தாழ்ந்த குலப்பெண் உயர்குடி ஆடவனை மணப்பதே உயர்குடி மணம் (Hypergamy) எனப்படும். உலகத்தின் பல்வேறு இடங்களில் இந்த உயர்குடி மணம் காணப்பட்ட போதிலும், இந்தியாவிலேயே மிகுதியாக வளர்ச்சியடைந்த இதன் வரிசை முறையினைக் காண்கிறோம். மேற்கு வங்காளம், குசராத்து, இராசசுத்தான், கேரளா ஆகிய இடங்களிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதற்குத் தக்க எடுத்துக்காட்டுகள் காணப்படுகின்றன. சாதிகளுக்குள் தரப்படுத்தப்பட்ட கால்வழி குழுக்களுக்குள்ளாகவோ உட்பிரிவுகளுக்குள்ளாகவோ உயர்குடி மணம் நடைபெறலாம். கிளைச் சாதி அல்லது பல்வேறு சாதியினரிடையேயும் இத்தகைய மணம் ஏற்படலாம். வங்காளத்தில் இரார்கி (Rarhi) பிராமணர்கள், அவரவர் தகுதிகேற்பப் பலவகை குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றனர். இவற்றுள் உயர்குழுவைச் சார்ந்தவர்கள் தங்கள் தகுதிக்குக் குறைந்த இடத்தில் பெண் எடுத்தாலும், தங்கள் மகளைத் தங்கள் தகுதிக்குக் குறைந்த ஆடவருக்குத் திருமணம் செய்து தர மாட்டார்கள். தகுதி குறைவாக இருக்குமிடத்தில் மாப்பிள்ளைப் பணமாக மிகுந்த தொகையினைக் கொடுத்து, அவர்கள் மணமகனின் தகுதியினை உயர்த்துகின்றனர். இதனால் உயர்சாதிப் பெண்டிருக்கு மணமகன் கிடைப்பது கடினமாகிறது. திருமணச் சந்தையில் பெண்களை விட ஆண்களே மிகுதியாகத் தேவைப்படுகிறார்கள். இதனால் மேல்மட்டத்தைச் சார்ந்த மணமகன் பல பெண்களை மணப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளான். தம் பெண்களுக்குத் தகுந்த மணமகனைத் தேடுவதில் உயர் சாதித் தகப்பனார்களுக்கிடையே ஏற்படும் போட்டியே பெண்களுக்குச் சிறு வயதிலேயே திருமணம் முடிக்கும் வழக்கத்தினை ஏற்படுத்தியிருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. குசராத்தில் பட்டிதார் (Patidar) சாதியினரிடை தரப்படுத்தப்பட்ட, வழிவந்த குழுக்களிடையேயும் உயர்குடி மணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இராசபுத்திரர்களிடையே காணப்படும் உயர்குடி மணத்திலும் சாதிகள் அல்லது உட்சாதிகள் திருமண உறவு அலகுகளாக அமைந்து, பட்டிதார்களிடையே உள்ளது போன்றே கால்வழிக் குழுக்களாகவேயுள்ளன. இராசபுதனக் கால்வழிக் குழுக்கள் புறமணக் கால்வழிக் குழுக்களாகும். இவற்றுள் மேற்குக் கால்வழியினரின் தகுதி கிழக்குக் கால்வழிச் சார்ந்தோரை விட உயர்ந்துள்ளது. எனவே, இவர்கள் திருமணத்தில் மணமகன் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவராயும், மணப்பெண் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவராயும் இருப்பர். இராசபுத்திரரிடையே திகழும் இத்தகைய திருமணங்களின் செயல்முறைகளுக்கான காரணம் தெளிவாக விளங்கவில்லை. இதற்கு அரசியல் காரணம் ஏதேனும் இருக்கலாம் என்று ஊக முடிபினைக் கூறலாம். எனினும், இராசபுத்திரரிடை நிலவி வந்த தகுதி, அரசியல் அதிகாரம் ஆகியவற்றைத் தெளிவாக, முறைப்படி அறிந்து கொண்ட பின்னரே இதைப்பற்றி அறுதியிட்டுக் கூறவியலும். நாயர்களிடையுள்ள உயர்குடி மணத்தின் அரசியல் செயல்முறைகளைப் பற்றி மில்லர் (Miller) என்னும் மானிடவியலாளர் தெளிவாக விளக்கியுள்ளார். நாயர்கள் பல உட்சாதிகளாகப் பகுக்கப்பட்டிருந்தனர். திருமணங்கள் அந்த உட்சாதிக்குள்ளாக அல்லது அதனினும் உயர்சாதியுடன் நடைபெற்றன. அவர்கள் மேற்கொண்டிருந்த அரசியல் பொறுப்பினைக் கொண்டே உட்சாதிகள் வரையறுக்கப்பட்டன. நாயர்குலப் பெண்களைச் சத்திரியர் (Kstriyas) சமந்த்தான் (Samanton) போன்ற அரசக் குடியினரும் நம்பூதிரிப் பிராமணரும் மணம் செய்து கொள்ளலாம் என்ற நிலையும் காணப்பட்டது. பொதுவாக மணப்பெண்ணும் மணமகனும் ஒரே அரசியல் பகுதியினைச் (Political Unit) சார்ந்தோராயிருப்பர். இதனால், அவ்வமைப்புக்குள் மட்டும் உறவுமுறை ஏற்பட்டுப் பிற பகுதிகளிலிருந்து அது ஒதுங்கி நிற்கிறது. புறமணக் கால்வழி அமைப்பின் அடிப்படையில் சாதியினர் அகமணத்தை மேற்கொள்ளும் போது, சிறிய அளவேயுள்ள அரசுக் கால்வழியினர் அல்லது நம்பூதிரிச் சாதிக் கால் வழியினர் தகுந்த மணமக்களைத் தேர்ந்தெடுப்பதற்குத் தங்களது அரசியல் அமைப்பை விட்டுப் புறத்தே செல்ல வேண்டியுள்ளது. நம்பூதிரிகளின் இளைய புதல்வர்களுக்கும் நாயர் குலத் தாய்வழிக் கால்வழி மகளிருக்கும் ஏற்படும் உயர்குடி மணத்தால், நம்பூதிரிகளின் சொத்துகள் கைம்மாறாமல் பாதுகாக்கப்படுகின்றன. நம்பூதிரிக் குடும்பத்தின் தலைமகனும் அவன் தந்தை வழி வந்தோர் மட்டுமே சாதிக்குள் திருமணம் புரிந்து கொள்ளவியலும். உயர்குடி மணம் பற்றிய துறையினைக் குறித்துப் பல ஊகங்களும் விளக்கங்களும் அளிக்கப்பட்டிருந்தாலும், அவை குறித்துப் பொருத்தமானதும் ஆதார முறையிலமைந்ததுமான கோட்பாடு இதுவரை தோன்றவில்லை. இந்தியாவில் ‘உயர்குடி மணங்கள்’ ஆதரிக்கப்பட்டு ஒப்புக்கொள்ளப்பட்டும் ‘கீழ்க்குடி மணங்கள்’ முழுமையாகக் கண்டிக்கப்பட்டும் வருகின்றன என்ற கருத்தை ஆதரிக்கும் வகையில், ஏற்புடைய அமைப்புமுறை விளக்கம் இதுவரை காணப்படவில்லை. ஒரு நாட்டின் மீது படையெடுக்கும் குழுக்கள் முதலில் அந்நாட்டு உயர்குடி மக்களுடன் மணஉறவு கொண்டு பின்னர், அந்த மண உறவுகளை விரிவுபடுத்திக் கொண்டனர் என்ற ஊகத்தின் அடிப்படையில் எழுந்ததே ‘சாதி’ எனக் கூறும்போது, உயர் சாதி மணக் கோட்பாட்டை இரைசிலி (Risely) பயன்படுத்துகிறார். இத்தகைய கோட்பாடுகள் பிற மானிடவியலாளரால் ஏற்கப்படவில்லை. மேற்கூறிய நான்கு எடுத்துக் காட்டுகளும் ஒரே தன்மையான அமைப்பு முறைச் சிறப்பினைக் கொண்டிருக்கவில்லை. இராசபுத்திரர்கள், பட்டிதார்கள் ஆகியோரிடம் ஓரளவுக்கும், நாயர்களிடையே முழுமையான அளவுக்கும் அரசியல் தொடர்பு காணப்படுகிறது. உயர்குடித் திருமண முறையில் அரசியல் தொடர்புகளுக்குள் அமைப்பியல்சார் விளக்கமொன்று காணப்படல் வேண்டும். இதற்கு மாறாக, அரசியல் முதன்மை வாய்ந்த குழுக்களுக்கிடையேயான உறவுமுறைகளின் அமைப்பாக வங்காள உயர்குடி மணம் அமையவில்லை. மாறாக, இதனைக் கோட்பாட்டு அளவிலான சாதி குறித்த கட்டமைப்பில் (Frame Work), நெகிழ்வான இயக்கத்தை (Mechanism of Elasticity) அறிமுகப்படுத்தும் கட்டமைப்பில்லமாய்க் காணல் வேண்டும். இவ்வழிமுறையிலேயே செல்வர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் காணப்படும் உட்சாதிகளுடன் மண உறவு கொண்டு, தமது சொந்த மதிப்பையும் தங்கள் கால்வழி வந்தோர் சிலரின் சமூக நிலையையும் (Status) உயர்த்திக் கொள்ள முடிகிறது. இதற்கு நேர்மாறாக, நாயர் உயர்குல மணமோ குறுகிய சாதி அகக்குடி மணத்திலிருந்து (Narrow Caste Endogamy) தோன்றும் அரசியல் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையிலுள்ளது. அதே காலத்தில் சாதிகளின் தனித்தன்மையைப் படைக்கக் கூடிய எதனையும் இவர்கள் செய்வதில்லை. சாதி எல்லைகளைக் கடந்த உயர்குடி மணங்கள் உறவுமுறைத் தொடர்புகளை உருவாக்குவதில்லை என்பதே இதற்குக் காரணமாகும். தாய்வழித் தோன்றுவதாலும் தந்தையின் உரிமைகளும் கடமைகளும் முழுவதுமாக நீக்கப்படுவதாலும் உயர்குடி மண இணைப்பால் பிறக்கும் குழந்தைகள் தாய்வழியினையே சாரும் என்பது உறுதியாகிறது. திருமணத்திற்குப் பிறகு மணமக்கள் வீட்டாரிடையேயும் மற்றும் இத்தகைய திருமணங்களால் உருவாகும் குழந்தைகளுக்கும் அவர் தம் உறவினருக்குமிடையேயும் நிலவும் தன்மையையும் நெருக்கத்தினையும் பொறுத்தே, உறவு முறைத் தொடர்புகளைச் சாதி அல்லது உட்சாதி எல்லைகளைக் கடக்க அனுமதிக்கும் உயர்குடி மண இயக்கத்தின் சிறப்புத் தன்மையினை அறுதியிட்டுரைக்க இயலும். ம.ந.பு. துணை நூல்கள் Hutton, J.H., Caste in India: Its Native Function Oxford and Origins, University Press, Bombay, 1961. Kothari, R.R. (ed)., ‘Caste and Political Mobilization in a Gujarat District’ in Caste in Indian Politics, Orient Longmans, New Delhi, 1970. Mayor, Adrian. C., The Dominant Caste in a Region of Central India, South Western Jonrnal of Anthropology, XIV, No.4, 1958. Pocock, David. F., Kanti and Patidar: A Study of the Patidar Community of Gujarat, Clarendon Press, London 1972.