சிறு மூளை
ciṟu mūḷai
பெருமூளைக்குக் கீழே, கபாலப் பின் குழியில் (posterior cranial fossa) அமைந்திருக்கும் மூளையின் ஒரு பகுதி சிறு மூளை ஆகும்.
பெருமூளைக்குக் கீழே, கபாலப் பின் குழியில் (posterior cranial fossa) அமைந்திருக்கும் மூளையின் ஒரு பகுதி சிறு மூளை ஆகும். சிறு மூளை விதான (tentorium cerebelli) மடிப்பின் கீழ் இருக்கும் சிறு மூளையின் முன் புறத்தில் ஒரு சால்வரி உள்ளது. மூளைப் பாலமும், முகுளமும் (medulla) இச்சால்வரியில் பொருந்தியவாறு இருப்பினும், இவற்றுக்கும் சிறு மூளைக்கும் இடையே மூளையின் நான்காம் உள்ளறை உள்ளது. விருப்பசைவுகளின் ஒருங்கிணைப்பு, உடலின் தோரணைச் சீரமைப்புகள், உடல் சமன்பாடு, உடலுறுப்புகளின் அசைவு நிலைகள், தசைத் திட்பம் போன்றவற்றை அறுதியிட்டுச் செயல்படுவதே சிறுமூளையின் செயலாகும்,
சிறு மூளையின் அமைப்பு. மொத்தத்தில், ஒரு நீள் முட்டை வடிவாக உள்ள சிறு மூளையில், பக்கவாட்டில் இரண்டு அரைக் கோளங்களும், அவற்றை இடையில் இணைக்கும் வரிக் கண்டமுமாக (vermis) மூன்று பகுதிகளுடன் மேற்பரப்பு, கீழ்ப் பரப்பு ஆகியவை உள்ளன. மூளையின் பிற பகுதிகளைப் போன்றே, சிறு மூளையிலும் இரு வகை நரம்புத் திசுக்கள் காணப்படுகின்றன. இவை சாம்பற் பொருள், வெண் பொருள் எனப்படும். சாம்பற் பொருள் நரம்பணுக்களாலும், வெண் பொருள் நரம்பிழைகளாலும் ஆனவை. பெரு மூளையைப் போலவே, சிறு மூளையிலும், சாம்பற் பொருள் வெளியிலும், வெண் பொருள் உள்ளார்ந்தும் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
சாம்பற் பொருள். சிறு மூளையின் சாம்பற் பொருள், வெளிப் பரப்பில் ஒரு தொடர் பாலமாகவும், உள்ளே வெண் பொருளுக்கு இடையில் திட்டுத் திட்டாகவும் காணப்படும். வெளிப் பரப்பில் உள்ள சாம்பற் பொருளே சிறு மூளைப் புறணியாகும். உள்ளே சிறு சிறு திட்டுகளாக உள்ள சாம்பற் பொருளே சிறு மூளைக் குவியங்கள் (cerebellar nuclei) எனப்படும். பக்கத்திற்கு நான்காக, மொத்தம் எட்டுக் குவியங்கள் உள்ளன. புறணியினின்றும், குவியங்களினின்றும் புறப்படும் நரம்பிழைகள் வெண் பொருளில் ஓடி, மூளையின் பிற பகுதிகள் பலவற்றோடு சிறு மூளையை இணைக்கின்றன.
வெண் பொருள். சிறு மூளையின் வெண் பொருள், நரம்பிழைகளால் ஆனது. இவற்றை, சிறு தடங்கள் (small tracts or short tracts) என்றும், பெருந் தடங்கள் (long tracts) என்றும் இரு வகையாக்கலாம். சிறு மூளைக் குவியங்களை ஓன்றோடொன்றும், சிறு மூளைப் புறணியோடும் இணைப்பவை சிறு தடங்கள் ஆகும். பெருந்தடங்களோ, சிறு மூளையை, மூளையின் பிற பகுதிகளோடு தொடர்பேற்படுத்துபவை. பெருந் தடங்கள் என்றும் வெளித் தோற்றத் தடங்கள் என்றும் குறிக்கப்படும் நரம்பிழைகளின் தொகுப்புகளே சிறு மூளைக் காம்புகள். மூளையின் எப்பகுதியோடு தொடர்புண்டாகிறதோ, அதற்கேற்ப, சிறு மூளைத் தலைக் காம்பை மதிப்பாலத்தோடு இணைப்பது சிறு மூளை இடைக் காம்பு; முகுளத்தோடு இணைப்பது சிறு மூளைக் கடைக் காம்பு (inferior cerebellar peduncle). இவ்வாறு, ஒவ்வொரு பக்கத்திலும், மூன்று சிறு மூளைக் காம்புகளாக, மொத்தம் ஆறு காம்புகள் உள்ளன. பீங்கான் மரம் போன்ற படிவம் (arbor vitae pattern). சிறு மூளையின் வெளிப் பரப்பைக் காணும் போது, அதில் பிளவுகள் ஊடு பாய்ந்திருப்பது தெரியும். அடுத்தடுத்துள்ள இக்குறுக்குப் பிளவுகள், கோடு போட்டது போன்ற தோற்றத்தைச் சிறு மூளையின் வெளிப் பரப்பிற்குத் தருகின்றன. அருகருகே உள்ள குறுக்குப் பிளவுகளும் (transverse-sulci), அவற்றுக்கிடையே உள்ள திட்டுகளும், சிறு மூளைக்கு உள் தோற்றத்தைத் தருகின்றன. சிறு மூளையின் நீள் வெட்டுத் தோற்றங்களின் நடுவில் வெண் பொருள் கீற்றுகளும், அவற்றைச் சுற்றி வெளிப் படர்ந்துள்ள சாம்பற் பொருளும் புலப்படுகின்றன. ஓர் உட்கீற்று வெண் பொருளையும், அதை முப்புறங்களில் மூடியுள்ள சாம்பற் பொருளையும் சேர்த்த அமைப்பிற்குத் தமாலம் (folium) எனப் பெயர்.
சிறு மூளையின் குறுக்குப் பிளவுகள் வெவ்வேறான ஆழத்திலுள்ளவை. சிறு மூளையை மையக் கோட்டில் நெடுக்காக வெட்டி ஆராயுங்கால், பல இலை போன்ற தமாலங்களைக் கொண்ட உட்தோற்றம் தென்படும். வெவ்வேறான ஆழத்தாலான பிளவுகளால், வெண் பொருளும், சாம்பற் பொருளும் பல முறை மடிக்கப்பட்டு முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைத் தமாலங்கள் என்னும் அமைப்பு உருவாகும். இந்தச் சிறப்பு உட்தோற்றம் ஒரு மரம், அதன் நடுத் தண்டு, அதினின்று பற்றிப் படர்ந்திருக்கும் கிளைகள் போன்ற தோற்றத்தை ஒத்திருக்கும்.
உட்செல் நரம்பிழைகள் (afferent fibres). சிறு மூளைக்கான உட்செல் நரம்பிழைகள் தண்டு வடம், உட்செவியின் அங்கணக் கருவி, முகுளத்திலும், மதிப்பாலத்திலும் உள்ள பல்வேறு குவியங்கள், நடு மூளையின் அபரம் (tectum) ஆகிய இடங்களிலிருந்து வருகின்றன.
உடல், கை கால்களின் பல பகுதிகளிலிருந்தும் அங்கவுணர்வு, தொடுவுணர்வு, அழுத்தவுணர்வு, மூட்டுணர்வு போன்ற உணர்வுகள், தண்டு நரம்புகள் வாயிலாகத் தண்டு வடத்தை அடைகின்றன. இவை தண்டு வடச் சிறு மூளை முன், பின் தடங்கள் வழியாகச் சிறு மூளையை அடைகின்றன,
உட்செவியின் அங்கணக் கருவி, தோரணைச் சமன்பாட்டோடு தொடர்புடையது. அங்கிருந்து புறப்படும் நரம்பிழைகள் நேரிடையாகவோ, முகுளத்திலுள்ள அங்கணக் குவியங்களில் அஞ்சலாகி மீண்டோ, சிறு மூளைக் கடைக் காம்பில் ஓடிச் சிறு மூளையை அடைகின்றன.
கீழ் ஒலிவக் குவியத் தினின்று ஒலிவச் சிறு மூளைத் தண்டு (olivo cerebellar tract) பிறை குவியங்களிலிருந்து முன் பிறை வெளியிழைகளாக (anterior external arevate fibres) எழும் பிறைச் சிறு மூளைத் தடம் (arevato cerebeliar tract), வலையச் சிறு மூளைத் தடம் (reticulo cerebellar tract), முப்புரிச் சிறு மூளைத் தடம் (trigemino cerevellar tract) ஆகியவையும், நடு மூளையின் அபரக் குவியங்களினின்று ஒலி, காட்சி உந்தல்களைக் கொணர்வதாகக் கருதப்படும் அபரச் சிறு மூளைத் தடமும் (tecto cerebellar tract) சிறு மூளைக்கு வரக் கூடிய உட்செல் பாதைகளே.
மதிப்பாலத்தின் குவியங்களினின்று புறப்படும் இழைகள், பாலச் சிறு மூளைத் தடமாக ஓடிச் (ponto cerebellar tract) சிறு மூளைக்குச் செல்கின்றன. இவற்றில், புறணிப்பாலச் சிறு மூளை (cortico ponto cerebellar), தண்டு வடப் பாலச் சிறு மூளை (spino ponto cerebellar), அபரப் பாலச் சிறு மூளைப் (tecto ponto cerebellar) பாதைகளின் இழைகள் உள்ளனவாகக் கருதப் படினும், பெரும்பான்மையானவை புறணிப்பாலச் சிறு மூளைப் பாதையைச் சேர்ந்தவையே.
வெளிச் செல் நரம்பிழைகள் (efferent fibres). சிறு மூளையின்று புறப்படும் நரம்பிழைகளில் முக்கியமானவை சிறு மூளைச் செவ்வக இழைகளும் (cerebello rubral fibres) கீற்றுத் தலாம (dentato thalamic) இழைகளுமாகும்.
வட்டுக் குவியத்தினின்றும், உவளகக் குவியத்தினின்றும் (globose nucleus and emboliform nucleus) வெளி வரும் சிறு மூளைச் செவ்வகத் தடம்,, சிறு மூளைத் தலைக் காம்பில் ஒடி, நடு மூளையின் செங்குவியத்தில் அஞ்சலாகிறது. இவ்வாறே, சிறு மூளைத் தலைக் காம்பில் பாயும் பிறிதொரு தடமான கீற்றுக் குவியத்தை உவளகக் குவியங்களோடு இணைக்கிறது. அங்கிருந்து தலாமப் புறணிப் பாதை (thalamo cortical pathway) தொடர்வதால், சிறு மூளைக்கும், பெரு மூளைக்கும் இவ்வகையில் தொடர்பேற்படுத்தப் படுகிறது. இவற்றோடும், சிறு மூளை வலைய (cerebello reticular), சிறு மூளை ஒலிவ (cerebello olivary), சிறு மூளை அங்கண (cerebello vestibular) இயல் தடங்களும் உள்ளன.
சிறு மூளைப் பகுப்புகள். படி மலர்ச்சி மற்றும் ஒப்புமை உடலியல் ஆய்வுகளின் மூலம், சிறு மூளையை மூன்றாகப் பிரிக்கலாம். இவையே முந்தையச் சிறு மூளை (archicerebellum), பண்டைய சிறு மூளை (paleocerebellum), நவ சிறு மூளை (neocerebellum) ஆகும்.
முந்தைய சிறு மூளை, வெட்ட வெளியில் உடல் உறுப்புகள் இருக்கும் நிலைகளையும்,, உடல் பாங்கையும் கட்டுப்படுத்தும் பகுதியாகும். இப்பகுதி தாக்கமுற்றால், தள்ளாட்டம், தடுமாற்றம், நடைக் கோளாறு (gait disturbances) போன்றவை ஏற்படும்.
பண்டைய சிறு மூளை, ஈர்ப்பெதிர்த் திசைகளைக் கட்டுப்படுத்தும். இப்பகுதியில் தோன்றும் நோய், சமன்பாட்டுப் பாங்கைத் தாக்கும். மேலும், மிகைத் திட்பம் (hypertomia), நிற்கும் நிலைத் தள்ளாட்டம் ஆகியவையும் உண்டாகலாம்,
நவ சிறு மூளை, விருப்பசைவுகளைக் கட்டுப் படுத்துகிறது. குறிப்பாக, கை விரல்களின் நுட்ப மிகு அசைவுகள், ஒரே செயல் மீண்டும், மீண்டும் செய்யப் பட வேண்டிய அசைவுகள் போன்றவற்றின் சீரமைப்பு நவ சிறு மூளையாலேயே அறுதியிடப்படும். திரிபு அசைவுகள் (dysmetrias), நோக்க நடுக்கம் (intention tremor), திரிநிலைத் தொடர்ச்சியியக்கம் (dysdiadocho kinesia), நடைக் கோளாறு போன்ற அறிகுறிகள் நவ சிறு மூளைக் குறைபாடுகளில் தோற்றுவிக்கப்படுகின்றன.
சிறு மூளைச் செயல்பாடும் செயல் கேடும். மனிதனின் சிறு மூளைப் புறணியில் ஏற்படக் கூடிய தாக்கங்கள், சீரற்ற செயல்பாடு, ஒழுங்கற்ற அசைவு, நடைக் குறைபாடு, குறைத் திட்பம், சமன்பாட்டுச் சீரழிவு போன்றவற்றை உருவாக்குகின்றன.
சிறு மூளைக்கு வரும் செய்தித் தொடர்பு, உடலின் பல்வேறு புற வாங்கி (exteroceptor), அங்கவுணர்வு வாங்கி (proprioceptor), கண்,, காது, மூளையின் வெவ்வேறு பகுதிகளான வலைய மண்டலம், முகுளக் குவியம், பாலக் குவியம், பெரு மூளைப் புறணி போன்றவற்றிலிருந்து பெறப்படும். மேலும், பெரு மூளை, உவளகம், நடு மூளை ஆதிய இடங்களினின்று சிறு மூளைக்கான கட்டுப்பாட்டுக் கட்டளைகள் வருகின்றன. இவ்வகையில், சிறு மூளை உடலின் பல இயக்கங்களிலும், தன் ஆதிக்கத்தைச் செலுத்த முடியும், விளைவாக, சிறு மூளை நோய்களும், கேடுகளும் உடலின் பல பகுதிகளையும் தாக்குவதோடு, பெருமளவில் இயக்கக் கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
பல வகைச் சிறு மூளைக் கோளாறுகளிலும், தசை ஒருங்கிணைப்புக் குன்றிப் போகிறது. நுட்ப மிகு தசையசைவுகளில் தடுமாற்றமும், தடங்கலும் ஏற்படுகின்றன. சிக்கலான பல அசைவுகளைக் கொண்ட ஓர் இயக்கம் சீராகச் செயல்பட முடியாது. தனித் தனிக் கூறுகளாகப் பகுக்கப்பட்டு, தொடர்பற்ற முறையில் நிறைவேற்றப்படும். மேலும், எதிரெதிரான இரு அசைவுகளைத் தொடர்ந்து, விரைவாகச் செய்ய வேண்டிய இயக்கங்களும் தாக்கமடைகின்றன. எடுத்துக் காட்டாக, சிறு மூளை நோயால் பாதிக்கப் பட்டவரை, முன் கையை மாற்றி மாற்றிக் குப்புறத்தவும் (pronate) மேல் நிறுத்தவும் (supinate) செய்தால், அவரால் சீராகச் செய்யவியலா து. இவ்வாறே, ஓரிடத்தில் இருக்கக் கூடிய பொருளை எடுக்கச் சொல்லும் போது, அவரால் அதைப் பின்பற்ற முடிவதில்லை; அப்பொருளை நோக்கிக் கையைக் கொண்டு செல்கையில், கை, பொருளைத் தாண்டி விலகிச் செல்லும் அல்லது முன்புறமாக அதைத் தேடும். இத்தகைய அசைவு, சிதைவுகள் மூலம் திரிநிலைத் தொடரியக்கம், திரிபசைவுகள் போன்றவை உண்டாகின்றன.
எவ்வேலையும் இல்லாத நேரத்தில் கையிலும், காலிலும் எவ்வித நடுக்கமும் இருப்பதில்லை; ஆயின், ஏதேனும் செயலாற்றக் கையை உயர்த்தினால், நடுக்கமுண்டாகிறது. நோயாளியை விரல் நுனி கொண்டு மூக்கு நுனியைத் தொடச் சொன்னால், மூக்கை நெருங்க, நெருங்க நடுக்கம் அதிகரிக்கிறது, இதுவே, நோக்க நடுக்கம் என்பதாகும். தசைகளின் இயக்கம் பாதிக்கப்படுவதால், நடை, பேச்சு போன்றவையும் கேடுறுகின்றன. தசைத் திட்பம் குறைகிறது.
அங்கணக் கருவியின் உந்தல்களும், சிறு மூளைக்கு வருவதால், சிறு மூளைக் கேடுகளில் உடல் சமன்பாடும் சீரழிகிறது. நேராக நிற்கவியலாமல், உடல் தள்ளாடுவது, நடக்கும் போது தத்தித் தத்தித் தடுமாறக் கூடிய தன்மை, விழுந்து விடக் கூடிய இயல்பு, கண்களை மூடிக் கொண்டு நேராக நிற்க இயலாமை ஆகிய தாக்கங்கள் சிறு மூளை நோய்க் குறிகளே ஆகும். —சுதா சேஷய்யன் நூலோதி. Kanagasundaram et.al, Anatomy; Regional and Functional, P.G. Publishers, First Edition, New Delhi, 1972.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 379)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sy7hk7g8/
தமிழ்“சிறு மூளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sy7hk7g8/APA
Oliyon Research. (2026). சிறு மூளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sy7hk7g8/MLA
"சிறு மூளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/sy7hk7g8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment