கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். இராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவராக விளங்கியவர். அட்டாவதானத் திறமை வாய்ந்து விளங்கியமையால் அட்டாவதானம் கிருட்டிண ஐயங்கார் என்று அழைக்கப் பெற்றார். அட்டாவதானம் என்பது ஒரே நேரத்தில் எட்டுவகையான செயல்களில் சிந்தை செலுத்தி, அவற்றில் ஈடுபட்டுச் செயற்படும் ஆற்றலாகும். அவ்வாற்றல் பெற்றோர் அட்டாவதானி எனப்படுவர். கிருட்டிண ஐயங்கார் நாலு மந்திரி கதை, பஞ்ச தந்திரம், வீரகுமார நாடகம், விடநிக்கிரக சிந்தாமணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். ‘விடநிக்கிரக சிந்தாமணி’ என்னும் நூல் ‘விடநிக்கிரக நிகண்டு’ என்றும் வழங்கப்பெறும். இவரது ‘பஞ்ச தந்திரம்’ என்னும் நூல் செய்யுள் வடிவினது. நாலு மந்திரி கதை கி.பி. 1869–ஆம் ஆண்டு எழுதப்பட்டது.