பெருங்கவிஞர்; தத்துவ ஆசிரியர்; இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்துள்ள பேரறிஞர்களுள் ஒருவர். ஏனையோர் நாகார்சுனர், ஆரியதேவர், குமாரிலபட்டர். இந்நால்வருள் அசுவகோசரும் நாகார்சுனரும் ஒரே காலத்தவர்; கனிசுகர் என்னும் இந்தியப் பேரரசரால் புரக்கப் பெற்றவர்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்த்தவர்கள். அசுவகோசர் ஒரு பௌத்த அறிஞர். பெளத்த சமயத்தின் ஒரு பிரிவான யோகாசார தத்துவத்தைப் பற்றி முதன் முதலாக எழுதப்பட்ட சிரத்தோத்பாத சூத்திரம் என்னும் நூலின் ஆசிரியர் இவரே யாவர். இவர் பிராகிருதம், வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் வல்லுநராய்த் திகழ்ந்தார். கனிசுகர் காலத்தில் பௌத்த மதத்தில் பெருவழி எனப் பொருள்படும் மகாயானம் என்ற ஒரு புதிய பிரிவு தோன்றியது. காசுமீரிலுள்ள குண்டலவன விகாரம் என்னும் பௌத்த மடத்தில் பெளத்த சபை ஒன்று கனிசுகரால் கூட்டப்பட்டது. வசுமித்- திரர் என்னும் பேரறிஞர் அதற்குத் தலைமை வகித்தார். அசுவகோசர் அதன் துணைத்தலைவராக இருந்து பணியாற்றினார். அசுவகோசரின் ஆழ்ந்த புலமையைச் செவியுற்ற கனிசுகர், தாம் கூட்டப் போகும் சபையில் அவர் பணியாற்ற வேண்டிய இன்றியமையாமையை உணர்ந்து, இவரைப் பாடலிபுரத்திலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து வந்தார். இவர் பௌத்த சபையின் முதுகெலும்பாய்த் திகழ்ந்தார். பௌத்த சமயம் பற்றிய கையெழுத்துப் படிகளை எல்லாம் சேகரித்து, அவைகளுக்குப் பேருரை எழுதி வழங்கினார். பௌத்த சமயம் பற்றிய பல்வேறு தத்துவங்களும் இச்சபையால் தொகுக்கப்பெற்றன. சர்வத்திவாதிகள் என்ற பிரிவினரின் கொள்கைகளை விளக்கும் அபிதம்ம பிடகம் என்னும் நூலின் எட்டுப் பிரிவுகளை இச்சபை தொகுத்தது. அவற்றை இலக்கிய நயம்பட எழுதித் தந்தவர் அசுவகோசரே. தொடக்க கால மகாயானக் கொள்கைகளைத் தெளிவாகப் புலப்படுத்தக்கூடிய மகாயான சிரத்தோத்பாதம் என்ற நூலை ஆக்கியவரும் இவரே. வச்சிசூசி என்றும் இவரது நூல் சாதி முறையின் கொடுமைகளை நன்கு படம்பிடித்துக் காட்டுகிறது. காந்தித்தோத்திரகாதா என்னும் காப்பிய நூல் இவரது உயர்ந்த கோட்பாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. புத்தசரிதம், செளத்திராநந்தம் ஆகிய இரு பெருங்காப்பியங்களை அசுவகோசர் ஆக்கியுள்ளார். அவற்றில் சமயக் கருத்துகளோடு அரசியல் அறிவுரைகளும் விரவிக் கிடப்பதைக் காணலாம். புத்த சரிதம் 28 பிரிவுகளைப் பெற்று விளங்கியதாக இட்சிங்கு என்ற சீனப் பயணி குறிப்பிடுகிறார். ஆனால், அவற்றுள் 17 பிரிவுகளே இன்று நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றுள்ளும் 13 பிரிவுகனே அசுவகோசரால் எழுதப்பெற்றவை. எஞ்சிய நான்கினை அமிர்தானந்தர் என்ற அறிஞர் பிற்காலத்தே எழுதிச் சேர்த்தார் எனக் கூறப்படுகிறது. புத்தரது வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்ச்சிகளை நயம்படத் தொகுத்துக் கூறுவதே புத்த சரிதமாகும், தன் ஒன்று விட்ட சகோதரரான நந்தர் என்பவரைப் புத்தர் எவ்வாறு பௌத்த நெறிக்குத் திருப்பினார் என்பதை அது விதந்தோதுகிறது. தன் மனைவியின் அழகில் மயங்கியவராய், உலக இன்பங்களில் ஆழ்ந்து திளைத்த நந்தருக்கு இம்மை இன்பங்களின் நிலையாமையையும், மறுமை இன்பத்தின் மாண்பினையும் எடுத்துக்காட்டி, மனமாற்றத்தைப் புத்தர் எவ்வாறு ஏற்படுத்தினார் என்பதை இந்நூல் பரக்கக் கூறுகிறது. இந்தூவில் இராமாயணத்தின் சாயல் ஊடாடுவதை ஆங்காங்கே காணலாம். சுத்தோதனர் பாத்திரம் தசரதனையும், சுந்தரியின் பாத்திரம் சீதையையும் நமக்கு நினைவுபடுத்துகின்றன. சித்தார்த்தர் எழுந்தருளும் தேரில் அவரில்லாததைப் பார்த்து மக்கள் புலம்புவது, இராமர் வீற்றிருந்த தேரில் அவரில்லாததைக் கண்ட மக்கள் கதறி அழுத காட்சியை ஒத்துக் காணப்படுகிறது. சௌந்திராந்த காப்பியத்தில், ஒரு நாட்டுக்கு அரசர் ஒருவர் எவ்வாறு இன்றியமையாது வேண்டப்படுபவர் என்பதையும், அவர்தம் கடமைகள் என்னென்ன என்பதையும், அசுவகோசர் நன்கு எடுத்துக் கூறுறொர். குடிமக்களின் ஆசானும் வழிகாட்டியும் அரசரே என அவர் அறுதியிட்டுக் கூறுகிறார். சூத்திராலங்காரம் அல்லது கல்பனா மந்திரிகா என்ற நூலில் இளவரசன் ஒருவனுக்கு என்னென்ன பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும் என்பது விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இலக்கணம், தேவ இலக்கியம், சொல் வன்மை, எழுத்து வன்மை, இசை, மருத்துவம், ஓவியம், கனவு நலமுரைத்தல், சோதிடம், குதிரை யானை முதலியவைகளைப் பழக்குதல், ஈட்டிகளைச் சுழற்றல், வில்லைப் பயன்படுத்துதல், போர்க்கள ஒழுங்கு பற்றிய அறிவு, அரச தந்திரம் முதலிய பல்வேறு கலைகளில் இளவரசன் பயிற்சி பெறுதல் வேண்டும் என இந்நூல் கூறுகிறது. கனிசுகர் காலத்துக்குப் பின் வாழ்ந்த குமாரலதர் என்பவரால் இத்நூல் ஆக்கப்பட்டிருக்கலாம் என்றும், அசுவகோசர் இதன் ஆசிரியரல்லர் என்றும், அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர். காளிதாசர், சேக்சுபியர் போன்று அசுவகோசர் ஒரு பெரும் நாடகாசிரியருமாவார். அவரால் எழுதப்பட்ட மூன்று நாடகங்களின் சில பகுதிகள் மத்திய ஆசியாவிலுள்ள சில பௌத்த மடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், சரிபுத்திரர் என்னும் நாடகம் வடமொழியில் கிடைக்கும் நாடகங்களிலேயே மிகத் தொன்மையானதாகும். அது ஒன்பது காட்சிகளை உடையது. முத்கலாயனர், சாரிபுத்திரர் என்ற இரு இளைஞர்களைப் புத்தர் எவ்வாறு தனது சமயத்தில் சேர்த்தார் என்பதையே இந்நாடகம் விரித்துரைக்கிறது. துறவைப் பற்றிக் கூறவந்த ஆசிரியர் ஆங்காங்கே இவ்வுலக இன்பங்களையும் நமக்கு நன்கு எடுத்து விளக்குகிறார். சோதத்தன் என்ற வணிக இளைஞன், தன் வாலிப நண்பர்களுடன் ஒரு குன்றின் உச்சிக்குச் சென்று விழாக் கொண்டாடுவதும், காமக் களியாட்டங்களிலீடுபடுவதும் படிப்போர்க்குச் சிற்றின்பப் போதையை உண்டாக்கும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளன. இந்நாடகத்தை ஆசிரியர் நாட்டிய சாத்திர விதிகளுக்கேற்ப அமைத்துள்ளார். நாடகத்தின் இறுதிக் காட்சியில் அசுவகோசரின் பெயர் புகுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் புத்தரே வந்து வாழ்த்துக் கூறுவது போன்றும் இறுதிக் காட்சியில் சித்திரிக்கப்பட்டுள்ளது. அசுவகோசரின் ஏனைய இரு நாடகங்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை, சில சில பகுதிகளே வழி வழியாக வந்துள்ளன. அவற்றுள் ஒன்று, பெருந்தத்துவங்களை மறைபொருளாய் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் வரும் பாத்திரங்களின் பெயர்கள், புத்தி, கீர்த்தி, திருட்டி என்று அமைந்துள்ளதிலிருந்தே இது நன்கு பெறப்படும். மற்றும் அப்பாத்திரங்கள் தூய வடமொழியிலேயே உரையாடுவதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. மற்றுமொரு நாடகம் இராட்டிரபாலா எனப்படுவது. இதில் நகைச்சுவை பளிச்சிடுகிறது. இதில் வரும் விதூடகனின் பேச்சு, கேட்போரைக் குலுங்கக் குலுங்க நகைக்க வைக்கும் தன்மையது. பொதுவாக, அசுவகோசரின் நாடகங்களிலும் காப்பியங்களிலும் தூய வடமொழிச் சொல்லாட்சியே காணப்படுகிறது. பிழைகள் மிக அரிதாகவே உள்ளன. ஆங்காங்கே பிராகிருதச் சொற்களும் விரவிக் கிடக்கின்றன. பிராகிருதத்தின் ஒரு கிளை மொழியான மகதியின் பல சிறப்புக் கூறுபாடுகளைத் துட்டன் என்ற கதாபாத்திரத்தின் பேச்சுகளில் காணலாம். கொபெய்ன் என்ற மற்றுமொரு பாத்திரத்தின் உரைகளில் அர்த்தமாகதி என்னும் பிராகிருதக் கிளைமொழியின் சாயல் தென்படுகிறது. விதூடகனின் சொற்களில் செளரசேனி என்ற பிராகிருதக் கிளை மொழியின் கூறுபாடுகள் நன்கு தென்படுகின்றன. முற்காலச் சௌரசேனி சில இடங்களிலும், பிற்காலச் சௌரசேனி வேறு சில இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. புத்தசரிதம், சௌந்தராநந்தம் போன்ற நூல்களில் ஆசிரியர் எளிமையும் தெளிவும் நிறைந்த ஒரு நடையைக் கையாளுகிறார். பிற்காலத்தே வைதருப்பி என்று விவரிக்கப்பட்ட நடையை அது பெரிதும் ஒத்திருக்கிறது. இவ்வாறு, சமயம், உலகியல் ஆகிய இரண்டு துறைகளிலும் மக்களுக்குத் தேவையான சீரிய கருத்துகளை அசுவகோசர் மிகத் திறமையாகக் கலந்து அளித்துள்ளார். பிராகிருத இலக்கண ஆசிரியர்களுக்கு முன்னோடியாகவும், வடமொழி வல்லுநர்களுக்கு ஒளிவிளக்காகவும் இவர் திகழ்ந்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஆசிய நாடுகளிலெல்லாம் மிகுதியாகப் பரவிய மகாயான பெளத்த சமயத்தை உண்டாக்கிய பெருமக்களுள் தலைசிறந்த ஒருவர் என்ற பெருமையும் இவரையே சாரும். கி.ரா.அ. துணை நூல் “The age of Imperial Unity”, Bharatiya Vidya Bhavan, Vol. II, Bombay, 1980.