இராமகிருட்டிண கவி
irāmakiruṭṭiṇa kavi
விசயநகர வேந்தரான கிருட்டிண தேவராயர் காலத்தில் விளங்கிய ஒரு சிறந்த தெலுங்கு மொழிக் கவிஞர்.
விசயநகர வேந்தரான கிருட்டிண தேவராயர் காலத்தில் விளங்கிய ஒரு சிறந்த தெலுங்கு மொழிக் கவிஞர். இவர் கிருட்டிண தேவராயருக்குப் பின்னர் ஆண்ட வெங்கட்ட என்னும் அரசர் காலம் வரை வாழ்ந்தவர். இவர் தெனாலியில் தோன்றியவராதலின் தெனாலிராமன் என்று வழங்கப்பட்டார். இராமலிங்கா என்றும் இவரை அழைப்பர். இவர் பெரிய கவிஞராக விளங்கிய போதிலும் இவரை ஒரு விகடகவியாகவே பொதுமக்கள் பலரும் அறிந்துள்ளனர். இவருடைய தந்தையார் பெயர் இராமையர். இவர் கி.பி. 1462–இல் பிறந்தார் என்று கூறப்படுகிறது.
கிருட்டிண தேவராயர் அவையில் விளங்கிய ‘அட்டதிக்கசங்கள்’ என்று சிறப்பித்துப் பேசப் பெறும் எண்மருள் ஒருவரான இவர் ‘பாண்டுரங்க மகாத்மியம்’ என்னும் ஒரு காவியம் இயற்றியுள்ளார். தெலுங்கு மொழியில் உள்ள ஐந்து பெரிய காவியங்களுள் ஒன்றாக இந்நூல் மதிக்கப்படுகிறது. பாண்டவருக்கும் இராமருக்கும் சிலேடை அமைய மரபுக் கதையையும் இராமாயணக் கதையையும் செய்- யுள் தோறும் இணைத்து இந்நூல் செய்யப்பட்டுள்ளது. கடிகாசல மான்மியம், இலிங்கபுராணம், உத்படராத்திய சரிதம் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். உத்படராத்திய சரிதத்தைக் ‘கொண்ட வீடு’ என்னும் பகுதிக்குத் தலைவராக விளங்கிய நாதிண்டல கோபனுக்கு உரிமையாக்கினார்.
இவருடைய அறிவுக் கூர்மையையும், சதுரப்பாடு மிக்க பேச்சுத்திறத்தையும் விளக்கும் பலகதைகள் வழங்குகின்றன. அரசவையிலுள்ள உயரதிகாரிகள் பற்றியும் கூட நகைச்சுவை மிக்க செய்திகள் பலவற்றை அவ்வப்போது கூறிக் கேட்போரை நகைப்பூட்டியும், வியப்புறுத்தியும் வந்துள்ளார்.
இவர் காளியை வழிபடக் காளி 1000 தலையுடன் கோரமாகக் காட்சிதர, அதனைக் கண்டு அஞ்சாது, ‘ஒருதலையும் ஒரு மூக்கும் இருக்கும் நாங்கள் சலதோடம் பிடித்தால் எவ்வளவு துன்புறுகிறோம்; ஆயிரம் தலையும் ஆயிரம் மூக்குமுடைய தங்களுக்கு அந்நோய் வந்தால் எவ்வாறு துன்புறுவீர்’ என வினவியதாகவும், அது கேட்ட காளி சினவாது மகிழ்ந்து, ‘விகடகவியாகுக’ என்று அருள் புரிந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழகத்திலும் தெனாலிராமன் கதைகள் சிறப்பாகப் பேசப்படுகின்றன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 95)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tchbkhm4/
தமிழ்“இராமகிருட்டிண கவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tchbkhm4/APA
Oliyon Research. (2026). இராமகிருட்டிண கவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tchbkhm4/MLA
"இராமகிருட்டிண கவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/tchbkhm4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment