பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றிச் சமநிலைச் சமுதாயத்தை (Socialist Society) நிலைநாட்டுவதற்காக ஒரு சிலரிடம் குவிந்து தேங்கிக் கிடக்கும் வள வாய்ப்புகளைப் பன்முகப்படுத்தி, மறு பங்கீடு செய்ய முனையும் கோட்பாட்டு வழிமுறைகள் பலவற்றுள் உச்சவரம்பும் (Ceiling) ஒன்றாகும். தனி ஒருவரின் வருவாய் ஈட்டும் வாய்ப்பு எல்லைக்கு உச்சவரம்பு வரையறுத்துச் செயற்படுத்துதல் இதன் உட்கூறாகும். தனியார் வைத்திருக்கக் கூடிய நில உரிமைக்குக் கட்டுப்பாடுகள் விதித்து அதற்கான உச்ச வரம்பை வரையறுத்தல் மூலம் இது நடைமுறைப்படுகிறது. இது சிறப்பாக, நகரிய நில உச்சவரம்பு (Urban Land Ceiling), வேளாண்மை நில உச்ச வரம்பு (Agricultural Land ceiling) என இருவகைப்படுகிறது. இவற்றைத் தவிர வருமானத்திற்கு உச்சவரம்பை வரையறுத்து அதனைச் செயற்படுத்துதல் போன்ற நேரடி நடவடிக்கைகள் மக்களாட்சி நிலவும் பொருளாதாரங்களில் நடைமுறைக்குகந்ததன்று. எதிர்மறையான வகைகளில் வருமானம், ஆதாயம் போன்றவற்றிற்குப் பலவகைக் கட்டுப்பாடுகள், உயர்ந்த வரிவிதிப்புகள், உரிமம் ஆகியவற்றின் மூலம் உச்சவரம்பு வரையறுக்கப்படுகிறது. பொதுவுடைமை நாடுகளில் மையத் திட்டமிடல் (Centralised Planning) செயற்படுவதால் பொருளாதார நடவடிக்கைகள் யாவும் நேரடியான வரம்புக் கட்டுப்பாட்டிற்குள் செயற்படுகின்றன. நகரிய நில உச்சவரம்பின் இன்றியமையாமை நிலக்கிழார் ஆதிக்க முறையினாலும் (Feudalism) சமீன்தாரி முறையினாலும் பெரும்பாலான இந்திய நில உடைமைகள் ஒருசில செல்வர்களிடம் பன்னெடுங்காலமாகக் குவிந்திருந்தன. அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களினாலும் முன்னேற்றங்களினாலும் நிலக்கிழார் ஆதிக்க முறையும் சமீன்தாரி முறையும் ஒழிக்கப்பட்டன. எனினும், இவை வேளாண்மை நிலக்குவியியலில் ஓரளவுக்குப் பங்கீட்டை ஏற்படுத்தியதே ஒழிய, நகரிய நிலங்களில் எவ்வகைத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. எனவே, இந்திய அரசு 1964–ஆம் ஆண்டிலேயே நகரிய நில உச்ச வரம்புச் சட்டம் இயற்றத் திட்டமிட்டது. வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அரசர்களுக்கு வழங்கிய ஒப்பந்தக்கொடையும் (Privy Purse) ஒழிக்கபட்ட 1969–ஆம் ஆண்டிற்குப் பின்னர், அரசு நகரிய நில உச்சவரம்புத் திட்டச் செயற்பாட்டிற்கான தீவிர ஆலோசனைகளையும் கலந்துரையாடல்களையும் கருத்தரங்குகளையும் நடத்தி நாடெங்கிலுமுள்ள பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிய முனைந்தது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி (1) இத்தகைய உச்சவரம்பை வரையறுக்கும் உரிமை மாநிலங்களைச் சார்ந்தது. (2) இரண்டு அல்லது மூன்று மாநிலங்கள் கூட்டாகச் சேர்ந்து மைய அரசை இதற்கான சட்டம் இயற்றப் பணிக்கலாம். மகாராட்டிரம், இராசசுத்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கூட்டாக மைய அரசை நகரிய உச்சவரம்புச் சட்டம் இயற்ற ஒப்பந்த வேண்டுகோள் விடுத்தன. மைய அரசும் இதற்கு இணங்கி, 5 பேர் கொண்ட ஒரு நகர்வாழ் குடும்பத்தின் உச்ச நகரச் சொத்து வரையறையின் (Ceiling on Urban Property) மதிப்பு உரூ. 5 இலட்சம் என அறிவித்தது. கூடுதலான எண்ணிக்கைக் கொண்ட குடும்பங்களுக்கு உச்ச வரையறை எண்ணிக்கை அடிப்படையில் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் நகரங்களின் உண்மைச் சொத்துகள் (Real Estate), வீட்டு நிலங்கள், தனியாரின் சொத்துகள் ஆகியவற்றின் மேல் மட்டிலுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் ஆகியவற்றின் சொத்துகளுக்கு எவ்வகைக் கட்டுப்பாடோ வரையறையோ விதிக்கப்படவில்லை. நகர்வாழ் செல்வர்களும் முதலாளிகளும் தொடர்ந்து தங்கள் நகரியச் சொத்துகளைப் பெருக்கிக் கொண்டேயிருந்தனர். நகரின் சொத்துகள் ஒரு சிலரின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கி முற்றுரிமை நிலை நிலவியது. நகரங்களின் வளர்ச்சியினால் நகர நிலங்களின் தேவை மிகுந்து அவற்றின் மதிப்பு விரைந்த வேகத்தில் உயர்ந்துகொண்டே சென்றது. மக்கள் தொகைப் பெருக்கம், தொழிற்புரட்சி, வாணிக வளர்ச்சி ஆகியவற்றால் நகர்ப்புறங்களுக்கு மக்கள் பேரளவில் இடம்பெயர்ந்து சென்றனர். இவர்களால் குறிப்பிட்ட அளவேயுள்ள நகரிய நிலங்களின் மேல் ஏற்பட்ட தேவை அழுத்தம் மதிப்பு (விலை) ஏற்றத்திற்கும் ஊக வாணிகத்திற்கும் (Speculative trade on lands) வழி வகுத்தது. நகர் நிலங்களிலும், வீட்டுச் சொத்துகளிலும் முதலீடு செய்வது, ஆடம்பர கட்டிடங்களைக் கட்டுவது இவற்றில் கறுப்புப் பணத்தைச் செலவிடுவது ஆகியன பொருளாதார, சமூகத் தேவை வளங்கள் உற்பத்தியற்ற (Unproductivity) துறைக்கு ஒதுக்கப்படவும், பதுக்கல் செய்யப்படவும் உரிய வாய்ப்புகளாக விளங்கின. நடுத்தர, கீழ்மட்ட நிலை வீடுகளுக்கான தேவை பேரளவில் பெருகினவெனினும், வீட்டு வாடகைகள் உச்ச நிலைக்கு உயர்ந்து சென்றதே ஒழிய இத்தகைய வீடுகளின் எண்ணிக்கை தேவைக்குகந்த வண்ணம் பெருகவில்லை. குடியிருப்புப் பகுதிகள் உருவாக்கப்படுதற்கு ஊக வணிகர்கள் குறைந்த மதிப்பில் நிலங்களைப் பெற்று, மிக உயர்ந்த விலையில் அவற்றைத் துண்டு நிலங்களாக விற்று ஆதாயம் பெற்றனர். நடுத்தர, ஏழை வகுப்பு மக்கள் சொந்த நிலம் வாங்கி வீடு கட்டுவது என்பது நினைத்துக் கூடப் பார்க்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இத்தகைய பொருளாதாரச் சமூக நல வளர்ச்சிக்கு எதிரான போக்கு மாற, நகரிய நில உச்ச வரம்பு நடவடிக்கைகள் இன்றியமையாதவையென உணரப்பட்டது. இவற்றின் சிறப்பியல்புகளாவன: (1) நடைமுறைக் காலத்திலுள்ள உடைமைகள் மீது உச்சவரம்பு வரையறுப்பது, (2) எதிர்காலத்தில் வாங்கப்படும் நிலங்கள் மீது உச்சவரம்பு வரையறுப்பது (3) சொத்துகளின் மூலம் வருமானம் பெறுபவர்களுக்கும் உழைப்பின் மூலம் வருமானம் பெறுபவர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் (Disparity) குறைப்பது, (4) ஒரு சிலரிடம் உபரியாகக் குவிந்து கிடக்கும் வீட்டுச் சொத்துகளைச் சட்டமுறைப்படி பெற்று நலிவுற்ற பொருளாதார வகுப்பினருக்குப் (Economically Weaker Sections) பகிர்ந்து அளிப்பது, (5) தேங்கியும் பதுங்கியும் கிடக்கும் பொருளாதார வளங்களை ஆக்க வழிகளில் பயன்படுத்தத் திரட்டுவது, (6) உற்பத்தியைப் பெருக்கும் துறைகளுக்கு முதலீட்டைத் திருப்புவதும் உற்பத்தியற்ற நடவடிக்கைகளுக்கும் ஆடம்பர, கட்டடச் செலவுகளுக்கும் பயன்படும் கறுப்புப் பண நடவடிக்கைகளை ஒழிப்பதும், (7) ஊக வாணிகத் தீமைகளைத் தடுப்பது ஆகியன. நாட்டின் மொத்த உற்பத்திப் புள்ளி விவர மதிப்பீட்டின்படி (Estimates of National Product) 1970–71–ஆம் ஆண்டு விலைகளின் அடிப்படையில் நாட்டின் மொத்த உற்பத்தியில் 3 விழுக்காடே உண்மைச் சொத்து, வாணிக, வீட்டுக் கட்டடங்கள் ஆகியவற்றின் பங்காகும். தொழில் நிறுவனங்களும் தனியார் துறையும் 50 விழுக்காட்டுக்கும் மேலான பங்கை வகிக்கின்றன. இவற்றிற்கு எத்தகைய உச்ச வரம்பு விதிகளுமின்றி 3 விழுக்காடேயுள்ள உண்மைச் சொத்து, வீட்டுக் கட்டடங்கள் ஆகியவற்றின்மேல் மட்டிலுமே நகரிய நில உச்சவரம்பு மூலம் கட்டுப்பாடுகளை விதிப்பது, பேரளவில் வருமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் பயன்களை விளைவிக்காது எனக் கருதப்படுகிறது. அட்டவணை – 1 (1970–71 விலையில்) கோடியில் !! மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விழுக்காடு நகரிய நில உச்சவரம்புத் திட்டம் உண்மைச் சொத்தையும் கட்டட உரிமைச் சொத்தையும் மட்டுமே தன்னுள்ளடக்குவது பெருங்குறையாகக் கருதப்படுகிறது. நகரியச் சொத்தில் பங்குகள் (Shares), கடனுறுதிச் சீட்டுகள் (Bonds), கடனுறுதி ஆவணங்கள் (Debentures), வாணிக, தொழில் நிறுவனங்களின் சொத்துரிமைகள், கட்டித் தங்கம் (Gold Bullion) போன்ற மதிப்பு மிக்க பிற பொருள்கள், அசையாச் சொத்துகள் (Immovable Assets) ஆகியனவும் அடங்கும். இவற்றிற்கு எவ்வகையிலும் உச்சவரம்பு வரையறுக்க இயலா நிலையில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நகரிய நில உச்சவரம்பினால் மட்டும் குறைக்க இயலாது என்பது தெளிவாகும். உச்சவரம்புத் திட்டத்தைச் செயற்படுத்துவதிலும் பல சிக்கல்கள் தோன்றுகின்றன. அவை: உபரி நிலங்களைப் பெறுவதற்குக் கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை எவ்வகையில் மதிப்பிடுவது? அதனைப் பணமாகக் கொடுப்பதா? அரசுக் கடனுறுதி ஆவணச் சீட்டுகளாகக் கொடுப்பதா? பெறப்பட்ட உபரி நிலங்களைப் பங்கீடு செய்வதில் யாருக்கு முன்னுரிமை அளிப்பது? அதற்கான அடிப்படைக் கோட்பாடு யாது? என்பவையாகும். போபால் போன்ற இரண்டாம் வகை (B–Type) நகரங்களில் உபரி நிலங்களாக மதிப்பிடப்படுபவை உரூ. 10 இலட்சம் மதிப்புள்ள சொத்துகளே. இவற்றை நலிந்த பிரிவினரில் சிலருக்கு மறு பங்கீடு செய்வது, நகர சமூகப் பொருளாதார வள வாய்ப்புகளை ஆக்கவழிக்கு ஒருமுகப்படுத்துவதாகக் கருத இடமில்லை. இதற்கு மாறாகப் பெரிய மாநகரங்களான (Metropolitan Cities A Class) தில்லி, கல்கத்தா, பாம்பாய், சென்னை போன்ற நகரங்களில் நகரிய உச்சநிலவரம்பு செயற்பட்டால், மிகையான உபரி நிலங்கள் கைப்பற்றப்பட்டு மறுபங்கீடு செய்யப்படுமாகையால் பேரளவில் நலிந்த பிரிவினர் பயன்பெறுவர். அதன் சமூகப் பொருளாதார விளைவுகளும் ஆக்க நலன் சார்ந்ததாயிருக்கும். நகரிய நில உச்சவரம்பு, கறுப்புப் பணத்தினால் ஆடம்பரக் கட்டடங்களும் வீடுகளும் கட்டப்படுவதை ஒழிக்கும் என்றும், ஊக வாணிகத்தினால் நிலங்கள் வாங்கப்பட்டுப் பதுக்கல் செய்யப்படுவதைத் தடை செய்யும் என்றும் எதிர்பார்ப்பது நிறைவேறத்தக்க குறிக்கோளன்று. கறுப்புப் பணம் முதலீடு செய்யப்படுவது ஆடம்பர வீடுகளிலும் கட்டடங்களிலும் மட்டுமன்று; அதனை ஆடம்பர நுகர்வுப் பொருள்களான காற்றுக் கட்டுப்பாடு (Air Conditioner), மகிழ்வுந்து (Pleasure Car), வீட்டு நீச்சல் குளம் போன்றவற்றிலும் முதலீடு செய்யலாம். இத்தகைய ஆடம்பர நுகர்வுப் பொருள்களைப் பேரளவில் உற்பத்தி செய்வதற்கு முதலீடு செய்யப்படுவதும் ஊக வாணிகத்தை ஊக்குவிக்கும். எனவே, நகரிய நில உச்சவரம்புத் திட்டம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துச் சமநிலைச் சமுதாயத்தை உருவாக்க உதவ வேண்டுமானால், நகரியச் சொத்துத் தொடர்பான பிற வள வாய்ப்புக் கூறுகளனைத்தையும் கட்டுப்படுத்தும் சட்டத்தைத் தன்னுள் கொண்டிருக்க வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டே இந்திய நகரிய நில உச்ச வரம்புச் சட்டம் 1976–இல் இயற்றப்பட்டது. இச்சட்டம் 4 வகைப்படுத்தப்பட்ட (A,B,C,D, Class) 73 இந்திய நகரங்களை உள்ளடக்குகிறது. முதல் வகை நகரங்களின் நில உச்சவரம்பு 500 ச.மீ. என்றும், இரண்டாம் வகை நகரங்களுக்கு 1000 ச.மீ. என்றும், மூன்றாம் வகை நகரங்களுக்கு 1500 ச.மீ. என்றும், நான்காம் வகை நகரங்களுக்கு 2000 ச.மீ. என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இச்சட்டம் தனியாரையும், நிறுவனங்களையும், கூட்டுறவு இயக்கங்களையும், கூட்டுக் குடும்பங்களையும் கருத்தில் கொண்டு அவற்றிற்கான உச்ச வரையறையை வகைப்படுத்தியுள்ளது. பணவீக்கத்தினாலும் பெருகி வரும் மக்கள் தொகையின் அழுத்தத்தினாலும் நகர நிலங்களின் மதிப்பைச் சீர் தூக்கி வரையறுப்பது கடினமானது. தொடர்ச்சியாக மாறிக்கொண்டேயிருக்கும் மதிப்பை அடிப்படையாக வைத்து நில உச்சவரம்புச் சட்டத்தைச் செயற்படுத்துவது நடைமுறையில் பல சிக்கல்களை உண்டாக்குகிறது. ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளையும் கட்டடங்களையும் மதிப்பிடும்பொழுது வரையறைக்கு மிகுந்த மதிப்புடைய கட்டடத்தின் (வீட்டின்) ஒரு பகுதியை (அறையை) மட்டும் அரசு கைப்பற்றி மறுபங்கீடு செய்வது இயலாததாகும். நில அளவு மட்டும் வரையறுக்கப்பட்டு அதே அளவு நிலத்தில் எத்தனை தனி இல்லங்கள் (Dwelling Units) இருக்கலாம் என்பது சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. நிலப்பற்றாக்குறையும் மக்கள் நெருக்கடியும் மிகுந்த நகரப் பகுதிகளில் பல மாடிக் கட்டடங்களும், இணை வீடுகளும் (Flat Systems) கட்டப்படுவது இக்கால இன்றியமையாத் தேவையாயிருப்பதால் நில உரிமையை வரையறுப்பதினால் மட்டும் முற்றுரிமையையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுச் சிக்கல்களையும் ஒழித்துச் சமநிலைச் சமுதாயத்தை உருவாக்க இயலாது என்பது தெளிவாகிறது. வேளாண்மை நில உச்சவரம்பு இது வேளாண்மைத் துறையின் முன்னேற்றத்திற்காகக் கொண்டு வரப்பட்ட ஐந்து நிலச் சீர்திருத்தத் திட்டங்களின் ஒரு சிறப்புக் கூறாகும். நாடு விடுதலை அடைந்த பின்னர், 1948–ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றப்பட்டன. எல்லா மாநிலங்களும் தங்கள் மாநிலச் சூழ்நிலைக்குகந்த வண்ணம் சட்டங்களை இயற்றித் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தின. சட்டப்படி சமீன்தாரி முறையும் இடைத் தரகர்களின் ஆதிக்கமும் ஒழிக்கப்பட்டு, உபரி நிலங்களை நிலக்கிழார்களிடமிருந்து கைப்பற்றிச் சிறிய விவசாயிகளுக்கும் நிலமற்ற விவசாயிகளுக்கும் அவற்றைப் பங்கீடு செய்யும் உரிமையை அரசு பெற்றது. குறிப்பிட்ட குறைந்த கட்டுப்பாடான அளவேயுள்ள பயிரிடும் நிலம் (Limited Supply of Land) ஒரு சிலரிடம் மட்டும் குவியாமல் பரவலாக வேளாண்மையினரிடையே பங்கிடப்பட வேண்டியது பொருளாதார முன்னேற்றத்திற்கும் சமநிலைச் சமுதாயம் உருவாக்கப்படுதற்கும் இன்றியமையாதது என உறுதியாகக் கருதப்பட்டது. நிலம் மட்டுமே ஊரக மக்களுக்கு வருவாயை அளிக்கும் மூல வளமாக விளங்குகிறது. இதனை எல்லா வகை ஊரக வேளாண்மை மக்களிடையேயும் பகிர்ந்தளிக்காவிட்டால் வருமான ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, அடிப்படைச் சமூக நீதியை நிலைநாட்ட இயலாது என்பதைத் திட்ட வல்லுநர்கள் உணர்ந்தனர். பேரளவு உற்பத்தி மொத்த உற்பத்தியைப் பெருக்கும் என்கிற கருத்து வேளாண்மையில் கோட்பாட்டு அளவுக்கே (Only Theoretical) உண்மையாயுள்ளது. சிறு துண்டு நிலங்களில் பெரும்பான்மையாகப் பயிரிடுகிற சப்பானின் நில ஆக்கத்திறன் (Productivity) ஓர் ஏக்கர் நிலத்திற்கு 52.5 குவிண்டால் அரிசியாகும். இதுவே பேரளவில் பயிரிடும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் 52 குவிண்டாலாகவும், சோவியத்து உருசியாவில் 40 குவிண்டாலாகவும் காணப்படுகிறது. இச்சான்றுகளிலிருந்து தனி மனித உரிமைகளும் சமூக நீதியும் ஆக்கத்திறனைப் பெருக்கும் என்பதை அறியலாம். சிறிய துண்டு நிலம் என்றாலும் அதில் உழைக்கும் விவசாயி அதன் பலனைத் தான் அடையலாம் என்ற நம்பிக்கையையும் நில உடைமை உரிமையையும் பெற்றால் ஊக்கத்துடன் உழைத்து உற்பத்தியைத் திட்டமாகப் பெருக்க முடியும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. முதல் செறிந்த (Capital Intensive) பேரளவு உற்பத்தி முறையில் நிலங்களைப் பயிரிடுவது மொத்த உற்பத்தியைக் குறைத்து வேலையின்மையைப் பெருக்குகிறது. இக்கருத்துகளின் அடிப்படையில் இந்திய உழவர்கள் தங்கள் சொந்த நிலங்களில் உழைக்கும் வகையில் பேரளவு நிலங்களை உடையவர்கள் தங்கள் உபரி நிலங்களைத் தன்னியல்பாகவே அவற்றைப் பங்கீடு செய்வதற்கு வழங்கக் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதனைச் செயற்படுத்தச் சட்டமுறைப்படியும் வழிவகைகள் செய்யப்பட்டன. இதன் முதல் கட்டத்தில் 1972–ஆம் ஆண்டு வரை நில உச்சவரம்பு தனி ஒருவரின் சொந்த நில அளவை (Land Holder as the Unit of Application) அடிப்படையாகக் கொண்டு வரையறுக்கப்பட்டது. ஆந்திரம், அசாம், குசராத்து, கேரளம், மத்திய பிரதேசம், மகாராட்டிரம், ஒரிசா, பஞ்சாபு, இராசசுத்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் நில உச்சவரம்பிற்கான சட்டங்களை இயற்றின. ஒரே குடும்பத்திலுள்ள வயது வந்தோர் தனி நில உடைமைக்குரியவராய்க் கருதப்பட்டதால் 5 பேரைக் கொண்ட ஒரு குடும்பம் உச்ச வரையறையைப் பின்பற்றினாலும் மிகுதியான நில உரிமையைப் பெற்றனர். இது ஆந்திராவில் 1620 ஏக்கராகவும், மத்திய பிரதேசத்தில் 630 ஏக்கராகவும், பஞ்சாபில் 800 ஏக்கராகவும் இருந்தது. இப்போது நடைமுறையிலிருக்கும் திருந்தப்பட்ட (Amended) 1973–ஆம் ஆண்டு நில உச்சவரம்புச் சட்டப்படி 5 குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தை அடிப்படையாகக் கொண்டு நில உச்சவரம்பு வரையறை செய்யப்படுகிறது. இதற்கும் மிகுதியான குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் உச்சவரம்பு உயர்த்தப்படுகிறது. எனினும், ஒரு குடும்பத்தின் உச்சவரம்பு வரையறுக்கப்பட்ட உச்சவரம்பு அளவை விட இரு மடங்குக்கு மேல் மீறக்கூடாது. பழைய சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்த, உச்சவரம்புகள் (Lowest & Highest Limits) 27 முதல் 324 ஏக்கர்களாகும். இராசசுத்தானில் 22 முதல் 336 ஏக்கர்களென்றும், கர்நாடகாவில் 18 முதல் 216 ஏக்கர்களென்றும், குசராத்து மாநிலத்தில் 19 முதல் 132 ஏக்கர்களென்றும், மகாராட்டிரா மாநிலத்தில் 18 முதல் 126 ஏக்கர்களென்றும், பஞ்சாபு, அரியானா மாநிலங்களில் 30 முதல் 80 ஏக்கர்களென்றும் வரையறை செய்யப்பட்டிருந்தன. புதிய சட்டப்படி நாடு முழுவதிலும் ஒரே அளவிலான உச்சவரம்பைக் கொண்டுவர வேண்டுமென்ற அடிப்படையில் வற்றாத நீர்ப்பாசன வசதியையுடைய பகுதியிலுள்ள ஒரு குடும்பத்தின் உச்சநிலை வரம்பு 10 முதல் 18 ஏக்கர்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. நில ஆக்கத்திறன், மண்வகை, ஒரு போக இருபோகச் சாகுபடி முறை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு உச்ச வரம்பு 54 ஏக்கர் வரை அனுமதிக்கப்படலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஒருபோகச் சாகுபடி நிலத்தின் உச்சவரம்பு 27 ஏக்கராகும்.