அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிறப்பான வாணிகம் நடைபெறும் நீர்வழி அட்சன் அட்சன் ஆறு ஆறாகும். அது நியூயார்க்கு மாநிலம் முழுவதும் பாய்கிறது. கி.பி. 1609-இல் என்றி அட்சன் என்னும் ஆய்வுப் பயணி இவ்வாற்றை ஆய்ந்த முதல் வெள்ளையராவார். அவர் பெயராலேயே இது இவ்வாறு குறிக்கப்படுகிறது. அட்சன் ஆற்றை ‘அமெரிக்காவின் ரைன்’ என்று கூறுவர். இவ்வாற்றின் சில அழகான கரைப் பகுதிகள் இரைன் ஆற்றுக் கரைகளைப் போல் இருப்பதால் இப்பெயர் வந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் அட்சன் ஆறு சீரிய இடத்தைப் பெறுகிறது. அட்சன் ஆறு (Hudson River) 492 கி.மீ. நீளமுள்ளது. நியூயார்க்கு மாநிலத்தில் உள்ள பெரிய ஆறாகவும் இது விளங்குகிறது. தியர்-ஆப்-தி-கிளவுடுசு (Tear-of-the-clouds) என்னும் சிறிய ஏரியிலிருந்து இந்த ஆறு தொடங்குகிறது. அந்த ஏரி கடல் மட்டத்தைவிட 1317 மீ. உயரமுள்ளது. அடிராண்டாக்கு மலைத்தொடரின் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஏரி அது. நியூயார்க்கு மாநிலத்தின் கிழக்கு எல்லையில் நேர் தெற்காகப் பாய்ந்து, அட்சன் ஆறு அட்லாண்டிக்குப் பெருங்கடலில் கலக்கிறது. மோகாக்கு ஆறு இதன் துணையாறுகளுள் ஒன்று. அட்சன் ஆற்றில் பெருங் கப்பல்கள் 232 கி.மீ. தொலைவிலுள்ள ஆல்பனி (Albani) என்னும் நகரம் வரை செல்கின்றன. சிறுபடகுகள் தொடர்ந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள திராய் என்னும் ஊர் வரை செல்லலாம். ஐரோப்பாவிலிருந்து கப்பற்பயணம் செய்யும் பயணிகள், அட்சன் ஆற்றின் கீழ்க்கரையில் உள்ள நியூயார்க்கின் பெருந்துறைமுகத்தில் வந்து கரையிறங்குகிறார்கள். சார்சு வாசிங்டன் (George Washington) பாலம் இவ்வாற்றின் கழிமுகத்திற்கருகில் கட்டப்பட்டுள்ளது. கி.பி. 1524–இல் கியோவன்னிடா விராசானோ என்னும் இத்தாலிய மாமிதான் இந்த ஆற்றைக் கண்ட முதல் ஐரோப்பியர். அட்சன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் முதன்முதல் குடியேற்றங்களை அமைத்தவர்கள் தச்சுக்காரர்களே (The Dutch).