இராவண காவியம்
irāvaṇa kāviyam
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று.
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மொழியில் தோன்றிய காவியங்களுள் ஒன்று. வான்மீகியின் வடமொழி இராமாயணம், கம்பரது தமிழ் இராமாயணம் ஆகிய இவற்றின் நோக்கம் என்ன? இக்காவியத்தின் தலைவர்கள், உறுப்பினர்கள் எத்தகையவர்? இக்காவியங்களின் தொடர்ந்த பயிற்சியால் நாட்டில் ஏற்பட்ட விளைவுகள் யாவை? என்று பல கோணங்களில் பல நூல்களின் உதவி கொண்டு, தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்டு மக்கள் நலநோக்கில் சிந்தித்து ஆராய்ந்து இராமாயணத்தைப் பற்றிய தம் கருத்துகளைப் பல நூல்களாக ஈ.வெ. இராமசாமி வெளியிட்டார். தமிழ் மண்ணில் மலர்ந்த இம் மறுமலர்ச்சியின் தாக்கமே 1946–இல் இராவண காவியமாக உருவெடுத்தது.
இதனை இயற்றியவர் புலவர் குழந்தை. இவர் கொங்குநாட்டினர்.
இக்காவியம் ஐந்து காண்டங்களாகிய பெரும் பகுப்புகளைக் கொண்டது. உட்பிரிவாக ஐம்பத்தேழு படலங்களையும், மூவாயிரத்து நூறு பாக்களையும் உடையது. இராவண காவியத்திற்கென்று தனிக்கதை இல்லை. இராமாயணக் கதையைக் கொண்டே இராவணனைக் காவியத் தலைவனாக்கிக் காவியத்துக்கு வேண்டிய உறுப்புகள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டு விளங்கும்படியாக இக்காவியத்தைப் படைத்துள்ளார். கம்பர் பாடிய கோணம் வேறு. புலவர் குழந்தை பாடியுள்ள கோணம் வேறு. இந்தக் கோண மாறுதலில் தம்முடைய குறிக்கோளை நுட்பமாக நுழைத்துக் காவியத்தைத் திறம்பட அமைத்துள்ளார்.
கம்ப இராமாயண அடிப்படை உத்திகளுள் ஒன்று, காவிய நாயகராகவும் உறுப்பினராகவும் காவியத்தில் அமைகின்றவர்களைக் காவியம் பயிலுவோர் தம்மிச்சையாக விரும்பவோ வெறுக்கவோ செய்யும்படியாகப் பாடிச் செல்வது. தமிழில் அமைந்த கம்பரது இராமாயணத்தின் இந்த உத்தியின் விளைவால் கம்பர் கண்ட இராமனும் சீதையும் அவதாரங்களாயினர். அவர்களைச் சார்ந்த மற்றவர்களும் போற்றத்தக்கவராயினர். அதனைப் போன்றே, இராவண காவியம் பயிலுவோர் இராவணனையும் அவனைச் சார்ந்தோரையும் தம்மிச்சையாகப் போற்றும் படியும், இராம இலக்குவர்களையும் மற்றவரையும் தன்னிச்சையாக வெறுக்கும் படியும் திறம்படப் பாடிச் சென்றுள்ளார்.
தமிழகக் காண்டம் கடல்கோள் படலத்தில், இப்போதுள்ள குமரி முனைக்குத் தெற்கே ஆயிரங் கல் தொலைவு விரிந்து பரந்து கிடந்த வளமிக்க நிலப்பரப்புகள் கடல்கோளால் அழிவுற்ற செய்திக்கு இரங்கி, இராவண காவிய ஆசிரியர் பலமுகமாகப் பாடியுள்ளார். மேலும், பழிபுரி காண்டத்தின் உருக்குலைவுப் படலத்தில் இராவணன் தங்கை காமவல்லியைக் கொடுமைப் படுத்தி இறக்குமாறு செய்த இராம இலக்குவர்களின் கொடுமைக்கு மனமிரங்கி மக்களினம் வருந்துவதாகப் பலகோணத்தில் இவர் பாடியுள்ளார். இந்த இருவகையில் இவர் பாடியுள்ள பாக்கள் முடிதுறந்த இராமன், இலக்குவனும் சீதையும் பின் தொடரக் காட்டிற்குச் செல்லுவதைக் கண்ட நகரமக்கள் மனம் இரங்கிப் புலம்புவதாகப் பாடியுள்ள கம்பநாடரின் பாக்களை ஒத்து விளங்குகின்றன. காவிய மரபுக்குப் பொருந்தச் சூரியனின் உலாவாகச் தோற்றம்–மறைவு பற்றியும், அரசன் செல்லும் சிறப்புகள் பற்றியும் கூறுவதோடு இன்னும் பலவகையான காவிய அமைப்புக்கான வளங்களையெல்லாம் பெற்றும் இக்காவியம் விளங்குகிறது.
இராவண காவியத்தில் வெளிப்படையாகவும் உய்த்துணரும் வகையிலும் புலப்படும் செய்திகள் மிகுதியாகவுள்ளன. ஆரிய நாகரிகத்தின் தன்மைகளான, உயிர்வதை வேள்வி, வருண தரும வழியிலான வாழ்வு நடைமுறை, நாடோடித் தனமான வாழ்வு, ஆகியவை தெளிவாகின்றன. இதற்கு மாறாகத் தமிழர்கள்,
::‘அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் ::உயிர் செகுத் துண்ணாமை நன்று’ (குறள் 259) என்றும்,
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ (குறள் 972) என்றும் வள்ளுவர் கூறியபடி வாழும் வாழ்வுடையவராக உள்ளனர்.
இராவணன் தங்கை சூர்ப்பணகை இராமனை வலியச் சென்று அழைத்ததாக இராமாயணத்தில் வரும் செய்தி மனித இயற்கைக்கு மாறானது. காதல் செய்தியில் முதற்செயல் என்பது உயிரினங்களில் குறிப்பாகப் பாலூட்டிகளில் ஆணுக்குத் தான் உண்டு. கோழிகளும் குருவிகளும் அப்படித்தான் வாழ்கின்றன. ஒரு பெரிய அரசனின் தங்கை இயற்கைக்கு மாறுபட்டு எப்படி நடந்து கொள்ளுவாள்? இவ்வாறு கருதும் ஆசிரியர் தமது இராவண காவியத்தில் இராவணனின் தங்கை காமவல்லியை இராமன் வலியச் சென்று வற்புறுத்துவதாகப் பாடியுள்ளார்.
இராமனின் தம்பி அவளுடைய உறுப்புகளை அறுக்க, அவள் தன்னுடைய மான இழப்புக்கு மனம் வருந்தி அங்கேயே சாகிறாள். தங்கைக்கு இராம இலக்குவரால் நேர்ந்த அவமானத்துக்கு எதிராக அவர்களுடன் போர் தொடுக்கும் நோக்கத்தால் தமிழர்களின் போர் முறைப்படி, முன்னர்ப் பெண்ணைக் கவர்ந்து தேரில் வைத்துக் கொண்டு இராவணன் செல்லுகிறான். மேலும் சீதைக்கு அவன் ஒரு துன்பமும் செய்யவில்லை - இவ்வாறு இக்காவியம் கூறுகிறது.
இராவணனுடைய குணநலன்கள் முழுவதையும் சீதை வாயிலாகவே ஆசிரியர் சொல்ல வைத்துள்ளார். நடந்தது நடந்து விட்டது. அதற்காகப் போரிடுவதில் பொருளில்லை. இராமன் முதலியோர் இங்கு வந்து தாங்கள் நடத்திய கொடுமைகளுக்கு மன்னிப்புக் கேட்டால், சீதையை விட்டு விடுவதாகச் சீதையிடம் இராவணன் கூறியபடி சீதை அனுமனிடம் சொல்லி அணுப்புகிறாள்.
மறுமலர்ச்சி பெற்றுள்ள தமிழகத்தின் புதிய சமூக, அரசியல் விழிப்புணர்வுப் பின்னணியில் பிறந்த இக்காவியத்தை 2.6.1948–இல் தமிழக அரசு தடை செய்தது. ந.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 167)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t6jrbpat/
தமிழ்“இராவண காவியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/t6jrbpat/APA
Oliyon Research. (2026). இராவண காவியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t6jrbpat/MLA
"இராவண காவியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/t6jrbpat/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment