நைட்ரோகிளிசரின்
naiṭrōkiḷicariṉ
இதயக் குறு நேர மார்புக் கடு வலியில் (angiopectoris) பயன் படும் முதன்மையான மருந்துகளில் ஒன்றாக, நைட்ரோகிளிசரின் (nitroglycerin) உள்ளது.
இதயக் குறு நேர மார்புக் கடு வலியில் (angiopectoris) பயன் படும் முதன்மையான மருந்துகளில் ஒன்றாக, நைட்ரோகிளிசரின் (nitroglycerin) உள்ளது. இதன் வேறு பெயர் கிளிசரைல் டிரைநேட்ரேட் என்பதாகும்.
இயங்கும் விதம். மார்புக் கடு வலிக்கு அடிப்படைக் காரணம் இதயத் தசைக்குப் போதிய ஆக்சிஜன் கிடைக்காமையேயாகும். நைட்ரோகிளிசரின் இதயத் தசையின் ஆக்சிஜன் தேவையைக் குறைக்கிறது. முதன்மையாக மண்டலத் தமனிகளையும், சிரைகளையும் விரிவடையச் செய்து, குருதி அழுத்தத்தையும், இதயக் குருதி வெளியேற்ற அளவையும் குறைக்கிறது. எனவே, இதயத் தசைகளின் பணிச் சுமை குறைகிறது. இதன் மூலம், இதயத் தசைக்குத் தேவைப் படும் ஆக்சிஜன் குறைந்து, இதயக் குறு நேர மார்புக் கடு வலியும் குறைகிறது.
மருந்தளவு. நாக்கின் கீழ் வைக்கும் மாத்திரை (Sub lingual) 0.3 மி.கி. என்னும் அளவில் நன்றாகவும், விரைவாகவும், இதயக் குறு நேரக் கடு வலிக்கு மிகவும் பயன் படுகிறது. நான்கு நிமிடத்தில், குருதியில் உச்ச அளவை அடையும். இதன் பிளாஸ்மா அரை வாழ்வு (T½) 1–3 நிமிடங்களாகும். இதன் இயக்கம் ஒரு மணி நேரம் வரை நீடிக்கிறது. இது கல்லீரலிலும் உடனடியாக வளர் சிதை மாற்றம் அடையாமல், நேரடியாகக் குருதியில் கலக்கிறது. வலி இருக்கும் வரை, மாத்திரையை நாக்கின் கீழ் வைத்திருக்க வேண்டும். வலி குறைந்து, சீரான நிலைக்கு வந்தவுடன், மாத்திரையை உமிழ்ந்து விட வேண்டும் இல்லையேல், தலைவலி, குருதி, அழுத்தக் குறைவு ஆகியன உண்டாகும்.
வாய் வழியே இம்மருந்து சிறிது மெதுவாக உறிஞ்சப் படுகிறது. பிளாஸ்மா 60–80 நிமிடங்களில் உச்ச நிலை அடைகிறது. இதன் இயக்கம் 3–6 மணி நீடிக்கும். அதனால் இது அவசர மருந்துவ நிலைகளில் பயன் படுவதில்லை. இதயக் குறு நேரக் கடு வலி வராமல் தடுப்பதற்கு (prophylactic treatment) இதனைப் பயன் படுத்தலாம். இப்போது வாய் மூலம் கொடுப்பதற்காகச் சிறிது சிறிதாக வெளிப் படும் மருந்து வில்லை (sustained release tables) தயாரிக்கப் படுகிறது. இதன் இயக்கம் 4 மணி நேரம் வரை இருக்கும்.
நைட்ரோகிளிசரின் 2% களிம்பாகவும் தயாரிக்கப் படுகிறது. இதயக் குறு நேரக் கடு வலி உள்ளவர்களுக்கு முன்னேற்பாடாக வலி வராமல் இருக்க, இக்களிம்பை இட மார்பகத்தில் 1–2 அங்குலப் பரப்பளவிற்கு, அன்றாடம் மூன்று வேளைக்குத் தடவ வேண்டும். 60 நிமிடத்தில் வலியைப் போக்கும். இதன் இயக்கம் 4–8 மணி நேரம் இருக்கும். நீண்ட நாள் தடுப்பு முறைக்கு இது பயன் படுகிறது. நைட்ரோகிளிசரின் தடை வில்லைகளைத் (discs) தோலுக்கு அடியில் பதித்து விடலாம். இது சீரான மருந்தளவைக் குருதியில் செலுத்துகிறது. இதன் இயக்கம் தாமதமாக (1–2 மணி நேரம்) தொடங்குகிறது. இதை இதயக் குறு நேரக் கடு வலி உள்ளோருக்குத் தடுப்பு முறையாக நாளொன்றுக்கு ஒரு வில்லை வீதம் நீண்ட நாள்களுக்குப் பயன் படுத்தலாம்.
சிலேட்டுமப் படலங்களின் மூலம் தரப் படும் (transmucosal) நைட்ரோகிளிசரின் தயாரிப்பு, மேலுதட்டின் கீழ் வைக்கப் படுகிறது. இது ஈறுகளில் ஒட்டிக் கொள்ளும் தன்மையுடையது. இது மிகவும் விரைவாகச் செயல் படுகிறது. குருதியில் 2–5 நிமிடத்தில் உச்ச நிலை அடைகிறது. குறுகிய காலத் தடுப்பு முறைக்கு (short term prophylaxis) இது பயன் படுகிறது.
பக்க விளைவு. நீண்ட நாள் தொடர்ந்து பயன் படுத்துவதால், இம்மருந்துகளின் இயக்கத் திறன் குறைகிறது. இதற்குத் தாங்கு திறன் (tolerance) என்று பெயர். ஒரு குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்த மிகையளவு மருந்தைப் பயன் படுத்த நேரிடும். தலைவலி உண்டானால், மாத்திரை அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். நிலை மாற்றக் குருதி குறை அழுத்தமும் (postural hyper tension) சில நேரங்களில் ஏற்படும். கண் உள்மிகு அழுத்த நோயும் (glaucoma), மிக அரிதாகத் தோல் அரிப்பும், கொப்புளமும் உண்டாகலாம்.
பயன். இதயக் குறு நேர மார்புக் கடு வலி, தேக்கமுறும் இதயத் திறனிழப்பு (Congestive cardiac failure) ஆகிய நோய்களில் பிற மருந்துகள் பயனளிக்காத போது, இதனைப் பயன் படுத்தலாம். இதயத் தசை அழிவு நோயில் (myocardial infarction), நைட்ரோகிளிசரின், சிரை (intravenous route) மூலம் தரப் படுகிறது. —ச. ஆதித்தன் துணை நூல். Alfred Goodman Gilman, et.al. (Eds), Goodman and Gilman's The Pharmacological Basis of Therapeutics, Sixth Edition, Macmillan Publishing co., Inc., Newyork, 1980.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 276)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tqp6xubg/
தமிழ்“நைட்ரோகிளிசரின்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tqp6xubg/APA
Oliyon Research. (2026). நைட்ரோகிளிசரின். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tqp6xubg/MLA
"நைட்ரோகிளிசரின்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tqp6xubg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment