மேலாண்மை, நிருவாகம், வாணிகம், கல்வி போன்ற துறைகளில் பணியாற்றுவோர் ஆவர். இத்தொழில்களில் உடல் வலிமையைப் பயன்படுத்தும் உழைப்பின் தேவை இருக்காது. ஆதலின், இத்தகைய தொழிலாளர் உடலுழைப்பற்ற தொழிலாளர் (White Collur Workers) எனச் சொல்லப்படுகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் இவர்கள் அணியும் துணியின் பாணியை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு சொல்லப்பட்டனர். இவர்களை ‘நடுத்தர உழைக்கும் இனம்’ (Middle Class Proletariat) எனவும் குறிப்பிடுகின்றனர். தொழிற் புரட்சிக்குப் பின்னரும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரும் உடலுழைப்பற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியுற்றது. தொழில்நுட்பத் தொழிலாளர்களின் (Blue Collar Workers) எண்ணிக்கை உலக நாடுகளெங்கிலும் வளர்ச்சி பெற்று வருகிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1955–ஆம் ஆண்டில் இவ் இருவகைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் முதல் முறையாக ஒத்திருந்ததாகப் (Equalled) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உடலுழைப்பற்ற தொழிலாளர்களுள் உயர்ந்த ஊதியம் பெறுபவர்களும், மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்களும், உயர் கல்வி பெற்றவர்களும், நடுத்தரக் கல்வி அறிவு பெற்றவர்களும் உண்டு. இவர்களுள் பெரும்பாலானவர்கள் அலுவலகப் பணியாளர்களாகவும், நடுத்தரப் பொருளாதாரக் குடும்ப வகுப்பினராகவும் (Middle Class) இருப்பர். இவர்களின் பணி மேசை, நாற்காலி உட்பட்ட ஒரே இடத்தில் ஆற்றும் பணியாதலின் இவர்களை மேசையடித் தொழிலாளர் எனவும் கூறுகின்றனர். இந்தியத் தொழிலாளர் நிலையை ஆராய்ந்த அரசுத் தொழிலாளர் குழு (Royal Commission on Labour) 1931–ஆம் ஆண்டிலேயே இந்திய உடலுழைப்பற்ற தொழிலாளர்களிடையே கல்வி அறிவும் வேலையின்மையும் மிகுந்திருப்பதாகத் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இந்தியக் கல்வி முறையும் பண்பாடும் இத்தொழிலைப் பேரளவில் மக்கள் நாடும் வகையில் அமைந்துள்ளது. இந்தியக் கல்வி முறையில் போதிய அளவு தொழிற்பயிற்சி அளிக்கப்படாததால், மக்கள் உயர் கல்வி கற்றாலும் வாணிக, அலுவலகப் பணிகளை மட்டுமே செய்யத் திறமையுள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர். எனவே, இவர்களிடையே வேலையின்மை மிகுந்து காணப்படுகிறது. அனைத்திந்திய கல்வி கற்றும் வேலையில்லாதவர் (Educated Unemployed) எண்ணிக்கையில் 62 விழுக்காட்டினர் (1985) வாழ்வியல், அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவராவர். இவர்கள் தங்களை உடலுழைப்பற்ற பணிகளுக்கு மட்டுமே தகுதியுடையவர்கள் எனக் கருதுகின்றனர்.