இனச் சிறுபான்மையினர்
iṉac ciṟupāṉmaiyiṉar
சமூகத்தில் தம்முடனுள்ள பிற சமூகத்தினரைக் காட்டிலும் குறைந்த சமுதாயத் தகுதி, குறைந்த அதிகாரம், குறைந்த மதிப்பு, குறைந்த உரிமை ஆகியவற்றைப் பெற்றுள்ள மக்கள் குழுவே இனச்சிறுபான்மையினர் (Racial Minorities) எனப்படுவர்.
சமூகத்தில் தம்முடனுள்ள பிற சமூகத்தினரைக் காட்டிலும் குறைந்த சமுதாயத் தகுதி, குறைந்த அதிகாரம், குறைந்த மதிப்பு, குறைந்த உரிமை ஆகியவற்றைப் பெற்றுள்ள மக்கள் குழுவே இனச்சிறுபான்மையினர் (Racial Minorities) எனப்படுவர். இவர்கள் இனம், நாடு, சமயம், மொழி முதலானவற்றால் பெரும்பான்மையினரிடமிருந்து வேறுபட்டு நிற்பர். பண்பாடு, மரபு முறை, உடல்தோற்றம் ஆகியவற்றாலும் வேறுபடும் இவர்கள், அதிகாரச் சமூகத்தினரால் சில காலங்களில் வேறுபாட்டுணர்ச்சியோடு நடத்தப்படுவர். ஒவ்வொரு மக்கள் குழுவும், தம் அளவினைப் பொறுத்தே தரம் சார்ந்துள்ள சமுதாயத்தின் மதிப்பினையும் அதிகார அமைப்பையும் கொண்டிருக்கிறது. இருப்பினும், பல்வேறு வரலாற்றுக் காலங்களில் சிறுபான்மைக் குழுக்கள், உயர்திறப் படைக்கருவிகள், பண்பாட்டுத் திறமைகள், திறம் பட்ட அமைப்பு முறைகள் முதலானவற்றால் தம்மைவிட அளவிற் பெரிதான சமுதாயத்தை ஆண்ட வரலாறுகளும் உள. இன்றைய வரலாற்றினைக் காணும்பொழுது உரொடீசியா, தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளில் சிறுபான்மை இனத்தவரான வெள்ளையர்கள், பெரும்பான்மையான கருப்பு நிறத்தவர்களை ஆண்டு வருகின்றனர். காண்க: இனஒதுக்கீட்டுக் கொள்கை, இன ஒதுக்கல்.
இனச்சிறுபான்மையினர் எனப்படுபவர்கள் அனைவருமே இனக் குழுக்களுடன் (Ethnic Groups) தொடர்புடையவரல்லர். ஒரு சிறு இனத்தினுடைய வாழிடத்தின் அடிப்படையினாலன்றி வேறுவகையினாலும் இனச்சிறுபான்மையினரை அறிவியலார் வகைப்படுத்துவர். இவ்வகைக் குழுக்கள் வயது, பால் முதலானவற்றால் அமையப் பெறுவனவாகும்.
நாட்டினங்களில் இனச்சிறுபான்மையினர் பல காரணங்களால் காணப்படுகின்றனர். இதில் முதன்மையான காரணி அதிகார உறவுகளாகும். பெருஞ் சமுதாயத்தில் அதிகார அமைப்புகள் செயற்படும் போது, உட்பூசல்கள் ஏற்படுகின்றன. அதிகார வலிமையைப் பெற்ற இனத்தவர்கள் தம்மை ஒத்திராத வேற்று இனத்தவர்கள் மீது அதிகார அமைப்பினால் அடக்கி ஆள முனைவர். ஒடுக்கப்படும் இனத்தவரோ தம் தகுதி, மதிப்புகள் முதலானவற்றையும் மிகுதியான உரிமைகளையும் பெறப் பெரும்பான்மை இனத்தவரின் அதிகார அமைப்போடு போராடுவர். இவ்வாறான காலகட்டங்களில் சிறுபான்மை இனத்தவர்கள் தோற்றுவிக்கப்படுகின்றனர். இது தவிர்த்து இனச்சிறுபான்மையினர் நாட்டினங்களில் காணப்படுவதற்கு மேலும் மூன்று காரணிகள் முதன்மையாகக் கூறப்படுகின்றன. படையெடுப்பு, ஆட்சியைக் கைப்பற்றல், புதிய பகுதிகளை ஆட்சியுடன் இணைத்தல் ஆகியவை முதலாம் காரணியாகவும், பிறநாட்டிலிருந்து வந்து குடியமர்தலும் (Immigration) வேறு நாட்டிற்குச் சென்று குடியேறுதலும் (Migration) இரண்டாம் காரணியாகவும், அடிமைப் பண்ணையாட்களை வரவழைத்துக் குடியமர்த்துவது மூன்றாம் காரணியாகவும் இருக்கின்றன.
உலகத்தின் ஒவ்வொரு கண்டத்திலும் அதன் வரலாற்றுக் காலத்தில், ஒவ்வொரு நாட்டின் எல்லைகள், காலப்போக்கில் படையெடுப்பு, ஆட்சியைக் கைப்பற்றல் முதலானவை காரணமாகப் பல்வேறு இனமக்கள் புதிய அண்டைய மக்களுடன் சேர்ந்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, இந்திய வரலாற்றிலும் இந்நிகழ்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்த்தால் ஆரியர்களின் வருகையாலும் உள்நாட்டு அரசர்களிடையே ஏற்பட்ட படையெடுப்புகளாலும் பல இன மக்கள், பல்வேறு இடங்களில் கலந்து வாழ வேண்டிய- தாயிற்று. இன்று இந்திய நாட்டில் கிறித்தவர். இசுலாமியர், யூதர், புத்த சமயத்தினர், பாரசீகர், சொராசுட்டிரியர் (Zoroastrians) போன்றோர் இனச் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் மொழிச் சிறுபான்மையினராகவும், சமயச் சிறுபான்மையினராகவும், அயல் நாட்டில் பிறந்த சிறுபான்மையினராகவும் (Foreign born Minorities), நாட்டுரிமைச் சிறுபான்மையினராகவும் (Minority Nationalities) காணப்படுகின்றனர்.
இனத்தின் தோற்றம் (Ethnic Origin) என்னும் ஒரே சமூக அலகினைக் கொண்டே, 1950–ஆம் ஆண்டிற்கு முன்னர் மக்கள் குழுக்களை, ஆதிக்கக் குழுக்கள் (Dominant Groups) எனவும், இனச்சிறுபான்மையினர் எனவும் பாகுபடுத்தி வந்தனர். இனம், சமயம், நாட்டுரிமை (Nationality), நாடு (Nation), பிறப்பிடம் (Nativity), மொழி ஆகிய ஆறு காரணிகளைக் கொண்டே இனக்குழுக்களும் பாகுபடுத்தப்பட்டன.
மனிதக்குலத்தைக் காக்கேசியர் (Caucasoid), மங்கோலியர் (Mongoloid), நீக்கிரோ (Negroid) என்னும் மூன்று பரந்த இனங்களாக வகைப்படுத்துவர் மானிடவியலார். ஒவ்வொரு பரந்த இனத்தினுள்ளும் பல கிளை இனங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, காக்கேசியர் இனத்தில் நார்டிக்கு (Nordic), ஆல்பைன் (Alpine) மத்திய தரைக்கடல் வகையினர் (Mediterranean) என்னும் கிளை இனங்கள் உள்ளன. உயிரியல்சார் முறையில் தோலின் நிறம், எலும்பு அமைப்புகள், உடலுயர்வளவு, தலை அமைப்பு, இரத்தப்பண்புகள், உடல்சார் கூறுகள் முதலான அனைத்து அலகுகளையும் கொண்டே இனங்கள் பாகுபடுத்தப்படுகின்றன. எனினும், உடல்சார் மானிடவியலாரால் (Physical Anthropologists) மரபுவழியிலும் உயிரியல் முறையிலும் இனங்களுக்கிடையில் காணப்படும் தெளிவான வேற்றுமைகளுக்கும் ஒற்றுமைகளுக்கும் விளக்கம் கூறுவதில் சிறிய அளவிலான, திட்ட வட்டமான தெளிந்த கருத்து காணப்படவில்லை. மனித இனங்களை ஆராய்வதைப் போன்றே இனச்சிறுபான்மையினரையும் மானிடவியலார் மேற்கண்ட அலகுகளின் துணைக் கொண்டு ஆராய்ந்து வருகின்றனர். டி.எஸ்.ந.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 608)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t8s4r8qh/
தமிழ்“இனச் சிறுபான்மையினர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/t8s4r8qh/APA
Oliyon Research. (2026). இனச் சிறுபான்மையினர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t8s4r8qh/MLA
"இனச் சிறுபான்மையினர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/t8s4r8qh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment