சாயந்தோய்த்தலும் அச்சிடலும்
cāyantōyttalum acciṭalum
இழைகளையும், உடைகளையும் தோற்றப் பொலிவுடன் சீர்செய்யும் முறைக்குச் (finishing processes) சாயந்தோய்த்தலும் அச்சிடலும் முக்கியமாகும்.
இழைகளையும், உடைகளையும் தோற்றப் பொலிவுடன் சீர்செய்யும் முறைக்குச் (finishing processes) சாயந்தோய்த்தலும் அச்சிடலும் முக்கியமாகும். பெரும்பாலான துகில் வகைளை எக்கட்டத்தில் வேண்டுமானாலும் சாயமேற்றலாம். உயர் வகைக் கம்பளிகளுக்குத் தனி இழை வடிவிலேயே சாயமேற்றப்படும். தடித்த கம்பளி நூலுக்கு (worsted yarn) உருளை நூற்கண்டு சாயமேற்றல் ஏற்றதாகக் கருதப்படுகிறது. துணித் தயாரிப்பாளர் தனித் துணிக்குச் சாயமேற்றலையே பெரும்பாலும் விரும்புகின்றனர். ஏனெனில், தேவை குறைவான துணிகளை அளவுக்கு மேல் குவித்து வைப்பதைத் தவிர்க்கவும், சாயமேற்றப்படாத வெண்ணிறத் துணிகளைச் சேமித்து வைத்துத் தேவைப்படும் போது, விரும்பும் வண்ணத்தை ஏற்றவும், இம்முறை தகுந்தது. பயன்படுத்தப்படும் சாயம் துணியின் தன்மையையும், குறிப்பிட்ட தேவையையும் பொறுத்ததாகும். சில தேவைக்கு ஒளி வழி நிறமிழப்புத் தவிர்க்கப்பட வேண்டும்.
கம்பளி, பட்டு மற்றும் நைலான் துணிகளுக்கு அமில வகைச் சாயங்களும், செல்லுலோஸ் இழைகளுக்கு நேரடிச் சாயமும் (direct or substantive dyes) பயனாகின்றன. ஊன்றும் சாயங்களைப் (mordant dyes) பயன்படுத்துவதற்குப் பிற வேதிப் பொருள்களின் சேர்க்கை தேவைப்படுகிறது. இவ்வாறு சேர்க்கப்படும் சில உப்பு, சாயப் பொருளுக்கும் துணி இழைக்கும் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. பருத்தி, ரேயான் போன்ற செல்லுலோஸ் இழைகளையும், கம்பளி, பட்டுப் போன்ற இழைகளையும், தக்க உப்புக் கரைசல்களில் நனைத்துப் பின்பு, ஊன்றுகைச் சாயத்தில் தோய்க்க வேண்டும், செல்லுலோஸ் இழைக்கு நிறமேற்றப் பயன்படும் கந்தகச் சாயங்கள் மலிவானவை; ஆனால் பளபளப்புக் குன்றிய தோற்றத்தைத் தரக் கூடும். அசோயிக் சாயங்கள் நீரில் கரையா நிறப் பொருள்கள்: உள்ளுறு சாயங்களான (ingrain dyes) இவை இரு வேறு வேதிப் பொருள்கள் துணிப் பரப்பின் மீது கலப்பதால் தோன்றுகின்றன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> இணைத்தல் வினையில் பங்கு பெறும் இரு சேர்மங்களுள் ஒன்றின் கரைசலில் துணியை முதலில் நனைத்துப் பின்பு, டைஅசோ ஆக்கலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பொருளுடன் வினைப்படுத்த வேண்டும். தொட்டிச் சாயங்கள் எனப்படும் நீரில் கரையா வகையைக் காரம் சேர்ந்த சோடியம் ஹைட்ரோசல்ஃபைட் கரைசலுடன் வினைப்படுத்தி, நிறமற்ற, ஆனால், நீரில் கரைய வல்ல சோமங்களாக மாற்றி, துணியை இதன் கரைசலில் நனைத்து, உலர்த்துகையில் மென்மையான ஆக்சிஜனேற்றத்திற்கு உட்படுத்துதல் தேவை. இச்சாயங்கள் திடமிக்கவை; சிதறு வகைச் சாயங்கள், நுண்தூள் வடிவிலான நீரில் கரையா நிறமிகளாகும். கரிம வகையைச் சார்ந்த இலை, நீர் தவிர்க்கும் இழைகளான பாலி எஸ்ட்டர், நைலான், செல்லுலோஸ் அசெட்டேட்டுகளுக்குச் சிறந்தவை. வினையுறு சாயங்கள் இழைகளுடன் நேரடியாக வினையுற்று, நிறமிழக்காத தன்மையைப் பெறுகின்றன.
துணி மீது அச்சிடல். அழகூட்டும் நோக்குடன் துணிகளின் மீது கோலங்களையும், ஓவியங்களையும் அச்சுருவமாகப் பதித்தல், துணியின் மீது துருசைக் (brush) கொண்டு கையால் பூசும் முறையில் தொடங்கியதெனினும், துணியின் மீது அச்சிடல் தொன்மை வாய்ந்த கலையாகும். கி.மு. 400 ஆம் ஆண்டிலேயே இம்முறை இந்தியாவில் வழக்கில் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. எகிப்தின் வட பகுதியில் ஆக்மின் என்னுமிடத்தில் இரு காடுகளிலிருந்து புதை பொருள்களை மீட்ட போது, அச்சு வகைக் கட்டைக் கற்கள் கிடைக்கப் பெற்றன. பெருவிலும், மெக்சிகோவிலும் அச்சிடப்பட்ட துகில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
துணி அச்சிடலில் கட்டைக் கல், உருளை, சல்லடை, காகிதம் ஒற்றி அச்சிடல் என நான்கு முதன்மையான உத்திகள் அடங்கியுள்ளன. இம்முறைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கெட்டியான பசையாக வண்ணம் பூசப்பட்டு, பின்பு துணியின் பரப்பின் மீது நிலை நிறுத்தப்படும். நிலை நிறுத்துவதற்கு (fixation) நீராவியில் சூடு படுத்துதல் ஏற்றது. பின்பு, மிகையான வண்ணப் பொருள் துணியின் பரப்பிலிருந்து கழுவி அகற்றப்படும். அச்சிடும் பாணிகள் நேரடி, வெளியேற்றம், பகுதி மூடல் என வகையிடப்பட்டுள்ளன. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ---->
நேரடி அச்சிடல் முறையில், வண்ணப் பசை நேரடியாகத் துணியின் மீது அச்சிடப்படுகிறது. வெளியேற்ற அச்சிடலில், துணியின்மீது சமச் சீராக ஓர் அடிப்படை வண்ணம் ஏற்றப்படுகிறது. துணியின் மீது அமைந்துள்ள வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் மட்டும் தக்க வேதிப் பொருளைக் கொண்டு அகற்றினால், நிற நீக்கம் செய்யப்பட்ட வெண்மைப் பகுதி ஓர் ஓவிய வடிவைக் கொடுக்கும். இந்நிறத்தை வேதி முறையில் நீக்குவதற்குப் பயன்படும் வேதிப் பொருளுடன் மற்றொரு வண்ணத்தாலான ஓவியம் பதிவாகும். பகுதி மூடல் முறையில், துணியின் மீது தடை எனக் குறிப்பிடப்படும் ஒரு பொருளை வண்ணப் பூச்சு ஏற்றப்படாத பகுதிகளின் மீது பூச வேண்டும். பின்பு துணியைச் சாய அச்சிடலுக்குட்படுத்தினால் தடையால் மூடப்பட்ட பகுதிகள் வண்ணமேற்கா. துணியின் மீது தடை வகை வேதிப் பொருளைப் பூசிய பின்பு, சோடியம் ஹைட்ராக்சைடு கரைசல் கொண்டு நீக்கினால், நுண் மடிப்பு (plisse) வகை அச்சுத் தோற்றம் உருவாகும். சோடியம் ஹைட்ராக்சைடு பருத்திக்கும், ஃபீனால் நைலானுக்கும் நுண் மடிப்புத் தோற்றத்தைத் தருகிறது.
கட்டைக்கல் அச்சிடல். ஒரு மரக்கட்டையில் தேவைப்படும் உருவம் அல்லது கோலத்தைச் செதுக்கினால் செதுக்கப்பட்ட உருவம் கட்டையின் அடித்தளத்திலிருந்து முன்னோக்கி வருவது போன்று தோற்றமளிக்கும். மிகப் பெரிய பரப்பளவுக்கு விரிந்துள்ள பாணியாக இருப்பின், இந்த ஓவியத்தைக் குழிவான அமைப்பாகச் செய்து, இப்பள்ளங்களைக் கம்பளி அட்டைகளால் நிரப்ப வேண்டும். மெல்லிய கோடுகள் வரையப்பட வேண்டிய இடங்களில் தாமிரக் கம்பிகள் பதிக்கப்படும். நன் முறையில் அச்சுகள் பதிலிடப்படுவதற்கு இக்கம்பிகள் பதிக்கப் படுகின்றன. மேலும், இக்கட்டைகளின் மீது புரி ஊசிகள் அச்சிடப்பட வேண்டிய கோலத்தின் பளிச்சிட வேண்டிய பகுதிகளில் பொருத்தப்படும். ஒரு மேஜையின் மீது போர்வையைப் பல அடுக்குகளாக விரித்து, அவற்றின் மீது ரப்பராலான கனமான ஒன்றைப் பொருத்த வேண்டும். அச்சிடப்பட வேண்டிய துணியை இந்த ரப்பர் படலத்தின் மீது ஒட்ட வேண்டும். வண்ணத்தை ஒரே சீராகப் பூசி, அதன் மீது தகுந்த கோலத்தை அச்சிட வேண்டும். வண்ணங்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பதித்து, முழு ஓவியத்தையும் பெறலாம். வணிக அளவில் பயன்படுத்துவதற்குக் கட்டைக்கல் அச்சிடல் முறையில் உழைப்பும், செலவினமும் கூடுதலாகத் தோன்றினாலும், அழகு மிளிர் ஓவியங்கள் இம்முறையிலேயே பெறப்படும்.
உருளை அச்சிடல். நீண்டு கொண்டே போகும் துணிப் பரப்பில் ஒரே வகைக் கோலத்தை இடம் விட்டு அச்சிட வேண்டியிருப்பின், உருளை முறை பயன்படுத்தப்படுகிறது. 1783 இல் முதன்முதலாக நிறுவப்பட்ட ஓர் எந்திரத்தின் திருத்தப்பட்ட அமைப்பு தற்போது பயனாகிறது. (படம் 6) வார்ப்பிரும்பினால் உருவாக்கப்பட்ட ஓர் உருளை மீது தொங்கும் துணியற்ற ஒரு விரிப்பு நகருகிறது. இவ்விரிப்பு சாயமேற்றப்பட வேண்டிய துணிக்குத் தாங்குந்தளமாகிறது. இத்தளத்தின் மீது காரிக்கன் தாங்கி எனும் காடா வகைத் துணி பரப்பப்படும். தற்போது, இதற்காக நைலானாலான தொடர்ச்சியான வார் பயனாகிறது. தாங்குந்தளமும், அதன் மீதான துணிப் பரப்பும் நன்கு இழுத்துக் கட்டப்படுவதால், உருளை சுழலுகையில் அதை ஒட்டியுள்ள துணிப் பரப்பும் நகரும். ஓவியத்தில் இடம் பெறும் வண்ணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஓர் உருளையின் பகுதி வடிவம் செதுக்கித் துளையிட வேண்டும். ஒரு தண்டின் மீது அமைக்கப்பட்ட தாமிரக் கூட்டின் மீது உருளையில் செதுக்கிய ஓவியம் பதிக்கப்படுகிறது.
பிசிறில்லாத அச்சுப்பதிவு தோற்றுவிக்கப்படுவதற்குச் செதுக்கல் ஒரு கலையாகப் பின்பற்றப்படல் வேண்டும். ஒவ்வோர் அச்சு உருளைக்கும் ஒரு வண்ணப் பூச்சு உருளை இணைந்து செயல்படும். இது அச்சு உருளைக்குள் ஒரு வண்ணப் பூச்சுப் பசை அல்லது கரைசலில் பகுதியளவு அமிழ்ந்திருக்கும். உருளைகளின் செதுக்கப்பட்ட பகுதிகளில் பூசப்பட்டுள்ள பசையில் மிகைப் பகுதியைக் கூரிய விளிம்புடைய பெரிய துடைப்பான்களால் (doctor blades) அகற்றலாம். பிசிறுகளை அகற்றப் பஞ்சுத் துடைப்பான் (bint blade) பயன்படுகிறது. மைய உருளையிலிருந்து விலகி அச்சிடப்பட்ட துணி ஒரு நீராவி அறைக்குள் செல்ல, அங்கு வண்ணம் நிலை நிறுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து உலர்தல் நிகழும். இவ்வகை எந்திரம் துணியின் ஒரு பக்கம் மட்டுமே அச்சிட வல்லது என்றாலும், துணியின் இரு புறமும் அச்சிடுவதற்கு ஏற்ற இரட்டை உருளை எந்திரமும் (duplex roller) பயன்படுத்தப்படும்.
நவீன அச்சு எந்திரங்கள் யாவும் நுட்பமான கருவிகளாகும். கவனமாக வடிவமைக்கப்பட்ட உருளை தாங்கிகளையும், நீரியக்க (hydraulic) அல்லது காற்றியக்க (pneumatic) இயங்கு முறைகளையும் பொருத்தி, அழுத்தத்தையும், இணங்கு தன்மையையும் (flexibility) சமச்சீராக்கலாம். ஒரு கருவி முகப்பைக் கொண்டு அழுத்தத்தைச் சீராக்கலாம்; ஒவ்வோர் உருளைக்கும் தனித்தனியே மின்காந்த வகைக் கட்டுப்பாட்டமைப்பு உண்டு; உருளை ஓட்ட விரைவை வேறுபடுத்துவதற்கு இயக்கிகள் உள்ளன.
தடைவகை அச்சிடல். அச்சு மையில் வேண்டுமென்றே கலக்கப்படும் சில வேதிப் பொருள்கள், அடுத்துப் பயன்படுத்தப்படும் அச்சு மையில் இடம் பெறும் சாயம் முதலில் பதிக்கப்பட்ட சாயத்தின் மீது பதியாமல் தடுக்க வல்லன. இவ்வகை வேதிப் பொருள்கள், ஒதுக்கும் பொருள்கள் (reserving agents) எனப்படும். எடுத்துக்காட்டாக, காரப்பொருள் கலந்த அச்சு மையைப் பயன்படுத்தி, ஒரு சிவப்பு நிறச் சாயம் ஏற்றப்பட்டால், அதன் பின்பு அனிலீன் வகைக் கறுப்புச் சாயம் அச்சிடப்படுகையில், இக்கறுப்பு நிறம் சிவப்பான பகுதிகளில் படுவதில்லை. முதல் மையிலுள்ள காரம் இம்மேல்படிதலைத் தடுக்கிறது. இதன் விளைவாக ஒரு கறுப்புப் பின்னணியில் சிவப்பு உள்ளமைப்புத் தோன்றுகிறது.
வெளியேற்ற அச்சிடல் (discharge printing). ஒரு குறிப்பிட்ட சாயத்தை ஏற்றிய பின்பு, தோற்றுவிக்கப்பட வேண்டிய கோலத்திற்குத் தகுந்தவாறு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் நிறத்தை நீக்கும் பொருட்டுச் சில வேதிப் பொருள்களைச் (குறிப்பாக, ஹைட்ரோசல்பைட் வகையை) சேர்க்க வேண்டும். இதனால் வண்ணப் பின்னணியில் வெண்ணிறக் கோலம் உருவாகிறது. இந்நிற நீக்கியால் பாதிக்கப்படாத ஒரு நிறமியை இரண்டாம் அச்சு மையில் சேர்த்தால், பின்னணி, ஓவியம் இரண்டுமே வெவ்வேறு வண்ணங்களில் அமையும். இதற்கு நிற வகை வெளியேற்ற அச்சிடல் (colour discharge printing) எனப் பெயர்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> தொட்டிச் சாய முறை. இம்முறையில் அச்சு மையில் சாயம், காரம், ஒரு குறைப்பான் ஆகியவை இடம் பெறுகின்றன. தகுந்த விளைவுகளுக்குத் துணியை நீராவியில் பதப்படுத்தும் வரை நிறமியை ஒடுக்குதல் கூடாது. இந்நோக்கத்துடன் சோடியம் ஃபார்மால்டிஹைடு சல்பாக்சிலேட், தயோயூரியா டைஆக்சைடு ஆகியன குறைப்பான்களாகப் பயன்படுகின்றன. இப்பொருள்களின் ஒடுக்கும் திறன் உயர் வெப்பநிலையிலேயே முழுமை பெறுகிறது. முற்ற வைப்புத் தொட்டி (vat ager) எனப்படும் ஒரு நீராவி அறையில் ஏழு நிமிடங்களுக்குச் செலுத்தி இவ்வண்ணங்களை நிலை நிறுத்தலாம். அமிலமிடப்பட்ட, ஆக்சிஜனேற்ற வல்ல கரைசலில் கழுவி, வண்ணத்தை நிலை நிறுத்தலாம். கெட்டியான பசைக்குப் பதிலாக பால்மங்களைப் (emulsions) பயன்படுத்தியும் தொட்டிச் சாயங்களை ஏற்றலாம்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> திடீர் முற்ற வைப்பு (flash ageing). தொட்டிச் சாய முறையில் பயன்படுத்தப்படும் குறைப்பானைத் தவிர்த்தல் இம்முறையின் அடிப்படைக் கொள்கையாகும். சோடியம் ஹைட்ராக்சைடில் கரையாத கெட்டியாக்கும் பொருளொன்று தொட்டிச் சாயத்துடன் கலக்கப்படுகிறது. இக்கலவை துணியின் மீது அச்சிடப்பட்டு, உவர்த்தப்படுகிறது. ஓவியத்தை உடனேயே முழுமையுறச் செய்யலாம் அல்லது பின்பு தேவையான மற்றொரு சமயத்தில் நிலை நிறுத்தலாம். இறுதியாகத் துணியை எரிகாரமும், ஹைட்ரோ சல்ஃபைட்டும் கலந்த பொருள் கொண்ட திணிப்பியின் வழியே செலுத்தி, பின்பு விரைவாக நீராவிக் கலனில் இட வேண்டும், நிற நிலையாக்கம் அரைகுறையாக நிற்பதையும், அச்சுப் பதிக்கப்பட்ட பகுதியில் நிறப் பாய்வு நிகழ்த்தலையும் தடுக்கும் பொருட்டுச் சாயப் பொருளின் துகள் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.
நாஃப்தால் அச்சிடல். பீட்டா—ஆக்சி நாஃப்தாலிக் அமிலத்தின் (β-oxy-naphtholic acid) வழிப் பொருள்களான நாப்தால்கள் துணிக்கு ஏற்றப்பட்டு, இவற்றில் டை அசோ ஆக்கத்திற்குட்படுத்தப்பட்ட வண்ண உப்புகள் பூசப்படுகின்றன. இணைத்தலும், நிலை நிறுத்தலும் விரைவாக நிகழ்கின்றன. மிகையான நாஃப்தால் தேய்த்து அகற்றப்படுகிறது.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> அசோயிக் அச்சிடல். தற்போது நிறமுடைமை முடக்கப்பட்ட, டைஅசோ சேர்மங்களை நாஃப்தால்களுடன் கலந்து, துணியின் மீது பூசி, இத்துணியை நீராவி கலந்த ஃபார்மிக் அமில ஆவியில் சூடுபடுத்தும் போது இணைத்தல் வினை (coupling) நிகழ்ந்து, நிறம் நிலையாக உருவாகிறது. இதற்கு அமில வழி முற்ற வைப்பு (acid ageing) எனப் பெயர்.
வெண்ணிறத்தொட்டி எஸ்ட்டராக்கல் முறை. பொதுவாக, தொட்டிச் சாயங்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் நிறமற்று, நீரில் கரையக் கூடியவையாக உள்ளன. இந்நிலையில் அவை நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கு எஸ்ட்டராக்கல் முறையைப் பயன் படுத்தலாம்; அமிலமும், ஆக்சிஜனேற்றியும் சேர்க்கப் பட்டால், மீண்டும் நிறமுற்ற, நீரில் கரையா இயல்பைப் பெறலாம். இங்கு அமிலத்தைச் சிதைவு வழியில் உருவாக்க வல்ல பொருள்களாக அம்மோனிய உப்புகள் ஈடுபடுத்தப்படுகின்றன.
அரித்தல் வகை அச்சிடல்(etch printing). ஒரு துணியில் ஒரு வகை இழை அடித்தளமாகவும், மற்றொரு வகை இழை மேலடுக்காகவும் அமையக் கூடும். மேலடுக்கு இழைகளை மட்டும் தாக்கக் கூடிய பொருள்களால் துணியின் மீது அச்சிட்டு, பின்பு அச்சிடப்பட்ட பகுதியிலுள்ள நிறப் பொருளைச் சூடுபடுத்தி அகற்றினால், சிலை செதுக்கியது போன்ற தோற்றம் உருப்பெறும்.
கந்தை அச்சிடல் (flock printing). ஒட்டுவிப்பி (adhesive) அடங்கிய பசைகள் துணியின் மீது பூசப்- படுகின்றன. ஒட்டுவிப்பி ஈரமாக இருக்கும் போதே, இத்துணி மாறுமின்னோட்ட வகை மின்முனைகளுக்கிடையே செலுத்தப்படும். மின்னேற்றமுற்ற துணிப் பிசிறுகள் ஒட்டுவிப்பியுடன் மோதி நிலை பெறுகின்றன.
நிறமி அச்சிடல்(pigment printing). நிறமிகள் நீரில் சிதறிய நிலையில், செயற்கை பிசின்களுடன் பால்மமாக்கப்பட்டுத் துணியின் மீது பூசப்படுகின்றன. பின்பு சூடு படுத்தும் போது, எளிதில் ஆவியாகக் கூடிய பொருள்கள் வெளியேறி, பிசின் நிறப்பொருளைத் துணியின் மீது ஒட்டச் செய்யும். மற்றொரு முறையில் நிறப்பொருளைப் பிசினுடன் கலந்து பின்பு, நீரைச் சேர்த்துப் பால்மமாக்குவர்.
தாள் ஒற்றி அச்சிடுதல் (sublistatic printing). ஒரு தாளில் தக்க சாயத்தைக் கொண்டு, கோலத்தின் வடிவமைப்பைப் பதித்து, இத்தாளை துணி மீது வெப்ப வகை அழுத்த அமைப்பால் ஒட்ட வேண்டும். ஓவியம் தாளிலிருந்து துல்லியமாகத் துணிக்கு மாறி விடும். குறை அடர்த்தி (half-tone) கொண்ட ஓவியங்களை இவ்வழி முறையில் உருவாக்கலாம்.
எவ்வகையான துணி அச்சிடல் முறையாலும், கெட்டியாக்கியின் பாகுத்தன்மை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது துணையலகாகும். மரபு வழி முறைகளில் ஸ்டார்ச், ஆல்கினேட், மெத்தில் செல்லுலோஸ், ஈதர், டிரகசந்த் கோந்து (gum tragacenth) ஆகியவை கெட்டியாக்கிகளாகப் பயன்படுகின்றன.
சல்லடை அச்சிடல் (screen printing). இவ்வச்சிடலைக் கைகளாலோ, எந்திரங்களைக் கொண்டோ நிகழ்த்தலாம். ஒரு மேஜையின் மீது அடித் துணியைப் பரப்பி ,அதன் மீது சாயமிடப்பட வேண்டிய துணியை ஒட்ட வேண்டும். மரம் அல்லது உலோகத்தாலான சட்டத்தில் பொருத்தப்பட்ட பட்டு அல்லது நைலான் வலை வழியே நிறப் பூச்சு அழுத்தி ஊற்றப்படுகிறது. துணிப் பரப்பின் மீது நிறம் நன்கு சீராகப் பரவுவதற்கு உதவியாக, தேய்க்கும் தூரிகை (squcegee) பயன்படுகிறது. ஒவ்வொரு வண்ணத்திற்கும் தனித்தனி வலையமைவுகள் பயன்படுகின்றன. இவ்வலைகள் தட்டையாகவோ, உருளையாகவோ அமைக்கப்படலாம்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காக படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> அச்சிடலுக்குப் பயன்படும் வண்ணக் கலவையில் கிளிசரின், கிளைகால், யூரியா போன்ற ஈர நிறுத்திகள் கலக்கப்படுதல் கட்டாயத் தேவையாகும். இதனால் சாயத்தின் கரைதிறன் உயர்த்தப்படுகிறது. —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. Norma Hollen, et. al., Textiles, Fifth Edition, Macmillan Publishing Co., New York, 1979.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 84)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tmnuy6e7/
தமிழ்“சாயந்தோய்த்தலும் அச்சிடலும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tmnuy6e7/APA
Oliyon Research. (2026). சாயந்தோய்த்தலும் அச்சிடலும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tmnuy6e7/MLA
"சாயந்தோய்த்தலும் அச்சிடலும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tmnuy6e7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment