நெகிழி
nekiḻi
தற்கால வாழ்வில் மிக இன்றியமையாமை பெற்று, நெகிழி யுகம் (plastic age) என்று பெயர் வழங்குமளவிற்குப் பலவாறு பயன் படுபவை இந்தச் செயற்கைப் பொருள்கள்.
தற்கால வாழ்வில் மிக இன்றியமையாமை பெற்று, நெகிழி யுகம் (plastic age) என்று பெயர் வழங்குமளவிற்குப் பலவாறு பயன் படுபவை இந்தச் செயற்கைப் பொருள்கள்.
1860ஆம் ஆண்டிலேயே செல்லுலாயிடு முதன் முதலாகப் பயன்பாட்டுக்கு வந்ததென்றாலும், ரப்பர், உலோகம் ஆகியவற்றின் உற்பத்தி, தேவைக்குப் போதுமான அளவிற்கில்லாமையால் 1940 ஆண்டில்தான் நெகிழிப் பொருள்களை உருவாக்குவதில் அழுத்து வார்த்தல் (compression moulding), ஊதி வார்த்தல் (blow moulding), புகுத்தி வார்த்தல் (injection moulding), தாரை வார்த்தல் (extrusion dye moulding), தகடாக்கல் (lamination) போன்ற செயல் முறைகளும் செம்மை பெற்றன.
வலிமை, எடை தாங்கும் திறன், லேசாயிருத்தல், வளைந்து கொடுக்கும் இயல்பு, உடையாதிருத்தல், தோற்றக் கவர்ச்சி, காற்றினாலும், வேதி வினைகளாலும் கெடாதிருத்தல், விலை குறைவு விரைவாக மறு பயனுறுத்தலுக்கிசைதல், பல தரப் பட்ட தேவைகளுக்கும் ஏற்ற பல்லுறுப்பாக்கல் (polymerisation )நிலையிலேயே மாறுதல் செய்ய வாய்ப்பளிப்பது, வேண்டிய வடிவத்தில் ஆக்க இடமளிப்பது முதலியன நெகிழியின் சிறப்புத் தன்மைகள்.
சில எரியக் கூடியவை என்பதும் யாவுமே நுண்ணுயிராற் சிதைவு படாதன என்பதும் குறைபாடாகும். பிந்தைய தன்மையால் பயனுறுத்தலுக்குப் பின், விட்டெறியப் படும் நெகிழிப் பொருள் நிலத்தின் பால் நிலையாய்த் தங்கி, எதிர் காலச் சிக்கல்களுக்கு காரணமாகிறது.
பல்லுறுப்பாக்கல் நிகழ்ச்சி மூன்று வகையில் நிகழலாம். அவை: சிறு மூலக் கூறுகள் சேர்க்கை வினையில் நெடுகச் சேர்வது; இரண்டு வெவ்வேறு இணைப் பல்லுறுப்பாக்கல் (copolymerisation) நிகழ்த்துவது, இவ்வாறு குறுக்க வினை மேலும் மிகுதியாகவும், குறுக்குப் பிணைப்புகளை உண்டாகும் வகையிலும் நிகழ்ந்து மிகக் கெட்டியான பொருட்களை விளைப்பது என்பன.
இம்மூவகையிலும் நிகழ்ந்த எடுத்துக் காட்டுகள், அவை தரும் விளைப் பொருட்களின் பொது வாய்ப்பாடு, பெயர் ஆகியன கீழே தரப் படுகிறது.
இவ்வாறான பல்லுறுப்பாக்கல் வினைகளுக்கு உதவக் கூடிய வினையூக்கிகள் வருமாறு:
இயங்கு உறுப்புகள் (free radicals). பெராக்சைடுகளிலிருந்து R'–O' அல்லது R–CO–O' அல்லது ஆக்சிஜன் வளிமத்திலிருந்து அல்லது Fe2+ மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு கூட்டுச் சேர்த்து.
நேரயனிகள் (Cations). எ–டு H*(BF₃+H₂O) புரோப்பீன் மற்றும் ஐசோபியூட்டீன் இம்முறையில் பல்லுறுப்பாகிறது.
எதிரயனிகள் (anions). ஹைட்ராக்சைடு அயனி, அல்க்கைல் அயனி (R) போன்றவை. எத்திலீன் ஆக்சைடு இம்முறையில் பல்லுறுப்பாக்கப்படும்.
சைக்ளர்–நட்டா வினையூக்கிகள். ௭–டு: TiCl₄ + (C₂H₅)₃ Al விரைவாகவும், தீவிரமற்ற சூழ்நிலைகளிலும் கூடப் பல்லுறுப்பாக்கலை நிகழ்த்தும். இவை குறிப்பிட்ட திசை சார் வடிவமைப்புடன் இயக்குவது கூடுதற் சிறப்பு.
குறுக்க வினையூக்கி. பொதுவாக அமிலம் அல்லது காரம், சிறு மூலக் கூறை வெளியேற்றிப் பல்லுறுப்பாக்கலில், திண்மைப் பொருளை விளைவிக்கும். எ–டு: ஃபீனால் மற்றும் ஃபார்மால்டிஹைடு இணைப் பல்லுறுப் பாக்கலுக்கு அமிலம் உதவுகிறது. நெகிழிகளை வெப்பத்தாற் இளகும் வகை (thermoplastic) என்றும் வெப்பத்தாற் இறுகும் வகை (thermosettling) என்றும் பிரிக்கலாம்.
வெப்பத்தாற் இளகுவன
செல்லூலோஸ் நைட்ரேட். ஆல்கஹால், கற்பூரத்துடன் அழுத்த வெப்பச் சூழ்நிலையில் வினைப் படுத்தினால், செல்லுலாயிடு விளைகிறது. எரியவும், உடையவும் கூடியது. மூக்குக் கண்ணாடிச் சட்டம், பந்து, பூச்சு இவற்றிற்கு இது உதவுகிறது.
செல்லூலோஸ் அசெட்டேட். மடித்துக் கட்டும் உறை, புகைப்படச் சுருள், ஒலிப் பதிவு நாடா, சீப்பு போன்றவற்றைச் செய்ய இது உதவும்.
செல்லூலோஸ் புரோப்பியோனேட், பியூட்டிரேட். செல்லூலோஸ் அசெட்டேட்டை விட வலிவான இவை வளிமக் குழாய்களுக்கும் பயன் படுகின்றன.
எத்தில் செல்லூலோஸ். மிக வலிவுடைய இது தலைக் காப்புச் செய்ய உதவும். பாலித்தீன். பை, உறை, மழைச் சட்டை, பிழி புட்டி, மின் தடைப் பொருள் ஆகியவை தயாரிப்பில், பாலித்தீன் பயனாகிறது.
பாலிபுரோப்பீன். பாலித்தினை விட வலு மிகுந்தது. இது எத்திலீன் மற்றும் புரோப்பிலீன் கூட்டுப் பல்லுறுப்பாக்கலில் சிறந்த நெகிழிகளைத் தரும்.
பாலிவினைல் குளோரைடு. (PVC). இது மூடும் உறை, தரை விரிப்பான், நீர்க் குழாய் மற்றும் ஆய்வகத்தில் பயனுறும் குடுவை ஆகியவை தயாரிக்க உதவுகிறது.
பாலிமெத்தில் மெத்தாக்ரிலேட். இது ஒளி புக விடுவது. கண்ணாடிக்கு ஒரு மாற்றுப் பொருளாகவும், வானூர்திப் பகுதி குறி காட்டும் விளக்கு, செயற்கைப் பற்கள் செய்யவும் பயனாகும்.
டெஃப்லான் வகை. இது ஃபுளுரின் மிகுந்த பாலித்தீன் இனம். பாலி டெட்ரா ஃபுளோரோ எத்தீன் என்னும் வேதிப் பெயர் கொண்டது. 275°C வரை வெப்பந்தாங்கும். வேதிப் பாதிப்புகளை எதிர்த்து நிற்கும். இது உராய்தலற்றது. உயவுப் பொருள் தேவைப் படாத எந்திரப் பகுதிகள் செய்ய இது உதவும். இதனைக் கொண்டு தொட்டி, நீரொட்டாத சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றைச் செய்யலாம்.
பாலி ஸ்டைரீன். தெளிவான ஒளி புகக் கூடிய புட்டி வகை, வானொலிப் பெட்டி போன்றவற்றின் புறப் பகுதிகளுக்கும், விளையாட்டுப் பொருள்களுக்கும் இது பயனாகும்.
நைலான். இது பாலி அமைடு வகையைச் சேர்ந்தது. காப்ரோலாக்டம் பல்லுறுப்பாக்கலின் விளைவாகக் கிடைப்பது நைலான்.
இது வலிமை, நிலைத் தன்மையில் முதன்மையாக இருப்பதும், நீராவியிலும் கெடாதிருப்பதும் குறிப்பிடத் தக்கவை. உயவுப் பொருள் தேவைப்படாத எந்திரப் பகுதி, ஆடை, அறுவை மருத்துவக் கருவி, எந்திரப் பல்லிணை, பல் துலக்கும் புருசு, தூரிகை, வலை, டயர் ஆகியவற்றைச் செய்யப் பயன் படும்.
ஏபி.எஸ். (ABS) அக்ரிலோ நைட்ரைல், பியூட்டாடையீன், ஸ்டைரீன் ஆகிய மூன்றும் சேர்ந்து பல்லுறுப்பாக்கப்பட்டு, வலிமையான இது கிடைக்கிறது.
நிலைத் தன்மை, தாக்குதலைத் தாங்கும் திறன் கொண்டது. தலைக் காப்புத் தொப்பி, பெட்டி, குழாய் செய்ய இது உதவும்.
அக்ரிலிக்குகள். இது பாலிமெத்தில் மெத்தாக்ரிலேட்டைப் போன்றது. மெத்தில் அக்ரிலேட் பல்லுறுப்பாக்கலில் தருவது ஓர் எளிய எடுத்துக் காட்டு. தொலைக் காட்சி ஏற்புப் பெட்டியின் திரை, கைக்குப் போட்டுக் கொள்ளும் காப்புறை, பூச்சு, கோந்து வகை செய்ய இது உதவும்.
டெரிலீன் போன்ற செயற்கை இழை, ரேயான் போன்ற பஞ்சின் மாற்றுருவம், செயற்கை ரப்பர் போன்றவையும் ஒரு நோக்கில் வெப்பத்தால் இளகும் நெகிழி வகையைச் சேரும்.
வெப்பத்தாற் இறுகுவன இவ்வகையில் பல்லுறுப்பாக்கல் வினை மேலும் தீவிரமாக நிகழ்கிறது. ஒரு வரிசைக்கும், மற்றொன்றிற்கும் குறுக்குப் பிணைப்புகள் (Cross linking) ஏற்படுகின்றன.
கிளிப்டால் அல்லது அல்கிட். மின்னழுத்தம், வெப்பம், நீர் போன்றவற்றின் பாதிப்பை எதிர்த்து நிற்க வல்லது. பெருவாரியாகப் பயன் படுவது, பூச்சு, மின் தடை, வெற்றிடக் குமிழின் அடிப் பகுதி, பல வகை மின் கருவி செய்யப் பயனாகும்.
எப்பாக்சி ரெசின். சிறந்த வெப்ப எதிர்த் தன்மை, வேதி நிலைத் தன்மை, உயரிய பசைத் தன்மை கொண்ட, இது பசை பூச்சு, மேசை மேற்பரப்பு, மின்னணுக் கருவி செய்யப் பயன் படுகிறது.
பாலி யூரித்தேன். டொலுயீன்-2,4, டை அசோசயனேட், ஹெக்சா மெத்திலீன் டைஅமீனுடன் வினை புரிந்து இந்நுரை நெகிழியைத் தருகிறது. இணங்கக் கூடிய விறைப்புத் தன்மை, இத்தன்மையை விரும்பியவாறு கூட்டவும், குறைக்கவும் முடிதல், கரைப்பானை எதிர்த்து நிற்கும் திறன், அமிலம், காரம், ஆக்சிஜனேற்றி இவற்றால் கெடாமை, மெத்தை, ஒலி எழுப்பான், குளிர் பெட்டியில் வெப்பத் தடைப் பொருளாக விளங்கல், ஊர்தி இருக்கை, பெரும் தொட்டி, பெட்டி முதலியவை செய்யப் பயன் படல் ஆகியவை இதன் சிறப்புகள்.
பேக்கலைட். இது விறைப்பானது. எளிதில் எரியாது. வெப்பம் மற்றும் மின்சாரத்தைத் தடை செய்ய வல்லது. பல வகை மின் கருவிப் பகுதிகள், பல கருவிகளின் கைப்பிடிப் பகுதி, கலக்கி, வானொலிப் பெட்டி போன்றவற்றிற்குப் பயன் படுகிறது. மேலும் அயனி-மாற்றியாகப் பயன்படுத்தும் போது, நீரில் உள்ள உலோக அயனிகளை ஏற்ற ஹைட்ரஜன் அயனியைப் பதிலுக்கீந்து, நீரைத் தூய்மை செய்யும் பணியில் உதவ வல்லது.
யூரியா ஃபார்மால்டிஹைடு ரெசின். மிகக் கடினமான, நிறங் கெடாத, சிறந்த மின் தடைப் பொருளாகும். புட்டி மூடி, கைப்பிடி, மின் விசைக் கருவி செய்ய இது உதவுகிறது. யூரியாவிற்குப் பதிலாக, மெலமீனைப் பயன் படுத்தினால் விளையும் ரெசின் அழுக்கடையாத மேற்பரப்பு வழங்கும். நேநீர்க் கோப்பை, மேசைப் பரப்பு (ஃபார்மிகா), இவற்றைச் செம்மையாக்குகிறது.
சிலிக்கான் அல்லது சிலாக்சேன். இது கரிம அடிப்படையின்றி உருவாக்கப்பட்ட பல்லுறுப்பி. தீப்பற்றிக் கொள்ளும் தன்மை இதற்குக் கிடையாது. 400°C வரையிலான வெப்ப நிலையை நன்கு தாங்கும். சிறந்த மின் தடைப் பொருளான இது, நெடிய சங்கிலி வடிவமுடைய பல்லுறுப்பி உயவுப் பொருளாகப் பயன் படும். உடலியல் தன்மை இராமையால், சிலிக்கோன் பல்லுறுப்பி பல வகைப் பயன்களோடு, செயற்கை உடலுறுப்பு, குருதிக் குழாய் போன்றவற்றையும் ஆக்க உதவும்.
பாலிசல்ஃபோன். இது 150°C வரையிலான வெப்பத்தைத் தாங்கும். சிறந்த வலிமையும், திண்மையும் பெற்றது. இது தானூர்திப் பகுதி, மின்னியல் கருவி, கணிப் பொறிப் பகுதி ஆகியவை செய்யப் பயன் படுகிறது. —வி.என். வேதாந்த தேசிகன் துணை நூல். J.H. Briston and C.C.Gosselin, Introduction to plastics, Newnes–Butterworths, London, 1970; J.Harry Dubois and Frederick W.John, Plastics, Sixth Edition, Van Nostrand Reinhold Company, New york, 1981.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 152)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tpxwyxdb/
தமிழ்“நெகிழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tpxwyxdb/APA
Oliyon Research. (2026). நெகிழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tpxwyxdb/MLA
"நெகிழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tpxwyxdb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment