கடைச் சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர் பெயர் இருங்கோன் செங்கண்ணனார் என்றும் சில ஏடுகளில் காணப்படுகிறது. இவர் பெயரிலுள்ள ஆயன் என்பதனை இவரது குலப்பெயராகவும், செங்கண்ணனார் என்பதனை இயற்பெயராகவும் கருதுகின்றனர். ஒல்லை என்பது ஊர்ப் பெயர், இருங்கோனின் ஒல்லை என்னும் ஊரிலுள்ள ஆயன் என்று பொருள் கொள்ளுதல் அமையும். ஒல்லை என்னும் ஊர் அமைந்த இடம் பற்றிப் பலவாறு கூறப்படுகிறது. இது புதுக்கோட்டைக்கு அருகில் ஒலியமங்கலம் என இப்பொழுது வழங்கப்பெறும் ஊராகும் என்றும், தஞ்சை மாவட்டப் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஊராகுமென்றும், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமெய்யத்திற்கு அருகிலுள்ள ஊராகுமென்றும் கூறப்படுகிறது. இவருடைய ஒரே பாடல் அகநானூற்று 279–ஆம் பாடலாக அமைந்துள்ளது. பாலைத் திணையில் அமைந்துள்ள இப்பாடல், பொருள் கருதிப் பிரிந்து சென்ற தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியதாக உள்ளது. உள்ளத்தில் தோன்றி அறிவினைச் சுடும் கவலையைத் தீயாகவும், இடையறா முயற்சியை அத்தீயினை அவிக்கும் மழையாகவும் உருவகஞ் செய்து ‘உள்ளம் பொத்திய உரஞ்சுடு கூர் எரி, ஆள்வினை மாரியின் அவியா’ என்று தலைவன் கூறியிருப்பது நயமிக்கதாக உள்ளது.