<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> மின்னணுவியல் சுற்றுகளில் பெருக்கிகள் (multipliers) இன்றியமையாதவையாகும். மின்னழுத்த அலைகளின் உயரம், மின்னோட்டம், அலையின் ஆற்றல் ஆகியவற்றைப் பெருக்க, பெருக்கிகள் பயன்படும். இவ்வாறு அலைகளைப் பெருக்கிகள் மூலம் பெருக்கும் பொழுது வெளிப்படும் அலைகள் மூல அலையின் வடிவத்தைப் பெற்றிரா. அலையின் வடிவம் மாறுபட்டுச் சீர்குலைவு (distortion) அடையும். சீர்குலைவு அடைவதால், ஒலிபெருக்கி போன்ற பிற கருவிகளில் தரமில்லா வெளியீடே கிடைக்கும். ஒரு பெருக்கியின் தரத்தை அதன் வெளியீட்டுச் சைசையைக் (signal) கொண்டு அறியலாம். வெளியிடும் சைகை அதன் அலை வடிவில் சீர் குலையக் கூடாது. சதுர அலைகளாக இருந்தாலும், சைன் அலைகளாக இருந்தாலும், அலைகள் சீர் குலையக் கூடாது. படம் 1இல் சதுர வடிவான அலையின் சீர் குலைவும், சைன் அலைகளின் சீர் குலைவும் காட்டப்பட்டுள்ளன. அலை வடிவின் சீர் குலைவை அளப்பதற்குச் சீர் குலைவுக் காரணியைப் (distortion factor) பயன்படுத்துகின்றனர். அலைச் சீர் குலைவுகள், மின்னணுவியல் சுற்றுகளில் பயன்படும் வெற்றிடக் குழாய்கள் மும்முனையங்களின் இயல்புகளால் ஏற்படுகின்றன. இக்கருவிகள் சீரற்ற (non-linear) இயல்புகளைப் பெற்றுள்ளமையால், வெளியீட்டில் அலைச் சீர் குலைவு ஏற்படுகிறது. காட்டாக, சீர் குலைந்த அலை கொண்ட சைகையை ஓலி பெருக்கிக்குக் கொடுக்கும் போது, வெளி வரும் ஒலியின் தரம் மிகவும் குறைந்து விடும். சீர் குலைந்த அலையால், சில கருவிகள் பழுதடையலாம். —ச. அர. பழனிச்சாமி