அருணகிரிநாதர் தமிழ் இலக்கிய உலகில் இணையற்ற புதுமையைத் தோற்றுவித்தார். தொல்காப்பியர் காலத்தில் நுண்ணுணர்வுடையோர்க்கே புலப்பட்ட வண்ணங்களைப் பாமரரும் உணரவும் சுவைக்கவும் இவர் திருப்புகழை அருளிச்செய்தார். இதனால், தமிழ் இலக்கியம் வளம்பெற்றது. அருணகிரிநாதர் இலக்கியத்தையே முதன்மையாய்க் கொண்டு கவிதைகள் புனைந்தார். இவருக்குப் பழத்தமிழர் மேற்கொண்டிருந்த நூற்றெட்டுத் தாளங்களும் உதவின. அருணகிரி நாதர்க்குப் பின்னர், பலர் திருப்புகழ் பாடினார்கள். அவர்களுள் முதலிடம் பெறுபவர் பாலபாரதி. இவர் சீவில்லிபுத்தூரில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் இராமையங்கார், உத்தர காண்டத்தின் 370–ஆம் பாடல் உரையில் இவரைப் பற்றிய குறிப்புகள் வெளிப்படுகின்றன. பாலபாரதி இராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் கவிச்சக்கரவர்த்தி கம்பனைப் பின்பற்றியே பாடியுள்ளார். உத்தரகாண்டத்தை வால்மீகியையும் அதனைத் தமிழில் பாடிய வாணிதாசனையும் முன் மாதிரியாகக் கொண்டு பாடியுள்ளார். இந்நூலுக்கு ஆசிரியர் வைத்த பெயர் இராமசெயம் என்பதே. ‘யாது நினைந்தாலும் அந்த வாழ்வு தரும் தியாக சிந்து இராமசெயம் பாட வந்து துணையாவாய்’ என்றும், ‘சுத்தகவி கம்பநாடன் முன் இனிதோதும் சொற்படி விளம்பு இராம செயத்தினை நினைந்துளோர்’ என்றும் உள்ள தொடர்கள் நூலின் பெயரைப் புலப்படுத்துகின்றன. புலவர் வழங்கிய பெயரை மாற்றிப் புலவர்களும் பொதுமக்களும் இராமசெயத் திருப்புகழ் என்றே வழங்கத் தொடங்கினர். இராமசெயத் திருப்புகழ் 370 பாடல்களைக் கொண்டது. இந்நூலுக்குப் பெயர் அறியப்படாத புலவர் ஒருவர் பொழிப்புரை எழுதியுள்ளார். இப்பொழிப்புரையில்லாமற் போனால் பல பகுதிகட்கு உரை காண்பது கடினம். இந்நூலின் பாடல்களின் முற்பகுதி தோத்திரம்; பிற்பகுதி இராம காதை, முன்பகுதியில் இவர் தம் குறைபாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கிறார். சில பாடல்களில் அற்பர்களைப் பாடாது இராம- பிரானையே பாடும்பேறு வேண்டும் என்கிறார். சில பாடல்களில் மகளிர் அழகில் மயங்கிக் கெட்டேன் என்கிறார். சில பாடல்களில் உடலின் இழிவைக் குறிப்பிடுகிறார். இந்நூலாசிரியர் நம்மாழ்வார்பால் மிக்க ஈடுபாடு உடையவர். முதலில் காப்புக் கடவுளாக நம்மாழ்வாரையே எண்ணிப் பாடுகிறார். நம்மாழ்வாரைக் காசினிப் புலவர்க்கு அரசே என்றும் பொருநைத் துறையாளா என்றும், மகிழந்தொடைமாறா என்றும், அருட் கடலுள் துணைவோனே என்றும், மறைப் பொருள் சேரத் தமிழ் ஓராயிரத்தில் அமைந்திடுவோனே என்றும், திருக்குருகைப் பெருமானே என்றும் பக்தியுடன் பாடுகிறார். இவருக்குத் திருவாய்மொழியின்பால் மிக்க ஈடுபாடு உண்டு. வடித்த சடகோபர் மொழிந்திடு தமிழ்ச் சுருதி என்றும், சடகோபர் ஆரண மொழியில் இழிந்திழிந்து என்றும் பாடும் பகுதி நினைக்கத்தக்கது. முதலாழ்வார்கள் திருக்கோவலூரின் இடைகழியில் கண்ட காட்சியைத் தானும் காணப் பாலபாரதி நயமாக விண்ணப்பிக்கிறார். ‘இடைகழிமாடே...... திருவோடும் இருசுடராம் ஆழி சங்கும் இசையோடு நீ கோயில் நின்ற இனிய பொன்மாமேனி கண்டு தொழுவேனோ’ என்று ஆசையோடு பேசுகிறார். திருமங்கையாழ்வார் மணக்கோலத்துடன் வந்த இறைவனை மறித்து அணிகலன்களைப் பறித்ததையும், எட்டெழுத்து மந்திரத்தைப் பெற்றதையும் ஆசிரியர் நினைந்து உருகுகிறார். இறைவன் ஆழ்வாருக்குக் குருவாக வருகிறான். அப்பேறு தமக்கும் வேண்டும் என்கிறார் ஆசிரியர். ‘குறைசெய் வானின் குறைகள் தீர உரைசெய் தாளும் இறையும் ஞான குருவும் ஆன உனது பாதம் அடைவேனோ’ என்று நயமுறப் பேசுகிறார். ஆதிசேடன் இறைவனுக்குக் குடையாகவும் சிம்மாசனமாகவும் பாதுகையாகவும் தெப்பமாகவும் விளக்காகவும் உடையாகவும் தொண்டுபுரிவதைப் பொய்கை ஆழ்வார் ஒரு பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனைப் பாலபாரதி, ‘ஆசனம் என அடங்கி நீள்குடை என விளங்கி, ஆடையதென வணங்கி – வளர்பாயல் ஆமென வுடன்விரிந்து பாதுகை என ஒடுங்கி ஆரிருள் கடியமுந்துச் சுடராகித் தேசுஅணி திருவனந்தன்’ என்று விரித்துப் பாடுகிறார். முதல் திருவந்தாதி, சங்கரநாராயணரின் பெயர்கள் வாகனங்கள் முதலியவற்றைக் குறிப்பிடும். இப்பாசுரத்தைச் சிறு சிறு மாற்றங்களுடன் பால பாரதி விவரிக்கிறார். ‘விடைவெம் புட்கொடி; தீ பச்சைப் புயல் உருவம் கைப்படை வேல் பொற்சக்கரம்’ என நயமுற விவரிக்கின்றார். கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பாடல்கள் பலவற்றை ஆசிரியர் விரிவுபடுத்தியுள்ளார். இறைவன் ஆலந்தளிரையும் மலரையும் கயிலை மலையையும் விட்டு இராமனாக அவதரித்தான் என்று கம்பன் நயமுறப் பாடிச் சமய ஒற்றுமைக்கு வழிவகுத்தான். இப்பாசுரத்தைப் பயின்ற பாலபாரதி இறைவன் விடுத்து வந்த இடங்களைப் பலபடியாக விவரிக்கின்றார். ஆலிலை கிடக்கை தணிந்து, வேலையின் இருக்கை நிரம்பி, ஆதவன் இடத்தினும் இன்றி, அமரேசன்; ஆம் அரசு இருப்பு முனிந்து மாகயிலை வெற்பொடுகஞ்சம் ஆதியிடம் முற்றும் அகன்று, கரைகாணாக் கோலமறை உச்சிதுறந்து, மாதவர் மனத்தை நெகிழ்ந்து கோகனகை சொர்க்கம் இகழ்ந்து, வளர்பாயல் கோளரவை விட்டு விசுங்க பூபதி (கருடன்) கழுத்தை மறந்து கோசலை வயிற்றிலிருந்த பெருமானே என்று பாடிய பாரதியின் புலமைவளம் மறக்கத்தக்கதன்று. கவிச்சக்கரவர்த்தி கம்பன் இராமபிரானின் இளம் பருவ விளையாட்டையும் கோலத்தையும் விவரிக்கவில்லை. அதன் காரணம் புலனாகவில்லை. இக்குறையைப் பாலபாரதி ஒருவாறு போக்கியுள்ளார். 5 பாடல்களில் இசாமபிரானின் இளம்பருவத்தையும் விளையாட்டையும் கோசலையாக இருந்து நயமுறப் பாடுகின்றார். இராமபிரானைத் தண்டைகள் ஒலிக்கவும், அரைக்கிண்கிணிகள் பண்பாடவும், மணிகள் ஒலிக்கவும், மாலை தொங்கவும், உடுத்த ஆடை நழுவவும், நெற்றியில் வேர்வை தோன்றவும், தளிர் போன்ற பாதங்கள் பதறவும், தம்பிகளுடன் கோசலையின் முத்தங்கொள்ளத் தளர்நடையோடு வரும் பெருமானே என்று பாரதி பாடும் பகுதி நயம்மிக்கது. நாதமுறத் தண்டைகள் பல கீதமெழக் கிண்கிணி நாவசையத் தன் துளவளவிய மாலை, நாலவுடுக்கும் சிறு துகில் சோரமிழற்றும் குதலைகள் நாவுதரத் தும்பிகளுடன் மலர் சூடும், கோதை நெகச் சிந்துர நுதல் வேர்வைதரக் குண்டல ஒளிகூர.....முகத்தின் பிரபை எழ மறைநாலும், கூடிவரச் செந்தளிர் நடை கால்பற்றத் தம்பியரொடு கோசலை முத்தங் கொளவரு பெருமானே என்று பாரதி பாடிய பாடலை இசையுடன் பாடின் கல்லும் உருகும். இராகவனைக் கண்டு காதல் கொண்ட பிராட்டியின் விரகமொழிகளைப் பாரதி அடுக்கி அடுக்கிப் பாடுகிறார். ‘காணவிடியாது கங்குல் கங்குல் பேணமுடியாது சங்கு சங்கு காதலறி யார்கள் பெண்கள் பெண்கள் ...... நாணிசிலை தூணி கொண்டு கொண்டு தூரவொரு மேகம் நின்று நின்றென் நாணமுடன் ஆவியுண்டது உண்டது எனமாழ்கி நாடுமொரு சீதை’ என்ற பகுதி கம்பநாடனின் கவிதையின் சாரம். பரசுராமனின் சீற்றக் கோலத்தையும் செயலையும் ‘பருதி கோடி போல் எறிக்க மகுடவேணி தாழருத்ர பரமயோகி போல் அதட்டி’ என்று சிறு தொடராலே ஆசிரியர் திறம்படப் பாடுகிறார். இராமபிரான் பிராட்டியுடன் வாழ்ந்த இல்லற வாழ்க்கையைக் கம்பன் விவரிக்கவில்லை. அக்குறையைப் பாரதி போக்கியுள்ளார். இங்குப் பிராட்டியின் சிறப்பை ‘அருமறை மணக்குமேனியள் வரமலம் ஒத்தபாணியள் அமுதுகு சிவத்த வாயினள் அருள்மாறாப், பொறையுலகு பெற்ற பூரணி, பிரமனை யளித்த நாயகி புணரியில் உதித்த காரிகை, மறுநாடாப் புதுமதி முகத்தி சானகி’ எனப் பக்திப் பரவசத்தோடு பாடுகிறார். பிராட்டி சிறையில் இலக்குவன் புனைந்த சாலையில் இருந்த பண்பையும், திரிசடை உதவியதையும், ‘சேயெனும் இளவல் புரிந்த சாலையினொடு முன்வந்த தேரொடும் இனிது துவங்கி அநியாயத், தீயவன் இடும் சிறை கண்டு சாயலும் அழகும் இழந்து சீரையும் மருங்கும் எழில்கூரத், தாயென மதியி னுணர்ந்து வீடணன் உதவு மடந்தை தானடி தொழுது மிகுந்த துணையாகித், தாதளை அளிகள் புலம்பு சோலையின் நடுவண் அமர்ந்த சானகி நினைவி லிருந்த பெருமானே’ என்று பலபல நயங்கள் விளங்கப் பாடிய ஆசிரியரின் திறமையை எவரும் வியப்பர். பிராட்டியின் சிறை மீட்சியை மிகமிகச் சுருக்கமாகப் பாடுகிறார். பெருமான் பிராட்டியைக் கொடுஞ்சொல் கூறியது நூலாசிரியர்க்கு வெறுப்பை வினைத்ததுபோலும். சீதையை என்முன் கொடேபோதி என்று அங்கு அருள வீறொடு கொணர்ந்ததோர் காலையின் பொங்கியெழு தீ முழுகி வந்து பாதார விந்தங்கள் பெறு திருநாளில் ... சானகியை எங்கள் மாதாவை இன்று அன்பினொடு கேண்மையுற முன்பு போல் மேவுக என்று அண்டர் புகல் சபை எனச் சுருக்குகிறார் ஆசிரியர். இராமசெயத் திருப்புகழ் பக்திக் களஞ்சியம், கவிதைச் சுரங்கம், அன்பின் ஊற்று. இந்நூலைப் பயில்பவர்கள் பால பாரதியை அருணகிரி நாதரின் மறுபிறப்பென்றே பகர்வர். எஸ்.கே.இரா.