அருச்சுனன்
aruccuṉaṉ
பாண்டு அரசனின் ஐந்து மக்களுள் மூன்றாம் மகன்.
பாண்டு அரசனின் ஐந்து மக்களுள் மூன்றாம் மகன். தீராத நோய் பற்றியிருந்த காரணத்தினாலும், முனிவர் ஒருவரின் சாபத்தினாலும், மாத்திரி, குந்தி என்று இரண்டு மனைவியர் இருந்தபொழுதிலும் பாண்டு மக்கட்பேறு இல்லாதவனாக இருந்தான். ஆகவே குந்தி தன் கணவர் பாண்டுவின் இசைவுடன், துருவாச முனிவர் அருளினால் பெற்ற மந்திரத்தால் தருமராசன். வாயுதேவன், இந்திரன் ஆகிய தேவர்களைத் துதித்து அவர்கள் வழியாக முறையே தருமபுத்திரன், பீமன், அருச்சுனன் என்னும் மக்களைப் பெற்றாள். பின்னர்த் தன் சக்களத்தியாகிய மாத்திரிக்குத் துருவாச முனிவர் அருளிய மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்து, அசுவினி தேவர்கள் (இரட்டைத் தேவதைகள்) வழியாக நகுலன், சகாதேவன் என்னும் இரண்டு மக்களை அவள் பெறுமாறு செய்தாள். இவர்கள் ஐவருமே பாண்டு குமாரர்கள் (பஞ்ச பாண்டவர்கள்) என்று சொல்லப்படுகிறார்கள். ஐவர்களும் நடுமகனாக இருப்பவன் அருச்சுனன். ஆகவே அவனை ‘மத்தியமன்’ என்றும் குறிப்பிடுவர். அவன் இந்திர தேவனால் குந்திக்குப் பிறந்தவன். ‘அருச்சுனன்’ என்ற சொல்லிற்கு ‘வெண்மை’ ‘தூய்மை’ என்பது பொருள். அருச்சுனன் தன் எண்ணங்களிலும் செய்கைகளிலும் தூய்மையாக இருந்தமையினால் அவன் அருச்சுனன் என்று அழைக்கப்படுகிறான். இந்திரனுடைய மகன் என்பதால் ‘ஐந்திரி’ என்றும், குந்தியின் மைந்தன் என்பதால் ‘கௌந்தேயன்’ என்றும், பாண்டு அரசனின் மகன் என்று பொதுவாகச் சொல்லப்படுவதினால் ‘பாண்டவன்’ என்றும் குறிப்பிடப்படுகிறான். குந்திக்குப் ‘பிருதா’ என்று மற்றொரு பெயரும் உள்ளது. ஆகவே பிருதாவின் மைந்தனாதலினால் ‘பார்த்தன்’ என்றும் அழைக்கப்படுகிறான். இவன் அழகிய உடலமைப்புடன் கூடியவன்; நேர்மையானவன்; தன்மானமுள்ளவன்; தாராள மனப்பான்மையுடன் கூடியவன்; வில்வித்தையில் மிகவும் தேர்ச்சி பெற்றவன்; அம்பு எய்வதில் இவனுக்கு நிகர் ஒருவரும் இல்லை; இடக் கையினாலும் அம்பு எய்துவதில் மிகத் திறமை பெற்றவன்; துரோணரிடம் வில்வித்தை பயின்று மிகச் சிறந்த மாணவன் என்று புகழ் பெற்றவன்; துரோணரின் அன்பிற்குப் பாத்திரமாவைன். இவன் அம்பு எய்வதில் தன்னிடமுள்ள தேர்ச்சியின் மூலம், துருபத நாட்டு அரசன் வைத்த ‘பணயத்தில்’ வெற்றி பெற்று அவன்மகள் ‘திரௌபதி’யை அடைந்தும், தாயின் சொற்படி தன் நான்கு உடன்பிறந்தாரோடு அவளை மணந்தான். தமையனான தருமபுத்திரன், தாய் குந்தி இவர்களின் சொற்களுக்குக் கட்டுப்பட்டுக் கெளரவர்களாகிய துரியோதனன், அவன் உடன் பிறந்தோர் ஆகியோரால் இழைக்கப்பட்ட பல இன்னல்களையும் பொறுத்துக் கொண்டிருந்தான். இவன் பாண்டவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு கட்டுப்பாட்டின்படி திரெளபதியுடன் வாழ்ந்து வருகையில், அறியாமல் அக்கட்டுப்பாட்டை மீறிய தன் காரணத்தால், அருச்சுனன் புனிதயாத்திரை (தீர்த்த யாத்திரை) செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. புனிதயாத்திரை செய்தபொழுது பரசுராமரிடமும் வில்வித்தையைப் பயின்றான். பயணத்தின் பொழுது ‘உலூபி’ என்ற நாக கன்னிகையை மணந்து அவள் வாயிலாக ஐராவத்து (அறவன்) என்ற மகனையும், மணிபுரநாட்டு அரசகுமாரி ‘சித்திராங்கதா’வை மணந்து அவள் வாயிலாகப் பப்புருவாகன் என்ற மகனையும் பெற்றான். பிறகு துவாரகையை அடைந்து கண்ணனின் அறிவுரையாலும் உதவியாலும் ‘பலராமரின்’ விருப்பத்திற்கு மாறாக அவர் உடன்பிறந்த கபத்திரையை மணம் செய்து கொண்டான். அவள் மூலம் ‘அபிமன்யு’ என்னும் ஆற்றல்மிக்க மகனைப் பெற்றான். மகாபாரதப் போரில் தன் மகன் அபிமன்யு கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த சயத்தரதனை மறுநாள் சூரியன் மறைவதற்கு முன் கொல்வேன் என்று சூளுரைத்துத் தன் தேரோட்டியாக விளங்கிய கண்ணனின் உதவியினால் அதனை நிறைவேற்றினான். தேவர்களுக்குப் பகைவனாக இருந்த ‘நிவாத கவசர்கள்’ என்ற அசுரர்களுடன் தனிமையில் போராடி அவர்களை வென்று தேவர்களால் பெருமைப்படுத்தப் பெற்றான். காண்டவ வனத்தை எரிப்பதற்கு அக்கினி தேவனுக்கு உதவி புரிந்தமையினால் அக்கினிதேவன் காண்டீபம் என்ற பெயருடைய மிகச் சிறந்த வில்லைப் பரிசாக அளித்தான்.
சூதாட்டத்தில் கௌரவர்கள் செய்த சூழ்ச்சிகளினால் நாட்டைத் துறந்து, தன் உடன்பிறந்தார், திரெளபதி ஆகியோருடன் 12 ஆண்டுக் காலம் காட்டிலும், ஓராண்டு மறைவாக (அஞ்ஞாதவாசம்) விராட நாட்டிலும் வசித்து வந்தான். காட்டில் வாழ்ந்த பொழுது, தங்களுக்குப் பல வகையிலும் இன்னல் செய்து தங்களை நாட்டைவிட்டுத் துரத்திய கெளரவர்களுடன் போர் புரிவதற்காகத் தெய்வீகப் படைக் கலங்களைப் பெற இமயமலைக்குச் சென்று கடுந்தவம் புரிந்தான். சிவபெருமான் வேட உருவம் தாங்கி அருச்சுனனின் வீரத்தைச் சோதித்தார். ஆற்றல்மிக்க ‘பாசுபதாத்திரம்’ என்னும் ஆயுதத்தைச் சிவன் அருச்சுனனுக்கு அளித்தார். நான்கு திசைப் பாலகர்களான இந்திரன், இயமன், வருணன், குபேரன் – ஆகியோர் படைக்கலங்களை அருச்சுனனுக்குப் பரிசாக அளித்தனர். 12 ஆண்டுகளுக்குப் பின்னர் விராடநாட்டில் ஒருவரும் அறியாதவாறு மறைவாக ஓராண்டு வசித்த பொழுது “பிருகன்னளை” என்ற பெயரில் ‘அலி’ உருக்கொண்டு, அந்நாட்டு அரசகுமாரி ‘உத்திரை’க்கு நாட்டிய ஆசிரியனாகவும் பாடல் ஆசிரியனாகவும் இருந்தான். துரியோதனன் விராடநாட்டுப் பசுக்களைக் கவர்ந்து (கோக்ரசு) அந்நாட்டுடன் போர் தொடுத்தபொழுது, விராடநாட்டு அரசகுமாரன் உத்தரகுமாரனைத் தேரில் வைத்துக் கொண்டு, மயானத்தில் பாதுகாப்புடன் வைத்திருந்த தன் காண்டீபத்தை எடுத்துக்கொண்டு, போர்க்களத்தில் துரியோதனனை வென்று பசுக்களை மீட்டான். அப்போது போர்க்களத்தில் தன் மகன் ‘அபுமன்யு’வுடன் எதிர்த்துப் போர் புரிய வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. அவ்வமயம் அருச்சுனன் ‘பிரகன்னளை’ வேடத்தில் இருந்தமையினால் அபிமன்யுவால் தன் தந்தையை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை.
மகாபாரதப் போரில் அருச்சுனனின் பங்கு மிக மிகச் சிறந்தது. ‘பகவத் கீதையின்’ தோற்றத்திற்குக் காரணமாக இருந்தவன் அருச்சுனன். போரில் கண்ணனைத் தன் தேரோட்டியாக இருக்குமாறு வேண்டினான். முதல் நாள் போர் தொடங்குமுன் பகைவர்களாக இருக்கிற தன் உறவினர்களையும், துரோணர் முதலான ஆசிரியர்களையும் பார்த்து மனக் கலக்கம் அடைந்தபொழுது, கண்ணன் வேதசாரத்தையும் ஆன்மாவின் தத்துவங்களையும் சத்திரியன் கடமையையும் எடுத்துக் கூறிப் போர் புரியத் தூண்டினான். போரில் மிகச் சிறந்த வீரர்களான வீடுமர், கர்ணன், சயத்திரதன் போன்றவர்களையும் கௌரவர்கள் பலரையும் கொன்றான்.
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றியடைந்த பிறகு, தருமர் அத்தினாபுரத்தை ஆண்டு கொண்டிருந்தபொழுது ‘அசுவமேத வேள்வி’ செய்தார். அவ்வமயம் அருச்சுனன் பாதுகாப்பில் வேள்விக் குதிரை அனுப்பப்பெற்றது. குதிரையைப் பின்பற்றிப் பல நாடுகளுக்குச் சென்று, பல அரசர்களுடன் போர்புரிந்து அவர்களை வென்றான். மணிபுர நாட்டை அடைந்தபொழுது தன் மகனான பப்புருவாகனனுடன் போர் புரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. போரில் தன் மகனாலேயே கொல்லப்பட்டான். ‘உலூபி’ என்னும் தன் மனைவியின் மந்திர ஆற்றலால் மீண்டும் உயிர் பெற்றான்
பாரத நாடு முழுவதும் சுற்றிவிட்டுப் பேரோடும் புகழோடும் அத்தினாபுரத்திற்குத் திரும்பியவுடன் அசுவமேத வேள்வி செய்து முடிக்கப்பட்டது. பின்னர் யாதவர்களின் கலகத்தின்பொழுது கண்ணனால் துவாரகைக்கு அழைக்கப்பட்டான். வாசுதேவன், கண்ணன் ஆகியோரின் முடிவுக் காலத்தில் அவர்களுக்கு ஈமச் சடங்குகளைச் செய்தான். பின்னர் அபிமன்யுவின் மகனாகிய பரீட்சித்திற்கு முடிசூட்டித் தன் உடன் பிறந்தார்களுடன் அருச்சுனன் சுவர்க்கம் அடைந்தான்.எஸ்.செ
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 805)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tp8hk6gm/
தமிழ்“அருச்சுனன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tp8hk6gm/APA
Oliyon Research. (2026). அருச்சுனன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tp8hk6gm/MLA
"அருச்சுனன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tp8hk6gm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment