றில் வேறுபாடு எழாது, நிலையாக இயங்கிடச் செயற்கைக் கோளைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப் படுத்த வேண்டும். இதற்கென ஹைட்ரசீன் போன்ற நீர்ம எரி பொருளால் இயங்கும் சிறு உந்துளிப் பொறிகள் (thrusters) செயற்கைக் கோளில் உண்டு. இந்த எரி பொருள், கொள் கலனில் பொதுவாகத் தேவைப்படும் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயற்கைக் கோளின் தகுதி, நிறைக்கேற்ப நிறைக்கப் பட்டிருக்கும். எரி பொருள் தீர்ந்து போயின், செயற்கைக் கோள்கள் இயங்கா. எந்த ஒரு செயற்கைக் கோளையும் திறம் பட உருவாக்க, ஏறத் தாழ 50 கோடி ரூபாய் செலவாகும். இதனால் விளையும் பயன்கள் மிகுதி. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, படம், பக்கத்தின் ஆரம்பத்தில், கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> —சு. முத்து நூலோதி. Arthur C. Clerk, The Promise of Space, Hodder and Stonghton Publication, London, 1968. செயற்கைக் கோள்களைக் கட்டுப் படுத்தும் தரை நிலையங்கள். பல நாடுகள் குழுக்களாகச் சேர்ந்து, மண்டலத் தொலைத் தொடர்புக் கோள் கழகங்களை ஏற்படுத்தியுள்ளன. அவை மண்டலத் தேவைக்காகவும், பொது நலனுக்காகவும் இவ்வமைப்புகளை ஏற்- படுத்திக் கொண்டுள்ளன. இந்தோனேசியா நாடுதான் முதன் முதலில் மண்டலக் கோள் அமைப்புக்கு வழி வகுத்தது எனலாம். அந்நாடு தன் 3000க்கும் மேலான தீவுப் பகுதிகளிடையே செய்தித் தொடர்புக்குப் பலாப்பா என்னும் செயற்கைக் கோளை 1970ஆம் ஆண்டில் ஏவியது. பின்னர், பிலிப்பைன்ஸ் நாட்டையும், ஏனைய அண்மை நாடுகளையும், பலாப்பா கோளைப் பயன்படுத்திக் கொள்ள உதவியது. அதற்கு அடுத்து ஏற்பட்ட மண்டலக் கோள் அமைப்பு ஐரோப்பிய அஞ்சல் மேலாண்மைக் கழகம் ஆகும். அதன் பயனாக, 1980இல் ஐரோப்பிய விண்வெளி முகவாண்மை (European Space Agency) தொடங்கப் பட்டது. 1983இல் ஐரோப்பிய செய்தித் தொடர்புக் கோள் அமைப்பு (European Communication Satellite) ஏற்படுத்தப் பட்டது. ESA ஒரு மண்டலக் கழகம் மட்டுமன்று; இது விண் வெளியில் ஏவூர்தித் தளத்தை மேலாண்மை செய்து வருகிறது. இதன் கோள் ஏவு அமைப்பு, ஏரியன் கோள் ஏவு தளம் (Ariane Satellite launcher) ஆகும். அனைத்து நாட்டுத் தொலைத் தொடர்புக் கழகமே (Intelsat) செயற்கைக் கோள்களை ஏவிக் கொள்ள இதன் உதவியை நாடுகிறது. ஐரோப்பியத் தொலைக் காட்சி நிகழ்ச்சி Eurovision என்னும் பெயரில், அந்நாடுகளுக்கிடையில் செயற்கைக் கோள்கள் மூலம் பரப்பப் படுகிறது. இந்நிகழ்ச்சியைப் பரப்பும் பணியை, ஐரோப்பிய செய்தித் தொடர்புச் செயற்கைக் கோள் அமைப்பு செவ்வனே செய்து வருகிறது. மற்றொரு புகழ் பெற்ற செயற்கைக் கோள் நிறுவனம் அராப்சாட் (Arabsat) என்பதாகும். இது அரபு நாடுகளின் தொலை பேசிக்கும், தொலைக் காட்சிக்கும் உதவும் செயற்கைக் கோள் ஆகும். பல நாடுகள் கூட்டாக அமைத்துக் கொண்ட மண்டலச் செயற்கைக் கோள் அமைப்புக்கும், ஒரு நாட்டின் சொந்த உள் நாட்டுக் கோள் அமைப்புக்கும், செயல் படும் விதத்தில் பெரும் வேறுபாடு இல்லை. இவை இரண்டும் பல பொதுவான அமைப்புகளைக் கொண்டவை எனக் கூறலாம். உள் நாட்டுச் செயற்கைக் கோள் (domestic satellite) அந்நாட்டின் பரப்புக்கு மட்டுமே குறிப்பலைகள் அனுப்பினால் போதும் என்பதால், அலைப் பரப்பு கருவிகள் மிகுதியாகத் தேவைப்படா. சில கருவிகளுடன் எளிதாக அமைத்தலே போதுமானதாகும். மண்டலச் செயற்கைக் கோளும், அண்மை நாடுகள் சேர்ந்து விண்வெளியில் ஏவிக் கொள்வதால், உள் நாட்டுக் கோளைப் போன்றே எளிதாக இருந்தாலே போதுமானது. ஆனால், அனைத்து நாட்டுச் செயற்கைக் கோள் (Intelsat) மட்டும் வேறுபாடானது. இதன் குறிப்பலைகள் உலகப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதியான 170 மில்லியன் ச.கி.மீ. பரப்பளவைச் சென்றடைய வேண்டும். உள் நாடு அல்லது மண்டல நாடுகளின் கோள் அனுப்பும் குறிப்பலை 6.6 மில்லியன் ச.கி.மீ. இருந்தாலே போதுமானது. செயற்கைக் கோள்களைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள், புவியின் பல இடங்களில் உள்ளன. அவையே செயற்கைக் கோள்களைப் பின்பற்றி வழி நடத்தும் தரைக் கட்டுப்பாடு நிலையங்கள் (Ground Control Stations). செயற்கைக்கோள்களின் வேகத்தையும், அவை செல்ல வேண்டிய பாதையையும் கட்டுப் படுத்தி, கோள்கள் தடம் புரண்டு விடாமல், தரைக் கட்டுப்பாடு நிலையங்கள் கவனித்துக் கொள்கின்றன. தரைக் கட்டுப்பாடு நிலையங்கள் செயற்கைக் கோள்களுக்கு, மின் குறிப்பலைகளை அனுப்பி எப்பொழுதும் பின் தொடர்ந்தும், அது நிலை பிறழும் போது கட்டுப்படுத்தியும், அதன் இயக்கத்தைக் கண்காணித்தும் வழி நடத்துகின்றன. செயற்கைக் கோள்கள் புவியின் சுழல் வேகத்திற்குச் சமமான வேகம் கொண்டுள்ளமையால், ஓரிடத்தில் நிலைத்திருக்கும் படி செய்யப்படுகின்றன. அவ்வாறு இருந்தும், ஒரு கோள் நாள் ஒன்றுக்கு 20 கி.மீ. தொலைவு வரை தன் நிலையிலிருந்து நகர்ந்து விடுகிறது. அப்போது, தரையிலிருந்து கட்டுப்பாட்டுக் குறிப்பலைகளை அனுப்பி, கோளைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவது இந்நிலையங்களேயாகும். தரைக் கட்டுப்பாடு நிலையங்கள் அனைத்தும் ஒரே வகையானவை அல்ல. இதில் A வகை நிலையம் பெரியதாகும். கோளுக்குக் குறிப்பலைகளை அனுப்பும் இதன் உணர்சட்டம் ஒரு பெரிய பர வளையம் போன்று இருப்பதோடு 30 மீ. விட்டமும் கொண்டிருக்கும். அடுத்த B வகை நிலையத்தின் குறிப்பலை அனுப்பும் உணர்சட்டம் பர வளையம் போல அமைக்கப்பட்டாலும், சிறியதேயாகும். இதன் விட்டம் 11 மீ. இருக்கும். இவ்விரு வகை நிலையங்களின் கோளுக்கு அனுப்பும் அலையின் அதிர்வெண் 6000 மெகா ஹெர்ட்சாகவும், கோளிலிருந்து பெறும் அதிர்வெண் 4000 மெகா ஹெர்ட்சாகவும் இருக்கும். ஆனால், மூன்றாம் வகை C நிலையத்தின் அலை அனுப்புதல் அதிர்வெண் 14000 மெகா ஹெர்ட்சிலும், அலை பெறுதல் 11,000 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் என்றும் அதிகரிக்கப்பட்டிருக்கும். இதன் அலை அனுப்பும் உணர்சட்டத்தின் பர வளையம் 19 மீ. விட்டத்துடன் இருக்கும். ஆஸ்திரேலியாவில் கர்னர்வான் என்னுமிடத்திலுள்ள நிலையம், பசிபிக் கடல் பகுதிக் கோளைக் (Pacific Ocean Satellite) கண்காணிக்கிறது. அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள நிலையமும், ஜப்பானிலுள்ள இபராகி (Ibaraki) நிலையமும், பசிபிக் கடற் பகுதிக் கோளைக் (POS) கண்காணிக்கும் நிலையங்கள் ஆகும். ஜப்பானில் யாமகுச்சி என்னுமிடத்திலுள்ள நிலையம், ஏனைய இந்தியப் பெருங்கடல் பகுதிக் கோளை (IOS) நோக்கியிருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. ஒரே இடத்தில் வெவ்வேறு கோள்களை நோக்கியபடி உணர்சட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் கூன்கில்லியில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்தின் உணர்சட்டங்கள் தனித் தனியே அட்லாண்டிக் கடல் பகுதிக் கோளையும் (AOS), இந்தியப் பெருங்கடல் பகுதிக் கோளையும் (IOS) பின் தொடர்கின்றன. ஹாங்காங்கிலுள்ள ஒரு நிலையம், பசிபிக் கடல் பகுதிக் கோளையும் (POS) இந்தியப் பெருங்கடல் பகுதிக் கோளையும் பின் தொடர்கின்றன. உள்நாட்டுக் கோளைக் கட்டுப் படுத்த, ஒவ்வொரு நாட்டிலும் அதன் கட்டுப்பாட்டு நிலையம் உண்டு. இந்தியாவுக்குச் சொந்தமான இன்சாட் IB கோளை வழி நடத்தும் நிலையம் புது டெல்லிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. —பெ. துரைசாமி