முதலாம் நெப்போலியனுக்கும் நான்காம் கூட்டிணைப்பு நாடுகளுக்குமிடையே நடைபெற்ற போர். ஆசுத்திரியர், உருசியர், பிரசியர் ஆகியோர் படைகள் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் முன்னேறி, இலீப்சிக்கு (Leipzig) வந்தடைந்தன. அவர்களிடம் இருந்த படைவீரர்களின் எண்ணிக்கை நெப்போலியனிடம் இருந்த படைவீரர்களின் எண்ணிக்கையைவிட இரு மடங்கு பெரிதாக இருந்தது. முதல் நாள் நடைபெற்ற போரில் பிரெஞ்சுக்காரர்கள் வெற்றிபெற்றார்கள். போர் அவர்களுக்குச் சாதகமாக அமைந்த போதிலும் அதில் மிகப் பலர் உயிரிழந்தனர். இதுவரை நெப்போலியனுடன் இணைந்து போரிட்ட சாக்சானியர்கள், கி.பி. 1813–ஆம் ஆண்டு அக்டோபர் 18–ஆம் நாள் எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து கொண்டனர். நெப்போலியனுக்குப் பின்வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழ்நிலையேற்பட்டது. பிலீசி (Pleisse) ஆற்றைக் கடக்க ஒரே ஒரு பாலம் மட்டுமேயிருந்தது, சொல்லொணா இடர்களை விளைவித்தது. இறுதியாக இவர் 70,000 படைவீரர்களுடனே பின்வாங்கி. இரைன் ஆற்றுப் பக்கம் சென்றார். அவர்களுள் பலர் நச்சுக் காய்ச்சலுக்கு ஆளாயினர். இதனால், நெப்போலியனுக்குத் தோல்வி ஏற்பட்டது. இலீப்சிக்குப் போர், செருமனியின் விடுதலையை உறுதிப்படுத்தியது. இப்போரைப் பின்னர் வந்த செருமானிய வரலாற்றறிஞர்கள் ‘நாடுகளின் போர்’ (Battle of the Nations) என்றனர். இலீப்சிக்கு, இன்று கிழக்குச் செருமனி நாட்டில் உள்ளது.