ஈழம்
īḻam
இன்றைய சிரீலங்காவே (Srilanka) பண்டைய ஈழம், ஈழநாடு, ஈழமண்டலம், இலங்கை, சிங்களம், சேரத்தீவு, தாம்பண்ணி போன்ற வேறு பெயர்களாலும் ஈழம் பண்டு குறிப்பிடப்பட்டது.
இன்றைய சிரீலங்காவே (Srilanka) பண்டைய ஈழம், ஈழநாடு, ஈழமண்டலம், இலங்கை, சிங்களம், சேரத்தீவு, தாம்பண்ணி போன்ற வேறு பெயர்களாலும் ஈழம் பண்டு குறிப்பிடப்பட்டது. ஒன்சிகுளுசு (Oncsiculus), மெகசுதனிசு (Megasthenes), எரதோசுதனீசு (Eratosthenes) போன்ற கிரேக்க எழுத்தாளர்கள் கி.மு. 3, 4–ஆம் நூற்றாண்டுகளில் இதனைத் தாப்ரோபேன் (Taprobane) என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவின் தெற்கே அமைந்துள்ள இத்தீவில் இது முன்பு தங்கம் மிகுதியாகக் கிடைத்ததால் ‘ஈழம்’ எனக் குறிக்கப்பட்டதாக அறிஞர் கூறுவர். ஈழம் என்ற சொல்லுக்குப் பொன் என்பது பொருள். பண்டைக் காலத்தில் இது இலெமூரியாக் (Lemuria) கண்டத்தில் தென்னிந்தியாவைத் தொடர்ந்த ஒரு நிலப்பரப்பாகவே இருந்தது என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இத்தீவு ஏறத்தாழ 65610 ச.கி.மீ. பரப்பளவு உடையது. மன்னார் வளைகுடாவும் பாக்குக் கடற்காலும் (Gulf of Mannar and Palk Strait) இதனைத் தென்னிந்தியத் தென்முனையினின்றும் பிரிக்கின்றன. தமிழகத்தின் தென்கரையிலிருந்து ஈழத்தின் வடகரை 32.2. கி.மீ. தொலைவில் உள்ளது.
பண்டைக்காலத்திலிருந்தே தென்னிந்தியாவிற்கும் ஈழத்திற்கும் இடையே அரசியல், சமூக, பொருளாதார, வணிக, பண்பாட்டு உறவுகள் இருந்து வருகின்றன. சங்க காலத்தில் ஈழத்தைச் சேர்ந்த தமிழ்ப் புலவர் பலர் தமிழகத் தமிழ்ச் சங்கத்தில் இடம் பெற்றுப் பல பாக்களை இயற்றியுள்ளனர். எடுத்துக்காட்டாக, ஈழத்துப் பூதந்தேவனார் என்னும் புலவரைச் சுட்டலாம். ஆங்கிலேயரின் பழைய குறிப்புகளிலும் ஆட்சி அறிக்கைகளிலும் மலபாரிகள் மாவட்டம் என்று குறிக்கப்பெறுவது ஈழத்தமிழர் நாடாகும். ஈழம் பண்டு தென்னிந்தியாவுடன் மட்டுமன்றிச் சீனம், மலாயா, அரேபியா, ஆப்பிரிக்கா முதலான நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தது.
வட்டர் (வேடர்), நாகர், இயக்கர் ஆகியோர் ஈழத்தின் தொல் பழங்குடிகள். நாகர் என்று குறிக்கப் பெறுபவர்கள் திராவிடர்களே. இலங்கை வரலாற்று நூலான மாகாவம்சமும் தீபவம்சமும் ஈழநாட்டு வரலாற்றை எடுத்துக்கூறுகின்றன. இன்றைக்கு ஏறத்தாழ 2100 ஆண்டுகளுக்கு முன்பு, ஏளார (கி.மு. 161–117) என்னும் தமிழ் மன்னன் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கைத் தீவு முழுவதையும் ஆண்டு வந்தான்.
இவ்வேந்தனது ஆட்சிக் காலத்தில் இலங்கைத் தீவின் மேற்குப் பகுதி, வடக்குப் பகுதி, கிழக்குக் கரையோரப் பகுதி, அனுராதபுரத்தை மையமாகக் கொண்ட வன்னியப்பகுதி ஆகியன தமிழரின் வாழ்விடங்களாக இருந்தன. இத்தீவின் தெற்குப் பகுதியிலும் தென்மேற்குப் பகுதியிலும் சிங்களவர் செறித்து வாழ்ந்தனர்.
ஈழம் சிலகாலம் தமிழக வேந்தர்களான முற்காலப் பாண்டியர், பல்லவர், பிற்காலச் சோழர் முதலானோரின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தது. குறிப்பாக, முதலாம் இராசராச சோழன், முதலாம் இராசேந்திர சோழன் ஆகிய இருவர் ஆட்சிக்காலத்திலும் தமிழரின் ஆட்சி ஈழத்தில் கொடி கட்டிப் பறந்தது. இவர்கள் காலத்தில் வங்காள விரிகுடா ‘சோழரின் குடா’ எனக் குறிக்கப்பட்டது. ஈழம் மும்முடிச் சோழமண்டலம் எனப் பெயரிடப்பட்டுச் சோழரால் ஆளப்பட்டு வந்தது. பின்னர், இலங்கையில் மாகனின் ஆட்சி (கி.பி. 1215–55) பாண்டியப் படைகளின் உதவியுடன் நடைபெற்றது. ஆரியப் பேரரசர்களின் தனியாட்சி கி.பி. 1282–இல் நிறுவப்பட்டது. யாழ்ப்பாணத்து நல்லூரைத் தலைநகராகக் கொண்ட தமிழராட்சி சிறப்புடையது. இவர்கள் இராமேசுவரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். மாமன்னன் அசோகனுக்குப்பின் இலங்கையில் புத்த சமயம் பரவி நன்கு வளர்ச்சி பெற்றது. தமிழ் வேந்தர் ஈழ வேந்தனுக்கு உதவி புரிவதும், ஈழ வேந்தர் தமிழக அரசனுக்கு உதவி புரிவதும் வழக்கமாக இருந்தன. இதனால், பண்டு இரு அரசுகளும் நெருங்கிய உறவால் பிணைக்கப்பட்டமை புலனாகும். ம.இரா.த.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 695)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/szdwwcmm/
தமிழ்“ஈழம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/szdwwcmm/APA
Oliyon Research. (2026). ஈழம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/szdwwcmm/MLA
"ஈழம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/szdwwcmm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment