மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு (கி.பி. 1178–1218) உட்பட்டு மலையமான் நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்த மலையமான் சிற்றரசன். எலவானாசூர் என்று இக்காலத்தில் சொல்லப்பெறும் இறையானரையூர்ப் பகுதியை இவன் ஆண்டுவந்தான். எலவானாசூர் தென்னார்க்காடு மாவட்டம் திருக்கோவலூருக்குத் தெற்கே 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வேந்தனைப் பற்றிய கல்வெட்டுகள் கி.பி. 1184 முதல் 1191 முடிய கிடைத்துள்ளதால், இவன் குறைந்தது ஏழு ஆண்டுகளாவது ஆண்டிருக்கலாம். இவனுக்குச் சோழங்க தேவன், சூரிய தேவன், எதிரிகள் நாயகன், சூரியன் நீரேற்றான், சூரியன் நீரேற்ற பெருமாள் முதலான சிறப்புப் பெயர்கள் இருந்தன என்பதனைக் கல்வெட்டுகளால் அறியலாம். இவ்வேந்தன் இராசராச தேவன் பொன் பரப்பினான் ஆன குலோத்துங்க சோழ வாண கோவரையனுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றினை, மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1191) செய்துகொண்டான். இதன் விளைவாக இராசராச மலையகுலராயன் தனது அரசியல் செல்வாக்கினைப் பெருக்கிக் கொண்டான். இவன் தனக்கெனத் தனித்ததோர் வேளைக்காரப் படையினையும் தனது பாதுகாப்பிற்காக வைத்திருந்தான். எலவானாசூர்க் கல்வெட்டு இவ்வேளைக்காரப் படையின் ஒருசில உறுப்பினரைக் குறிப்பிடுகிறது. இவர்களுள் தேவப்பெருமாள் என்ற பெண் ஒருத்தியும் இருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது. அறக் கொடைகள் இறையன்பில் மேம்பட்டு விளங்கிய இவ்வேந்தன் சைவ, வைணவக் கோயில்களுக்குப் பலவிதமான நிவந்தங்களை விட்டுள்ளான்; மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆறாம் ஆட்சியாண்டில் (கி.பி. 1184) இறையானரையூர் ஊர் பாகங் கொண்டருளிய நாயனார்க்கும், அவ்வூரிலுள்ள நடுவில் திருமுற்றத்தாழ்வார்க்கும், திருச்சக்கரத்தாழ்வார்க்கும், ஓகையார்க்கும் புத்தூர் முதலான ஊர்களை இறையிலி தேவதானமாக அளித்தான். சித்தலிங்க மடம் திருப்புலிப்பகவ நாயனார்க்கும், திருப்பாலைப் பந்தல் திருநாகேசுவரமுடையாருக்கும், திருக்கோவலூர் வீரட்டானமுடையார்க்கும், திருவெண்ணெய் நல்லூர் ஆட்கொண்டருளிய தேவர்க்கும் நிலக்கொடையும் பசுக்கொடையும் செய்துள்ளமை இவனது சமயப் பொதுமைக் கொள்கையை எடுத்துக்காட்டுகிறது. இறையானரையூர் ஊர்பாகங்கொண்டாரின் இராசகோபுரத்துக்கு முன்பு திருமாளிகை ஒன்றினை இவ்வேந்தன் எடுத்துள்ளான்.