அட்டகம் என்பது எட்டு அடங்கியதொரு தொகுதியினைக் குறிக்கும், எட்டுப் பகுதிகள் கொண்ட நூலையும் எட்டுப் பாக்களால் அமைந்த நூலையும் இவ்வாறு தொகைப்படுத்திக் கூறும் மரபு உள்ளது. வடமொழியிலுள்ள பாணினி வியாகரணம் எட்டு அத்தியாயங்கள் கொண்டுள்ளமையால், எட்டு அத்தியாயங்கொண்டது என்னும் பொருளில் அட்டாத்தியாயி என வழங்கப்படுகிறது. தமிழில் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றிய சிற்றிலக்கியங்கள் எட்டினை அவருக்குப் பின் வந்தோர் ‘அட்டப் பிரபந்தம்’ எனப் பெயரிட்டுப் போற்றி வருகின்றனர். தன்பால் அமைந்துள்ள செய்யுள் எண் அடிப்படையில் ஒரு சிற்றிலக்கியம் சதகம், தசகம், பஞ்சகம் எனக் குறிக்கப்படுவதுண்டு. அவ்வகையில் ஏதேனுமொரு பொருள் மீது எவ்வகைப் பாவினாலும் அமைந்த எட்டுப் பாடல்கள் கொண்டதாகத் தமிழில் பாடப்படும் சிறுநூல் அட்டகம் எனப்படும். எவர் மீது இந்நூல் பாடப்படுகிறதோ அவர் பெயரொடு சேர்த்துச் சிவாட்டகம், சுப்பிரமணியாட்டகம் என்பதாக வழங்கப்படும். சைவத்திருமுறையிலுள்ள எட்டு என்னும் நூலுக்கு அப்பெயர், அட்டகம் என்பதன் நேரிய தமிழ்ச் சொல்லால் அமைந்ததொன்றாகும். ஊர்ப் பெயரொடு சேர்த்துத் ‘திருப்போரூர் அட்டகம்’ என்று வழங்குவதுமுண்டு.