பல்வேறு நிறமிகள் (Pigments) உடற்திசுக்களில் படிந்து, பல வித நிறத்தைத் தோற்றுவிக்கின்றன. இத்தகைய நிறமிகளில் மெலனின் (Melanin), பில்லிருபின் (bilirubin) போன்றவை உடலிலேயே உருவாகுவதால், இவை உட்புற நிறமிகள் (Endogenous pigments) எனப் படும். இதே போல், கரித் துகள், கல் துகள், இரும்புத் துகள், பஞ்சுத் துகள் போன்றவற்றைக் காற்றோடு சேர்த்துச் சுவாசிப்பதாலும், இத்தகைய நிற மாற்றங்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றை வெளிப் புற நிறமிகள் (Ectogenous pigment) என்பர். இத்தகைய வெளிப்புற நிறமிகளில் குறிப்பிடத் தக்கது கரித் துகள் ஆகும். இக்கரித் துகளைச் சுவாசத்தின் மூலம் உட்கொள்வதால், நுரையீரல் கரிப் படிவு நோய் என்று பெயர். நோய்க் காரணம். இந்தக் கரித் துகள் நுரையீரல் திசுக்களிலும், நிண நீர் முடிச்சுகளிலும் (Lymphonodes) காணப் படும். இது விழுங்கும் உயிரணுக்களால் (Phagoerytes) கொண்டு செல்லப்படுவதால், சில சமயங்களில், பிற உறுப்புகளிலும் காணப் படும். இந்நோய், மனிதன், குதிரை, மாட்டினம், நாய், பூனை, கோவேறு கழுதை ஆகியவற்றைத் தாக்குகிறது. பொதுவாகக் கரிச் சுரங்கங்களில் பணி புரியும் மனிதர்களுக்கும், கரியை இழுத்துச் செல்லப் பயன் படும் கோவேறு கழுதைகளுக்கும், பெருமளவில் பாதிப்பிருக்கும். இதே போல், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் வாழும் நாய்களும், பூனைகளும் மிகுதியும் பாதிக்கப் படுகின்றன. பொதுவாகக் கரித் துகள்களையும், கரிப் புகையையும் சுவாசிப்பதாலேயே இந்நோய் வருகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட கால்நடைகள் எளிதில் காச நோய்க்கு உள்ளாகின்றன. நுரையீரல் தோற்றம். மிளகுத் தூளைத் தூவியதைப் போன்ற தோற்றத்தில் நுரையீரல் இருக்கும். அதாவது, கரித் துகள் நுரையீரல் திசுக்களில் மிகச் சிறிய புள்ளியாகவும், சிறு சிறு கீற்றாகவும் தென்படும். இது திசுவறைகளுக்கு இடையிலேயோ, திசுவறைகளிலோ காணப் படும். நுரையீரலின் திசுச் சுவர்களில் குறிப்பாக, நுரையீரலின் கீழ்ப் பகுதியே பெருமளவில் பாதிக்கப் படும். இந்தக் கரிப் படிவை ஏனைய நிறங்களில் இருந்து, எளிதில் அறிந்து கொள்ளலாம். இதற்கு அதன் கரிய நிறமும், வேதி முறைப் படி, எவ்விதக் கரைப்பானிலும் கரையாத தன்மையும் உதவுகின்றன. அறிகுறி. தொடர்ந்தும், மீண்டும், மீண்டும் கரித் துகள்களைச் சுவாசிப்பதாலேயே, இந்நோய் உருவாகிறது. இதற்குக் குறிப்பிடத் தக்க அறிகுறிகள் இல்லை. சிறிதளவு நார்த் தன்மையை நுரையீரல் அடையக் கூடும். எனினும், இந்நிறமிகள் உயிருள்ள வரை நுரையீரலில் இருந்து கொண்டே இருக்கும். இதனால், பிற நுரையீரல் நோய்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அதிக அளவிலான கரிப் படிவு சிலிக்கான்-டை–ஆக்சைடுடன் இணைந்திருக்குமாயின், நுரையீரலுக்கு நார்த் தன்மை (fibrosis) ஏற்படக் கூடும். சுரங்கத்தில் பணி புரிவோருக்கு இந்நிலை ஏற்படும். இதனாலேயே, மிக அதிக அளவில் கருமையடைந்த நுரையீரலைச் சுரங்க வாசியின் நுரையீரல் (miner's lungs') என்று குறிப்பதுண்டு. —ஆர். கோவிந்தராஜு