இது ஒரு கழிவு மண்டல உறுப்பாகும். முதுகெலும்பிகளின் ஈரிணையுறுப்புகளாகச் சிறுநீரகங்கள் அமைந்துள்ளன. உடல் நீர்மங்களின் திட்பத்தையும், அவற்றின் அளவையும், சரியான விகிதத்தில் சமன் செய்யக் கூடிய முக்கிய பணியைச் சிறுநீரகங்கள் செய்கின்றன. வெவ்வேறு வாழ்க்கைச் சூழல்களில் ஏற்படும் நீர்த் தேவைகளுக்கேற்ப வெவ்வேறு விலங்குகளின் சிறுநீரக அமைப்பு முறை மாறுபடுகிறது. பாலூட்டிகளின் சிறுநீரகங்கள், சிறு சிறு வேறுபாடுகளைத் தவிரப் பெரும்பாலும் ஒரே அடிப்படையில் அமைந்துள்ளன. மனிதனின் சிறுநீரகம். மனிதனின் சிறுநீரகங்கள், வயிற்றுப் பின் சுவரில், கீழ் முதுகுப் பக்கத்தில், முதுகுத் தண்டின் இரு மருங்கிலும் அமைந்துள்ளன. பன்னிரண்டாம் மார்பு முள்ளெலும்பு, முதல் இரண்டு இடுப்பு முள்ளெலும்புகளின் மட்டத்தில் இவை உள்ளன. முழு வளர்ச்சியடைந்த மனிதனின் ஒவ்வொரு சிறுநீரகமும் ஏறத்தாழ 150 கிராம் எடையிருக்கும். மொச்சை வடிவமான சிறுநீரகத்தின் வெளிப்பரப்பு வழவழப்பானது; கருஞ்சிவப்பு வண்ணம் கொண்டது. சிறுநீரகத்தின் வெளி வடிவமைப்பில் மேல், கீழ் என இரு முனைகளும் முன், பின் என இரு பரப்புகளும் நடு முகம், புற முகம் என இரு கரைகளும் (medial and lateral borders) உள்ளன. மேலும், கீழும் குவிந்திருக்கும் நடு முகக் கரையின் குழிவான இடைப் பகுதியில் நீரக நுழைவாய் உள்ளது. இது தமனிகளும், நரம்புகளும் உட்செல்லும் சிரைகளும், சிறுநீர் நாளமும் வெளி வரும் வழியாகப் பயன்படுகின்றது. நுழைவாய், சிறுநீரகத்தினுள் குழிவான பகுதிக்குள் செல்கிறது. இப்பகுதிக்குச் சிறுநீரகத்தைச் சுற்றிச் சூழ்ந்துள்ள இழையுறையும், கொழுப்புறையும் இப்பள்ளத்தினுள் படர்ந்து காணப்படுகின்றன. சிறுநீரகப் பள்ளத்தில் சிறுநீரகக் கிண்ணமும், குருதி நாளங்களும் நிறைந்துள்ளன. சிறுநீரகக் கிண்ணத்திலிருந்து இரண்டு மூன்று கிளைகள் பிரிந்து உள்நோக்கிச் செல்கின்றன. இவை பெருங்குவளைகள் (major calyces) எனப்படும். ஒவ்வொரு பெருங்குவளையினின்று பிரியும் பற்பல கிளைகளுக்கும் சிறு குவளைகள் (minor calyces) எனப் பெயர். ஒவ்வொரு சிறுநீரகத்திலும் 10—13 சிறு குவளைகள் உள்ளன. அதையடைந்ததும், சற்றே விரிவடைகின்றன. சிறுநீரகப் பள்ளத்தில் உள்ளூடிப் படர்ந்திருக்கும் உறைத் திசுவோடு ஒட்டி நிற்கும் சிறு குவளை ஒவ்வொன்றுள்ளும் மூன்று—நான்கு சிறுநீரக மொட்டுகள் துருத்தி நிற்கும். நீள் வெட்டுத் தோற்றத்தில் புறணி, அகணி (cortex and medulla) என்னும் இரு பகுதிகள் உள்ளன. வெளிப் பரப்பையொட்டி, ஆழ் வண்ணத்தில் அமைந்திருப்பது புறணியாகும். சற்றே வெளிர் நிறத்தோடு உள்ளாக இருக்கக் கூடிய அகணி, சிறு சிறு கோபுர வடிவான பகுதிகளைக் கொண்டிருக்கும். சிறு நீரகக் கூம்புகள் அல்லது மால்பீஜியன் கூம்புகள் என்னும் இவற்றின் அடிப் பகுதி புறணியைப் பார்த்தும், அவற்றின் முனைகள் சிறுநீரகப் பள்ளத்தைப் பார்த்தும் உள்ளன. சிறுநீரக மொட்டுகளில் சிறு சிறு துளைகள் பலவுண்டு. இவற்றினின்று வழியும் சிறுநீர், குவளைகளில் திரண்டு, சிறுநீரகக் கிண்ணத்தில் ஒன்று செர்ந்து சிறுநீர் நாளத்தையடைகிறது. சிறுநீரகத்தின் அலகுகள். சிறுநீரகத்தின் இயக்க அலகுகள், நீர் ஊறும் குழல்கள் (uriniferous tubules) ஆகும்.ஒவ்வொரு நீர் ஊறும் குழலும் நீர் நுண்ணகம், (nephron)திரண் குழல் (collecting tubule) இரு பகுதிகளால் ஆனது. ஒவ்வொரு நீர் நுண்ணகமும் நீர் நுண்கூறு, நீர் நுண் குழல் என்று பகுக்கப்படும். நீர் நுண்ணகத்தின் தொடக்கப் பகுதி நுண் கூறு என்பதாகும். இதன் மையத்தில் தந்துகி வளையங்களின் திரணையொன்றும், அதைச் சுற்றித் திரணை உறையொன்றும் காணப்படும். திரணையுறை இரு சுவர் கொண்ட கோப்பை போன்று தோற்றமளிக்கும். பௌமன் கோப்பை என்னும் இதன் அடி முனையினின்று நீர் நுண் குழல் தோன்றுகிறது. சிறுநீரகத் தமனியிலிருந்து பலவேறு பகுப்புகளுக்குப் பின் தோன்றும் அகமுகக் குறுந்தமனி கோப்பையுள் நுழைந்து, பல தந்துகிகளாகப் பிரியும். இத்தந்துகி முடிச்சிற்கே திரணை எனப் பெயர். தந்துகிகள் மீண்டும் ஒன்று கூடி உருவாகும் புறமுகக் குறுந்தமனி திரணையுறைக் கோப்பையை விட்டு வெளியேறும். குருதி அழுத்தத்தின் காரணமாகத் தந்துகித் திரணையினின்று நீரும், பிற கரிமப்பொருள்களும் வடிகாலிடப்பட்டு உறைக் கோப்பையை அடைகின்றன. பௌமன் உறையைத் தொடர்ந்து இருக்கும் நீர் நுண் குழல் பல பகுதிகளைக் கொண்டது. அவை அண்மை வளை குழல். சேய்மை வளை குழல் என்பவை, பௌமன் உறையினின்று தொடரும் அண்மை வளை குழல், புறணியில் அமைந்திருக்கும். வளைந்து, நெளிந்த இக்குழலின் சுற்றுச் சுவர் ஓரடுக்குச் செல்களால் ஆனது. இச்செல்லின் வெளிப்புறமாக அடித்தளப் படலம் உண்டு. புறணியினின்று அகணியை நோக்கிச் செல்லும் அண்மை வளை குழலினின்று ஹென்லி வளைவு தொடங்குகிறது. வளைவு, நெளிவின்றி அகணிக்குள் நேராகச் செல்லும் ஹென்லி வளைவின் முதல் பகுதி இறங்கு காம்பு எனப்படும். இது வளைந்து திரும்பி மீண்டும் புறணியை நோக்கி, ஹென்லி வளைவின் இரண்டாம் பகுதியான ஏறு காம்பாகத் தொடரும். ஹென்லி வளைவினின்று தொடரும் நீர் நுண் குழலின் அடுத்த பகுதி, மீண்டும் வளைந்து, நெளிந்து திரண் குழலைச் சென்றடைகின்றது. இதற்குச் சேய்மை வளை குழல் எனப் பெயர். அண்மை வளை குழலோடும், சேய்மை வளை குழலோடும் தொடர்பு கொண்டிருக்கும் ஹென்லி வளைவின் பகுதிகள் அதேயளவு அகலம் கொண்டிருந்தாலும், நடுவிலுள்ள பகுதி குறுக்கமுற்று மென்கண்டம் எனப்படுகிறது. பல நீர் நுண்ணகங்களின் சேய்மை வளை குழல்களை இணைத்துக் கிளம்பும் திரண் குழல் அகணிக்குள் ஓடிச் சிறுநீரகக் கூம்பு முனையில் திறக்கும். ஒவ்வொரு கூம்பிலும் 10—12 திரண் குழல்கள் திறக்கின்றன. சிறுநீர் வடிகால். குருதியினின்று பௌமன் உறையில் வடிகாலிடப்படும் நீர், நுண்குழலின் பல பகுதிகளிலும் பாய்கிறது. அவ்வாறு பாய்கையில், மறு ஈர்ப்பின் மூலமாக, உடலுக்குத் தேவையான நீரும், பிற கரிமப் பொருள்களும் உள்ளிழுக்கப்படுகின்றன. தேவையற்ற பொருள்களும், நீரும் சேர்ந்த சிறுநீர் திரண் குழல்களின் வாயிலாகச் சிறுநீரகக் குவளைகளையும், சிறுநீரகக் கிண்ணத்தையும் அடைகிறது. அங்கிருந்து சிறுநீர் நாளம் வழியாகச் சிறுநீர்ப் பைக்கு அனுப்பப்படும். —சுதா சேஷய்யன்